பியார் பிரேமா காதல் @ விமர்சனம்

 ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா  மற்றும் கே புரடக்ஷன்ஸ் சார்பில் எஸ் என் ராஜராஜன் ஆகியோர் தயாரிக்க, 

ஹரீஷ் கல்யான், ரைசா வில்சன், ஆனந்த் பாபு. ரேகா, முனீஸ் காந்த் நடிப்பில் இளன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் பியார் பிரேமா காதல் .
 
பியார் என்றால் இந்தியில் காதல் என்றும்  , பிரேமா என்றால் தெலுங்கில் காதல் என்றும் பொருள் .  படம் எப்படி ? பேசலாம் . 
 
நடுத்தர வர்க்க தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த குமார் ( ஹரீஷ் கல்யான்) என்ற பையனுக்கு . சிந்துஜா என்ற ,
 
வடக்கத்தி அல்லது ஆங்கிலோ இந்திய நவநாகரீக பெண் ( ரைசா வில்சன்) மீது காதல் வருகிறது . 
 
அவனுடன் பழகும் அவள்,  ஒரு நாள் அவனைத் தூண்டி விட்டு உடலுறவு கொள்கிறாள் .  ‘கல்யாணம் பண்ணிக் கொள்ளலாமா?’ என்று அவன் கேட்க,
 
“நாம நண்பர்கள் . ஜஸ்ட் ஆசைப் பட்டோம். நடந்துருச்சு . அதுக்காக கல்யாணம் எல்லாம் வேணாம் ” என்கிறாள் அவள். 
அவனால் அதைத் தாங்க முடியவில்லை . பொது இடத்தில் அவன்  விசயத்தை போட்டு உடைக்க , ‘அவமானப்படும்’  அவள் அவனை  வெறுக்கிறாள். 
 
கொஞ்ச நாள் வருந்தும் அவன், ஒரு நிலையில் அவளை புறக்கணிப்பது போல நடந்து கொள்ள , இப்போது அவளுக்கு அவன் மீது காதல் வருகிறது. 
 
அவனும் அதை ஏற்கிறான் . மறுபடியும் திருமணம் பற்றி அவன் பேச , கல்யாணம் செய்யாமல் ஒரே வீட்டில் வாழலாம் என்கிறாள்.
 
வேறு வழியின்றி அதற்கு ஒத்துக் கொண்டு அம்மா அப்பாவுக்கு தெரியாமல் சமாளிக்கிறான். 
 
பையனுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று அம்மா (ரேகா) நினைக்க, பார்க்கும் பெண்களை எல்லாம் இவன் மறுக்க ,
 
ஒரு நிலையில் அம்மா நோய் வாய்ப்படுகிறாள் . 
 
‘நமது கல்யாணம்தான் அம்மாவின் நோய்க்கு மன மருந்து’ என்று உணரும் குமார் , கல்யாணம் செய்து கொள்ள சிந்துஜாவை வற்புறுத்துகிறான் . 
 
ஆனால் சிந்துஜா , “கல்யாணம் பண்ணிகிட்டா  உங்க அம்மா குழந்தை வேற பெத்துக்க சொல்வாங்க …அப்புறம் என் லட்சியம்  நிறைவேறாமல் போய் விடும் ‘ என்கிறாள் .
அதாவது  ஒரு ரெஸ்டாரன்ட் வச்சு அதற்கு ஓனர் ஆகணும் என்ற  லட்சியம்!
 
எனவே அவனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடக்கிறது . 
 
படத்தின் இயக்குனர் சொன்னபடி அதுவரை வெட்டியாக சுற்றிக் கொண்டு இருக்கும் சிந்துஜாவின் அப்பா (ஆனந்த் பாபு ) ‘அவனை மிஸ் பண்ணிடாத’ என்கிறார் . 
 
உடனே காரில் இருந்து இறங்கி மண்டபத்துக்கு ஓடினால்..  அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த பியார் பிரேமா காதல் . 
 
மிக ஃபிரஷ் ஆக ஆரம்பிக்கிறது படம்.  
 
முகங்களை அழகாக காட்டும் ராஜா பட்டாச்சார்யாவின் ஒளிப்பதிவு படத்துக்கு அழகு சேர்க்கிறது 
 
இயக்குனருக்கு படமாக்கல் சிறப்பாக வருகிறது .
 
காதலர்களின் பிரிவை நடனக் காட்சியின் பொருத்தமான ஸ்டெப்களோடு  படமாக்கி இருக்கும் விதம் அழகு 
 
காதலி ‘பப்’பில் குடித்து விட்டு மட்டையானாலும் நாயகன் காதலில் அப்படியே இருக்கிறான் திட்டம் போட்டு அவனை கடைக்கு அனுப்பி ஆணுறை வாங்கி வரச் செய்து ஜஸ்ட் லைக் தட்  இரவு முழுக்க படுத்து எழுந்தாலும்
 
(எதிர்பாராத நொடியில்  கை பட்டு மெய் தீண்டி அறியாமல்  எல்லாம் தப்பு செய்து விடவில்லை . நோட் திஸ் பாயின்ட்! ) திகட்ட திகட்ட காதலிக்கிறான் . 
 
தெய்வீகக் காதலன் போலிருகிறது என்று யோசித்தால் ,’மெடிக்கல் ஷாப் இருக்கு , அங்கே நிறைய காண்டம் இருக்கு .
 
கல்யாணம் காதல் எல்லாம் வேணாம் . ஜஸ்ட் ஃபிரண்டாவே இருக்கலாம் .. இருக்கலாம்’ என்ற ரீதியில் அவள் சொல்ல, 
 
‘கல்யாணம் பண்ணிக்கலன்னா எப்படி?’ என்று அழுது புரள்கிறானாம் நாயகன் . .  அடேய்களா .. ! அப்படி யாராவது இருக்கீங்களாடா ?
 
காதல் என்ற பெயரில் இப்படி ஜஸ்ட் லைக் தட் பெண்களே செக்ஸுக்கு அழைக்கும்படியான காட்சிகளை யாதார்த்தம் என்ற பெயரில் சினிமாவில் வைப்பதற்கு பதில்  , 
இருட்டு அறையில் முரட்டு குத்து படமே மேல் என்ற எண்ணத்தை உருவாக்கும்படியான ….  இந்த  கலாச்சாரப் பண்பாட்டுக் கண்ணியச் சறுக்கல்கள் எல்லாம் ஒரு பக்கம் ….
 
படைப்பு ரீதியாகப் பார்த்தால்  கதை திரைக்கதையும்  சர்ர்ரர்ர்ர்ரேலென்று சறுக்கும் முதல் இடமும் இதுதான் .  ஆச்சா ?
 
அதன் பிறகு “அவள் கல்யாணம் கட்டாமல் குடும்பம் நடத்தலாம்” என்று சொல்ல, ‘கல்யாணம் பண்ணும் அளவுக்கு மெல்ல மெல்ல அவள் மனதை மாற்றலாம்’ என்று, 
 
அதற்கும் சம்மதிக்கிறானாம். (நிஜமாவே இந்த ஹீரோ கதாபாத்திரம் மியூசியத்தில் வைக்க வேண்டிய பீஸ் தான் ).
 
இப்படி அவள் என்ன சொன்னாலும் அவன் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு,  ஒரு வேளை  அவள் உன்னதமான, 
 
தெய்வீகமான — இவனுக்காகவே உருகும் காதலியா என்றால் , கருமம் அப்படியும் எதுவும் இல்லை . 
 
”உங்கம்மா செத்து சுடுகாடு போய் மக்கி மண்ணா போனாலும் சரி . நான் உன்னை கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது. என் லட்சியம்  என்ன ஆவது ?”  என்கிறாள் . 
ஒருவேளை அடுத்த ராக்கெட்டில் ஏறி செவ்வாய் கிரகத்துக்குப் போவதுதான் அவள் லட்சியம் போலிருகிறது என்றால் .. ரெஸ்டாரன்ட் வைப்பதுதான்  அந்த லட்சியமாம் . 
 
ஏம்மா… கல்யாணம் செய்து கொண்டு குழந்தை பெற்று குழந்தையை மாமியார் மாமனார் அப்பா ஆகியோரின் ஆதரவோடு பார்த்துக் கொண்டு, 
 
ரெஸ்டாரன்ட் வைத்தால் அந்த  உணவு ருசிக்காதா ? இல்லை வங்கியில் லோன்தான் கிடைக்காதா ?
 
கொடுமை . 
 
 கல்யாணம் பண்ணிக் கொண்டு அப்புறம் கலவி கண்டு வாழும் கண்ணியக் காதலோ, இல்லை…
 
எல்லாவற்றிலும், டிரையல் பார்த்து  செட் ஆகுதா என்று செய்து பார்த்து அப்புறம் காதலிக்கும் காதலோ .. அட என்ன கருமம் என்றாலும் .. 
 
‘காதல் என்பது முழுக்க முழுக்க நம் சுயநலத்துக்காக ஆடும் ஓர் அடிமையை தேடும் வேலை அல்ல . அப்படி நினைத்தால் எந்தக் காதலும் நிலைக்காது .
காதல் என்பது விட்டுக் கொடுப்பது .  இருவரில் ஒருவருக்கு மற்றொருவர் விட்டுக் கொடுப்பது. .
 
ஒருவரின் லட்சியததையே இருவரும் பொது லட்சியமாக நினைத்து வெல்வது . 
 
அல்லது சூழலுக்கு ஏற்ப ஒருவருக்கு ஒருவர் தற்காலிகமாக விட்டுக் கொடுத்து , இருவரின் இலட்சியத்தையும் வெல்வது .’ 
 
— என்கிற ரீதியில் ஒரு வார்த்தையை கூட  படத்தில் வரும்,   பக்குவ  வயது கொண்ட  நாலைந்து கூமுட்டை கதாபாத்திரங்களில், 
 
 ஒரு கதாபாத்திரமும் காதல் ஜோடிக்கும் சொல்லவில்லை . அதன் மூலம் படம்  பார்ப்பவனுக்கும் சொல்லவில்லை . 
 
படம் முடியும் நேரத்தில் இதற்கு பதிலாக ஆனந்த் பாபு ‘உங்கம்மாவை நான் மதிக்கல … அவ போன பிறகுதான் அருமை தெரியுது .
 
அதே மாதிரி நீ அவனை மிஸ் பண்ணிடாத’ என்று ஏதோ பெனாத்துகிறார். கொடுமை . 
 
விஜய் சிம்ரன் நடித்த பிரியமானவளே படத்தில் விஜய் கேரக்டர் இந்தப் படத்தின் கதாநாயகி கேரக்டர் போலவே இருக்கும் . சிம்ரன் கேரக்டர் கதாநாயகன் கேரக்டர் போல இருக்கும் . 
 
அதில் இருந்து இம்ப்ரெஸ் ஆகி , இந்தக் கதையை இயக்குனர் எழுதினாரோ .. அல்லது இந்தக் கால இளைஞர்கள், 
 
காதல் என்ற பெயரில் பக்குவம் இல்லாமல் நடந்து கொள்வதை அப்சர்வ் செய்து கதை எழுதினாரோ .. 
 
ஆனால் படத்தின் அடிப்படைப் பிரச்னையை எப்படிக் கையாள வேண்டும்…   மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி, 
 
என்ன முடிவு சொல்ல வேண்டும்…  என்ற தெளிவும் வாழ்வியல் அனுபவமும் இயக்குனருக்கு இல்லை . 
 
இதை விடக் கொடுமை என்னவென்றால் , எத்தனை வருடம் காதலித்தாலும் சரி … கார் பங்களா என்று ,
 
செட்டில் ஆகாமல் பிள்ளை பெற்றுக் கொள்ளவே கூடாது என்பதை கெத்தாக சொல்கிறாள் நாயகி . 
 
குழந்தைக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் கஷ்டப்படும் தகப்பனை (முனீஸ்காந்த்) அதற்கு உதாரணம் காட்டுகிறாள் . 
 
அட கொடுமையே !ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் குழந்தை பெற்றால்தான் அந்த குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்கும் என்கிறது மருத்துவம் .
 
கோடி கோடிக்கு அதிபதியானாலும் வயதாகி அப்பா அம்மா ஆகி ஆரோக்கியமற்ற குழந்தைகளை பெறுவதால் என்ன பலன் ?
 
தவிர குழந்தையின் அப்பா அம்மா நம்மை அப்பா அம்மா என்று அழைக்க வேண்டுமா ? தாத்தா பாட்டி என்று அழைக்க வேண்டுமா ?
 
சரி… ஒருவேளை செட்டில் ஆகாமலே போனால்……. ?
 
செட்டில் ஆகும் வரை காத்திராமல் காலாகாலத்தில் குழந்தை பெற்று  எளிமையாக வளர்த்து அவர்களையும், 
 
எளிய வாழ்க்கைக்கு பழக்கி அப்புறம் முன்னேறி வசதிக்கு வரும் வீட்டின் பிள்ளைகளே , தங்கள் வாழ்வையும் சிறப்பாக வாழ்கிறார்கள் . 
 
பின்  வயதில் வாழ்வதை விடவும்  எளிய வாழ்வை சிறு வயதில் வாழ்வதே, மொத்த  வாழ்விலும்  ஜெயிக்கும் வழி . 
 

 
இப்படி உருப்படியாக ஆக்க பூர்வமாக சிந்திக்காமல் அரைவேக்காடான திரைக்கதை வசனத்தில் நகர்கிறது படம் 
 

இத்தனைக்கும்  பிறகு நாயகன் நாயகி இருவரில் யாராவது ஒருவர் வழிக்கு இன்னொருவர் வருவார்கள் என்றால் .. கடைசிவரை அதுவும் இல்லை . முடியலடா சாமி . முடியல 

இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் இந்தப் படத்தை உட்கார்ந்து பார்க்க முடிகிறது என்றால், 
 
அதற்கு முக்கியக் காரணம் யுவன் சங்கர் ராஜாவின் அற்புதமான பின்னணி இசையும் , அதை அடுத்து சிறப்பாக இருக்கும் பாடல்களும் !
 
நடிக நடிகையரின் நடிப்பில் உள்ள குறைபாட்டை  தன் அருமையான இசையால் நிரப்புகிறார் யுவன் சங்கர் ராஜா . 
 
மொத்தத்தில் பியார் பிரேமா காதல் …….. யுவன் … யுவன்… யுவன் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *