சிக்சர் @ விமர்சனம்

சின்னத் தம்பி படத்தில் ,  ஆறு மணிக்கு மேல் பார்வைக் குறைபாடு ஏற்படும் தன் மாலைக் கண் நோயை மறைத்து,  அனுஷாவைக் கல்யாணம் செய்து கொண்டு சிரமப்பட்டு,  நகைச்சுவை ரகளை செய்வாரே  கவுண்டமணி  ..? 

அதே குறைபாடு கதாநாயகனுக்கு இருந்தால்…  ? அதுதான் சிக்சர் . ( உண்மையில் சின்னத் தம்பிக்கும் முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் –  கே ஆர் விஜயா நடித்த தவப்புதல்வன் படமே அந்தக் கதைதான் . அதில் சிவாஜிக்கு மாலைக்கண் நோய் . அதற்கு முன்பு ஓர் ஆங்கிலப் படம் கூட உண்டு ) 
 
மாலைக் கண் குறைபாடு உள்ள நாயகன் ( வைபவ்) ஆறு மணிக்குள் கடற்கரையில் ஒரு போராட்ட கும்பலில்  சிக்கிக் கொண்டு விட , கண் தெரியாத காரணத்தால் எதற்கும் பயப்படாமல் இருக்க, அதைப் பார்த்து டிவி செய்தியாள நாயகி (பல்லக் லால்வானி) பிரம்மித்து நட்பாக 
 
பகலில் அவளை பார்த்து அழகில் மயங்கும் நாயகன்,  உண்மையை மறைத்து காதலித்து,  காதலிக்க வைக்க , அதற்கு நண்பன் ( சதீஷ் ) உதவ , உண்மை தெரிய வரும்போது அந்த காதல் என்ன ஆனது என்பதை … 
 
அமைதி அமைதி .. பதட்டம் எல்லாம் வேண்டாம் ….  நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்கள் . 
 
லாஜிக் மருந்துக்கும் இல்லாத கதை.   சில படங்களை மூளையைக் கழட்டி வைத்து விட்டுதான் பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள் இல்லையா ? பத்தாது . இந்தப் படத்தை எல்லாம் மூளையைக் கழட்டி முக்கூடல் சங்கமத்தில் வீசி விட்டுத்தான் பார்க்க முடியும் 
 
(கடற்கரையில் மாலைக் கண் உள்ள ஒருவன் என்னதான் ஹெட் போன் போட்டுக் கொண்டு உட்கார்ந்தால் கூட  , தனக்கு முன்னும் பின்னும் பக்கவாட்டுகளிலும் அத்தனை பேர் உட்கார்ந்து  கோஷம் போடுவதை உணரக் கூடவா முடியாது ? 
 
அதே போல ஹீரோ திடீர் திடீர்  என்று கோழையாவார் .அப்புறம் அது போரடித்தால் சூப்பர் ஹீரோவாகி அடியாட்களை பந்தாடுவார் . அப்புறம் தொபுக்கடீர் என்று ஒரு வில்லனை மூளையால் மிரட்டி பணிய வைப்பார். என்ன கருமம் புடிச்ச கேரக்டரைசேஷன்யா அது .  )
 
ஆனால் அதையும் மீறி சிரிக்க வைக்கிறார்கள் . அதுதான்  படத்தின் பலம் . 
 
பல பெரிய ஹீரோக்களின்  படங்களில் எல்லாம் மொக்கை போட்டு விட்டுப் போன சதீஷ்தானா இது ? ஒன் லைனர்களால் வெடிச் சிரிப்பை கொண்டு வருகிறார் . 
 
ராதா ரவியின் செருமலுக்கு , ” மேல் மாடியில் யாரோ பீரோவ நகத்துறாங்க போல இருக்கு ” என்று சதீஷ் அடிக்கும்  கமெண்டுக்கு தியேட்டரே குலுங்குகிறது . ( ”ஆக்சுவலா அவ௫ லேசாதான் சார்  டப்பிங் ல செருமி இருந்தாரு. நான் இந்த கமென்ட் பேசறதுக்காக அவர் மாதிரியே எக்ஸ்ட்ரா  ஸ்ட்ராங்கா செருமி அப்புறம் அந்த கமென்ட் போட்டேன் ” என்றார் சதீஷ் , பத்திரிகையாளர் காட்சி முடிந்த பிறகு . லவ்லி . )
 
வைபவ்  மாலைக் கண் நோயாளியின் கேரக்டரில் சிறப்பாக நடித்து இருக்கிறார் . அவர் மூலமும் நகைச்சுவை வருகிறது . 
 
பத்தாததுக்கு ராதா ரவி, இளவரசு ஆகியோரும் கலகலக்க வைக்கிறார்கள் . 
 
அடையாளம் காட்டி ‘அந்த ஸ்வீட் கொடுங்க ‘ என்று லாலா கடையில் கேட்டு வாங்கி ரசித்து ருசிப்போமே….  அப்படி இருக்கிறார் நாயகி பல்லக் லால்வானி. அவரது தோற்றமும் இளமையும் படத்துக்கு பலம் . 
 
போதையில் தெரிந்து கொள்ளும் எந்த விசயத்தையும்,   தெளிந்ததும் ராதா ரவி மறந்து விடுவார் என்ற சினிமாத்தனமான சுவையான விசயத்தை திரைக்கதையில் பயன்படுத்திய விதம் சிறப்பு . 
 
“உண்மைய சொல்லு நான் உனக்கு எத்தனையாவது லவ்வர்? “. 
“நீதான் என் கடைசி லவ்வர் “
 
— ரம்மியமான வசனம் . சபாஷ்  நந்தா மணிவாசகம் 
 
பிரபல ஹீரோக்கள் சில படங்களில் ஏற்ற கெட்டப்புகள் பாட்டுகளை ஆங்காங்கே பயன்படுத்திய விதம் .. திறமைதான் !
 
பி ஜி முத்தையாவின் ஒளிப்பதிவும் ஜிப்ரானின் இசையும் சிறப்பு . 
 
படத் தொகுப்பாளர் ஜோமின் கத்தி மேல் நடந்து காப்பாற்றுகிறார். 
 
படத்திலேயே பெரிய நகைச்சுவை என்ன தெரியுமா ? டிஜிட்டல் வாட்ச் வைத்து 5:59 வரை தெரியும் கண் டக்கென்று சரியாக  6:00 மணி முதல் தெரியாமல் போய்விடும் என்பதுதான் மாலைக் கண் நோய் என்று சொல்லி இருப்பதுதான் .   நகைச்சுவைய! 
 
சாப்பாட்டையும் டாய்லெட்டையும் சம்மந்தப்படுத்தும் காட்சிகளை எடுத்து நகைச்சுவை என்ற பெயரில் இன்னுமா நாற்றம் தெளிப்பீர்கள் ?
 
எனினும் ,
 
கதையே இல்லாம ஓபி அடிச்சே ஒகே என்று சொல்லும் அளவுக்கு ஒரு படம் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் .  சினிமா தெரிகிறது அவருக்கு 
 
அடுத்த பந்தை இன்னும் நல்ல  கதை திரைக்கதையோடு அடிங்க இயக்குனர் சாச்சி . 
 
மொத்தத்தில் சிக்சர் … பவுண்டரி !
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *