பிச்சுவா கத்தி @ விமர்சனம்

ஸ்ரீ அண்ணாமலையார் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் , இனிகோ, பிரியங்கா, செங்குட்டுவன், அனிஷா,

யோகி பாபு, ரமேஷ் திலக், நான் கடவுள் ராஜேந்திரன் நடிப்பில் ஐயப்பன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் பிச்சுவா கத்தி .கூர்மை எப்படி?  பார்க்கலாம் .

வெட்டியாக சுற்றுகிற கிராமத்து இளைஞன் .(இனிகோ பிரபாகர்) அவனுக்கு சில சக வெட்டி நண்பர்கள் (யோகி பாபு, ரமேஷ் திலக்) .
 
அந்த ஊர் இளம்பெண் ஒருத்தியை (பிரியங்கா) அவன் காதலிக்க , அவளும் காதலிக்கிறாள்  
காதலை கொண்டாடும சந்தோஷத்தில் நண்பர்களுடன் குடிக்கிறான் . மது போதாத நிலையில் மேலும் குடிக்க காசுக்கு என்ன செய்வது என்று யோசிக்கிறான் . 
 
 
அங்கே மேய்ந்து கொண்டு இருந்த ஆடு ஒன்றை திருடுகிறான் . (என்ன அங்கே சிரிப்பு ?)  திருடிய ஆட்டை கொண்டு போகும் வழியில் விவசாயிகளிடம் சிக்கி, போலீஸ் வந்து ,
 
கோர்ட்டில் அபராதம் விதிக்கபடுவதோடு , ஒரு மாசம் ஒரு குறிப்பிட்ட போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போடச் சொல்கிறது கோர்ட் . 
 
அந்த போலீஸ் ஸ்டேஷனில் உள்ள இன்ஸ்பெக்டர் (சேரன் ராஜ்) பக்கா கிரிமினலாக இருக்கிறார் .”மூவரும் ஆளுக்கு பத்தாயிராம் கொடுத்தால்,
 
 கையெழுத்து  நிபந்தனையை சரியாக முடிக்க விடுவேன் . இல்லை என்றால் உங்கள் மீது மேலும் கேஸ் போட்டு உள்ளே தள்ளுவேன்” என்கிறார் . 
 
முப்பதாயிரத்துக்காக ஒரு பெண்ணிடம் (அனிஷா ) சங்கிலி அறுக்க முயல , அவள் போராடி தடுக்கிறாள் .
 
அந்த பக்கம் இன்ஸ்பெக்டரின் போலிஸ் ஜீப் வர , மீண்டும் அவரிடமே சிக்குகிறார்கள் . 
 
அந்த பெண்ணிடம் புகார் எழுதி வாங்கும் இன்ஸ்பெகடர் , எப் ஐ ஆர் போடாமல் ” ஒழுங்கா எங்கயாவது திருடி முப்பதாயிரம் கொண்டு வாங்க” என்கிறார் 
 
புகார் கொடுத்த பெண் வேலை தேடும் நிலையில் அவளை  ஓர் இளைஞன் (செங்குட்டுவன்) நேசிக்கிறான் . அவள் ஒரு எம் எல் எம் கம்பெனியில் வேலைக்கு சேர, அவனும் சேர்கிறான் . 
கஷ்டப்பட்டு புத்தகம் விற்கிறார்கள் . ஆனாலும் கம்பெனி சொல்வது போல வருமானம் வர எல்லாம் வழி இல்லை என்பது புரிகிறது .
 
அந்த கம்பெனி மேனேஜரே  (காளி வெங்கட்) ஏமாற்று என்பது புரிகிறது . 
 
 ஒரு தாதாவுககும் (ஆர் என் ஆர் மனோகர்) ஓர் அரசியல்வாதிக்கும் ( நான் கடவுள் ராஜேந்திரன்) நடக்கும் சண்டையில்,
 
தாதாவிடம் சேர்ந்து  திருட்டு நண்பர்கள் பணம் சம்பாதிக்கின்றனர் . 
 
அந்த தாதாவும மேற்படி போலீஸ் இன்ஸ்பெக்டரும் கூட்டணி என்பதால் நண்பர்கள் பிரச்னை முடிகிறது . 
 
எம் எல் எம் கம்பெனியில் ஏமாந்த காதல் ஜோடி , பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி , திருமணம் செய்து கொண்டு உழைத்துப் பிழைக்க முடிவு செய்கிறது 
 
தாதாவுக்காக திருட்டு ஹீரோ கொலைகள் எல்லாம் செய்கிறான் . 
 
ஊரில் அவன் காதலிக்கு திருமணம் நிச்சயமாக ,  இனி திருந்தி குற்றம்  செய்யாதவனாக  மாறி காதலியை மணந்து வாழ விரும்புகிறான் .
 
ஆனால் சரியான வேலைக்காரன் என்பதாள் அவனை இழக்க , தாதாவும் இன்ஸ்பெக்டரும் விரும்பவில்லை .
 
எனவே ”உன்  மீது எம் எல் எம் கம்பெனி பெண் கொடுத்த புகாரை எப் ஐ ஆர் போட்டு உன்னை குற்றவாளி ஆக்குவேன்”  என்று ,
 
திருட்டு ஹீரோவை இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறான் . 
 
பிரச்னையில் இருந்து தப்பிக்க அந்தப் பெண்ணை கொலை செய்ய முடிவு செய்து இறங்குகிறான் திருட்டு ஹீரோ . 
 
நடந்தது என்ன என்பதே பிச்சுவா கத்தி !
 
பொதுவாக குற்றவாளியை போலீஸ் ஸ்டேஷனில் கையுழுத்துப் போடச் சொல்ல அவன் போடுவதோடு அந்த சமாச்சாரம் முடித்து வைக்கப்படும் .
 
ஆனால் அப்படி கையெழுத்துப் போடும்போது கூட  எப்படி பிரச்னைகள் வரலாம் என்று  சொன்ன வகையில் பாராட்டுப் பெறுகிறது படம் . 

 
ஆனால்  சொன்ன விதத்தில்தான் ஆழம் அழுத்தம் போதவில்லை . கொஞ்சம் முயன்று இருந்தால் சும்மா தெறிக்க விட்டிருக்கலாம் 
 
மிக எளிய இயல்பான படமாக்கல் . 
 
இனிகோ பிரபாகர் , பிரியங்கா, செங்குட்டுவன் , அனிஷா எல்லாருமே இயல்பாக நடித்துள்ளனர் . 
 
யோகி பாபு சில சமயங்களில் சிரிக்க வைக்கிறார் . பல சமயங்களில் அர்த்தமில்லாமல் அவுட் பிளாக்கில் பேசிக் கொல்கிறார். (எழுத்துப் பிழை அல்ல )
 
காமெடி என்ற பெயரில் பல சீரியஸ் காட்சிகளையும் சிதைத்து சிதற அடிக்கிறார் . லாஜிக்கையும் லகலக செய்கிறார் .
 
என் ஆர் ரகு நந்தனின் இசை ஜஸ்ட் ஒகே . 
 
ரெண்டு வருஷமாக சுற்ற வைத்த காதலி காதலை சொன்ன சந்தோஷத்தில் சரக்கு அடிப்பது கூட ஒகே.
 
ஏன்னா இன்னிக்கு அது கலாச்சாரமா போச்சு . ஆனால் அதுக்காக ஒருவன் ஆடு திருடுவானா ?
 
அந்த அளவுக்கு அவன் என்ன குடி நோயாளியா ? அல்லது அவனுக்கு திருட்டுப் பழக்கம் உண்டா ?
 
அப்படி எல்லாம் அந்தக் கருமமும் இல்லையே . அப்புறம ஏன் அவன் ஆடு திருடவேண்டும் . ?
சரி … இன்ஸ்பெக்டரிடம் மாட்டி தாதா வரை போயாச்சு . எப்படியாவது சீக்கிரம் இவனிடம்  இருந்து கழண்டு கொண்டு,  
 
காதலியைப் பார்க்கப் போகணும் என்றுதானே நினைக்கணும்? அதை விட்டு விட்டு தாதாவுகக்காக கொலை எல்லாம் செய்தால் அப்புறம் அவன் என்ன  காதலன் ?
 
இன்ஸ்பெக்டர் தனக்கு நண்பர் ஆகி விட்ட நிலையிலும் புகார் கொடுத்த பெண்ணை பதியாத எப் ஐ ஆருக்காக திருட்டு ஹீரோ கொலை செய்ய முயல்வது ஏன் ?
 
பின்னால் இன்ஸ்பெக்டரே எப் ஐ ஆர் பதிவு செய்வேன் என்று மிரட்டினாலும் அதற்காக அந்தப் பெண்ணை கொலை செய்து,
 
 ஒரு காதல் ஜோடியை பிரிக்க முயல்பவன் எப்படி ஒரு காதல் ஹீரோவாக இருக்க முடியும் ?
திரைக்கதை என்பது அவ்வளவு விளையாட்டா போச்சு . அப்படிதானே ?
 
இப்படி அடிப்படையே தப்பாகப் போனதால் ஓரளவு இயல்பாக ஈர்க்கும் எம் எல் எம் காதல் ஜோடியின் கதை விழலுக்கு இறைத்த நீர் !
 
ஒரு காதல் ஜோடிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆரம்பித்து இன்னொரு ஜோடியின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிப்பது எல்லாம் திரைக்கதையின் ஒழுங்கின்மை . 
 
என்ன செய்திருக்கலாம் ?
 
திருட்டு ஹீரோ சங்கிலி பறித்தான் . போலீசிடம் சிக்கினான் . புகார் கொடுக்கப்பட்டது . எப் ஐ ஆர் போடுவதாக,
 
 இன்ஸ்பெக்டர் மிரட்டினான் என்பதில் இருந்து திரைக்கதையை மாற்றி இருக்க வேண்டும் .
 
கிராமத்தில் இருந்து திருட்டு ஹீரோவின் காதலி வந்தாள். இருவரும் எம் எல் எம் காதலியிடம் பேசினார்கள் .
 
மன்னிப்புக் கேட்டார்கள் . அவள் மன்னித்தாள். அவளது காதலனும் ஏற்றுக் கொண்டான் . 
 
இப்போது நான்கு பேரும் இன்ஸ்பெக்டரை பார்த்தார்கள் . புகார் வாபஸ் வாங்க வந்ததாக சொல்ல,
 
மறுக்கும் இன்ஸ்பெக்டர் அப்போதுதான் எப் ஐ ஆரை பதிந்தான்  என்று ஆரம்பித்து ..
 
இரண்டு காதல் ஜோடி….. எதிராக இன்ஸ்பெக்டர் ,மற்றும் தாதா என்று போயிருந்தால்,  படம் அசத்தி இருக்கும் . 
 
அது இல்லாததால் இந்த, 
 
பிச்சுவா கத்தி …. வெண்ணெய் வெட்டி !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *