லிங்க பைரவி புரடக்சன்ஸ் சார்பில் ரவிச்சாந்திரன் மற்றும் பசங்க புரடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் தயாரிக்க,
ஜி வி பிரகாஷ், அர்த்தனா , யோகி பாபு, மன்சூர் அலிகான், கோவை சரளா, பருத்தி வீரன் சுஜாதா நடிப்பில் பாண்டிராஜ் வசனத்தில் ஜி வி பிரகாஷ் இசையில்,
கதை திரைக்கதை எழுதி வள்ளிகாந்த் இயக்கி இருக்கும் படம் செம . ரகளையா ? ரணகளமா ? பேசலாம் .
காதலிக்கும் பெண்கள் , மற்றும் பெண் பார்க்கப் போகும் பெண்கள் உட்பட பலருக்கும் பிடிக்காத காரணத்தால் மகனுக்கு ( ஜி வி பிரகாஷ்) ,
கல்யாணம் ஆகவில்லை என்று வருந்தும் தாய் (பருத்தி வீரன் சுஜாதா) . மகனின் நண்பன் ஒருவன் (யோகிபாபு).
ஒரு நிலையில், கடன் வாங்கிக் கொண்டு டபாய்க்கும் பழக்கம் உள்ள ஒரு நபரின் ( மன்சூர் அலிகான்) மகளை (அர்த்தனா)பெண் பார்க்கப் போக , பெண்ணுக்கும் பையனுக்கும் பிடித்துப் போகிறது .
இந்த நிலையில் அந்த பகுதி எம் எல் ஏ வின் மகன் , மணப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்ப, பணம் பார்த்து மனம் மாறுகிறார் பெண்ணின் அப்பா .
ஆனால் பெண்ணுக்கும் அவளது அம்மாவுக்கும் (கோவை சரளா) இப்படி மாற்றிப் பேசுவது பிடிக்கவில்லை .
நாயகன் சென்னை சென்று கோயம்பேடு மார்கெட்டில் கடை வைக்கிறான் . மகளுக்கு சென்னையில் வேலை கிடைத்து விட்டதாக சொல்லி,
நாயகியை அழைத்துக் கொண்டு சென்னை போகும் பெண்ணின் அம்மா , கணவனுக்கு தெரியாமல் மகளுக்கும் நாயகனுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்.
உண்மை புரிந்து பெண்ணின் அப்பா சென்னை வருவதற்குள் குழந்தையும் பிறந்து விடுகிறது .
விஷயம் தெரிந்த போது, ‘எம் எல் ஏ சம்மந்தி ‘என்ற கனவில் இருந்த பெண்ணின் அப்பா, என்ன செய்தார் என்பதே இந்தப் படம் .
எஸ் .. அவ்வளவு புத்தம் புதுசான கதை! வித்தியாசமான காட்சிகள்னா பாத்துக்கங்களேன் .. கொடுமை!
“பேசும்போது கிசுகிசுப்பான குரல் ல பேசாத டி ”
“ஏன் ?”
“ஒரு மாதிரி மூடு ஏறுது “
— எனபது போன்ற ஓரிரு இடங்களில் பண்டிராஜின் வசனம் ‘உள்ளேன் அய்யா’ சொல்கிறது .
ஜி வி பிரகாஷ் இசையில் சண்டாளி பாடல் முணுமுணுக்க வைக்கிறது . அதற்காக பின்னணி இசையில் அந்த மெட்டையே தீம் மியூசிக்காக ஓவராக போட்டு நிரப்புகிறார் .
நாயகன் ஜி வி பிரகாஷ் வழக்கம் போல . கொண்டாடவும் குறை சொல்லவும் ஒன்றும் இல்லை .
அர்த்தனா அழகு .
யோகிபாபு பேசிக் கொண்டே இருக்கிறார் . பத்துக்கு ஒண்ணு காமெடியாக இருக்கிறது.
பருத்தி வீரன் சுஜாதா, மன்சூர் அலிகான் இருவரும் ஒகே . நாயகன் அம்மாவை நீட்டி முழக்கிப் பேசி வெறுபேற்றும் கேரக்டரில் நடித்துள்ள நடிகை ஆரம்பத்தில் கவர்கிறார் . போகப் போக கதற விடுகிறார்
தமிழ் சினிமா சக்கையாக மென்று துப்பிய கதை . ஜி வி பிரகாஷை எதனால் எல்லா பெண்களும் வேண்டாம என்று சொல்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் போங்கு !
அம்மாவின் வேதனையாக ஆரம்பிக்கும் திரைக்கதை , இரண்டாம் பாதியில் அவரை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல ஆக்கி விட்டு தறிகெட்டு ஓடுவது கொடுமை .
விளைவு ? இரண்டு வெவ்வேறு படங்களின் இரண்டு பகுதிகளை கொடூரமாகக் கோர்த்து விட்டது போல இருக்கிறது
கோவை சரளாவின் அந்த காஞ்சனா மாடுலேஷன் சகிக்கல .
செம … மசமச…!