பொன்மகள் வந்தாள் @ விமர்சனம்

2D என்டர்டைன்மென்ட் சார்பில் சூர்யா -ஜோதிகா தயாரிக்க, ஜோதிகா , பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் , பிரதாப் போத்தன், குழந்தை அக்ஷரா கிஷோர் நடிப்பில் ஜே ஜே பிரட்ரிக் இயக்கி இருக்க, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி இருக்கும் படம் பொன்மகள் வந்தாள்.  

ஊட்டியில் , பெண் குழந்தைகளைக் கொன்று  , பிரபல சமூக சேவர் ஒருவரின் மகன் மற்றும் நண்பன் ஆகியோரையும் சுட்டுக் கொன்று அதன் விளைவாக போலீசாரால் கொலை செய்யப்பட்ட ஜோதி என்ற  பெண்ணின் வழக்கை,
பதினைந்து வருடம் கழித்து தோண்டி எடுத்து, அந்தப் பெண்ணுக்காக வாதாடக் களம் இறங்குகிறார் வழக்கறிஞர் வெண்பா (ஜோதிகா) . 

பெண் குழந்தைகளை இழந்த பெண்களும் மற்றவர்களும் வெண்பாவை செருப்பால் அடித்து சாபம் விட்டு அசிங்கப்படுத்த , வெண்பாவுக்கு எதிராக பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, அடச்சே! ராஜ ரத்னம் (பார்த்திபன்) களம் இறங்க,  பின்னணியில் பிரபல சமூக சேவகர் (தியாகராஜன்) இருக்க, 

நடந்தது  என்ன? என்பதே இந்தப் படம் . 

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக் கொடுமைகளை துள்ளத் துடிக்க, மனம் நெகிழ , மிருக மனங்களையும் கூட யோசிக்க வைக்கும் வகையில் சொல்கிறது படம் . 

மிக சிறப்பான மேக்கிங்கால் கவர்கிறார்  இயக்குனர் ஜே ஜே பிரட்ரிக். சிறுமிகளின் பிணங்களை தோண்டி எடுக்கும் காட்சிகள் , சின்னச் சின்ன விவரணைகள் இயக்குனரின் செய் நேர்த்திக்குக் கட்டியம் கூறுகின்றன . உணர்வுகளைக் கிளறுவதிலும் பெரும் வெற்றி பெறுகிறது டைரக்ஷன் . 

அடுத்தடுத்து சுவாரஸ்யமான திருப்பங்கள்,  அதிர்வன சம்பவங்கள், எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் காட்சிகள்,  நுண்மையான சட்ட நுணுக்கங்கள் என்று சிறப்பான திரைக்கதை . 

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய , ஓர் ஆண் மிருகம் தயாராகும் இடத்தில் , சுவர் ஓவியத்தில் மீசை வரையும் ஷாட் அட்டகாசமான டைரக்டோரியல் உத்தி  
தமிழின் மிகழ்ச் சிறந்த நீதி மன்றப் படங்களில் ஒன்று விதி. 

பாதிக்கபட்டவருக்காக வாதாடுபவரே , பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் என்ற உத்தி , சட்டம் குறித்த லாஜிக்குகளையும் மீறி அன்று அந்தப் படம் பேரு வெற்றி பெறக் காரணமாக இருந்தது.  அதே பாணியில் இன்னும் ஒரு படி மேலே போய் மனதுக்குள்  பெரும்  கனத்தை ஏற்படுத்தி , ஜொலிக்கிறது இந்தப் படத்தின் திரைக்கதை. அதுவும் அந்த கடைசித் திருப்பம், அபாரம் . பிரம்மாதம். 

லக்ஷ்மி சரவணகுமார், முருகேஷன் பொன் பார்த்திபனோடு இணைந்து ஜே ஜே பிரட்ரிக் எழுதி இருக்கும் வசனங்களும் மிகப் பொருத்தமாக ஆழமாக!.  
பாலியல் கொடுமையால் துன்புறும் சிறுமிகளின்  வலியை எல்லா மனிதர்களையும் உணர வைக்கும் அற்புதமான வசனங்கள். 

அறிமுக இயக்குனர் ஜே ஜே பிரட்ரிக்குக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு . 
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை நெகிழ்வான காட்சிகள் இதயம் துளைக்கிறது. பரபரப்பான காட்சிகளில் அதிர அடிக்கிறது .

ராம்ஜியின் ஒளிப்பதிவு அற்புத ரசவாதம் . காட்சிகளுக்கு பலமும் கண்ணுக்கு சுகமும் தரும் ஒளிப்பதிவு . அழகியல், சூழல் பொருத்தம்,  எல்லாவகையிலும் ரசனையான ஒளிப்பதிவு .  பெரிய திரையில் பார்ப்பதற்கு என்று  பார்த்து பார்த்து ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ராம்ஜி . ஹூம்ம்ம்ம்ம்…..! கொரோனா ஒழிக !

இவ்வளவு கதாபாத்திரங்கள், அவர்களுக்கான அறிமுகங்கள், சம்பவங்கள், திருப்பங்கள், குட்டி குட்டி பிளாஷ்பேக்குகள்  உள்ள படத்தின் , சாரமும் ஈரமும் வீரமும்  வீரியமும் கெடாமல் இரண்டு மணி மூன்று நிமிடத்தில் சுருக்கிக் கொடுத்து, படைப்புக்கு ஆக்சிஜன் ஊற்றாக மாறி இருக்கிறார் படத் தொகுப்பாளர் ரூபன்.திரைக்கதையே படத் தொகுப்பால் புடம்  போடப்பட்டிருக்கிறது என்றால் அது மிகை இல்லை .  

இதற்கிடையே அழகியலிலும் குறை வைக்கவில்லை .  கண்ணின் மை எடுத்து குழந்தையாக இருக்கும் மகளுக்கு ஜோதிகா திருஷ்டிப் போட்டு   வைக்கப் போக , அந்த ஷாட்டை அந்த இடத்தில் கட் செய்து விட்டு , குழந்தை வளர்ந்து சிறுமியாக ஆன பிறகு கன்னத்தில்  திருஷ்டிப் பொட்டு வைப்பதைக் காட்டும் விதம் , படத்தின் அழகிய  ‘ரூப’ம் .

 கலை இயக்கம் படத்தின் பெரும் பலம் . 

மிக சிறப்பாக, பொருத்தமாக , சிறப்பாக உயிர்ப்புடன் நடித்து நள வெண்பாவாக ஜொலிக்கிறார் வெண்பா ஜோதிகா . குர’ல்’ வெண்பா இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் .  வெண்பா கதாபாத்திரத்துக்கான மேட்டிமை , கம்பீர அமைதி, ஒரு பக்கம் என்றால் இன்னொரு கதாபாத்திரத்தின் உணர்ச்சிகரம் என்று விஸ்வரூபம் எடுக்கிறார் ஜோதிகா . மழைக்காட்சியில் கொஞ்சம் இன்னும் பக்குவமாக நடித்து இருக்கலாம் . 

பாக்யராஜ் வழக்கம் போலவே , அலட்டிக் கொள்ளாத செயற்கையான நடிப்பு .எல்லா காட்சிகளிலும் பார்த்திபனாகவே நிற்கும் பார்த்திபன் , இதிலும் அப்படியே !சரி சரி.. அதற்குத்தானே அவரைக் கூப்பிடுகிறார்கள் . 

சமூக சேவகராக மிக சிறப்பாக பொருத்தமாக இயல்பாக நடித்துள்ளார் தியாகராஜன் . 

சிறுமி அக்ஷரா கிஷோர் பொருத்தம் .  

அது என்ன பெட்டிஷன் பெத்துராஜ் என்று பாக்யராஜ் கேரக்டருக்குப் பெயர் ? பெட்டிஷன் பெரியசாமி , பெட்டிஷன் பேச்சிமுத்து என்றெல்லாம் பெயர் வைக்கக் கூடாதா யுவர் ஆனர்?

சக்தி ஜோதி வடக்கத்திப் பெண் இல்லை தமிழப் பெண்தான் எனும்போது, எதற்கு அந்த வடகத்தித்தனமான தோற்றம் உடல் மொழிகள் மை லார்ட் ?  இயக்குனர் குழு சறுக்கிய இடம் இது . 

அதே போல, பிணங்களைத் தோண்டி எடுக்கும் ஊழியர்  ”இங்க சீக்கிரம் வாங்க” என்று கத்துவது எல்லாம் காமெடி .   சீக்கிரம் வந்தா மட்டும் காப்பாத்த முடியுமா ? குழு பின்னணி பேச்சில் கோட்டை விட்டிருக்கிறார்கள் . 

ஆணவக் கொலையாகும் கணவனாக ஒரு கவுரவக் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தால் எப்படி இருந்திருக்கும்? ஒரு சின்ன லொக்கேஷன் வேறுபாடும் கிடைத்து இருக்கும் . 

கடைசிக் காட்சி மனதில் ஏற்படுத்தும் பாதிப்பு ஆழமானது !

மொத்தத்தில் பொன் மகள் வந்தாள்… வைர மகள் 

மதிப்பெண் ; 4/5

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *