ராஜா ரங்குஸ்கி @ விமர்சனம்

வாசன் புரடக்சன்ஸ் சார்பில்  வாசன் @ சக்திவாசன்  மற்றும் பர்மா டாக்கீஸ் சார்பில் இயக்குனர் தரணிதரன்  தயாரிப்பில் ,

மெட்ரோ சிரிஷ், சாந்தினி, கல்லூரி வினோத், ஜெய குமார், விஜய் சத்யா , அனுபமா குமார், மது ரகுராம், வாசன் @ சக்திவாசன் நடிப்பில் ,  பர்மா , ஜாக்சன் துறை போன்ற 

படங்களை இயக்கிய தரணிதரன் இயக்கி இருக்கும் படம் ராஜா ரங்குஸ்கி . படம் ராஜாவா ? இல்லை கூஜாவா ? பார்க்கலாம் . 
 
இளம் காவல் அதிகாரியான ராஜாவுக்கு ( மெட்ரோ சிரிஷ்), இளம் பெண்ணான ரங்குஸ்கி ( சாந்தினி) மீது காதல்.
உயர் அதிகாரியான ஆரோக்கியத்துக்கு  (விஜய் சத்யா) ராஜாவை பிடிக்காது. எதிலாவது அவனை மாட்டி விட காத்திருக்கிறான் ஆரோக்கியம் . 
 
ராஜா பணியாற்றும் காவல் நிலைய எல்லைக்குள் அடங்கியதொரு,  தனி வில்லாக்கள் குடியிருப்பில் வசிக்கிறாள் ரங்குஸ்கி .
 
ரங்குஸ்கி என்பது எழுத்தாளர் சுஜாதாவின் சொந்தப் பெயர் . சுஜாதாவின் ரசிகையான ரங்குஸ்கி தானும் ஓர் எழுத்தாளர் என்கிறாள் 
 
அங்கே இருக்கும் மரியா என்ற பெண்ணுடன்  ( அனுபமா குமார் ) ராஜாவுக்கு அலுவல் பணி இருக்கிறது . மரியா ஒரு பழம்பொருள் சேகரிப்பாளர். 
ராஜாவின் காதலறிந்த மரியா , ‘ எதை வேண்டாம் என்று சொல்கிறோமோ அதைத்தான்  ரங்குஸ்கி  செய்வாள்” என்கிறாள் . 
 
எனவே இன்னொரு போனில் இருந்து  “ராஜாவுடன் பேசக் கூடாது ”என்று குரல் மாற்றிப்
பேசி ரங்குஸ்கியை  மிரட்டுகிறான் ராஜா .
 
கோபப் படும் ரங்குஸ்கி ராஜாவுடன் பேசுகிறாள். நெருங்கிப் பழகுகிறாள் . காதல் வருகிறது 
 
ஆனால் அதன் பின்னரும் அந்தக் குரல் தொடர்கிறது . தவிர ராஜாவுக்கும் போன் வருகிறது . தன் குரலில் தன்னை யாரோ மிரட்டுவது கேட்டு அதிர்கிறான் ராஜா . 
இந்த நிலையில்  மரியா கொல்லப் படுகிறாள். ராஜாவை குற்றவாளியாக்கத்
 
துடிக்கிறான் ஆரோக்கியம் . ஆனால் ஆதாரம் எதுவும் கிடைக்காத நிலையில் வழக்கு சி பி சி ஐ டி க்கு போகிறது . 
 
அதற்கென வரும் அதிகாரி கே கே ஆதாரம் தேட , ராஜாவை நோக்கியே பாதை நீள்கிறது . 
 
மரியாவைக் கொன்றது யார் ? ராஜா தப்பினானா ? என்பதே இந்த ரங்குஸ்கி. 
 
பழம்பொருள் சேகரிப்பு, அதற்கு இருக்கும் சந்தை மதிப்பு, அதனால் ஏற்படும் குற்றங்கள், கடத்தல்கள் , கொலைகள், சிக்குதல்கள்,
தப்பிப்புகள், நம்பிக்கை துரோகங்கள், அதிர்ச்சிகள் இவற்றை வைத்து  அழுத்தமாக ஒரு படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குனர் . 
 
அடுத்தடுத்த திருப்பங்கள், எளிதில் யூகிக்க முடியாத முடிவு , பழம்பொருள் சேகரிப்பு பற்றிய சுவையான விஷயம் இவை திரைக்கதையின் பலம்.
 
மரியா –  மேரி திருப்பம் அட்டகாசம் .  
 
மிக சிறப்பான கேமரா நகர்வுகள், சூழல் உருவாக்கம் , நல்ல படமாக்கல் இவற்றாலும்  கவர்கிறார் இயக்குனர் தரணிதரன் .
 
படத்தை பல மடங்கு உயரத்தில் தூக்கி நிறுத்துகிறது யுவன் சங்கர் ராஜாவின் அட்டகாசமான பின்னணி இசை .
 
அது இல்லாமல் இந்தப் படத்தை யோசிக்கக் கூட முடியவில்லை . அப்படி உயிர் கொடுத்து இருக்கிறார் யுவன் .
மிக அற்புதமான ஒளிப்பதிவு . திரைக்கதைக் கேற்ற ஒரு மர்மத் தன்மையை உருவாகுவது,  ஈர வண்ணக் குழைவு,
 
இருள் – ஒளி ஆளுமை என்று மிக நேர்த்தியாக பணியாற்றி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவா . 
 
ஷாபிக் முகமது அலியின் படத் தொகுப்பும் கபிலனின் கலை இயக்கமும் அருமை அருமை . 
மிக இயல்பாக  மென்மையாக நடித்துள்ளார் சிரிஷ்.  சாந்தினி பொருத்தம் . 
 
இதுவரை சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஜய் சத்யா, போலீஸ் அதிகாரி ஆரோக்யமாக சிறப்பாக இயல்பாக அசால்ட்டாக நடித்துள்ளார் . அருமை . வாழ்த்துகள் . 
ஜெயா குமாரும் கேஷுவலான நடிப்பில் கவர்கிறார் . தயாரிப்பாளர் சக்தி @ சக்திவாசனும் ஒரு கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார் . குறையில்லை . 
 
ஆரம்பத்தில் குடியிருப்பு சுவரில் இருட்டில் ஒரு பிரம்மாணடமான நிழல் தெரிகிறதே . அது யார் ? அல்லது எதுக்கு ?
 
ராஜா ஏதோ ஸ்பிலிட் பர்சனாலிட்டியாக இருப்பான் என்பது போல வரும் சில ஷாட்கள் ஏன் ?
 
இது போன்ற வலிந்து திணிக்கப்படும் ஓரிரு  விசயங்களை தவிர்த்து இருக்கலாம் . 
 
எனினும் ஒழுங்கான சிரத்தையான திரில்லராக மனத்தைக் கவர்கிறது ராஜா ரங்குஸ்கி. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *