ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் @ விமர்சனம்

7 C’s என்டர்டைன்மென்ட் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், நிஹாரிகா, காயத்ரி , ரமேஷ் திலக்,  ராஜ்குமார்,

டேனியல்,  விஜி சந்திர சேகர் நடிப்பில் ஆறுமுகக் குமார் தயாரித்து இயக்கி இருக்கும் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் . 

உடனே படத்துக்கு  போலாமா ? இல்லை நல்ல நாள் பார்த்துதான் போகணுமா?  பார்ப்போம் 
 
தமிழக எல்லையில் உள்ள ஆந்திர கிராமமான எம சிங்கபுரம் என்ற — கொள்ளையை தொழிலாகக் கொண்ட கிராமத்து மக்களில் ஒருவனான நபர் எமன் (விஜய சேதுபதி).
 
அவன் அம்மா கூட்டத்தின் தலைவி ( விஜி சந்திரசேகர்) , அவனை ஒருதலையாய் காதலிக்கும் ஒரு பெண் (காயத்ரி) சென்னைக்கு தன் சகாக்கள் இருவருடன் (ரமேஷ் திலக், ராஜ்குமார்)  திருட வரும் எமன், அங்கே கல்லூரியில் படிக்கும் ஓர் சிற்றிளம்பெண்ணை (நிஹாரிகா) தன் மனைவி என்கிறான்,  பொய்யே சொல்லாத எமன் . 
 
ஆனால்  அந்த கல்லூரிப் பெண்ணுக்கும் , மான ரோஷம் பார்க்காத ஒரு இளைஞனுக்கும் ( கவுதம் கார்த்திக்) காதல் . 
 
அந்தப் பெண்ணை எமன் கடத்திக் கொண்டு வர, அவளைத் தேடி காதலனும் அவனது நண்பன் ஒருவனும் ( டேனியல் )  எம சிங்கபுரம் வருகின்றனர் . 
 
அப்புறம் நடந்தது என்ன ? இந்தப் பெண்ணை எமன் எப்படி மனைவி என்கிறான் ? அவனை திருமணம் செய்து கொண்டது கல்லூரி மாணவியா ? ஒருதலைக் காதலியா ?
 
கல்லூரி மாணவி —  அவளது காதலன் காதல் என்ன ஆனது ? என்பதே  இந்த  ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் . 
 
வெயிட் .. வெயிட் ..நத்திங் சீரியஸ் . இது காமெடி படம் அல்லது அதற்கு முயற்சி செய்யும் படம் . 
 
எமன் கேரக்டரில் வித விதமான கெட்டப்பில் அசத்துகிறார் விஜய் சேதுபதி . அவரை இல்லாமல் இந்த படத்தை யோசிக்க முடியாது . அவருக்கு இருக்கும் இமேஜ் இந்தப் படத்தின் முதல் பலம் . அவரது நடிப்பு படத்தின் இரண்டாவது பலம் . 
 
அதே நேரம் மான ரோஷம் பார்க்காத இளைஞனாக வரும் கவுதம் கார்த்திக்கும் நடிப்பில் ஜொலிக்கிறார் . 
கள்ளங்கபடம் இல்லாத இளம்பெண்  தோற்றத்தில் ப்ளஸ் நடிப்பில் நிஹாரிகா கவர, அழுத்தமான நடிப்பில்  ஈர்க்கிறார் காயத்ரி . 
 
ரமேஷ் திலக் சிறப்பு . 
 
ஆர்வக் கோளாறு கேரக்டரும் அதில் ராஜ்குமார் நடிப்பும் ரசிக்கவும் சிரிக்கவும்  வைக்கிறது . அவருக்கு விஜய் சேதுபதி கொடுக்கும்  ரியாக்ஷன்கள் செம செம . 
 
டேனியல் ரொம்ப கத்துகிறார் எப்பவாவது சிரிக்க வைக்கிறார் . 
 
காமெடி என்ற பெயரில் சந்தடி சாக்கில் முத்துக் குமார் பேசும் ஆபாச வசனத்தை தவிர்த்து இருக்கலாம் . 
விஜி சந்திர சேகர் நல்ல நடிப்பு . 
 
ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு , முத்துவின் கலை இயக்கம் , , மற்றும் காஸ்டியூம் அருமை . இந்த மூன்றும் ஒன்றுகொன்று இணைந்து இயைந்து அசத்துகின்றனர் . 
 
படத்தின் ஆகப் பெரும்பலம் ஜஸ்டின் பிரபாகரன் கொடுத்து இருக்கும் அற்புதமான பின்னணி இசை . தன் இசை மொழியால் சுமாரான நகைச்சுவைகளைக் கூட காப்பாற்றுகிறார் ஜஸ்டின் பிரபாகரன் .  பாடல்களும் ஒகே . 
 
படத்தின் துவக்கம் , போக்கு  இடைவேளை , இரண்டாம் பாதி எல்லாம் பார்டர் மார்க்கிலே பாஸ் ஆகி , கடைசியில் தாண்டிக் குதித்து  . 
 
உதிரி உதிரியாக வரும் காட்சிகளை கடைசியில் எப்படியோ போராடி ஒரு உருண்டையாக பிடித்து கையில் கொடுத்து ” ஸ்ஸ்ஸ்  அப்பாடா … “என்று பேரு மூச்சு விடுகிறார் இயக்குனர் ஆறுமுகக் குமார் . 
 
எம சிங்கபுரத்தை இன்ட்ரடியூஸ் செய்ய ஆண்ட்ரமீடியா கேலக்சிக்கு அப்பால் இருந்து எல்லாம் வர்றீங்க . அப்புறம் அண்ணாந்து பார்க்கவே இல்லியே . ஏன் டைரக்டர் ?
 
எனினும் விஜய்  சேதுபதி, வித்தியாசமான பின் புலம் , கண்ணுக்கு குளிச்சியான காட்சிகள், காமெடி , சில வித்தியாசமான கேரக்டரைசேஷன் இவற்றால் இந்த வாரப் படமாகிறது ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் . 
 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
——————————————-
விஜய் சேதுபதி, ஜஸ்டின் பிரபாகரன், கவுதம் கார்த்திக் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *