சீமராஜா @விமர்சனம்

24 AM ஸ்டுடியோஸ் சார்பில் ஆர் டி ராஜா தயாரிக்க, சிவகார்த்திகேயன், சமந்தா , கீர்த்தி  சுரேஷ், சூரி,  நெப்போலியன், சிம்ரன் , லால் நடிப்பில், 

பொன்ராம் இயக்கி இருக்கும் படம் சீமராஜா . படம் ராஜாவா கூஜாவா ? பார்க்கலாம் . 

நில உச்சவரம்பு சட்டத்தால் சொத்து மற்றும் அதிகாரம் எல்லாம் குறைந்து, எனினும் 
 அரண்மனை , பழைய மரியாதை, வசதி வாய்ப்போடு, 
 
வாழ்ந்து கொண்டிருக்கும் ஜமீன்களில் ஒன்றான சிங்கம்பட்டி ஜமீனின் இன்றைய ராஜா அரியராஜா (நெப்போலியன்). 
 
பல வருடங்களுக்கு முன்பு சாதாரண நபராக இருந்து காளீஸ்வரி என்ற பெண்ணால் (சிம்ரன்) ஈர்க்கப்பட்டு, 
அதற்காக மனைவியை நடத்தை கெட்டவள் என்று சொல்லி , அவள் தற்கொலை செய்து கொள்ள , மகளையும் பிரிந்து , 
 
காளீஸ்வரியுடன் வாழ்ந்து , அரசியல் செல்வாக்கு , கார்ப்பரேட் வியாபாரத் தொடர்புகளால் பெரிய மனிதன் ஆனவன் புளியம்பட்டியைச் சேர்ந்த காத்தாடி கண்ணன் (லால்).
 
காளீஸ்வரி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பரிந்து பேசியதால் அரியராஜாவுக்கும் காத்தாடி கண்ணனுக்கும்  பகை . 
 
சிங்கம்பட்டி மக்களுக்கான பொதுச் சந்தையை பிரச்னை செய்து, யாரும் பயன்படுத்த முடியாமல் கோர்ட்டு மூலம் பூட்டிப் போட்டு இருக்கிறான் காத்தாடி கண்ணன் . 
 
அரியராஜாவின் மகன் சீமராஜா ( சிவகார்த்திகேயன்) . அவரது கணக்குப் பிள்ளை ஆண்டிச்சாமி ( சூரி )
புளியம்பட்டியைச் சேர்ந்த பள்ளிக்கூட சிலம்ப ஆசிரியை  சுதந்திரச் செல்வி (சமந்தா) மீது சீமராஜாவுக்கு  காதல் . 
 
சந்தை பூட்டிக் கிடப்பதால் மக்கள் சாலையோரக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய, அவற்றை ஆக்கிரமிப்புகளாக கருதி அகற்றுகிறது சட்டம். 
 
மக்கள் சீமராஜாவிடம் முறையிட , அவர் பூட்டப் பட்ட சந்தையை திறந்து விட , கோர்ட் கேஸ் என்று பிரச்னை பெரிதாகிறது . 
 
இரண்டு ஊரையும் சேர்ந்த பத்துப் பத்துப் பேர் மல்யுத்தப் போட்டியில் மோதுவது ….  ஜெயிக்கும் ஊர் சந்தையை எடுத்துக்கொள்வது ….
 
என்ற சீமராஜாவின் சவாலை காத்தாடி கண்ணன் ஏற்கிறான் . 
 
போட்டி நாளில் சீம ராஜாவை சந்திக்கும் சுதந்திரச் செல்வி , “போட்டியில் தோற்று சந்தையை,
எனது ஊருக்கான புளியம்பட்டிக்கு விட்டுக் கொடுத்தால் நான் உன் காதலை ஏற்கிறேன்” என்கிறாள் . 
 
சீம ராஜா என்ன செய்தான் என்பது ஒரு விஷயம்…. 
 
ஒரு நிலையில் காதலை சுதந்திரச்  செல்வி ஏற்கும்போதுதான் தெரியவருகிறது , அவள் காத்தாடி கண்ணனின் மகள் என்பது . 
 
சீமராஜாவின் காதல் நிறைவேறியதா என்பது இன்னொரு சமாச்சாரம்…. 
 
ஒரு காலத்தில் ஜமீன்தார்கள் மக்களுக்கு தானமாக வழங்கிய விவசாய நிலத்தை , விவசாயிகள், வட இந்திய கார்பரேட் பெரு முதலாளிக்கு விற்க ,
 
அதற்கு ஏஜென்டாக மாறுகிறான் காத்தாடி கண்ணன் . 
 
தமிழர்களின் நிலங்கள் வட இந்திய ஆட்களுக்கு உரிமையாகக் கூடாது என்று எண்ணும் அரியராஜா அதைத் தடுக்க ,
 
ஆனால் விவசாயிகளே  அரியராஜாவை புறக்கணிக்க,  காத்தாடி கண்ணனால் அவமானப் பட்டு உயிர் துறக்கிறார் அரியராஜா .
 
தொடர்ந்து சீமராஜா விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்க , அவனது  தாத்தா அவனைக் கண்டித்து ,
 
அந்தப் பரம்பரை முன்னோரான கடம்பவேல் ராஜாவின் (இன்னொரு சிவ கார்த்திகேயன்) வாழ்க்கையைக் கூறுகிறார் . 
 
பதினான்காம் நூற்றாண்டில் மாபெரும் சேனையோடு மதுரை வரை படையெடுத்து வந்து வென்ற மாலிக்கபூர் , கடம்ப வேல் ராஜாவைப் பார்த்து வியந்த கதையை கூறுகிறார் . 
 
உலகம் வியக்கும் எளிய ஆயுதங்களில் ஒன்று பூமராங் . ஆனால் அதை விட பல வகையில் சிறப்பான வலுவான, 
வளரி என்ற பறந்து தாக்கித் திரும்பி வரும் ஆயுதத்தைக் கொண்டு , வேல் படை என்ற நூறு பேர் மட்டுமே கொண்ட படையோடு, 
 
நாற்பதாயிரம் பேர் கொண்ட மாலிக் காபூரின் படைக்குள் நுழையும் கடம்பவேல் ராஜா, மாலிக் காபூரின் கழுத்தில் கத்தி வைத்து அவனை திகைக்க வைக்கிறான் . 
 
“இப்போது நினைத்தால் நான் உன்னைக் கொல்ல முடியும் . ஆனால்  என் நோக்கம் உன் உயிர் அல்ல .
 
என் மண் யாருக்கும் அடிமையாகக் கூடாது என்பதுதான் ” என்கிறான் கடம்பவேல் ராஜா .
 
தன்னை கொல்லாமல் விட்ட கடம்பவேல் ராஜாவின் மண்ணை ஆக்கிரமிக்காமல் விடும் மாலிக் கபூர் பதிலுக்கு,
 
“உன் உயிரை எடுத்துக் கொள்கிறேன் ” என்று கடம்பவேல் ராஜாவை கொல்கிறான். 
அந்தக் கதையை சொல்லி முடிக்கும் தாத்தா , “அப்படி  உன் ஓட்டன் (பாட்டன் பூட்டன் வரிசையில் இன்னும் மூத்தவன்) கடம்பவேல் ராஜா, 
 
தன் உயிரைக் கொடுத்து காத்து ஏழை மக்களுக்கு கொடுத்த நிலங்களைத்தான் இன்று காத்தாடி கண்ணன், 
 
வடஇந்திய காற்றாலை கார்பரேட் கம்பெனிக்கு  வாங்கிக் கொடுக்கப் போகிறான் . அதை தடுக்க என்ன செய்யப் போகிறாய் ?” என்று கேட்க , 
 
சீமை ராஜா என்ன  செய்தான் என்பதே இந்த  சீமை ராஜா படம் .
 
பூட்டப்பட்ட சந்தைக்குள் கிரிக்கெட் விளையாட நுழைந்த சிங்கம்பட்டி சிறுவர்களை புளியம்பட்டி ஆட்கள் கட்டி வைத்து அடிக்க,
 
குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் சீமராஜா  வந்து மீட்பதுதான் படத்தின் துவக்கப் பகுதி . 
பிறகு கதாநாயகி அறிமுகம் , காமடி கொஞ்சம் , காமெடி மாதிரி கொஞ்சம் , கலர்புல், அதிர வைக்கும் சண்டைகள் என்று படம் பயணிக்கிறது .  
 
சந்தை விசயத்தில் சீமராஜா எடுக்கும் முடிவு அசல் ஹீரோயிசம் . 
 
வரலாற்று உண்மையின் அடிப்படையில் கொஞ்சம் புனைவு சேர்த்து சொல்லப் பட்டிருக்கும் கடம்பவேல் ராஜாவின் கதை சிலிர்க்க வைக்கிறது . 
 
அனல் அரசுவின் சண்டைக் காட்சிகளில் அதிரடி அனல் !
 
சீமராஜாவாக வழக்கம் போல உலா வரும் சிவ கார்த்திகேயன் கடம்பவேல் ராஜாவாக பல படிகள் மேலே போய் அசத்தி இருக்கிறார் .
 
நடை உடை பாவனை, உடல் மொழிகள் , முகத் தோற்றம் , வசன உச்சரிப்பு எல்லாமே அபாரம் .சபாஷ் 
கிராமியத் தமிழ்ப் படத்தின் மாறாத கதாநாயகியாக வளைய வருகிறார் சமந்தா 
 
சூரியின் பஞ்ச்கள் ஆங்கங்கே கலகலக்க வைக்கின்றன .  
 
கெஸ்ட்ரோலில் கீர்த்தி சுரேஷ் . குறை ஒன்றும் இல்லை . 
 
சிம்ரன் குரலும் உடலும் செட் ஆகல . 
 
இமான் இசையில் பாடல்கள் ஒகே . இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம் . 
 
பால சுப்ர மணியத்தின் ஒளிப்பதிவு கம்பீரம் , செழுமை , கால மாற்றம் எல்லாவற்றுக்கும் சிறப்பாக நியாயம் செய்திருக்கிறது . அருமை . 
 
முத்துராஜின் கலை இயக்கம் நம்பகத் தன்மைக்கு உதவுகிறது . 
 
கடம்பவேல் ராஜா  பகுதியில் ஒளிப்பதிவாளர் , கலை இயக்குனர் , கிராபிக்ஸ் பிஜாய் ராஜ், உடை வடிவமைப்பாளர் அனுபார்த்தசாரதி , தீபாலி நூர் ஆகியோர் ,
 
மிக சிறந்த  பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள் . சிறப்பு . 
வரும் ஆனா வராது பாடலில் இரண்டாவது பி ஜி எம் மில் சிவகார்த்திகேயனுக்கு வலது புறத்தில், 
 
தந்த நிறத்தில் ஆரஞ்சு கலர் பார்டர் போட்ட சேலை அணிந்த ஒரு பெண் அசத்தலாக நடனம் ஆடி இருக்கிறார் . 
 
தறிகெட்டு அலையும் திரைக்கதை கடம்பவேல் ராஜா கதைக்கு வந்த பிறகு கட்டுக்கு வருகிறது . கருத்தையும் கவர்கிறது . 
 
ராஜா இறந்த நிலையில் அவர் உடல் முன்பு அடுத்த ராஜாவுக்கு பட்டம் சூட்டும் காட்சிகள் நெகிழ்வு . கடம்பவேல் ராஜா வரலாற்றில் அந்த காட்சி மிக சிறப்பு . 
 
எனினும் அந்த சடங்குகளை இன்னும் சிறப்பாக காட்டி இருக்கலாம் .
விவசாயிகளின் நிலையைச் சொல்லி ஒரு விவசாயி கதறும் காட்சி மனம் கனக்க செய்கிறது . 
 
நிலத்தை விற்பதற்கான காரணமாக அவர் அதை சொல்லும்போது , “இன்னிக்கு விவசாயியின் நிலை மோசமா இருக்கலாம் .
 
ஆனா நிலத்தை வித்தவன் எல்லாம் நல்லாவா இருக்கான்?  ஒருகிலோ அரிசி மூவாயிரம் ரூபாய்க்கு விற்கிற காலம் வரும் .
 
அப்போ தமிழனோட நிலம் தமிழன் கையில இருக்கணும் ” என்று கூறி 
 
“நிலத்தை ஏன் விக்கறீங்க . கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வாடகைக்கு விடுங்க . தேவைப் படும்போது ஒப்பந்தம் ரத்து செய்யலாம் ” என்று, 
 
இந்தப் படம் கொடுக்கும் யோசனை அபாரமானது .
” பத்துக்குப் பத்தடி மொட்டை மாடி இடத்தைக் கூட செல் போன் கம்பெனிகள் ஆயிரக் கணக்கில் காசு கொடுத்து வாடகைக்கு எடுக்கும்போது, 
 
நிலத்தை ஏன் வாடகைக்கு எடுக்காது ?” என்ற அறிவுப் பூர்வமான கேள்வியும் படத்தில் வசனமாக இருக்கிறது . 
 
 குறைகள் இருந்தாலும் கடம்பவேல் ராஜாவின் கதைப் பகுதி மூலமாக பலர் அறியாத தமிழனின் வீர வரலாற்றை திரையில் விரிய வைத்த அற்புதத்தினாலும் , 
 
“கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நிலத்தை விற்காதீர்கள் .  வேறு வழி இல்லை என்றால் வாடகைக்கு விடுங்கள் “
 
— என்ற மிக ஆக்கபூர்வமான யோசனையை திரைப்படம் வாயிலாக பலர் அறிய சொல்லி இருப்பதாலும்  
விவசாயத்துக்கு எதிரான கொள்கைகள் மாறலாம் . விவசாயம் வளம் பெறலாம் . ஆனால் அப்போது தமிழன் நிலம், 
 
தமிழனிடத்தில் இருக்க வேண்டும் என்ற — விவசாயத்துக்கு மட்டும் அல்லாமல் — எல்லாவற்றுக்கும் பொருத்தமான அறிவுரையை அழுத்தமாக சொல்வதாலும் 
 
சீமராஜா ….. ராஜ ராஜ ராஜாதி ராஜன் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *