பிரான்மலை @ விமர்சனம்

வளரி கலைக்கூடம் சார்பில் ஆர் பி பாண்டியன் தயாரிக்க, வர்மன் கதாநாயகனாக நடிக்க, நாயகியாக நேஹா, மற்றும் வேல. ராமமூர்த்தி ,கஞ்சா கருப்பு,

அருளானந்தம், பிளாக் பாண்டி நடிப்பில் அகரம் காமுரா இயக்கி இருக்கும் படம் பிரான்மலை . மலையா ? மடுவா? பேசலாம் 

பிரான்மலை என்ற கிராமத்தின் பெரிய மனிதரும் ஆதிக்க சாதி உணர்வாளருமான ஒரு தயவு தாட்சண்யமற்ற மனிதரின் ( வேல. ராம மூர்த்தி)
 
மகனான ஓர் இளைஞன்(வர்மன்) ! அங்குள்ள அநாதை ஆசிரமத்தில் தங்கிப் படிக்கும் இளம்பெண் ஒருத்தி ( நேஹா) !
 
நாயகியின் சேவை உணர்வை கிண்டல் செய்யும் ஒருவன் (மணிமாறன்) அவளிடம் தப்பாக நடந்து கொள்ள முயல ,
 
நாயகன் அதை கண்டிக்க, விளைவாக நாயகனுக்கும் அவளுக்கும் ஏற்படும் பழக்கம் காதலாகிறது . 
 
நாயகி தங்கி இருக்கும் அநாதை ஆசிரம நிர்வாகிகள் அங்குள்ள மற்ற இளம்பெண்களை பாலியல் தொழிலுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்க முயல,
 
அதை கண்டு பிடிக்கும் நாயகி, நாயகனிடம் சொல்ல , அவன் மூலம் குற்றவாளிகள் பிடிபடுகின்றனர் . 
 
அதே நேரம் காதல் ஜோடி மீது வஞ்சம் வைக்கின்றனர் குற்றவாளிகள் ! 
 
அதன் விளைவாக காதல் ஜோடி உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டு, திருமணமும் செய்து கொள்கின்றனர் . 
 
சாதி ஆதிக்க உணர்வு கொண்ட அப்பா அதை ஏற்கமாட்டார் என்பதால் ரகசிய திருமணம் !
 
அப்பாவுக்கு தெரியாமல் மனைவியுடன் நாயகன் வாழ்கிறான் . வறுமை.  கஷ்டம் பின்னர் வேலை,  வசதி ! மனைவி கர்ப்பம் அடைகிறாள் . 
 
நாயகனின் காதல் திருமணத்தால் அவனுக்கு தன் மகளை கட்டி வைக்கும் கனவில் இருந்த
 
நாயகனின் அத்தை மாமா , மற்றும் உறவுகள் சாதிக்காரர்கள் கோபப் படுகின்றனர்.
 
ஒரு நிலையில் நாயகனின் அப்பாவை தவிர அனைவரும் கணவன் மனைவியை பார்க்க வருகின்றனர்  .
 
சுமூகமாகப் பேசி , ‘விரைவில் உன் அப்பாவும் மனம் மாறுவார்’ என்று சொல்லிச் செல்கின்றனர். 
 
இந்த நிலையில் நாயகனின் அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாமல் போனதாக தகவல் வர, நாயகனும் நாயகியும் ஊருக்கு போகின்றனர் .
 
“எந்த ஊரில் பிறந்தேன் என்று தெரியாத எனக்கு இனி இந்த ஊர்தான் சொந்த ஊர்”என்று அந்த ஊர் மண்ணில் கால் வைத்ததும் விழுந்து வணங்குகிறாள் நாயகி
அவளை நாயகனின் உறவுகள் அன்பாக வரவேற்க, அடுத்து நடந்தது என்ன என்பதே இந்த பிரான்மலை .
 
சாதி ஆணவக் கொலையின் இன்னொரு கோர முகத்தை அதிரும்படி சொல்கிறது இந்த பிரான்மலை . 
 
ஆணவக் கொலையை ஊரறிய நடுரோட்டில் வெட்டிப் போட்டுதான் செய்ய வேண்டும் என்று இல்லை ;
 
இப்படி நம்ப வைத்துக் கழுத்தறுத்து செய்வதும் உண்டு என்ற உண்மை முகத்தில் பேயறை அறைகிறது . 
 
அது தொடர்பான காட்சிகள் தடதடக்க வைக்கின்றன . நாயகனாக வர்மன் இயல்பாக நடித்து இருக்கிறார் .முதல் பகுதி காதல் காட்சிகளை விட
 
இரண்டாம் பகுதி காட்சிகளில் மிக சிறப்பாக பொருந்துகிறார் .(ஆனால் படத்தை விட நேரில் இன்னும் இளைஞனாக இருக்கிறார் ) 
 
காதல் , கோபம், தோல்வியில் துவளுதல் , சோகம் இவற்றை சிறப்பாக வெளிப்படுத்துகிறார் , கடைசி காட்சிகளில் கனமான நடிப்பு . 
 
நேஹா  ஓகே. 
 
வேல ராமமூர்த்தி வழக்கம் போல முறுக்கிக் கொண்டு நடித்துள்ளார். இரண்டாம் பாதியில் சிறிதும் பெரிதான கேரக்டர்களில் வரும் மண் சார்ந்த முகங்கள் மிக சிறப்பாக நடித்துள்ளனர் .
 
கஞ்சா கருப்புவும் பிளாக் பாண்டியும் சிரிக்க வைக்க முயன்று சிரிப்பாய் சிரிக்கிறார்கள் . 
 
படையப்பா, அவ்வை ஷண்முகி, வில்லன் படங்களில் பணிபுரிந்த எஸ் மூர்த்தியின் ஒளிப்பதிவு மிக சிறப்பு . 
 
பாரதி விஸ்கார் இசையில் வைரமுத்து வரிகளில் வரும் பாடல்கள் கவனிக்க வைக்கின்றன . குறிப்பாக அந்த அம்மா பாடல்! பின்னணி இசையும் நாட் பேட். 
 
சுரேஷ் அர்ஸ் செய்திருக்கும் படத் தொகுப்பு,  இயக்குனரின்  தவறுகளை மறைக்க போராடி இருக்கிறது . 
 
வஞ்சகத்துக்கு வலை விரிக்கும் காட்சிகளில் திரைக்கதை வெகு சிறப்பு   
 
இரண்டாம் பகுதியில் காட்டி இருக்கும் சிரத்தையை முதல் பாதியில் காட்டி இருந்தால் இந்த படம் ,
 
பாலாஜி சக்திவேலின் காதல் படம் போல சிறப்பாக  வந்திருக்கும் .
இதுதான் நடக்கப் போகிறது என்று யூகிக்க முடிந்தும் அந்த காட்சிகள் வரும்போது பதை பதைத்துப் போகிறோமே .. அதுதான் இந்தப் படத்தின் கெத்து .
 
மொத்தத்தில் பிரான்மலை …. ஆணவக் கொலையின் கோரம் சொல்லும் சினிமா மலை .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *