சங்கு சக்கரம் @ விமர்சனம்

லியோவிஷன் வி.எஸ்.ராஜ்குமார் மற்றும் சினிமா வாலா பிச்சர்ஸ் கே.சதீஷ் ஆகியோர் தயாரிப்பில் ,

திலீப் சுப்பராயன் , கீதா பேபி மோனிகா , ஜெர்மி ரோஸ் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் நடிக்க, 

இயக்குனர் பி. வாசுவிடம் உதவி இயக்குனராக இருந்த மாரிசன் எழுதி இயக்கி இருக்கும் படம் சங்கு சக்கரம் . ரசிகனுக்கு தீபாவளியா ? பார்க்கலாம்.
 
ஐநூறு கோடிக்கு அதிபதியான தமிழ் என்ற சிறுவனை , அவனது காப்பாளர்களாக இருக்கும் இரு நபர்களே கொல்ல முயல்கின்றனர் . சிறுவர்களைக் கடத்தி விற்கும் நபர் ஒருவன் ( திலீப் சுப்பராயன்)  அதற்காக பஞ்சு மிட்டாய் விற்கும் நபரை உதவியாளனாக பயன்படுத்துகிறான் . 
 
அந்தப் பகுதியில்  உள்ள ஒரு பெரிய பாழடைந்த பங்களாவில் ஒரு தாய்ப் பேயும் ( கீதா) ஒரு சேய்ப்  பேயும் (பேபி மோனிகா)  இருக்கிறது . 
 
அங்கே வைத்து பிள்ளைகளை என்ன செய்தாலும்  சந்தேகம் பேய் மீது விழும் நாம் தப்பித்து விடலாம், – என்று எண்ணும்  கடத்தல்காரன் அணியும் கொலைகாரர்கள் அணியும் பிள்ளைகளை அங்கே வர வைக்கிறது . 
 
தவிர அந்த பங்களாவில் உள்ள பேயை விரட்டி பங்களாவை குறைந்த விலைக்கு வாங்கி இடித்து அப்பார்ட்மென்ட் கட்ட விரும்பும் ரியல் எஸ்டேட் காரனும் வருகிறான் . 
 
சித்தர் பாணியிலான நம்மூர்  பேயோட்டியோடு அமெரிக்க சீனப் பேயோட்டிகளும் வருகிறார்கள் . 
 
பங்களாவுக்குள் என்ன நடந்தது என்பதே இந்த சங்கு சக்கரம் . 
 
படத்தில் எல்லோரையும் பேய் அந்தரத்தில் தூக்கி சுறு சுறு என்று சுழற்றுவதாலும் , பேயோட்டிகள் பேயை சுற்றிச் சுற்றி சுழன்று சுழன்று செயல்படுவதாலும் அந்தப் பெயரோ என்னவோ . 
 
சுமார் ஒன்பது மழலைகள் வாண்டுகள் படம் முழுக்க பிரேமை அழகாக நிறைக்கிறார்கள் . 
 
திலீப் சுப்பராயன்  , புன்னகை பூ கீதா உட்பட மற்ற பெரிய நடிகர்கள் எல்லாம்  சாதரணமாக நடித்திருக்க ,
 
குட்டிப் பேய் மலர் ஆக  நடித்து இருக்கும் பேபி மோனிகா……. வாவ் !  நடிப்பில் அசத்துகிறாள் . 
மோனிகா

அவ்வளவு கஷ்டமான மேக்கப் போட்டுக் கொண்டு , அவ்வப்போது கம்பியில் தொங்கிக் கொண்டு, 

 ஆர்வமாக அழகான நுணுக்கமான சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களைக் கூட சேதாரம் இல்லாமல் காட்டி அவள் நடித்து இருக்கும் விதம் அபாரம் . அருமை மோனிகா . 
 
அந்த அரண்மனை லெவல் பங்களாவுக்கான  , கலை இயக்கம் , விசுவல் எபெக்ட்ஸ் , வண்ணம் எல்லாம் அபாரம் . அட்டகாசம் . ஆசம் !
இடைவேளை வரை பெரிதாக நம்பிக்கை  தராத படம் இடைவேளைக்குப் பிறகு நிமிர்ந்து உட்கார வைக்கிறது .
 
அறிவுப் பூர்வமான இளைஞன் தமிழின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஆரம்பத்தில் அவனது கார்டியன்களும், 
 
அப்புறம் பெரிய  பேயும் பயப்படும்  காட்சிகள் ஒரே நேரத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன . உதாரணம் ”மாணவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு உணர்வு வரக் கூடாது என்பதற்குத்தான் யூனிஃபார்ம் என்றால் அப்புறம் ஒவ்வொரு பள்ளிக்கும் வேறு வேறு யூனிஃபார்ம் ?” 
 
மற்றும் ” ஒரு டீச்சர் ஒரு சப்ஜெக்ட்தான் நடத்துவீங்க . ஆனா ஒரு ஸ்டூடன்ட் மட்டும் எல்லா பாடமும் படிக்கணுமா ?” 
 
– இப்படிப் பல !
 
அதே போல அவன் பேயை மடக்கும்  விதம் அடடே ! 
 
பசங்க எல்லாருமே  இரண்டாம் பகுதியில் கலக்குகிறார்கள் . ஆங்காங்கே சீன , வெள்ளைக்கார பேயோட்டிகள் தங்கள் இசைக் கருவி கொண்டு பேயை சிறைப்பிடிக்க , அந்த இசைக் கருவிகளை தமிழ்ச் சித்தர் ,
 
உடுக்கை , பறை இசை , சங்கின் இசை கொண்டு வீழ்த்துவதாக வரும் காட்சிகள் இயக்குனர் மாரிசனின்  இன , கலாச்சார , நாட்டுப் பற்றை காட்டுகின்றன .
 
தவிர இத்தனை குழ்னதைகளை வைத்துக் ம்கொண்டு வேலை வாங்குவது என்பதும் அவர்களிடம் இருந்து சிறப்பான பங்களிப்பை வெளிக் கொணர்வதும் சாதரணமான விசயம் இல்லை . 
 
அதை மிக சிறப்பாக செய்து பாராட்டுப் பெறுகிறார் இயக்குனர் 
 
இயக்குனர் மாரிசன்
பாராட்டுகள். வாழ்த்துகள்
 
அந்தக் காட்சிகளில் இசை அமைப்பாளர் ஷபீர் இன்னும் ஒத்துழைத்திருக்க வேண்டும் . 
 
மனிதர்களை விட பேய்கள் நல்லவை . பிள்ளைகளை மனித அம்மாக்கள் படி படி என்று கொடுமை செய்வது ,
போல குட்டிப் பேய்களை அம்மா பேய்கள் சொல்வது இல்லை . பேயை விட மனிதன் மோசமானவனா இருக்கக் காரணம் பணத்தாசை தான் !
 
— இப்படி குழந்தைமையும் கவிதைத்தனமுமாக இயக்குனர் மாரிசன்  நிறுவும் இடங்கள் அழகு . 
 
படம் முடியும் நேரத்தில் ,  மீண்டும் பங்களாவுக்கு வரும் சிறுவன்  தமிழ் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல வேண்டும் என்று,  பெரிய பேய் உலக அளவிலான எல்லா பொது அறிவுப் புத்தகங்களையும் படித்து விட்டு  காத்திருக்க , 
 
சொன்னபடியே  வரும் தமிழ் , “ரஜினி அரசியலுக்கு வருவாரா இல்லையா ?” என்று கேட்க , பதில் தெரியாமல் பெரிய பேய் தப்பித்து ஓட , தியேட்டரே சும்மா அதிருதுல்ல .. 
 
குழந்தைகளுக்கான படங்கள் என்ற விசயமே இல்லாமல் போன நிலையில் இந்தப் படம்  அந்தக் குறையை தீர்ப்பதோடு , குழந்தைகளை சரியாக சித்தரிக்கும் விதத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது .
 
மொத்தத்தில், 
 
சங்கு சக்கரம் …  மெதுவா ஆரம்பிச்சு பதமா சுத்துது !
 
மகுடம் சூடும் கலைஞர் 
————————————–
பேபி மோனிகா 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *