சர்கார் @ விமர்சனம்

தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட, சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில்  விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத் குமார் ,

பழ. கருப்பையா, ராதாரவி யோகி பாபு நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் எழுதி இருக்கும் படம் சர்கார் . பரிபாலனம் எப்படி ? பார்க்கலாம் . 

‘கதை தன்னுடையது’ என்று வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்குப் போட்டு எழுத்தாளர் சங்கத்தின் தீர்ப்பின் படி வென்று இருக்கும் நிலையில், 
 
‘எனக்கு வந்த கற்பனை அவருக்கும் வந்து எழுத்தாளர் சங்கத்தில் அவர் பதிவு செய்து இருந்ததால் அங்கீகாரம்  தருகிறேன்’ என்று  விளக்கம் போடுகிறார் முருகதாஸ் . 
 
கூகுள் நிறுவன  தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை போன்ற நிறுவனமான ஜி எல் நிறுவன தலைமை செயல் அதிகாரியும், 
 
வருடம் 1800 ஆயிரம்கோடி ஈட்டுபவரும் தமிழருமான (ராமேஸ்வரம் மீனவர் குடும்பம்)  சுந்தர் (விஜய் ) , 
 
தமிழ் நாடு தேர்தல் சமயத்தில் தன் ஓட்டைப் போடுவதற்காக தனி  விமானம் பிடித்து பல லட்சங்கள் செலவில், 
 
13000 கிலோமீட்டர் பயணித்து லாஸ் வேகாசில் இருந்து  ஓட்டுப் போட வருகிறார் . ஆனால் அவரது ஓட்டை கள்ள ஓட்டாகப் போட்டு இருக்கிறார்கள் . 
 
மற்ற யாராக இருந்தாலும் ( நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உட்பட) புலம்பி விட்டு வீட்டுக்கு வர வேண்டியதுதான் . ஆனால் இவர் சும்மா இல்லை .
 
தனது பிரபலத்தைப் பயன்படுத்தி, சுப்ரீம் கோர்ட்  நீதிபதி, எலெக்ஷன் கமிஷனர் , தனக்காக வாதாட பிரபல  வக்கீல் ராம் ஜெத்மலானி ஆகியோர் மூலமாக நீதி கேட்கிறார் . 
கள்ள ஓட்டுப் போடப்பட்ட நபருக்கு பேலட் ஓட்டு  வழங்க வேண்டும் என்ற  49P  சட்டப் பிரிவின் படி (49 O போல இப்படி ஒரு சட்டம் இருக்காம்) , 
 
தனக்கு ஓட்டுப் போட  வாய்ப்புத் தராததை வைத்து அந்த தேர்தலின் முடிவை தள்ளி வைக்கச் செய்கிறார் .
 
சில நாட்களில் சுந்தருக்ககவே மீண்டும் வாக்குச் சாவடி அமைத்து அவரை ஓட்டுப் போட அனுமதித்த பின்னரே தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வருகிறது. 
 
ஆனால் இது போல கள்ள ஓட்டுப் போட்ட அ இ ம மு க கட்சி மற்ற தொகுதிகளில் வெல்கிறது .
 
மாசிலாமணி ( பழ கருப்பையா ) மூன்றாம் முறை முதல்வர் ஆகிறார் . இரண்டாவது இடத்தில் ரெண்டு என்ற ஓர் அரசியல்வாதி (ராதா ரவி) 
 
பதவி ஏற்புக்கு முந்தைய ஒரு நிகழ்ச்சியில் சுந்தரிடம் ரெண்டு ,, ” மறுமுறையும் உன் ஓட்டை கள்ள ஓட்டாகப் போடுகிறோம் ” என்று சவால் விடுகிறார் ரெண்டு 
 
வெளிநாட்டில் உள்ள – மாசிலாமணியின் மகள் ( வரலக்ஷ்மி) , ‘சுந்தர் அபாயமானவன் அவனை சீண்டாதீர்கள்’
 
– என்று ரெண்டுவை எச்சரிக்கிறாள் . ஆனால் அதற்குள் ரெண்டு,  சவால் விட்டு இருக்கிறார்  . 
ஆளும் அரசின் ஒவ்வொரு துறை அலட்சியத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் சுந்தர் , இது அகற்ற வேண்டிய அரசு என்ற முடிவுக்கு வருகிறார் . 
 
எனவே தானே வழக்கறிஞர் படை அமைத்து, கள்ள ஓட்டால் ஓட்டை இழந்த அனைவரையும் வழக்குப் போட வைக்கிறார் . 
 
எனவே மாசிலாமணியின் பதவி ஏற்பு நிறுத்தப் படுகிறது . மீண்டும் தேர்தல் வருகிறது . 
 
தனிப்பட்ட கட்சி ஏதும் துவங்காமல் , தன்னை பின்பற்றும் இளைஞர்கள் மூலமாக ஒவ்வொரு தொகுதியிலும் நல்ல மனிதர்களை
 
( நிஜ வாழ்வில் நாம் பார்க்கும் சமூக ஆர்வலர்கள் நடித்து இருக்கிறார்கள்) தேர்ந்தெடுத்து தேர்தலில் நிறுத்துகிறார் . 
 
அரசியலில் பழம் தின்று கோட்டை போட்ட அயோக்கியக் கும்பலுக்கும் சுந்தர் பிச்சையின் புதிய குழுவுக்கும்  தேர்தல் போர். 
 
ஒரு நிலையில் மாசிலாமணிக்கு ஆதரவாக (?) அவரது மகளும் இந்தியா வந்து களம் இறங்க என்ன நடந்தது என்பதே இந்த சர்கார் . 
 
சமூக அக்கறைப் பிரச்னைகளை வைத்துக் கொண்டு அரசியல் கமர்ஷியல் மசாலா தூவி , சில நியாயமாந கேள்விகளை கேட்டு படத்தை எடுத்துள்ளார் முருகதாஸ் . 
 
மீனவர் பிரச்னை, மீத்தேன், ஸ்டெரிலைட் , கண்டெய்னர் பணம், விவசாய அழிவு என்று முக்கியப் பிரச்னைகளை தொட்டுச் செல்லும் திரைக்கதை!
 
மாசிலாமணி கேரக்டருக்குள் எம் ஜி ஆர்,கலைஞர் ஜெயலலிதா எடப்பாடி  எல்லாரும் இருக்கிறார்கள் 
 
ரெண்டு என்ற கேரக்டர் பெயரின் மூலம் நாவலர் நெடுஞ்செழியன், அன்பழகன், பன்னீர் செல்வம் ஆகியோரை நினைவூட்டுகிறது . 
 
வரலக்ஷ்மி கேரக்டரில் ஜெயலலிதா, சசிகலா இருவரும் இருக்கிறார்கள் 
 
எரிந்து நைந்து கிடக்கும்  குழந்தையின் முகத்தை காட்டி “இந்த குழநதையின் முகம் போல தான் தமிழ்நாடு இப்போ இருக்கு” என்ற  வசனம் முதல், …
“என்ன சம்பாதிச்சு என்ன புண்ணியம்? நமக்காக நாம சேர்த்து வச்ச கண்டெய்னர் பணத்த நாம பாக்காமலேயே சாவு வரும் ” என்ற  வசனம் தொடர்ந்து , 
 
“மத்த மாநிலத்தில் எல்லாம் சமூக அக்கறைக்காக போராடி உயிரை விட்டவங்க யாருன்னு கேட்டா நாற்பது வருஷம் முன்ன செத்தவரை சொல்வாங்க .
 
ஆனா  நம்ம மாநிலத்துல கேட்டா போன மாசம் செத்தவங்கன்னு கூட  சில பேரை சொல்வோம் .
 
வருத்தமா இருந்தாலும் பெருமையாவும் இருக்கு ” என்ற கடைசி வசனம் வரை அபாரம் ( வசனம் முருகதாஸ் மற்றும் ஜெயமோகன்)
 
சுந்தர் கதாபாத்திரத்தை மிக அட்டகாசமான நடிப்பால் ஜொலிக்க வைக்கிறார் விஜய் . அந்த நிதானமான ஸ்டைல் , உடல் மொழிகள்,
 
  மாடுலேஷன் , உணர்ச்சிகரமான நடிப்பு , என்று அசத்தி இருக்கிறார் . உடல் தகுதியில்  பிரம்மிக்க வைக்கிறார் . 
 
சின்னச் சின்ன காட்சிகள் கூட அபாரமாகத் தெரிகிறது விஜய்யின் நடிப்பால் !
 
சண்டைக் காட்சிகளில் பொறி பறக்க வைக்கிறார் (ராம் லக்ஷ்மனின் சண்டை இயக்கமும் அபாரம்) 
 
சுந்தரின் அண்ணனின் விவாகரத்து செய்த மனைவியின் தங்கையாக . சுந்தரைக் காதலிப்பவராக,
 
அமைச்சராக துடிக்கும் ஆளுங்கட்சி எம் எல் ஏ வின் ( லிவிங்ஸ்டன்) மகளாக கீர்த்தி சுரேஷ் . சும்மா பாடி ஆட மட்டும்,  ம்ஹும் ! 
மாசிலாமணியாக மிக இயல்பாக பொருத்தமாக வளையவருகிறார் நிஜ அரசியல்வாதியான பழ கருப்பையா .
 
ரெண்டு கதாபாத்திரத்தில் ராதாரவி ரகளை செய்கிறார் ( அட பாராட்டுதாங்க !) .முக்கியக் கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி முறைக்கிறார் . ஒகே 
 
கொஞ்ச நேரம் வந்தாலும் காமெடியில் கலகலக்க வைக்கிறார் யோகிபாபு . 
 
ஏமாற்றி விட்டார் ஏ ஆர் ரகுமான் . 
 
கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத்தின் படத் தொகுப்பும் சிரத்தை மற்றும் நேர்த்தி . 
 
மீனவக் குடும்ப விஜய்க்கு இப்படி ஒரு அம்பானி மாடல் அம்மா ! ஷூட்டிங் ஆரம்பிச்ச அப்புறம் பிளாஷ்பேக் புடிச்சீங்களா முருகதாஸ் ?
 
ஆரம்பத்தில்  விஜய்யை பல நாடுகளின் பொருளாதாரத்தை வீழ்த்திய மான்ஸ்டர், கார்ப்பரேட் கிரிமினல்  என்கிறார்கள் .
 
அதெலாம் எதுக்கு ? புள்ள ரொம்ப நல்ல புள்ளையாதானே இருக்கு ? ஒரு கார்ப்பரேட் கிரிமினல் எப்படி மக்களுக்காக களம் இறங்குவான்?
 
 படத்தின் முதல் பாதி மிகச் சிறப்பு . இரண்டாம் பாதியும் மோசம் இல்லை. எல்லா நல்ல விசயங்களும் இருக்கு .
 
ஆனால் ஜஸ்ட் இருக்கு . கத்தி படம் போல அழுத்தமாகவோ உணர்ச்சிப் பூர்வமாக தாக்கும்படியோ சொல்லப் படவில்லை. 
 
 அதையும் மீறி படம் ரசிகர்களை கவர்ந்தால் அதற்குக் காரணம் விஜய் … விஜய்… விஜய்… !
 
சர்கார் …. குறைவான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி !
 
மகுடம் சூடும் கலைஞர்
********************************
விஜய், வசனகர்த்தாக்கள் முருகதாஸ், ஜெயமோகன் . ராதா ரவி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *