சீதக்காதி @ விமர்சனம்

பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, மவுலி, அர்ச்சனா, பகவதி பெருமாள் , ராஜ்குமார்,  காயத்ரி, பார்வதி நாயர்  நடிப்பில்,

பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி.  செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பது பழமொழி .

ஆனால் காசு கொடுத்து உயிர் கொடுக்கும் ரசிகனுக்கு  அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக இருப்பாரா இந்த சீதக்காதி ? பேசலாம் . 

பாலக வயதில் 1948 ஆம் ஆண்டு லவகுசா நாடகத்தில் இறங்கியது  முதல் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேல், 
 
நாடக நடிப்புக்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆதிமூலம் அய்யா (விஜய் சேதுபதி) 
 
மக்கள் முன்னால் நடிப்பதுதான் நடிப்பு என்ற கொள்கை காரணமாக , எம் ஜிஆரின் கடைசி படத்தை இயக்கிய தயாரிப்பாளர்
 
மற்றும் பாரதி ராஜா உட்பட பலர் சினிமாவுக்கு அழைத்த போதும்  சினிமாவுக்கு வர மறுத்தவர் . 
 
ஒரு காலத்தில் அவரது நாடகங்கள் என்றால் மக்கள் மிகவும் ஆவலோடு வந்து ரசிப்பார்கள் . காலப்போக்கில் சினிமாவின் ஆதிக்கம் அப்புறம்  டி வி ,
 
பிறகு செல்போனில் படம் பார்ப்பது போன்ற பழக்கங்கள் மக்களிடம் பெருக , இவர் நாடகத்துக்கு வரும் கூட்டம் குறைந்து விடுகிறது . 
 
நாளிதழில் விளம்பரம் கொடுத்து சுஜாதாவின் நாவலை நாடகம் ஆக்க,   பலன் இல்லை 
 
எனினும் தொடர்ந்து நாடகங்களை நடத்தி வருகிறார் . அவருக்கு கால காலமாக நம்பிக்கையான மேலாளர் ஒருவர் ( மவுலி ) 
 
 மனைவி (அர்ச்சனா ) மற்றும் மகளோடு வறுமையான வாழ்க்கை . 
 
இந்த நிலையில்  பேரனுக்கு மூளையில் கட்டி வந்து விட அறுவை சிகிச்சைக்கு பல லட்சங்கள் தேவைப் படுகிறது .
 
அதற்கு என்ன செய்யலாம் என்று ஆதி மூலம் அய்யா யோசிக்க , அந்த நிலையில்  ஒரு மாபெரும் இழப்பு . 
 
அதை அடுத்து அய்யாவின் ஆசீர்வாதம் காரணமாக அதுவரை அவருடன் நாடகத்தில்
 
சுமாராகவே  நடித்து வந்தவர்களில் ஒரு நாளுக்கு ஒருவர் என வீதம் போட்டு நடிப்பில் அசத்துகிறார்கள் . 
அப்படி நடிப்பில் ஒரு நாள் சரவணன் என்ற இளம் நடிகர் ( ராஜ்குமார் ) அசத்த  அதைப் பார்த்த
 
சினிமா இயக்குனர் ஒருவர் அவனை ஹீரோவாக போட்டு படம் எடுக்க விரும்புகிறார் . 
 
ஆனால் அடுத்த நாள் அவன் நடிப்பில் சொதப்ப, பாஞ்சாலியாக நடிக்கும் பெண் நடிப்பில் அசத்துகிறார் . 
 
எனினும் அய்யாவின் ஆசீர்வாதம் காரணமாக திரைப்பட நடிகன் ஆகும்  சரவணன் மாபெரும் நடிகன் ஆகி விருதுகளும் குவிக்கிறான் . 
 
அவனை அய்யாவின் மேலாளர் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்து  புகழ் பெற வைக்கிறார் . அய்யாவின் பேரன் குணமடைகிறான் . 
 
ஒரு நிலையில் அவ அய்யாவின் மேலாளரின் கட்டுப்பாட்டை மீறி தரமற்ற படம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொள்ள , அய்யா ஆசீர்வதிக்க மறுக்கிறார் . 
 
எனவே ஒரு நல்ல இயக்குனரின் ( பகவதி பெருமாள்) படத்தில் கேவலமாக நடிக்கிறான் . அவமானப் படுகிறான் . 
 
அப்போதுதான் அய்யாவின் ஆசீர்வாதம் இருந்தால் யாரும் நடிகர் ஆகலாம் என்பது புரிகிறது . 
 
ஒரு இளம்பெண்ணும் (காயத்ரி) ஒரு சிறுமியும் அவரின் ஆசீர்வாதம் காரணமாக பெரும் நடிகைகளாக மாறுகிறார்கள் . 
 
தயாரிப்பாளர் ஒருவர்  (நடிகர் வைபவின் அண்ணன் சுனில் )அய்யாவின் ஆசீர்வாதம் பெற்று தான் தயாரிக்கும் படத்தில் தானே ஹீரோவாக நடிக்கிறார் .
 
அய்யாவின் ஆசீர்வாதம் காரணமாக நன்றாக நடிக்கும் அவர் , ஒரு நிலையில் அய்யாவின் மேலாளர் கட்டளையை மீறி ,
 
தன் இஷ்டத்துக்கு காட்சிகள் வைக்க அவருக்கு அய்யாவின் ஆசீர்வாதம் கிடைக்காமல் போகிறது . அவருக்கு ஒழுங்காக நடிப்பும் வராமல் போய்விடுகிறது . 
அது மட்டும் அல்ல .. ஒரு நிலையில் அய்யாவின் ஆசீர்வாதம் யாருக்கும் இல்லாத நிலையில்
 
பலரும் நடிப்பில் சொதப்ப , பல படங்களும் படப்பிடிப்பில் தடுமாறுகின்றன . 
 
அய்யாவின் ஆசீர்வாதம் யாருக்கும் கிடைக்காமல் போனதற்கு சம்மந்தப்பட்ட  தயாரிப்பாளர்தான் காரணம் என , அய்யாவின் ரசிகர்கள் கோபப் பட , 
சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர் அய்யாவின் குடும்பத்தின் மேல் வழக்கு தொடுக்க , அப்புறம் என்ன நடந்தது என்பதே சீதக்காதி . 
 
75 வயது கடந்த முதியவருக்கான புராஸ்தட்டிக் மேக்கப்பில் அசத்துகிறார் விஜய் சேதுபதி . அர்ஜுனன், அவுரங்க சீப் ஆகிய  வரலாற்று நாடக கெட்டப்கள், 
 
ஞான ஒளி படத்து சிவாஜி போன்ற ஒரு கெட்டப் , மற்றும் ஒரு முதியவர் கெட்டப் இப்படி பல கெட்டப்களில் அசத்துகிறார் . 
 
ஒரு நடிகனாக இது நல்ல வாய்ப்பு .  வாழ்ந்திருக்கிறார் மனுஷன் 
 
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தைப் போலவே இதுவரை சொல்லாத ஒரு ,
 
கதைக்கருவை எடுத்துக் கொண்டு அதற்கு தனக்கே உரிய பாணியில் திரைக்கதை அமைத்துள்ளார் பாலாஜி தரணிதரன் . 
 
கலை அரங்கத்தில் உள்ள குருவிக் கூட்டில் குருவி முட்டை பொரிந்து குருவிக் குஞ்சாகி பறப்பது ,
 
உயரத்த்தில் இருந்து நடிப்பவர்கள் மீது விழும் குழல் வெளிச்சம், மெல்ல இறங்கும் திரை 
 
இவற்றின் மூலம் சொல்ல வந்த விஷயத்தை சொல்லும் வகையில் கலைப் பூர்வமான டைரக்ஷனில் ஜொலிக்கிறார் . 
 
அதே நன்றாக நடித்துக் கொண்டு இருந்த சரவணன் திடீரென நடிப்பு வராமல் போய் மறுநாள் பயத்தோடு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருகையில்
 
அங்கு நடக்கும் நிகழ்வுகள் , பார்வைகள், அதற்கு பொருத்தமான ஒலி இவற்றின் மூலம் சரவணின் படபடப்பை படம் பார்க்கும் ரசிகனுக்கு கடத்துகிறாரே …
 
அழுத்தமான டைரக்ஷனின் உச்சம் அது . ஹாட்ஸ் ஆஃப் பாலாஜி தரணிதரன் சார் ! சூப்பர்
 
கேமரா நகர்வுகளும் பிரமாதம்  .  
 
அளவான நீளத்தில் ஷாட்கள் இவற்றிலும் மனம் கவர்கிறார் பாலாஜி தரணிதரன் (இந்த பாராட்டில் எடிட்டர் கோவிந்தராஜுக்கும் பங்கு உண்டு ) 
 
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை நெகிழ்ச்சி, சோகம் , நகைச்சுவை , பரபரப்பு….
 
என்று எல்லாவகையில் உணர்வில் தரக் கூட்டல் செய்து சிறக்கிறது . அற்புதம். 
 
சரஸ் காந்தின் ஒளிப்பதிவு பல்வேறு கால கட்டங்களுக்கு ஏற்ற சினிமா வண்ணத்தில் காட்சிகளை காட்டி கவர்கிறது .
 
இருள் ஒளிப் பயன்பாட்டு ஆளுமையும் அருமை . குறிப்பாக மஞ்சள் நிறப் பூக்கள் சூழ்ந்த பளீர் வெளிச்ச, 
சவ ஊர்வலத்தை ஒரு நீண்ட இருண்ட வீட்டின் தூரமான பின்  புறத்தில் இருந்து காட்டும் ஷாட் !
 
வினோத் ராஜ்குமாரின் கலை இயக்கத்தில் நேர்த்தி குறைவு எனினும் சிரத்தை அதிகம் !
 
படத்தில் ஊட்டி மணி, கலைப்பித்தன், ஸ்ரீரங்கம் ரங்கமணி,  ஐஓபி ராமச்சந்திரன் ,  சந்திரா, மணிமேகலை, ஜெயந்தி, எல் மோகன், லோகி உதயகுமார்,
 
முத்துக்குமார், விடியல் விநாயகம், அப்துல், ஆதிராசன், ராகவன்,  கோபால கிருஷ்ணன், சுஹாசினி சஞ்சீவ், ஜெகஜீவன் என இருபதுக்கும் மேற்பட்ட மேடை நாடகக் கலைஞர்கள் . 
 
காலமெல்லாம் மேடையில் சொற்ப வருமானத்துக்கு ஆவியை செலவழித்த அவர்களுக்கு இந்த புகழ் வெளிச்சம்  
 
பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் பாலாஜி தரணிதரனும் கொடுத்திருக்கும் ரத்த தானம் .மகிழ்ச்சி . நெகிழ்ச்சி !
 
 அய்யாவின் மேலாளர் கதாபாத்திரமாகவே வாழ்கிறார் மவுலி
 
படத்தில் ராஜ்குமார் மற்றும் தயாரிப்பாளராக நடித்திருக்கும் சுனில்  இருவருக்கும்  நடிப்பதற்கு சிறப்பான வாய்ப்பு .
அதாவது ஒரே காட்சியை அவர்கள் சிறப்பாக நடிக்கவும் வேண்டும் ; நடிக்கத் தெரியாதது போலவும் நடிக்க வேண்டும் . 
 
ஒரு நடிகனுக்கு இது போன்ற கேரக்டர்கள் வரப்பிரசாதம் . இருவரும் பிசைந்து சாப்பிட்டு அசத்துகிறார்கள் . சபாஷ் . 
 
அதே  இதில் எந்த கேரக்டரை வேண்டுமானாலும் யாரும் நடித்து விட முடியும் . ஆனால் சரவணன் சொதப்புகையில்
 
கொந்தளிக்கும் இயக்குனராக பகவதி பெருமாள் நடித்து இருக்கும் கேரக்டரை நடிப்பது பெரிய சவால் . மனுஷன் அசத்தி இருக்கார்யா. 
 
இன்னொரு பக்கம் அதே போன்ற கேரக்டரில் இயக்குனர் டீகேவும் டீக்கே !
 
அர்ச்சனா  பொருத்தம் . 
 
படத்தின் பல காமெடிகள் சினிமா தொழில் நுட்பம் சம்மந்தப்பட்டவை . அதை புரிந்து மக்கள் ரசித்தால் பலன் உண்டு .
 
அதே நேரம் பொதுவான வகையில் வெடிக்கும் நகைச்சுவைகளும் நிறைய உண்டு . 
 
தம்ப்ஸ் அப் காட்டியவனுக்கு பதில் தம்ப்ஸ்  காட்ட , முதலில் காட்டியவன் சந்தோஷப் பட ,
 
‘யோவ் குடிக்க தண்ணி கேட்டேன்யா ..’ என்ற காமெடியில் தியேட்டரே சிரிப்பு வெடியில் அதிர்கிறது . 
 
இப்படி பல நகைச்சுவை பூகம்பங்களும் உண்டு . அங்கே எல்லாமும் ஜொலிக்கிறார் படைப்பாளி பாலாஜி தரணிதரன். 
 
விஜய் சேதுபதி  அவுரங்க சீப் ஆக செந்தமிழ் வசனம் உச்சரித்து நடிக்கும் போது,  நடிகர் திலகத்தின் அருமை புரிந்து ஏங்கிப் போகிறோம் .
 
(அதனால்தான் என்னவோ கிளைமாக்ஸ் பகுதியில் ஒரு இடத்தில் அய்யாவை விட சிவாஜிதான்  பெரிய நடிகர் என்ற அர்த்தத்தில் ஒரு வசனம் வைத்து இருக்கிறார்கள்).
 
தவிர அவுரங்க சீப் நாடக வசனத்தில் பல இலக்கணப் பிழைகள் ! 
 
அதே போல பாரதியாரின் பாஞ்சாலி சபதம் என்று போட்டு விட்டு .. 
 
“பாவித் துச்சாதனன் செந்நீர், அந்த பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தம்  மேவி இரண்டுங் கலந்து குழல் மீதினிற் பேசி நறுநெய் குளித்தே
 
சீவிக் குழல் முடிப்பேன் யான் இது செய்யுமுன்னே முடியேன் ” என்ற வரிகளுக்கு பதில் வேறு ஏதோ சொல்கிறாள் பாஞ்சாலி 
 
நாடக நடிகர்களின் வசன உச்சரிப்பு ஏற்ற இறக்கமும் கூட இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் . 
 
சொதப்பலாக நடிக்கும் காட்சியில் சரவணன் கொடுக்கும் ஒரு சில எக்ஸ்பிரசன்கள் பொருத்தமில்லாதவை என்பதை ,
 
எப்படி பகவதி பெருமாளின் ரியாக்ஷன்களை வைத்தே  வெகுஜன மக்களால் உணர முடியுமோ … 
 
அப்படி,  நாடக நடிகர்கள் பிரம்மாதமாக நடிக்கிறார்கள் என்பதைக் கூட மவுலியின் முகபாவனைகளை வைத்தே ஏற்க முடிகிறது .
 
படம் பார்க்கும் ரசிகர்கள் வியக்கும் அளவுக்கு அவர்கள் படத்தில் சிறப்பாக நடிக்கவில்லை 
 
ஒரு நடிகராக சரவணன் சொதப்புவதற்கும் , ஹீரோவாக  நடிக்கும்தயாரிப்பாளர் சொதப்புவதற்கும்   மனோபாவ விசயத்தில் வித்தியாசம் இருந்தாலும் கூட ,
 
தயாரிப்பாளர் நடிப்பில் சொதப்பும் காட்சி ரிப்பிட்டேஷன் . அந்தக் காட்சியின் நீளத்தை குறைத்து இருக்கலாம் . 
 
இன்னும்  சொல்லப் போனால் சரவணன் கேரக்டரையும் தயாரிப்பாளர் கம் ஹீரோ கேரக்டரையும் ஒன்றாக ஆக்கி
 
( ரிப்பிட்டேஷன் என்ற விசயமும் இல்லாமல் போயிருக்கும்) , அதற்கு இன்னும் கொஞ்சம் பிரபலமான (முடிந்தால்…. நிஜத்திலும் பெருசாக  நடிக்க வராத )
 
ஒரு ஹீரோவை போட்டு அவரிடம் வேலை வாங்கி இருந்தால், திரைக்கதை மற்றும் வணிக ரீதியாக இன்னும் பலமாக இருந்திருக்கும் 
 
ஆனாலும் என்ன … 
 
”இங்கே உணர்வு சாகடிக்கப்பட்ட கலைஞர்கள் பலர் உண்டு..  கலை உணர்வோடு சினிமாவுக்குள் வரும் பலரை
 
சினிமா உலகில் உள்ள சில தவறாணன் நம்பிக்கைகள் சிதைத்து விடுகின்றன . உணர்வைக் கொல்வதும்
 
ஆளைக் கொள்வதும் ஒன்று.  “என்று இயக்குனர் ராம் பேசும் காட்சி மூலமும் …  
 
”மனித குலம்  தோன்றிய காலம் முதலே உருவான கலை மனித இனம்  உள்ளவரை அழியாது..
 
உண்மையான கலைஞர்களுக்கு என்றும் அழிவில்லை என்று கோர்ட்டில் நீதிபதி (இயக்குனர் மகேந்திரன்) நிறுவும் போதும் … 
 
நெக்குருகிப் போகிறோம் . 
 
சீதக்காதி …. திரை வள்ளல் !
 
 
 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *