‘ப(வர்). பாண்டி’ @ விமர்சனம்

pandi 4
வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்து, ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடிக்க,  ராஜ்கிரன், பிரசன்னா, ரேவதி, மடோன்னா செபஸ்டியன் , சாயாசிங், நடிப்பில்

நடிகர் தனுஷ் கதை திரைக்கதை வசனம் – சில பாடல்கள் எழுதி இயக்கி இருக்கும் படம் ப(வர்). பாண்டி. போகலாமா நாடி? பார்க்கலாம் .

ஐந்தாறு பிள்ளைகள்  உள்ள வீட்டின் கடைக் குட்டியாக கிராமத்தில் பிறந்து சென்னை வந்து சினிமா ஸ்டன்ட் மாஸ்டராக ஆகி உழைத்து உயர்ந்து ஒரே மகனைப் பெற்று வளர்த்த நிலையில் ,

மனைவி போய்ச் சேர்ந்து  பேரன் பேத்தி வந்து சேர, வீட்டில் சும்மா இருக்க முடியாமல் சமூக அக்கறையோடும் எப்போதும் நேர்மையோடும்  நடந்து கொள்ளும் பவர் பாண்டிக்கும் (ராஜ்கிரன்)

pandi 66

எங்கே எது நடந்தால் என்ன நம் உண்டு நம் வேலை உண்டு என்று இருக்க வேண்டும்’ என்று நினைக்கும் அவரது மகன் ராகவனுக்கும் (பிரசன்னா) போகப் போக மன விரிசல் அதிகரிக்கிறது .

மருமகள் பிரேமா (சாயாசிங் ) பெரும்பாலும் ராகவன் கட்சி . பேரன் துருவ் (மாஸ்டர் ராகவன்) பேத்தி சாஷா (பேபி சாவி ஷர்மா ) ஆகியோர் தாத்தா கட்சி .

ஒரு நிலையில் பிரச்னை பெரிதாகி வீட்டை விட்டே கிளம்புகிறார் பாண்டி .

எங்கே போவது என்று முதலில் புரியாவிட்டாலும் , ஒரு நிலையில் தனது முதற்காதலியான பூந்தென்றலைத் தேடிப் பயணிக்கிறார் . அந்தக் காதல் காட்சிகளாக விரிகிறது

கிராமத்து இளைஞன் பாண்டிக்கும்  (தனுஷ் ) அவனது மாமா வீட்டுக்கு பள்ளி விடுமுறைக்கு(?) வரும் இளம் வயது பூந்தென்றலுக்கும்  (மடோன்னா செபாஸ்டியன் ) காதல், 

pandi 33
கிராமத்துக் கவிதையாக மலர்ந்த நிலையில் பூந்தென்றலின் அப்பாவால் ( ஆடுகளம் நரேன்) வந்த வேகத்திலேயே தடுக்கப்படுகிறது .

அதன் பின்னர் பூந்தென்றலை சந்திக்க பாண்டி எடுத்த முயற்சிகள் வீணான நிலையில் , சென்னை வந்து   ஸ்டன்ட்,  குடும்பம்,  மகன் பேரப்பிள்ளைகள் என்று ஆகி விட்ட பாண்டிக்கு ,

இப்போது முதற்காதல் மீண்டும் வலுப்பெறுகிறது .

முதிர்ந்த பூந்தென்றல் (ரேவதி) இப்போது ஹைதராபாத்தில் இருப்பதறிந்து  தேடிப்போகும் பாண்டி (ராஜ்கிரண்) அவளைக் கண்டு பிடிக்கிறார் .

இதற்கிடையில் செய்த தவறுகளுக்கு வருந்தும் ராகவன்-  பிரேமா இருவரும் பாண்டியைத்  தேட ,

pandi 1

ஒரு பக்கம் முதற் காதலி இன்னொரு பக்கம் மகன் மகள் பேரன் பேத்தி என்ற நிலையில் பாண்டி நிற்க , அப்புறம் என்ன ஆனது என்பதே இந்தப் படம்

சபாஷ் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் தனுஷ் .! அருமை . சிறப்பு சிறப்பு .

ஏற்கனவே மஞ்சப்பை என்ற படத்தில் இதே ராஜ்கிரண் ஏற்றது போன்ற ஒரு கேரக்டர் .

ஆனால் அந்த கேரக்டரின் பல்வேறு புதிய பரிமாணங்களை கண்டு பிடித்து, அந்த கதாபாத்திரத்துக்கு தனித் தன்மை கொடுத்து ,

அந்த கதாபாத்திரத்தின் மீதே முழுக் கதை திரைக்கதையையும் ஏற்றி விட்டு மிக அருமையாக இயக்கி , இந்தப் படத்தை தங்கப் பையாக புடம் போட்டு ஜொலிக்க வைக்கிறார்  எழுத்தாளர் — இயக்குனர் தனுஷ் .!

pandi 55

மிகச் சிறந்த நடிகராக இருக்கும்,  தான் இயக்கும் முதல் படம் என்பதற்கான எந்த பீடிகைகளையும் போட்டு பீதாம்பரங்களை அணியாமல்
எடுத்த எடுப்பில் சட்டென்று கதைக்குள் நுழையும் அந்த தில்…. கெத்து தனுஷ் . அருமை .

எந்தெந்த விசயங்களுக்கு எல்லாம் தன்னை இப்போது மகன்  கோபித்துக் கொள்கிறானோ அந்தந்த விசயங்களில் அந்தக் காலத்தில் தான் எப்படி நடந்து கொண்டேன் என்பதை,

 பெரியவர் பாண்டி யோசித்துப் பார்க்கும் காட்சிகளை அளவோடு வைத்த விதத்தில் இயக்குனர் தனுஷின் தெளிவு தெரிகிறது .

இரண்டாம் பாதியை நோக்கிய பயணமாகவே படத்தின் முதற் பாதியை அமைத்த விதமும் கவனித்துப் பாராட்ட வைக்கிறது .

pandi 44

இரண்டாம் பகுதியில் நடிகர் தனுஷை நச்சென்று பயன்படுத்திக் கொள்கிறார் இயக்குனர் தனுஷ் . பிளாஷ்பேக் காட்சிகளில் டோன் உறுத்தாத ஓவியம் போல சிறக்கிறது .

பிளாஷ் பேக் முடியும் போது பூந்தென்றலின் தம்பி பாண்டியை கட்டிக் கொள்ளும் இடம் காதலை மிஞ்சிய காதலின் உச்சம் . டைரக்டர் தனுஷ் மகுடம் சூடும் காட்சி இது .

ராஜ்கிரண் ரேவதி காட்சிகள் கொஞ்சம் அசந்தாலும் கோமாளிக் கூத்தாகப் போயிருக்கும். திரைக்கதையில் அந்தப் பகுதிகளில்  கத்தி மேல் நடப்பது போல கவனம் தேவை .

கத்தி மேல்தான் தனுஷும் நடந்து இருக்கறார் . ஆனால் கவனமாக நடந்தது மட்டுமல்ல ரசித்தும் நடந்து இருக்கிறார் .

pandi 8

இது போன்ற கதைப் போக்கில் காதலியின் கணவன் , காதலனின் மனைவி போன்ற கேரக்டர்களை முழுமையாக ஆஃப் செய்து சேஃப் மோடில் விளையாடப் போய்விடுவார்கள் இயக்குனர்கள்

ஆனால் தனுஷ் அந்த வகையிலும் சாதிக்கிறார் .

ஆணாதிக்க சமூகம் என்பதால் காதலியின் கணவன் கேரக்டரை மட்டும் முழுக்க மறைத்து விடுகிறார் . அதே நேரம்  பாண்டி கதாபாத்திரத்தின்  மனைவி கேரக்டரை ஓப்பனாக வெளியே சொல்கிறார்

(ஆனால் அதில்  அவர்களுக்குள் இன்டிமசி காட்டி சிக்கிக் கொள்ளாமல் கவனமாக மகன் பற்றிய விசயங்களாகவே பேசுவது புத்திசாலித்தனம் )

 வயது முதிர்ந்த பாண்டி — பூந்தென்றல் சம்ம்மந்தப்பட்ட காட்சிகளை அமைத்த விதத்தில் தெளிவு , திட்ட வட்டம் , தீர்மானம்,  காரண காரியம் , இவற்றுக்கு ஏற்ப,
 pandi 888

எந்த அளவுக்கு எல்லை தொடவேண்டும் எந்த எல்லைக்கு மேல் ஓர் இம்மியும் நகரக் கூடாது என்பதில் திரைக்கதை ஆசிரியர் தனுஷ் மகுடம் சூடுகிறார் .

நல்ல அழகாக ஷாட் எடுக்கத் தெரிந்தால் போதும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைக்கும் இன்றைய இளம் இயக்குனர்கள் ஒரு பாடம் போல படிக்க வேண்டிய பகுதி இது . கிரேட் தனுஷ் .

எந்தப் பக்கத்தையும் முழுசாக சாயாத , ஆனால் கொஞ்சம் அதிகம் சாயும் பக்கத்தை ,பேரனின் கோபம் மூலம் முன் கூட்டியே உணர்த்திய காட்சி அமைப்பில்,

 திரைக்கதையும் இயக்கமும் கட்டிப் பிடித்துக் கானம் பாடிக் காதலிக்கிறது .

முக்கியக் கதாபாத்திரங்கள் பேசும் முத்தான வசனங்கள் இருக்கட்டும் … ‘காதலிச்ச பொண்ணோ கடவுள் கொடுத்த பொண்ணோ ரிசல்ட் என்னவோ ஒண்ணுதான் ” என்று, 

pandi 2
போகிற போக்கில் ஒரு தாத்தா கேரக்டர் பேசி கைதட்டல் விழுகிறதே அங்கே வசனகர்த்தா தனுஷ் மகுடம் சூடுகிறார்

பூந்தென்றலைக் காதலித்த பாண்டி, கல்யாணம் கட்டி பிள்ளை பெற்ற பாண்டி, மகனால் மறுதலிக்கப்படும் பாண்டி , முதல் காதலியின் முன்பு உற்சாகம் துள்ளும் பாண்டி ….

 என்று இந்த நான்கு சூழல்களை அழகாக செட் செய்து கொடுப்பதிலேயே முடி சூடிக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் . அருமை

சிறப்பான பாடல்களை தந்ததோடு பின்னணி இசையை வாத்தியமாக அல்லாமல் ஒரு மொழியாகவே ஒலிக்க வைத்து உணர்வுகளுக்கு ஒளியேற்றுகிறார் இசை அமைப்பாளர் சான் ரோல்டன் .

pandi 3

அகலவாட்டிலான மூன்று இருக்கைகள் வரிசை மற்றும் நீ நீ நீ நீளவாட்டிலான ஒற்றை வரிசை இருக்க கொண்ட  பேருந்தை பிளாஷ்பேக்கில் பயன்படுத்திய வகையில் படக் குழுவின் செய் நேர்த்தி தெரிகிறது

பவர் பாண்டியாக படம் முழுக்க ஜொலிக்கிறார் ராஜ்கிரன் . அந்த மனிதன் வந்து நின்று சிரித்தாலே ஃபிரேம் நிறைகிறது . நியாய கோபம் , பாசம் , அறியாமை,  காதல், வெள்ளந்தித் தனம் என்று  பக்குவமான நடிப்பு.

குடித்து விட்டுக் கலாட்டா செய்யும் காட்சியில் கூட ஒரு கண்ணியம் காட்டி கேரக்டரைக் காயப்படுத்தாத  வகையில் நடித்துள்ளார் பாருங்கள். அங்கே நிற்கிறார்கள் ராஜ்கிரணும் தனுஷும் .
அவருக்கு இருக்கும் இமேஜ் கேரக்டருக்கு பெரிதும் உதவ , அந்த கேரக்டரில் பல புதிய தன்மைகளை தனுஷ் ஏற்றி இருப்பதன் மூலம், 
pandi 5
ராஜ்கிரனால் இந்த கேரக்டர், இந்த கேரக்டரால் ராஜ்கிரன் என்று இரு தரப்புக்கும் பலன் . இன்னும் கண்ணிலேயே நிற்கிறார் ராஜ்கிரண்

இளவயது பாண்டியாக நடிப்பு சண்டை என்று எல்லா வகையிலும் கவர்கிறார் தனுஷ் . சொந்த டைரக்ஷன் என்பதால ஓவரா அலட்டிகிறாரு என்று ,

யாரும் கொளுத்திப் போடக் கொடுக்கக் கூடாது வாய்ப்பு என்ற கவனத்தில் அடக்கி ஆனால் அழுத்தமாக வாசிக்கிறார் நடிகர் தனுஷ்

அப்பா பிரிந்து போன பிறகு அப்பாவுக்கு பிடித்த பாடலை காரில் கேட்டபடி அழும் காட்சியில் நடிப்புக்கும் மேலான ஓர் உணர்வை தருகிறார் பிரசன்னா.

pandi 88

கொஞ்சம் பிறழ்ந்தாலும் தப்பாக தெரிந்து விட வாய்ப்புள்ள கேரக்டரில் மிக கவனமாக நடித்துள்ளார் ரேவதி . அவருக்கான உடல் மொழிகளை மிக கவனமாக செட் செய்து இருக்கிறார்கள் .

மடோன்னா ஒகே . சாயாசிங்கின் அந்த வில்லித்தனம் போன்ற குளோசப் சிரிப்புகள்  மட்டும் தனியே துருத்தித் தெரிகிறது .

குட்டீஸ் ஒகே .

சினிமா ஷூட்டிங்கில் ஸ்டன்ட் மாஸ்டராக பாண்டி அசத்திய பிறகு வரும் பாடலில் பாண்டி தொடர்ந்து நடக்கிறார் .

ஆனால் ஒரு ஷாட்டின் பின்னணியில் வந்த முகங்கள் மீண்டும் மீண்டும் அடுத்த ஷாட்களில் வருகின்றன .

pandi 6

கதை நிகழும் இடத்துக்கு ஏற்ப காட்சி எடுக்கப்பட்டு இருக்கும்  இடத்தின் பின்னணியை உருவாக்குவதில் டைரக்ஷன் டீம் கொஞ்சம் கோட்டை விட்டுள்ளது .

பிளாஷ் பேக்கில் அந்தக் கால பேருந்தை கொண்டு வந்தவர்கள் , அதற்கான சவுண்டு எஃபெக்டில் அந்தப் பேருந்துக்கான கடகட கடகட ஒலியை தராமல் நவீன பேருந்து எஞ்சின் ஒலியை சேர்த்தது ஏனோ ?

இவ்வளவு நல்ல படத்தில் இதெல்லாம் ஒரு குறையா என்று கேட்கலாம் .

யாரோ ஒரு புது இயக்குனர் இயக்கி இருந்தால் இதெல்லாம் பெரிய விசயமில்லைதான் . ஆனால் தனுஷ் போன்ற ஒரு சிறந்த நடிகர் இயக்குனராக அறிமுகம் ஆகும்போது இதை எல்லாம்  சொல்ல வேண்டி உள்ளது .

pandi 7

அப்புறம் இந்தப் படத்தில் நடந்து இருக்கும் ஒரு குற்….

சரி ,…  ‘அது திட்டமிட்டு செய்யப்படவில்லை . உள்நோக்கம் இல்லை ‘என்று தனுஷே கூறி விட்டதால் , அது வேண்டாம் .

ஆக,

நல்ல கதை , சிறப்பான திரைக்கதை , கவரும் வசனங்கள் , அருமையான இயக்க உத்திகள் இவற்றோடு குடும்பத்தோடு பார்க்கத் தகுந்த, 

ஒரே நேரத்தில் உறவுகள் காதல் இரண்டின் சிறப்பையும் சொல்கிற சமூகத்துக்கு தேவையான படம் இது .

மொத்தத்தில் ‘ப(வர்). பாண்டி .. உறவுக்கும் உணர்வுக்குமான உன்னத பாலம்

pandi 77

மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————————–
தனுஷ்,  ராஜ்கிரண், வேல்ராஜ், சான் ரோல்டன், ரேவதி, பிரசன்னா

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *