சிவப்பு மஞ்சள் பச்சை @ விமர்சனம்

இயக்குனர் சசியின் இயக்கத்தில் அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பிள்ளை தயாரிப்பில் சித்தார்த், ஜி வி பிரகாஷ், லிஜா, கஷ்மீரா, மது சூதனன், நக்கலைட்ஸ் தனம்,  பிரேம், தீபா ராமனுஜம் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் சிவப்பு மணல் பச்சை .

சிறு வயதிலேயே அப்பா அம்மாவை இழந்த நிலையில் , அப்பாவின் சகோதரியான அத்தை சம்மதித்தாலும் குடிகார மாமாவின் கொடூர வார்த்தைகள் காரணமாக , தங்கள்  வீட்டில் தாங்களே வளர்ந்து இளம் வயதை எட்டி இருக்கும் அக்கா – தம்பி ( லிஜா– ஜி வி பிரகாஷ் ). வெளியே இருந்து தாய் போல ஆதரவு தரும் அத்தை ( நக்கலைட்ஸ் தனம் ).

தகப்பன் ஸ்தானத்தில் அக்காவுக்கு தம்பி . தாயாகவே தம்பிக்கு அக்கா !
அக்காவுக்கு தெரியாமல் தம்பி செய்யும் ஒரு செயல் ரேஸ் பைக் ஓட்டுவது . முறையற்ற ஆபத்தான போட்டிகளில் கலந்து கொள்வது .

அந்த வகையில் நேர்மையான  போக்குவரத்து அதிகாரி  ஒருவரிடம் ( சித்தார்த் ) மாட்டுகிறான் தம்பி . தப்பி ஓடும் அவனை பெரும்பிரயத்தனத்துக்கு பிறகு பிடிக்கும் அதிகாரி, அவனுக்கு நைட்டி போட்டு விட்டு   சாலையில் அனைவரும் பார்க்க இழுத்து வருவதோடு படம் பிடித்து யூ டியூபில் போட்டு விடுகிறார்
அந்த அதிகாரியை ஜென்ம விரோதியாக தம்பி பார்க்க, அத்தையின் முயற்சியில் அக்காவை பெண் பார்க்க மாப்பிள்ளையாக வருகிறார் அதிகாரி .

அக்காவுக்கு மாப்பிள்ளை பிடித்துப் போக , அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறது திருமண வேலைகள் .

அதை தடுக்க தம்பி எடுக்கும் வேலைகள் பயனற்றுப் போக, அதற்குள் அக்காவுக்கும் அதிகாரிக்கும்  காதலே வந்து விடுகிறது . அந்த நிலையில் அக்காவிடம் தம்பி , ‘அவனை எனக்கு பிடிக்கல’ என்று சொல்ல, அதிரும் அக்கா , தம்பிக்காக மாப்பிள்ளையை தவிர்க்கிறார் .

இந்த நிலையில் தம்பியின் காதலி (கஷ்மீரா ) , அக்காவிடம் பேசி ‘ நீங்க செய்வது தவறு ‘ என்று உணர வைத்து , மாப்பிள்ளையை அங்கு வர வைக்க, அதே நேரம் அங்கு வரும் தம்பி மாப்பிள்ளையை அவமானப்படுத்த,  அக்கா  தம்பியை கண்டிக்கிறாள் .

‘தம்பியும் வேண்டும் காதலனும் வேண்டும்’ என்று அக்கா தீர்மானிக்க, ‘அவன்தான் மாப்பிள்ளை என்றால் உறவே வேண்டாம்’ என்று தம்பி பிரிந்து போக, அக்காவுக்கு கல்யாணமும் நடக்க, தம்பி மனம் உடைய அப்புறம் என்ன ஆனது என்பதே  இந்த சிவப்பு மஞ்சள் பச்சை.

போக்குவரத்து அதிகாரி , சட்ட விரோத ரேஸ் பைக் ஓட்டுபவன் இருவரையும் இணைக்கும் புள்ளிதானே  சிவப்பு மஞ்சள் பச்சை விளக்குகள்
அன்பு,  பாசம் , உறவு, காதல் , இவற்றை சொல்லும் அற்புதமான கதை திரைக்கதையோடு ,

தனக்கே உரிய பாணியில் அழுத்தமான காட்சிகள், கவிதை பூர்வ நிகழ்வுகள், மனதை மயிலிறகால் வருடும் உணர்வுகளை தரும் சம்பவங்கள் என்று,  கனமான – முழுமையான படத்தை கொடுத்து மனம் நிறைக்கிறார் சசி .

எந்த உறவாக இருந்தாலும் — வயது குறைவான உறவாக இருந்தாலும் – ஆண் என்பவன் பாசம் என்ற பெயரில் கூட பெண்ணை ஆதிக்கம்தான் செய்கிறான் என்ற உண்மையை சொல்கிற படம் , ஒரு பெண் அந்த நிலையில் எப்படி எல்லாம் துயரங்களை எதிர்கொண்டு தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை சொல்லும் விதம்  நெகிழ்வு .

மாப்பிள்ளையிடம் அவரது அம்மா ” அது என்னடா ஒருத்தனை அவமானப்படுத்தனும்னா அவனுக்கு சேலை , நைட்டி போட்டு விடுறது . அது வீட்ல நானும் கூட போடற டிரஸ் தான் . அப்போ பொம்பளைங்க நாங்கன்னா கேவலமா ?” என்று கேட்கும் காட்சி சசியின் படைப்பாண்மைக்கு உதாரணம் . வெல்டன் .

அதில் இருந்து மச்சானை சமாதானப்படுத்த,  சமையல் அறை வரை மாப்பிள்ளை போவது அருமை .

இப்படி எல்லா கதாபாத்திரங்களும் மிக நேர்த்தியான முழுமையோடு படைக்கப்பட்டு இருக்கின்றன.

அதிலும் அந்த அத்தை கதாபாத்திரம்…… !  தனித் தீவுகளாக இன்று வாழ்ந்து,   என்ன இழக்கிறோம் என்பதே  தெரியாமல் வாழும் மனிதர்களுக்கு,  உறவுகளின் அருமை குறித்த பெரும் ஏக்கத்தையே ஏற்படுத்தும் கதாபாத்திரம் அது .

மாமன் மச்சான் கல்யாணச் சடங்குகளின் பின்னால் ஏற்படுத்தும்  வலிமையான உறவையும் பேசுகிறது படம் .

படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமாகவும் வாழ்ந்து பார்த்து காட்சிகளை அமைத்து இருக்கிறார் போல , இயக்குனர் சசி . மொட்டை மாடியில் கணவன் சட்டையின் தோளில் நட்பாக,  தம்பியின் டி ஷர்ட்டின் கை போட்டு இருப்பது போல கிளிப் போட்டு,  துணி காயப் போடும் காட்சி ஒரு உதாரணம் . அதில் இருந்து லீட் எடுத்து கடைசி காட்சியை அமைத்து இருக்கும் விதம் செம்மை !அருமை .. அருமை .. அருமை .. இயக்குனர் சசி !

இன்னொரு பக்கம் சட்ட விரோத பைக் ரேஸ் கள் , அதற்கு என்று உள்ள பந்தய  பழக்கங்கள் , தோற்பவருக்கு ஏற்படும் ஆபத்துகள் என்று பலரும் அறியா விசயங்களையும் பேசி இருக்கிறார்  இயக்குனர் சசி.

கனமான கதாபாத்திரத்தை சரியாக நடித்து எல்லோர் மனதையும் கொள்ளை அடிக்கிறார் அக்காவாக வரும் லிஜா .  இந்த கதாபாத்திரமும் அதில் லிஜாவின் சிறப்பான நடிப்பும்தான் படத்தின் அச்சாணி . தோற்றப் பொருத்தம் , நடிப்பு என்று எல்லா வகையிலும் சிறப்பு செய்கிறார் லிஜா.

பணி குறித்த பெருமை, பெருமைக்கு ஏற்ற தோரணை,  இன்னொரு பக்கம் அம்மா , அண்ணன் மீது காட்டும் அன்பு , காதலில் உறுதி , மனைவியின் தம்பியை நேசிக்கும் விதம் என்று சூழல்களுக்கு ஏற்ப  சிறப்பாக நடித்திருக்கிறார் சித்தார்த்.

அதே போல அக்காவின் மீதான பாசம் , உரிமை , அதிகாரம் , கெஞ்சியும் மன்னிக்காத அதிகாரி மீது வரும் கோபம் , அவரே மாப்பிளையாக வரும்போது ஏற்படும் அதிர்ச்சி , கல்யாணத்துக்கு பின் விரக்தி , கோபம், மாற்றம் என்று கனமான கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார் ஜி வி பிரகாஷ் .

மிக மிக இயல்பான நடிப்பால் எல்லோர் உள்ளங்களையும்  கொள்ளை அடிக்கிறார் அத்தையாக வரும் நக்கலைட்ஸ் தனம் .

போலீஸ் உயர் அதிகாரி அறையில் அவர் முனாடியே  சித்தார்த்தை அடிக்கப் பாயும் காட்சியில் மிரட்டுகிறார்  கொடூர வில்லனாக வரும் மதுசூதனன் .
பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவு,   அப்படி ஒன்று இருப்பதே தெரியாத அளவுக்கு படத்துக்குள் தன்னை கரைத்துக் கொண்டிருக்கிறது . அபாரம் .

பாடல் , பின்னணி இசை இரண்டின் மூலமாகவும் படத்துக்கு கனம் ஏற்றி இருக்கிறார் அறிமுக இசை அமைப்பாளர் சித்து குமார் . வாழ்த்துகள் .
சான் லோகேஷின் படத் தொகுப்பும் சிறப்பு .

என்னதான் அக்காவின் முகத்தை கூட பார்க்கவில்லை என்றாலும்  ஒரே வீட்டில் இருக்கும் நிலையில் அக்கா மாசமாகி இருப்பது பிரசவத்துக்கு மருத்துவமனை போகும் வரை கூடவா தம்பிக்கு தெரியாது?

ஒரு நல்ல கதை திரைக்கதை உள்ள  படத்தை  வெகு ஜன மக்களிடம் கொண்டு போக   வணிக ரீதியில் கமர்ஷியல் காட்சிகள்  அமைப்பது தப்பில்லை . ஆனால் வாழ்வியல் சொல்லும் படத்தில் துப்பாக்கி, கத்திகளை அதுவும் கிளைமாக்ஸ் சமயத்தில் பொம்மைகள் போலவா பயன்படுத்துவது ?. நாம பாக்கிறது சினிமா என்பது பட்டவர்த்தனமாக உணரப்படுகிறது .

இது போன்ற காட்சிகளால் , பாச மலர் , முள்ளும் மலரும் , கிழக்கு சீமையிலே ஆகிய படங்களோடு சேர்ந்து நிற்க வேண்டிய படம் ….சற்று  தள்ளியே நிற்கிறது
அந்த கிளைமாக்ஸ் சண்டை  காட்சிகளின் நிகழ்வுகளின் நீளம் ஒகே . ஆனால் வசனங்கள் அளவு ரொம்ப ஓவர் .

பிளாஷ்பேக்கில் ஒரு காட்சியில் “உனக்கு நல்ல  மாப்பிள்ளை அமைச்சுக் கொடுக்கறது … ” என்கிறார் தம்பி . அது இயல்பான மொழி இல்லையே . ” நல்ல மாப்பிள்ளை பாக்கறது … நல்ல மாப்பிள்ளை கொண்டு வர்றது .. நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பது .. இப்படி அல்லவா வந்திருக்க வேண்டும் .இப்படி சில  குறைகள்தான் .

உறவு, உணர்வு இரண்டுக்கும் அர்த்தமே தெரியாத படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் அவற்றுக்கு எல்லாம் அமுதூற்றி உயிர் கொடுத்து இருக்கிறார் சசி .

சிவப்பு மஞ்சள் பச்சை ….  செல் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *