சிகை @ விமர்சனம்

திரைப்படங்கள் திரையரங்குக்கு என்றே எடுக்கப்பட்ட காலம் போய் , தொலைக்காட்சி தொடர்களைப் போல

இணையதள வெளியீட்டுக்கு மட்டும் வெப் சீரிஸ் என்ற பெயரில் எடுக்கப்படுவது அனைவரும் அறிந்த ஒன்றுதான் . 

ஆனால் திரையங்குகளுக்கு என்று எடுக்கப்பட்ட ஒரு படம் திரையங்குக்கே வராமல் நேரடியாக ஒரு இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது . 
 
வழக்கம் போல வெப் சீரியஸ்கள் தயாரித்து கொண்டு இருக்கும் வேளையில் , இப்படி திரையரங்குகளுக்கு என்று 
 
எடுக்கப்பட்ட படத்தை முதன் முதலாக இணையதளத்துக்கு கொண்டு வரும் அந்த நிறுவனம் ZEE 5. 
 
டிவைன் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் லோகு தயாரிக்க, கதிர் , ராஜ்பரத்,  மீராநாயர், ரித்விகா மயில்சாமி நடிப்பில் 
 
ஜெகதீசன் சுபு (ஆமா.. சுப்பு இல்ல) இயக்கி இருக்கும்  சிகை என்ற படம்தான் அது . 
இந்த சிகை கேசமா ? இல்லை ….. — ? பேசலாம் 
 
விபச்சாரத் தொழில் செய்யும் புரோக்கர்கள் இருவர் . அனுபவசாலி சிஜு சேட்டன் (ராஜேஷ் சர்மா) இளைஞன் பிரசாத் (ராஜ் பரத் .
 
இவர் மாபெரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான — சவாலே சமாளி புகழ் மல்லியம் ராஜ கோபால் அவர்களின் வாரிசு !)
 
பிரசாத்துக்கு , தன்னால் தொழிலுக்கு அனுப்பப்படும் புவனா (ரித்விகா) என்ற பாலியல் தொழிலாளி மீது ஒரு நெகிழ்வான ஈர்ப்பு உண்டு 
ஆனால் முக்கியக் கதை அது இல்லை .
 
சந்தோஷ் என்ற ஒரு புது கஸ்டமர் ( மால் மருகா ) கேட்க , தன்னிடம் கைவசம் ஆள் இல்லாத நிலையில் சிசு சேட்டனிடம் கேட்டு ,
 
சேட்டன் மூலம் நிம்மி ( மீரா நாயர்) என்ற பாலியல் தொழிலாளியை அனுப்பி வைக்கிறான் பிரசாத் . 
 
அழைத்துப் போவது சபலிஸ்டான  கால் டாக்சி டிரைவர்  சுப்பிரமணி ( மயில்சாமி)
 
போன நிம்மி காலையில் திரும்பி வராத நிலையில் அடுத்த கஸ்டமருக்கு அனுப்ப அவளை சிஜு சேட்டன் தேட ,
 
அவளைத் தேடி பிரசாத்தும் சுப்ர மணியும் போக, அங்கே சந்தோஷ் ரத்தம் சிந்தி செத்துக் கிடக்கிறான் . நிம்மியைக் காணவில்லை . 
எப்போதும் நிம்மிக்கு அலையும் ரெகுலர் கஸ்டமர்களை தேடி பிரசாத்தும் சுப்ர மணியும் போக,
 
அதன் விளைவாக ஒரு கஸ்டமருக்கும் அவன் மனைவிக்கும் பிரச்னை வருகிறது . 
 
அதன் அடுத்த விளைவாக அந்த கஸ்டமரும் சிஜு சேட்டனும் கைதாகிறார்கள் . (கடைசியில்
 
சிசு சேட்டன் கோலாகலமாக தொழிலை தொடர்வார் . அவரை அசைக்க முடியாது ) 
 
வீட்டுக்குள் நிம்மி மற்றும் சந்தோஷோடு இன்னொரு நபரும் இருந்தது தெரியவருகிறது . அந்த நபரை (கதிர் ) பிரசாத் பார்க்கவும் செய்கிறான் . 
முழுக்க திருநங்கை ஆவதற்கு முந்தைய நிலையில் இருக்கும் ( திருநம்பி ) மதிவாணன் என்ற அந்த நபர் இதில் எப்படி சம்மந்தப்படுகிறார்.?   
 
அப்புறம் நடந்தது என்ன ? சந்தோஷ் செத்தது எப்படி? நிம்மி எங்கே ?  என்பதே இந்த சிகை . சிகை என்றால் கூந்தல் என்று பொருள் . 
 
நீண்ட கூந்தல் வைத்துக் கொள்ள முடிவதற்கு முந்தைய நிலையில் , முகத்தில் வளரும் முடியை
 
இந்த திருநங்கைகள் சகித்துக்கொள்ள முடியாமல் கஷ்டப்படுவார்கள் . அவர்கள் ஆசை நீண்ட கூந்தல் . 
 
அதற்கு ஏற்ப இந்த படத்துக்கு பூடகமாக பொருத்தமாக சிகை என்று பெயர் வைத்து இருப்பது சிறப்பு . அதற்கே இயக்குனர் ஜெகதீசுக்கு மனதார பாராட்டு . அனுபவசாலி புரோக்கர் மற்றும் ஜாலியான பாலியல் பெண் கதாபாத்திரங்களுக்கு யதார்த்தம் கெட்டுப் போகாத வகையில்
 
  துணிச்சலாக சில அடையாளங்களைக் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் 
 
அதுவும் படத்தில் அறிமுகமாகும் முதல் காட்சியில்  சிஜூ சேட்டனின்  கேரக்டருக்கு கொடுத்து இருக்கும் டிசைன் பக்கா பக்கா 
 
ஆணாக இருந்து மெல்ல மெல்ல மாறி , முழு பெண் தோற்றம் கொண்ட திரு நங்கையாக மாறும் மதிவாணன் கேரக்டரில் அசத்தி இருக்கிறார் கதிர் . 
 
பிரசாத்தாக நடித்து இருக்கும் ராஜ் பரத் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு ‘ரிதம்’ ஆன நடிப்பை கொடுத்து இருப்பது சிறப்பு .
 
அந்த கேரக்டருக்கும் நடிகனுக்கும் வந்திருக்கும் பிணைப்பு அசத்தலாக இருக்கிறது . 
 
தினவும் திமிரும் எடுத்த பாலியல் தொழில் பெண்ணாக சும்மா திமிருகிறார் மீரா நாயர் . 
 
குடும்பத்தை காப்பாற்ற பாலியல் தொழிலுக்கு வந்து வக்கிரம் பிடித்த நபர்களிடம் உடலாலும் மனசாலும் ரத்தக் களறி ஆகும் கேரக்டரில் நெகிழ வைக்கிறார் ரித்விகா .
 
அனுபவம் மிக்க பாலியல் புரோக்கர் சிஜு சேட்டனாக நடித்துள்ள ராஜேஷ் சர்மா , பொருத்தமான நடிப்பால் வியக்க வைக்கிறார்
 
(இதுக்கு மேல பாராட்டினாலும் தப்பா போகுமே . கேரக்டர் அப்படி !) 
 
மயில்சாமி கேரக்டருக்குப் பொருத்தம் . ஆனால் – அதனால் – காமெடி கம்மி 
 
நவீன் குமாரின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு ஏற்ற உணர்வுகளை கண் வழியாகவும் ஏற்றும் வகையில் பாராட்டுப் பெறுகிறது . அருமையான ஒளிப்பதிவு . 
 
அனுசரண் படத் தொகுப்பு ஒகே ரகம் . ரோன் யோகன்  இசை ஒகே ராகம் !
 
திரைக்கதைதான் இன்னும் பெட்டராக இருந்து இருக்க வேண்டும் . 
 
நிம்மியிடம் மதிவாணன் ”சந்தோஷ் எனக்கு வேண்டும் ”என்று சொன்ன உடனே முழு கதையும் எல்லோருக்கும் புரிந்து விடும் .
 
தெரிந்த அந்த கதையை அப்புறம் சுமார் அரை மணி நேரம் வரை அதை பார்ப்பது , அதுவும் க்ளைமாக்ஸ் ஏரியாவில் பார்ப்பது பெரும் சுமை . 
 
என்ன செய்து இருக்கலாம் ? சந்தோஷ் செத்தது எப்படி ? அவனுக்கும் மதிவாணனுக்கு பண விசயத்தில் எதுவும் பிரச்னையா ?
 
இதில் நிம்மி எப்படி சம்மந்தப்பட்டாள் என்ற ரீதியில் அந்த காட்சிகளை சொல்லிக் கொண்டே போய் ,
அதெல்லாம் இல்லை …. மதிவாணனின் உணர்வுதான் எல்லாவற்றுக்கும் காரணம்
 
– என்பதை  கடைசியில் மட்டும் அழுத்தமாக இரண்டே நிமிடத்தில் சொல்லி   இருக்க வேண்டும் . 
 
அது இல்லாமல் முதலிலேயே திறப்பது பெரும் குறை . 
 
தவிர’  சந்தோஷ் இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம் .அதெல்லாம் தப்பே இல்லை ‘ என்று சொல்லும் மதிவாணன், 
 
இப்போதைக்கு சந்தோஷ் ஒரு பாலியல் தொழிலாளியிடம் போவதற்கு மட்டும்  எப்படி மறுப்பு சொல்ல முடியும் . 
 
இல்லை இல்லை சந்தோஷின் ஆரோக்கியம் மற்றும் ஒழுக்கம் முக்கியம் என்பது மதிவாணனின் எண்ணம் என்றால் அதை தெளிவாக சொல்லி இருக்க வேண்டும் .
 
ஏதோ ஒரு வகையில் சந்தோஷ் மதிவாணன் சம்மந்தப்பட்ட காட்சிகள் முன்பே திரைக் கதைக்குள் வந்திருக்க வேண்டும் . 
 
ஒரு செகண்டோ அரை செகண்டோ….  உணர்ச்சி வசப்பட்டோ படாமலோ…  பித்தளை சிலையை தூக்கி அடித்து விட்டு
 
‘வேணும் னு பண்ணல .. அது ஜஸ்ட் ஆக்சிடென்ட் என்ற ரீதியில் எல்லாம் பேசுவது நியாயமா ஞாயமாரே? 
 
இதை எல்லாம் சரி செய்து இருந்தால் , இந்தப் படத்தை தியேட்டரிலேயே தெறிக்க விட்டிருக்கலாம் .
 
ஆனாலும் ZEE 5 க்கு இது பொருத்தமான படம்தான் . பாலியல் தொழிலாளி , புரோக்கர்கள்  பற்றிய கதை , 
 
தணிக்கை இன்மை போன்ற காரணங்களால் ஆன் லைன் பார்வையாளர்களின் ஆதரவு இருக்கும் . 
 
சிகை ….. அழகான சவுரி !
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *