ஒரு குப்பைக் கதை @ விமர்சனம்

ரெட்  ஜெயன்ட் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட , இயக்குனர் முகமது அசலம் தயாரிப்பில்,

பிரபல நடன இயக்குனர் தினேஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடிக்க, 

யோகிபாபு, ஜார்ஜ், ஆதிரா பாண்டி லட்சுமி , சுஜோ மாத்யூஸ், கிரண் ஆர்யன் , கோவை பானு, செந்தில் லலிதா  ஆகியோரின் உடன் நடிப்பில் ,
 
காளி ரங்கசாமி எழுதி இயக்கி இருக்கும் படம் ‘ ஒரு குப்பைக் கதை ‘ . எப்படி போகுது கதை? பார்க்கலாம் . 
 
கூவத்தின் கரையில் பிறந்து வளர்ந்து , சென்னையில் குப்பை அள்ளும் வேலை செய்யும் மாநகராட்சி ஊழியனான ஓர் இளைஞனுக்கு ( மாஸ்டர் தினேஷ்) , 
 
பல பெண்கள் பார்த்தும் திருமணம் நடக்கவில்லை என்பது அவனது விதவைத் தாயின் (ஆதிரா பாண்டி லட்சுமி) வருத்தம். புரோக்கர் மூலமாக வால்பாறையில் வாழும் ஓர் இளம்பெண்ணை ( மனிஷா யாதவ்) பெண் பார்க்கப் போகிறார்கள். . 
 
சுத்தமான காற்று , தண்ணீர் , சூழல் என்று வாழும் அவளிடம் மாப்பிள்ளை குப்பைக் கூட்டுபவன் என்று சொன்னால், 
 
ஒத்துக் கொள்ள மாட்டாள் என்பதால் , சென்னையில் கிளார்க் வேலை பார்ப்பவன் என்று சொல்கிறார்கள் . 
 
அதற்கு அந்த பெண்ணின் அப்பாவும் ( ஜார்ஜ்) உடந்தை . 
 
கல்யாணம் செய்து கூவக் கரையில் வாழ வரும் மனைவியால் சூழலை தாங்க முடியவில்லை . எனினும் அவனோடு வாழ்ந்து குழந்தைக்கு தாயாகிறாள் .
 
பிரசவத்துக்கு தாய் வீடு போன அவளை மீண்டும் கூட்டி வரப் போனால்,  பிள்ளையோடு என்னால் கூவக் கரையில் வாழ முடியாது என்கிறாள் . 
எனவே தன் தகுதிக்கு மீறி அபார்ட்மென்ட் ஒன்றில் வீடு பார்த்து குடி வைக்கிறான் . அங்கே நடக்கும் ஒரு சம்பவம், அந்த ஏழையின் குடும்பக் கூட்டில் குண்டு வைக்க, 
 
அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த படம் . 
 
சபாஷ் இயக்குனர் காளி ரங்கசாமி !
 
நீண்ட இடைவேளைக்குப் பிறகு உறவுச் சிக்கல்களை சொல்லும்  உணர்வு  ரீதியான ஒரு படம் . எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வின் பிரச்னைகளை ,
 
ஏக்கங்களை, கனவுகளை , அது கருகும்போது வரும் வேதனைகளை, , அதனால் எடுக்கும் தவறான முடிவுகளை ,
 
அதனால் வரும் பிரச்னைகளை , சிதைவுகளை, கண்ணீரை , காயத்தை, ஆறாத் தழும்புகளை சொல்லும் ரத்தமும் சதையுமான படம் 
படத்தின் மிகப் பெரிய பலம் , ஜோடனை இல்லாத அதன் எளிமை . கூவம் உட்பட பல இடங்களிலும் அதே இடத்தில் படமாக்கி இருக்கும் எளிமை . 
 
கூவக்கரை மக்களின் வாழ்வியலை , பெண்கள் பலரின் வாழ்வில் கூட மது முக்கிய அங்கமாக இருப்பதை நகைச்சுவையாக அழுத்தமாக பதிவு செய்கிறார் .
 
குப்பை அள்ளும் வேலை செய்த போதும் அம்மாவுக்கு மது வாங்கிக் கொடுத்து விட்டு தான் குடிக்காமல் இருக்கும்  நாயகன் ,
 
மனைவியால் ஏற்பட்ட அவமானத்தால் மொடாக் குடிகாரன் ஆகிறான் என்பதை  அழகாக விளக்குகிறது திரைக்கதை . 
 
அதே போல பப் , பார்ட்டி ,  தண்ணி தம் என்று சுத்தும் ஒரு பெண் கூட , “கல்யாணத்துக்கு முன்னாடிதான் இந்த ஜாலி எல்லாம் .
 
ஒரு லெவல்ல அப்பா அம்மா சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவனுக்கு உண்மையா வாழ்ந்துடணும்” என்று சொல்ல , அதைக் கேட்டு கதாநாயகி கூனிக் குறுகும் காட்சியும் அருமை .
“என் புள்ள அங்க வாழ்ந்தா , அம்மா ஆத்தான்னு பேசாது . ங்கொம்மா ங்கோத்தான்னுதான் பேசும்” என்று கதாநாயகி சொல்லும் வசனம் பளீர் . ( பதிலுக்கு அதை சரி செய்யும் ஒரு வசனம் கூட படத்தில் இல்லை ) 
 
இந்த ஏரியவுலையே குடிக்காத ஒரே ஆள் நீதான் . இப்போ நீயும் குடிக்க ஆரம்பிச்சுட்டியா ?” என்ற வசனம் மதுவின் தீவிரத்தை விளக்குகிறது.
 
கதை நாயகனான மிக இயல்பாக அளவோடு ஆழமாக அழுத்தமாக நடித்து அசத்தி மனம் கவர்கிறார்  மாஸ்டர் தினேஷ் .
 
மனைவி ஓடிப்போனதை பீரோவை திறந்து பார்த்து உறுதிசெய்து உடைந்து போகும் காட்சியில் நெகிழ வைக்கிறார் . குரலும் கண்களும்  இந்த கேரக்டருக்கு அவ்வளவு ப்ளஸ் 
 
 டான்சில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் இது போன்ற நல்ல கதைகளுக்கு அவ்வப்போது உங்களைக் கொடுங்கள் ஆட்டக்காரரே !
 
மனிஷா .. கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் . நடிப்பும் ஒகே . 
நாயகனின் அம்மாவாக வரும் ஆதிரா பாண்டி லட்சுமி  கவர்கிறார் . மருமகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டு, 
 
அவள் சமாதானம் ஆகி  சாப்பிட ஆரம்பித்ததும் திருப்தியாக ஒரு பார்வை பார்க்கிறாரே . அருமை 
 
நண்பராக வரும்  யோகிபாபு , குவார்ட்டருக்கு அலையும் பாட்டி இருவரும் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள் . 
 
மகேஷ் முத்துசாமியின்,  சற்றும் ஜோடனை இல்லாத உயிர்ப்பான ஒளிப்பதிவு படத்தின் ஆன்மாவாக ஜொலிக்கிறது . 
 
ஜோஸ்வா ஸ்ரீதரின் இசையில் பாடல்கள் ஒகே . தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசை மிக சிறப்பு . 
 
படத்தில் சில பெரிய குறைகளும் உண்டு . 
முந்தைய படங்களால் மனிஷாவுக்கு இருக்கும் இமேஜ் காரணமாக அவரை கல்யாணம் பண்ணிக் கொண்டு வரும்போதே கதை  புரிந்து விடுகிறது . 
 
அதே போலத்தான்  பக்கத்து வீட்டுக்காரனை சிக்ஸ் பேக் ஆளாக காட்டும்போதும் !
 
அவனை அப்படி எல்லாம் காட்டாமல் இயல்பான நபராக காட்டி கதாநாயகியின் சலனத்துக்கு வேறு காரணத்தை சொல்லி இருக்கலாம் 
 
வால்பாறையில் சுத்தமான காற்று தண்ணீர் இயற்கை என்று வாழ்ந்த பெண்ணை  ஒரு துப்புரவுப் பணியாளர் பொய் சொல்லி கல்யாணம் செய்து கொண்டு வந்து, 
 
கூவக்கரையில் மலம் கழிக்க கியூவில் நிற்க வைப்பதும் சாக்கடை பக்கத்தில் சோறு சாப்பிட வைப்பதும் மாபெரும் குற்றம் .
 
அதற்கு அந்தப் பெண்ணின் அப்பாவே துணை போவது பஞ்சமா பாதகம் . அப்படி இருக்க , அவர்கள் இருவரையும் கடைசி வரை தியாகிகள் போலவே காட்டுவது அநியாயம் . 
 
(அந்த மாமியாரிணி மட்டுமே மருமகளிடம் மன்னிப்பு கேட்கிறாள் . அது கூட மருமகள் வயிற்றில் வளரும், 
 
தன் குடும்ப வாரிசு ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்ற சுயநலத்துக்காக !)
 
அவர்கள்தான் அப்படி என்றால் திரைக்கதைப்படி பார்த்தாலும்  அந்தப் பெண் ஒன்றும் அப்பன் வீட்டில் கோடீஸ்வரியாக வாழவில்லை .
 
அவளது நியாயம் சுத்த அசுத்தத்தில்தான் இருக்கிறது. 
 
எனவே எப்போது கணவன் நல்ல வீட்டுக்கு அழைத்து வந்து விட்டானோ அதன் பிறகு அவள் அந்த வகையில் வருத்தப்பட  நியாயம் ஒன்றும் இல்லை .
ஆனால் பக்கத்து வீட்டுக்காரன்  வீட்டில் உள்ள வசதியான பொருட்கள் , பெரிய சைஸ் வீடு எல்லாம் அவளை பாதிக்கிறது  என்பது படு மோசமான கேரக்டர் அசாசினேஷன் .
 
இப்படி சில இடறல்கள் இருந்தாலும், அந்த கடைசிக் காட்சி கவிதையாக விரிந்து கண்ணீர்த் துளிக் காவியமாக மிளிரும் போது, குப்பையை நாமும் நேசிக்க ஆரம்பிக்கிறோம் .
 
குப்பை அள்ளும் மனிதனின் வாழ்க்கைக் கதை … மனசில் சேர்ந்த அழுக்கால் வாழ்க்கையை குப்பையாக்கிக் கொண்ட ஒரு பெண்ணின் கதை…
 
என்ற இரட்டை அர்த்தத்தில் ஒருகுப்பைக் கதை என்று பெயர் வைத்திருக்கும் விதமும் அபாரம் !
 
ஆகவே , ஆபாசம் இல்லாமலும் இரட்டை அர்த்தம் பேச முடியும், அறிந்து கொள்ள வேண்டும், சில  அற்பப் பதர்கள் !
 
ஒரு குப்பைக் கதை .. மாணிக்கமாய் ஒரு படம் !
 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
——————————————-
மாஸ்டர் தினேஷ், காளி ரங்கசாமி 
 
 
 
 
 
 
 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *