ஒத்த செருப்பு @ விமர்சனம்

பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேமர்ஸ் சார்பில் ஆர் பார்த்திபன் தயாரித்து எழுதி இயக்கி -அவர் மட்டுமே திரையில் தோன்றி நடித்து இருக்கும் — வித்தியாசமான சிறப்பான தனித்தன்மை வாய்ந்த  படம் ஒத்த செருப்பு . 

பணம் பெருத்தோர் குலாவலுக்குப் பயன்படுத்தும் உல்லாசக் கிளப் ஒன்றில் காவலாளியாக இருந்த , — கிராமத்து அப்பாவிப் பெண்ணான , வசதிக்கு ஏங்குகிற தன் மனைவியையும் அங்கே துப்புரவுப் பணிக்கு சேர்த்திருந்த — தசைச் சிதைவு நோயால் மரணத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு மகனை உடைய —

மாசிலாமணி ( பார்த்திபன் ) என்ற நபரை , கொலை செய்து  இருப்பதாகக் கூறி கைது செய்து கொண்டு வந்து விசாரிக்கிறது போலீஸ் . நடந்தது ( முன்பும் பின்பும்)  என்ன என்பதுதான் இந்த ஒத்த செருப்பு. 

ஒரு நபர் நடிக்கும் படங்கள் இதற்கு முன்பு உலக அளவில் சுமார் பனிரெண்டு வந்திருக்கின்றன என்கிறரர்கள். அவற்றில் பெரும்பாலும்  சம்மந்தப்பட்ட அந்த ஒற்றைக்  கதாபாத்திரம் மட்டுமே இயங்குகிற சூழல்தான் இருக்கும் . மற்ற கதாபாத்திரங்களுக்கு  வேலையே இருக்காது.  உண்மையில் ஒரு நபர் கதாபாத்திரப் படங்களுக்கான சரியான இலக்கணமும் அதுதான் . 

ஆனாலும் அதிலும் வித்தியாசமாக செய்வோமென்று எண்ணி, அந்த இலக்கணத்தை உடைத்து இருக்கிறார் பார்த்திபன் .

 படத்தில் மாசிலாமணி கதாபாத்திரம் மட்டும் உருவமாகவும் தோன்றும் . போலீஸ் அதிகாரிகள், மகன் , , மன நல மருத்துவர் , மற்றும் சிலர் அதே இடத்தில் இயங்குகிற — ஆனால் குரல் மட்டுமே கேட்கும் பாத்திரங்களாக வருகிறார்கள் . ( அவர்களின் விரல் நுனி கூட தெரியாத அளவு நேர்த்தியான கூர்மையான படமாக்கல்).

மாசிலா மணியின் மனைவி மற்றும் சில பாத்திரங்கள் மாசிலாமணியின் நினைவு கூரலாக — நமக்குக் குரலாக  மட்டும் ஒலிக்கும் . 

ஒரு கதாபாத்திரம்தான்…  ஆனால் அது பல இடங்களுக்கும் பயணிக்கும் என்றால் அதை வைத்து சுவாரஸ்யமாக திரைக்கதை அமைப்பது கொஞ்சம் இலகு . அதே போல ஒரே இடத்தில் நிகழும் படம் ஆனால் பல கதாபாத்திரங்கள் என்று வைத்துக் கொண்டாலும் சுவையாக திரைக்கதை அமைப்பது எளிது .

 ஆனால் ஒரே கதாபாத்திரம்தான் உருவகமாகத் தோன்றும் என்பது மட்டுமல்ல … ஒரே அறையில் — அதிலும் அதிகமான இயங்கு பரப்பு இல்லாத ஓர் அறையில் ஒன்றே முக்கால் மணி நேரமும் படம் ஓடுகிறது என்பதும் அதிலும் முதல் பகுதியை விட இரண்டாம் பகுதி சிறப்பாக இருக்கிறது என்பதும் இந்தப் படத்தின் அசுரத்தனமான சிறப்பு . 

ஒரு நிமிடத்துக்கு குறைவாக ஓடுகிற ஒரு ஷாட்டில் கூட,  ஒரு நடிகர்  மிக சிறப்பாகவே பேசி நடித்து இருந்தால் கூட,  அதை அப்படியே காட்டினால் போர் அடிக்கும் என்று எண்ணி, 

 குறிப்பிட்ட நொடிகளுக்கு மேல் அவர் பேசும்போது,  வேறொரு முகங்களின் ரியாக்ஷனை போட்டு விடுகிற படத் தொகுப்பு,   சகஜமான நியாயம் என்றாகி விட்ட சூழலில்,  பார்த்திபன் இப்படி ஒரு படத்தை எடுத்து இருக்கிறார் என்பதை நினைத்தால்,  இந்தப் படத்தின்  தரப் பிரம்மாண்டம் விளங்கும் .

 அற்புதம் ராதாகிருஷ்ணன் மகனே !

ஓர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் , தாயுமானவனான ஒரு சிறப்பான  கதாபாத்திர அமைப்பில் , மிகச்  சிறப்பான இயக்கம் , உணர்ச்சிகரமான நடிப்பு , மோனோ ஆக்டிங் கூறுகள், பார்த்திபனுக்கே உரிய  சுவையான வசன ஆளுமை இவற்றால்  கடைசி வரை ரசித்து நெகிழும்படியான படமாக வந்திருக்கிறது ஒத்த செருப்பு . 

பார்த்திபனின் இந்த பட வேள்விக்கு  மேலும் சில பேர் தங்கக் கரம் கொடுத்து இருக்கிறார்கள் . 

முதலில் ஒளிப்பதிவாளர் ராம்ஜி … ஒரே அறைக்குள் ஒரே கதாபாத்திரத்தை வைத்து முழுப்படம் என்றால் முதல் பளு ஒளிப்பதிவாளருக்குதான் (என்னதான் ஆளுமை மிக்க இயக்குனர் இருந்தாலும்) . அந்த பளுவை ரசித்து சுமந்து படத்தை உயர்த்தி இருக்கிறார் ராம்ஜி.

மூக்குக் கண்ணாடி வழியே ஒரு ஷாட், தண்ணீரை மேசையில் கொட்டி அதன் பிரதிபலிப்பின் மூலம் ஒரு ஷாட் என்று இயக்குனரோடு சேர்த்து,   இதற்கு மேல் வாய்ப்புக் குறைவு என்ற அளவுக்கு  விதம் விதமான ஷாட்கள் ! வித்தியாசமான கோணங்கள் , வண்ணப் பயன்பாடு, இருள் – ஒளி ஆளுமை எல்லாம் அபாரம்  ராம்ஜி !

வசனம் செறிந்த இந்தப் படத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை  பயன்படுத்திக் கொண்டு   உணர்வுகளுக்கு ஏற்ப பொருத்தமான இசை கொடுத்து படத்தின் உணர்வுத் தரக் கூட்டலுக்கு யானை பலம் சேர்த்திருக்கிறார் பின்னணி இசை கொடுத்து இருக்கும் சத்யா .

 ரசூல் பூக்குட்டி அம்ரீத் பிரீத்தம் கொடுத்து இருக்கும் ஒலி வடிவமைப்பு,  படத்தை யதார்த்தத்துக்கு மிக நெருக்கமான கொண்டு வருகிறது. நுண்ணிய – அற்புத – ஆழமான ஒலி வடிவமைப்பு . 

அமரனின் கலை இயக்கம் , ஒரே அறையில் படம் நிகழும்  சவாலை வெல்ல இயக்குனருக்கு பேருதவியாக இருந்து இருக்கிறது . அருமை . 
படத் தொகுப்பும் சிறப்பு .

 பொதுவாக ஒரு நாவல் எழுதுவது என்றால் சூரியன் உதிப்பதைப் பற்றி அம்பது பக்கம் கூட எழுதலாம் .ஆனால் அதையே ஒரு பொதுவான கதை கொண்ட படத்தில் வைக்கும்போது, சில நொடிகளுக்கு மேல் காட்ட முடியாது. .
அப்படி ஒரு சில நொடிகளுக்குள் காட்டி முடிகிற விஷயத்தை வார்த்தையால் சொல்ல வேண்டுமானால் அதற்கு அதிக வார்த்தைகள் தேவை .சினிமா தொழில் நுட்ப மொழியில் சொல்ல வேண்டும் என்றால் டிஸ்கிரிப்ஷனையே டயலாக் ஆக சொல்ல வேண்டிய படம் இது . அதை உணர முடிகிறது . என்றாலும் கூட  இதே விசயங்களை இன்னும் குறைவான வார்த்தைகளில் சொல்லி இருக்கலாமே என்ற உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை . அந்த அளவு வசன ஆக்கிரமிப்பு . 

இன்னொன்று … இப்படி ஒரே அறை,  ஒரே முகம் என்று விதிகளை உருவாக்கி ஒரு படம் எடுக்கும்போது, ஏதாவது ஒரு காட்சியில் அதை மீறுவது ஒரு படைப்பாளிக்கே உரிய கெத்தான குறும்பு .

 ஒரு பங்களாவுக்குள்ளேயே  எடுக்கும் படம் என்றால் ஒரு ஷாட் பங்களாவுக்கு வெளியே வருவது … இரவில் நடக்கும் கதை என்றால் ஒரு ஷாட் பகலில் வைப்பது ..  அந்த ஷாட் இல்லாவிட்டால் படத்துக்கு எந்த பாதிப்பும் இராது என்றாலும் அப்படி சீண்டுவது ஒரு டைரக்டோரியல் குறும்பு டச் ஆகப் பார்க்கப்படும் .பொதுவில் படைப்பியல் குறும்புக்காரரான பார்த்திபன் அப்படி – பெட்டிக்கு வெளியே எதுவும் முயலவில்லை என்பது ஓர் ஏமாற்றம்தான் .  உதாரணமாக ஒரு ஷாட் வெளியே வந்து இருக்கலாம் . அல்லது வேறு எதாவது ஒரு கதாபாத்திரத்தின் முகத்தை ஒரு முறை காட்டி இருக்கலாம் . 

படத்தின் முதல் பாதி திரைக்கதை இன்னும் சுவாரஸ்யமாக இருந்து இருக்கலாம் 
இப்படி மேலும் சில விருப்பங்களை ஏற்படுத்துவதே இந்தப் படத்தின் மாபெரும் தரத்துக்கு  உதாரணம் .

 ஒத்த செருப்பு ஓடும் திரையரங்குகளுக்கு  எல்லா  சோடி செருப்புகளும் போகலாம் . 

ஒத்த செருப்பு …. விருது சிம்மாசனங்களில் ஏறும் .

 மகுடம் சூடும் கலைஞர்கள் 

**************************************

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் , ராம்ஜி , சத்யா, ரசூல் பூக்குட்டி, அம்ரீத் பிரீதம்,அமரன், பல கதாபாத்திரங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்த கலைஞர்கள் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *