சவரக்கத்தி @ விமர்சனம்

கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் மற்றும் லோன் வுல்ஃப் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம், இயக்குனர் மிஸ்கின், பூர்ணா . ஆதேஷ் , அஸ்வத், மோகன் நடிப்பில் ,

மிஸ்கின் கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரிக்க, அவரது தம்பி ஜி ஆர் ஆதித்யா இயக்கி இருக்கும் படம் சவரக் கத்தி . ரசனைக் கூர்மை எப்படி ? பார்ப்போம் .

பரோலில் வந்து இருக்கும் நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு மீண்டும் ஜெயிலுக்கு போக வேண்டிய சூழலிலும் பலரையும் பிடித்து அல்லது வம்பிழுத்து அடித்து நொறுக்கிக் கொண்டு இருக்கும்  வெறி பிடித்த  அப்நார்மலான கொடூர கிறுக்கு ரவுடி மங்காவுக்கும்  (மிஸ்கின்) 
 
கள்ளங்கபடில்லாத செவி மாற்றுத் திறனாளி மனைவி (சுபத்ரா) , ஒரு மகன் , மகள் ஆகியோரைக் கொண்ட  ஒரு முடி திருத்தும் கலைஞன் பிச்சைக்கும் (ராம்) , கார் , பைக் மோதிக் கொண்ட வகையில் ரோட்டில் சண்டை . !
 
மங்காவுடன் சில அல்லாக்கை ரவுடிகள் மற்றும் சற்றே பக்குவமான பெத்தப்பா (மோகன்).
 
சுபத்ராவின் மாற்றுத் திறனாளி தம்பி ஒருவன் கலப்புத் திருமணம் செய்து கொள்ளவிருக்க , அதற்காக போகும் வேளையில்தான் டிராஃபிக்கில் சண்டை. 
 
அதே நேரம் இன்னொரு கார்வந்து மங்காவின் கார் மீது மோத , அவன் முகத்தில் ரத்தம் . 
 
சண்டை முடிந்து  பிச்சை கிளம்பிப் போயிருக்க , மங்காவின் முகத்தில் காயம் வரக் காரணம் கார் மோதியது என்கிறார் பெத்தப்பா . இல்லை பிச்சைதான் குத்தி விட்டான் என்கிறது அல்லக் கை கூட்டம் . 
 
தனக்கு இதை ஒரு பெரிய அவமானமாகக் கருதும் மங்கா,  மாலை பரோல் முடிந்து ஜெயிலுக்குப் போவதற்குள் பிச்சையை  கொல்ல முடிவெடுக்கிறான் . இதற்கிடையே சுபத்ராவின் தம்பி திருமணம் செய்து கொள்ளும் மேல் சாதிப் பெண்ணின் பெற்றோர் காரில் படையோடு அவர்களைத் துரத்துகின்றனர் . 
 
மங்கா பிச்சையை வெறி பிடித்து துரத்துகிறான் , எல்லாரும் எல்லாமும் ஒரு புள்ளியில் குவிய,  சவரக் கத்திக்கும் ரவுடிக் கத்திக்கும் நடந்தது என்ன என்பதே இந்த சவரக் கத்தி . 
 
மீண்டும் ஒரு மிஷ்கின் படம் . அதுவே ஒரு தனி அனுபவம் . 
 
பொதுவாக மனசுக்குள் இருப்பதை இயல்பில்  யாரும் அப்படியே செய்வது இல்லை . ஆனால் மிஸ்கின் படக் கதாபாத்திரங்கள் மனசில் தோணுவதை அப்படியே உடல் மொழியால் செய்யும் . இந்தப் படத்திலும் அந்த அழகு , செயற்கை , யதார்த்தமின்மை எல்லாமும் இருக்கிறது . சிறப்பு 
மங்கா பிச்சை துரத்தல்களுக்கு இடையில் மிஸ்கின் ஸ்டைல் கவிதைகளுக்கு பஞ்சம் இல்லை . 
 
ஆங்கிலம் பேசும் மன நோயாளி, சுபத்ரா தானாகப்  போய் மங்காவிடம் மாட்டுவது , ரவுடி கும்பலிலும் யதார்த்தமாக பேசும் பெத்தப்பா கேரக்டர் …..
 
 பல கதாபாத்திரங்களும் முக  பாவனைகளைக் குறைத்து உடல் மொழிகளால் நடிப்பது என்று…. அந்த கவிதைகள் இந்தப் படத்திலும் நீள்கின்றன .
 
சவரக் கடைகளின் சுவாரஸ்யமான பொய்கள் அழகு . 
 
பிச்சை கேரக்டரை தெறிப்பாக செய்து இருக்கிறார் ராம் . ஆங்காரமான வசன உச்சரிப்பு, சில்லுண்டிக் குழந்தைத் தனம் , வெட்டி பந்தா , முடியாதபோது உருகுவது .. எல்லாமே சிறப்பு மங்கா கேரக்டரில் கெட் அப்,  நடிப்பு என்று எல்லாவகையிலும் பயமுறுத்தி அசத்துகிறார் மிஷ்கின் .  குறிப்பான அந்த கண்கள் மிரட்டுகின்றன . சற்றும் உடல் அதிராமல் சொல்லும் ம் .. முதற்கொண்டு அடுத்தவன் முகத்துக்கு முன்னாள் வெறி பிடித்து ஆஆஆஆஆ .. என்று கத்துவது வரை அந்த வித்தியாசம் மற்றும் விவரணை அபாரம் 
 
வெள்ளந்தியான மனந்திறந்த பேச்சு , செவி மாற்றுத் திறனை சற்றும் பெரிது படுத்திக் கொள்ளாத குழந்தமை என்று வரும் சுபத்ரா  கதாபாத்திரம் ஓர் அத்திப்பூ . 
 
அதை தித்திக்கத்  தித்திக்கச்  செய்து இருக்கிறார் பூர்ணா . மிகச் சிறந்த நடிப்பு . சொந்தக் குரலில் மிக அழகாக சிரத்தை எடுத்து பேசி இருக்கிறார் . அந்த கர்ப்பிணி நடை, முகபாவனைகள் அபாரம் . ஆரம்பத்தில் சில காட்சிகளில் சற்றே செயற்கை தெரிந்தாலும் போகப் போக நேசத்துக்குரியதாகிறது அந்த கேரக்டரும் அவரது நடிப்பும் . இவைகளை எல்லாம்  மிக அழகாக ஒன்று கூட்டி சேதாரம் இல்லாமல் சேர்த்துக் கொடுத்த வகையில் ஜொலிக்கிறார் இயக்குனர் ஆதித்யா . 
 
படத்தின் மிகப் பெரிய பலம் அரோல் கரோலியின் இசை. தனி மொழியாக ஒலிக்கிறது அது . பல இடங்களில் படமாக்கலை தூக்கி நிறுத்துகிறது  ! சபாஷ்
 
சவரக் கத்தி பாடலும் அது சொல்லும்  கிளைமாக்ஸ் க்கான தத்துவமும் நெகிழ்வு . 
 
கார்த்திக்கின் ஒளிப்பதிவு கண்ணுக்குள் கவிதை படிப்பதோடு காட்சிகளுக்கான உணர்வுக் கூட்டலுக்கு உதவுகிறது . 
 
மங்கா அடிக்கும் ஒருவன் அடிபட்டு விழ , அதே நொடியில்  . இன்னொருவன் நுழையும் காட்சி உள்ளிட்ட பல இடங்களில்,  ஜூலியனின் படத் தொகுப்பு கவனிக்க வைக்கிறது . ஆதேஷ் கடி வாங்கும் காமெடி எல்லாம் செம போர். 
 
சில காட்சிகளை காமெடியாக சொல்வதா சீரியசாக சொல்வதா என்பதில் உள்ள குழப்பம் படம் முழுக்க தொடர்கிறது . 
 
கிளைமாக்ஸ் கவிதை என்றாலும் ஒரு முழு நீள படத்துக்கான உள்ளீடு இவ்வளவுதானா என்ற உணர்வு வருவதையும் தவிர்க்க முடியவில்லை. 
 
எனினும் கத்தியின் பயன்பாடு கழுத்தை வெட்டுவது அல்ல ; எனில் வேறு எதற்கு என்று சொல்லும் கருத்து,  காவியம் போன்றது . 
 
சவரக் கத்தி .. கைவேலை கச்சிதம் 
 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
——————————————-
பூர்ணா, மிஸ்கின், அரோல் கரோலி, ராம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *