பரியேறும் பெருமாள் @ விமர்சனம்

நீலம் புரடக்சன்ஸ் சார்பில் இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிக்க, கதிர் , கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து, கராத்தே வெங்கடேசன், தங்கராஜ் ஆகியோர் நடிப்பில் , 

இயக்குனர் ராமின் உதவியாளரும் நல்ல எழுத்தாளராக அறியப்பட்டவருமான மாரி செல்வராஜ், 
 
எழுதி இயக்கி இருக்கும் படம் பரியேறும் பெருமாள். படம் போர்ப் படைப் பரியா ? இல்லை கவிழ்க்கும் நரியா ? பார்க்கலாம். 
 
திருநெல்வேலி மாவட்டத்தில் 2005 ஆண்டு நடக்கும் கதை . 
 
தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் புளியங்குளத்தில் இருந்து சட்டக் கல்லூரி படிக்க வரும் இளைஞன்  (கதிர்) மீது ,
 
அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து சட்டக் கல்லூரி படிக்க வரும் உயர் சாதிப் பெண்ணுக்கு (கயல் ஆனந்தி) காதல். 
 
நாயகனுக்கு ஒரு நண்பன் ( யோகிபாபு)
 
பெண்ணின் அழைப்பை ஏற்று அவளது அக்காவின் கல்யாணத்துக்கு மண்டபத்துக்கு வந்ததையே  தங்கள் சாதிக்கு இழைக்கப்படும் பெரிய அவமானமாக எண்ணி , நாயகனை ஓர் அறைக்குள் தள்ளி சாதி வெறியோடு அடித்து நொறுக்கி, முகத்தில் சிறு நீர் கழித்து அவமானப் படுத்துகிறார்கள் . 
 
 சாதி ஆணவம் இருக்கும் அதே நேரம் “இனிமே என் பொண்ணு கூட பேசினா உன்ன எங்க ஆளுங்க கொன்னுடுவாங்க” என்று மிரட்டும் அடுத்த நொடி, 
 
” அப்படியே என் மகளையும் கொன்னுடுவாங்கடா ” என்று அழுகிறார் நாயகியின் அப்பா (மாரி முத்து). 
 
எனவே  நாயகியிடம் இருந்து விலக முயல்கிறான் நாயகன் . அவளால் தாங்க முடியவில்லை . 
 
அதே நேரம் , 
 
பெண் தன்மை கொண்ட நடை உடை பாவனையுடன் கூத்துக் கட்டும் தொழில் செய்யும் — நாயகனின் அப்பாவை (தங்கராஜ்), 
 
நடு ரோட்டில் வேட்டியை உருவி அவமானப்படுத்துகிறான் நாயகியின் ஒன்று விட்ட சகோதரன் ( லிஜீஷ்). 
 
தனது சாதி பையன்கள் மற்றும் பெண்களின் உதவியோடு நாயகனை கெட்டவனாக சித்தரித்து, 
அவன் படிப்பைக் கெடுக்க முயல்கிறான் .  அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்தப் படம் 
 
–என்று சொன்னால் உடனே மனசுக்குள் தோன்றும் வழக்கமான சினிமா காட்சிகள் ஏதும் இல்லாததொரு, 
 
 அற்புதமான படம் இந்த பரியேறும் பெருமாள்.
 
கொஞ்சம் கூட பூச்சு , பொய், மிகைபடுத்தல், தனிச் சார்பு எதுவும் இல்லாத–  ரத்தமும்  சதையும் புழுதியும் பூக்களும்  மண்ணும் மனமும் ரணமும் கனமுமான படம் ! 
 
மாரி செல்வராஜ் என்ற நல்லதொரு கதை சொல்லி மற்றும் ஆழமான இயக்குனர் இந்தப் படத்தின் மூலம், 
 
தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார். அவரை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் .  மகிழ்ச்சி.  மிக்க மகிழ்ச்சி !  
 
தானும் ஒரு மிருகமாக நடத்தப் படுவதாலோ என்னவோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு , தாங்கள் வளர்க்கும் வீட்டு விலங்குகள் மீது பாசம் ரொம்பவே அதிகம் . 
 
ஆனால் சாதி ஆணவமோ தாழ்த்தப்பட்ட மக்களை சாகடிக்கப்பட்ட மக்களாக மாற்ற வேண்டும் .
 
அல்லது அவர்கள் வளர்க்கும் மிருகங்களையாவது சாகடிக்க வேண்டும் என்று எண்ணி செயல்படுத்தும் ஒரு நிகழ்வில் படம் துவங்குகிறது . நாயகன் வளர்க்கும் கருப்பி என்ற நாயைப் பிடித்து  ரயில்வே  தண்டவாளத்தில் கட்டி வைத்து , ரயில் மோதி துண்டு துண்டாக சிதற வைக்கிறார்கள்.
 
ஒரு மனித மரணத்துக்கு ஈடான இழவுச்  சோகத்தோடு , அந்த மக்கள் கறுப்பிக்கு செய்யும் இறுதிச் சடங்கு ஏற்படுத்தும் முதல் அதிரவே அபாரமானது . 
 
அந்த அதிர்வு கடைசி வரை நீடிக்கும் வகையில் ஜொலிக்கிறது படம் . 
 
ரயில் தண்டவாளம் , கருப்பி இவற்றை  திரைக்கதையின்  ஒரு சிறு பகுதியாக மட்டும் வைத்துக் கொள்ளாமல் ,
 
கதையின் தொடர்ச்சி, அடையாளம், பூடகம் , உணர்வுப் பூர்வம் என்று கடைசி வரை பயன்படுத்திய வகையில் ,
 
சிறப்பான  திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனராக ஜொலிக்கிறார் மாரி செல்வராஜ் .
 
சட்டக் கல்லூரியில் சேரும் நாயகனிடம் ”இத படிச்சு முடிச்சு என்னவா ஆகப் போற?”  என்ற கேள்விக்கு அவன் டாக்டர் என்று சொல்ல , எல்லோரும் சிரிக்கிறார்கள் .
 
“இங்க படிச்சா டாக்டரா ஆக முடியாது வக்கீலாதான் ஆக முடியும்” என்று விளக்கம் வரும் நிலையில் ,
 
நாயகன் , ” இல்ல சார் டாக்டர் ஆகலாம். டாக்டர் அம்பேத்காரா ஆகலாம் ” என்ற ஒரு வசனம் போதும் , இந்தப் படத்தின் வீரியம் சொல்ல ! ஆங்கிலமே கல்வியாகப் போய் விட்ட அயோக்கியத்தமான அநியாயத்தில் எத்தனை நிஜ அறிவாளி மாணவர்கள், 
 
கல்லூரிகளில் முட்டாளாக்கப் படுகிறார்கள் என்பதை சொல்லும் விதம் சூடு சூடு ! இது சட்டக் கல்வியை விட மற்ற கல்விகளுக்கே அதிகம் பொருந்தும் . 
 
பெண்கள் , சிறுவர்கள்,  உதவி செய்பவர்கள் என்று பார்க்காமல் தாழ்த்தப்பட்ட மக்களை அல்லது ,
 
அவர்களை காதலிக்கும் உயர் சாதி பெண்களை கொல்வதையே வேலையாகக் கொண்டு திரியும் அந்த கொடூர கதாபாத்திரம் திகிலடிக்க வைக்கிறது . 
 
சட்டத்தின் பொதுவான கோர முகங்களுக்கும் அப்பாற்பட்டு…… சாதி வெறியோடு வரும் சட்டத்தின் வெறி பிடித்த பற்களிடம் இருந்து,   
 
தாழ்த்தப்பட்ட மக்களைக் காக்க வேண்டிய அவசியத்துக்காக,  நாயகன் வக்கீலுக்கு படிக்க வருவதை விளக்கும் காட்சி நெகிழ்வு . 
 
அழுத்தம் மிக்க அழைப்பின் பேரில் கல்யாணத்துக்குப் போன குற்றத்துக்காக நாயகனை வாழைத்தார்களாலேயே அடித்து துவைத்து, 
 
சிறு நீர் கழிக்கும் அந்த இடைவேளைக் காட்சி  தீண்டாமையின் கோர முகத்தை மிக அழுத்தமாக புரிய வைக்கிறது . 
நாயகனின் நிஜ அப்பா மர்மம் , அவரது தோற்றம் , அதை வெளிப்படுத்தும் விதம், அதில் நடித்திருக்கும் தங்கராஜின் தோற்றம் மற்றும் உடல் மொழிப் பொருத்தம்,
 
ஒரே காட்சியில் அவரை  மிக உயர்வாக உணர வைத்து, அடுத்து அவருக்கு ஏற்படும் அவமானத்தைக் காட்டி உருக வைப்பது…… என்று அந்தப் பகுதி , திரை வடிவத்தின் அற்புதம் 
 
அப்பாவுக்கு தன் முன்னால் ஏற்பட்ட அவமானம் குறித்து மகன் வருந்த , இது புதுசு அல்ல என்பதையும், 
 
இதை விட அவர் பட்ட அவமானங்களையும் வலி மரத்த மன நிலையில் அம்மை சொல்லும் அந்த இடம்… 
 
உலகெங்கும் சாதி , இனம், மொழி ரீதியாக தாழ்த்தப்பட்ட லட்சக் கணக்கான மக்களின் பேரவலத்தின் ஒற்றை ஒலியாக இதயத்தின் சுவர்களில் மோதி மோதி எதிரொலிக்கிறது.
 
மிக பக்குவமான அதே நேரம் வலிவும் கம்பீரமுமான – மிகைப் படுத்தல் ஒரு சார்பு இல்லாத — இயல்பும் யதார்த்தமுமான புரிந்துணர்வு மிக்க இறுதிக் காட்சியின் உள்ளீடே  மிக சிறப்பானது . 
ஆனால் அதை உருவகம் மிக்க அழகியல் கவிதையாக முடித்த வகையில் , அதுவரை எளிய மக்களின் வாழ் நிலையை ,
 
மிக எளிய மொழியில் சொல்லிக் கொண்டிருந்த படம்  ஓர் இலக்கியமாகவும் மணக்கிறது . அடடா அபாரம் !
 
நாயகனாக மிக அற்புதமாக நடித்திருக்கிறார் கதிர் . உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார் .
 
கதாபாத்திரத்துக்கு அச்சு அசலாக பொருந்தி இருக்கிறார் . இதுவரையிலான கதிரின் பிரகாசமான படம் இதுவே . 
 
நாயகியாக ஆனந்தி மென்மையாக நியாயம் செய்கிறார் . 
 
காமெடியில் கலகலகலக்க வைக்கும் அதே நேரம் ஜாதி வித்தியாசம் பாராமல் நட்புக்காக துணை நிற்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு சிறப்பு . அதை இயக்குனர் உணர வைக்கும் விதமும் மென்மையும்  நேர்த்தி . 
 
முக்கியமாக நண்பனை சந்தேகப்படும் தன் சாதி நபரை,  நாயகனே மறுக்கும்  காட்சி இந்த படத்தின் படைப்பு நேர்மையின் உச்சம் !
கீழ்சாதி ஆட்களை கொலை செய்யும் சாதி வெறி கேரக்டரில் அசத்தி இருக்கிறார் கராத்தே வெங்கடேசன். குரலும் முகமும் அப்படிப் பொருந்துகிறது அவருக்கு  . 
 
நாயகியின் அப்பாவாக மாரிமுத்து , அண்ணனாக லிஜீஷ் இருவரும் மிக இயல்பாக நடித்துப் பாராட்டுப் பெறுகின்றனர் . 
 
சந்தோஷ் நாராயணின் இசையும் பாடல்களும் படத்துக்கு அளிக்கும் பலமும் வளமும் வலுவும் கொஞ்ச நஞ்சமல்ல . கருப்பி பாடலும் நான் யார் பாடலும் அபாரம் . 
 
அவை படமாக்கப்பட்டு இருக்கும் விதமும் படத்தின் தரத்தை உயர்த்துகிறது . 
 
திருநெல்வேலி மாவட்ட —  தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் வறண்ட கிராமங்களின் வீரியமான வெக்கை  வெம்மை நிறைந்த வெளிச்சத்தை, 
 
அப்படியே கொண்டு வந்து படத்துக்கு தனி வண்ணம் கொடுத்து இருக்கும் வகையில் ஜொலிக்கிறார் இயக்குனர் ஸ்ரீதர் . 
 
இயக்குனரும் இவரும் சேர்ந்து வைத்திருக்கும் தொலை தூர நீள ஷாட்களின் ஃபிரேமிங் மற்றும் அவற்றால் ஏற்படும் உணர்வாக்கம் அபாரம் . 
செல்வாவின் தொழில் நுட்ப சிறப்பான படத் தொகுப்பு ஒரு பக்கம் இருக்க, இயக்குனர் அதை கருத்தியல் மற்றும் உணர்வு ரீதியாகவும் கையாண்டு இருக்கும் விதம் அழகு . 
 
உதாரணமாக இளையராஜாக்கள் இசைக் குழு ஷாட் பயன்படுத்தப்பட்டிருக்கும் இடங்கள் . 
 
தமிழில் சட்டம் படித்து எழுதலாம் என்ற வாய்ப்பு இருக்கும்போது , ஆங்கிலம் தெரியாமல் போவதற்கு நாயகன் இவ்வளவு சிரமப் படுவதாக காட்டுவது ஏன் ?
 
தமிழை கேவலமாக எல்லோரும் பேசும்  சூழல்களில் ஓர் இடத்தில் கூட நாயகன் அதற்காக குரல் கொடுக்க வில்லையே அது நியாயமா ?
 
அந்த காதல் காட்சிப் பகுதிகளில் படம் கொஞ்சம் சவலைப் பிள்ளை ஆவதை சரி செய்து இருக்காலம். 
 
சட்டக் கல்லூரியில் மாணவர் மோதல் சம்பவம் அதை போலீஸ் மற்றும் அரசு கையாண்ட விதம், 
 
இவற்றுக்கு படத்தில் ஒரு இடம் கொடுத்து இருந்தால் படத்துக்கு இன்னும் கனமும் வீச்சும் கூடி இருக்கும்.
ஆனாலும் என்ன …?
 
தாழ்த்தப்படுதலின் ஓலத்தை எந்த பாசாங்கும் மிகைப்படுத்தலும் , பூச்சும் பசப்பும்  மேனா மினுக்கும் இல்லாமல் ,
 
உண்மைகளை மட்டும் வரிசைப்படுத்தியது போன்ற நேர்மையான திரைக்கதை சொல்லல் மற்றும் அற்புதமான படமக்கலால் உயர்ந்து நிற்கிறது படம் . 
 
ரஞ்சித் அவர்களே ! நீங்கள் இயக்குகிற சினிமாக்களின் தளம் களம் வேறு . அது ஒரு பக்கம் இருக்கட்டும் . 
 
ஆனால் இது போன்ற படங்கள் வருடத்துக்கு இரண்டாவது கொடுங்கள் . குன்றின் மேல் வைத்த விளக்காக நீங்கள் ஒளி வீசுவீர்கள் !
 
பரியேறும் பெருமாள்… வெற்றிப் பவனி !
 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
——————————————–
 
மாரி செல்வராஜ், பா. ரஞ்சித், கதிர் ,  சந்தோஷ் நாராயணன் , ஸ்ரீதர் 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *