ஃ பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக், சனா, சித்திக் , டேனியல் , லல்லு நடிக்க,
ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கும் படம் ரங்கூன் . டிக்கட் எடுக்கலாமா ? பார்க்கலாம் .
பர்மா வாழ் தமிழ்க குடும்பத்து சிறுவனான வெங்கட் 1987 ஆம் ஆண்டு குடும்பத்தோடு வட சென்னையில் செட்டில் ஆகிறான்.. அத்தோ குமார் , டிப் டாப் என்று சில நண்பர்கள் அமைகிறார்கள்
அப்பா விபத்தில் இறந்து போக, தங்கையையும் அவனையும் வைத்துக் கொண்டு அம்மா கஷ்டப்பட , அத்தோ குமார் மற்றும் அவன் குடும்பத்தின் உதவியால் வளர்ந்து இளைஞனாகிறான் .(கௌதம் கார்த்திக்)
அத்தோ குமாரின் (லல்லு) உதவியால் அந்த ஏரியாவில் முக்கியமான நகை வேலைப்பாடு கடை வைத்திருக்கும் குணசீலன் என்பவரிடம் ( சித்திக்) வேலைக்கு சேர்கிறான் .
நடாஷா என்ற வெள்ளைத் தோல் பெண்ணை (சனா) காதலிக்கிறான்
குணசீலன் தனக்கு வாழ்வு கொடுத்தவர் என்பதால் அவரோடு சேர்ந்து ஹவாலா மோசடியிலும் வெங்கட் ஈடுபடுகிறான் . தன் தங்கையை அத்தோ குமாருக்கு கல்யாணம் செய்து வைக்கிறான்
ஹவாலா மோசடி செய்வதன் ஆபத்தை நடாஷா சொல்ல , குணசீலனின் பணப் பிரசனையைத் தீர்க்க ஒரு பெரிய தங்கக் கடத்தலை மட்டும் கடைசியாக செய்து விட்டு ,
குற்றம் செய்யா வாழ்வுக்கு வர முடிவு செய்கிறான் வெங்கட்
அந்தக் கடத்தலுக்காக தான் பிறந்த ரங்கூனுக்கு மச்சான் அத்தோ குமார் , நண்பன் டிப்டாப் (டேனியல்) ஆகியோருடன் போகிறான். தங்கத்தைக் கொடுத்து பணம் பெற்று வரும்போது பெரும் இழப்பை சந்திக்கிறான் .
அதன் விளைவாக சென்னை வந்து , குணசீலனுக்காக தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகிறான் . உறவு இழப்பையும் சந்திக்கிறான் .
அதற்குப் பிறகு அவன் சந்திக்கும் இரண்டு துரோகங்கள் அவனை என்னவாக ஆக்குகின்றன என்பதே இந்தப் படம்
நல்ல ஷாட்கள் வைத்து மேக்கிங்கில் அசத்துகிறார் இயக்குனர் ராஜ்குமார் . அந்த இடைவேளை டுவிஸ்ட் அபாரம் . சும்மா பதற வைத்து விடுகிறார்கள் அந்த இடத்தில் !
ஒரு ஜாலியான காடசியின் இயல்பான வசனம் மற்றும் கேலியில் இருந்து ஒரு முக்கியமான துரோகத்துக்கு லீட் எடுப்பது திரைக்கதையில் சபாஷ் வாங்கும் இடம் .
அந்த துணை துரோகம் எதிர்பார்க்க முடியவில்லை என்ற வகையிலும் சபாஷ் போடலாம் .
விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் . பின்னணி இசை அருமை . சூப்பர்
கௌதம் கார்த்திக் மேக்கப்பில் கறுப்பாக்கப்பட்டு இருந்தாலும் நடிப்பில் கருத்தாகி இருக்கிறார் . சண்டை பாடல் காட்சிகளி ல் நடித்த விதமும் குட் .
அம்மாவாக நடித்து இருப்பவர் சிறப்பாக நடித்துள்ளார் . டேனியல் , லல்லு மண் மனத்ததோடு கூடிய நன்னடிப்பு .
சின்னச் சின்ன கேரக்டர்களில் கூட பொருத்தமான நடிகர்கள் . திருத்தமான நடிப்பு .
சனா,மற்றும் தங்கையாக நடித்துள்ள நடிகை இருவரும்தான் படத்தில் ஒட்டவே இல்லை .
கலர் கூட ஓகே , வட சென்னை சேட்டுப் பொண்ணுக என்று நினைத்துக் கொள்ளலாம் . ஆனால் இப்படியா முழுக்க முழுக்க வெஸ்டர்ன் ஸ்டைல் எக்ஸ்பிரஷன்ஸ் கொடுப்பது?
வீரையன் வீட்டில் வாக்கப்பட்ட விட்ட்டோரியா மகாராணிக்கள் மாதிரி ஒத்துக்க கொள்ள முடியாத ஒவ்வாமை இந்த இருவரின் நடை உடை பாவனையிலும் !
முதல் பகுதியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படம் இரண்டாம் பாகத்தில் ஏகத்துக்கும் நோண்டுகிறது .
பர்மாவில் பணத்தை தொலைத்து விட்டு, எல்லாரும் பக்குவமாக சென்னை வந்து நிற்கும்போதே ‘போச்சுடா பொன்னுசாமி ” என்று புரிந்து விட்டது .
அதற்கப்புறம் அமாவாசை நடு இரவில் ஆளரவம் இல்லாத பெரிய கிரவுண்டில கண்ணைக் கட்டிக்க கொண்டு நடப்பது போல தறிகெட்டு அலைகிறது திரைக்கதை .
பர்மாவில் தொலைத்த பணத்தை வெங்கட் பர்மாவிலேயே கண்டு பிடித்தான் . அதற்குள் உறவை இழந்தான் . மேலும் பல விஷயங்களை இழந்தான் .
இப்படி பல இழப்புகளுக்கு மத்தியிலும் பணத்தோடு சென்னை வந்து சேர , அங்கு நடக்கும் துரோகத்தால் அவன் பொங்கி எழுந்தான் என்று திரைக்கதை போயிருந்தால் ரங்கூன், பர்மா தேக்கு போல அசத்தி இருக்கும் .
அது இல்லாத காரணததால்
ரங்கூன் .. ட்ரிப் கேன்சல் !