தடம் @ விமர்சனம்

இந்தர் குமார் தயாரிக்க, அருண் விஜய், யோகி பாபு, தன்யா ஹோப், ஸ்முருதி வெங்கட், வித்யா பிரதீப் நடிப்பில்,

மகிழ் திருமேனி இயக்கி இருக்கும் படம் தடம் . படம் ரசிகனுக்கு திடமா ? பார்க்கலாம். 

திறமையான பொறியாளரும் வளரும் தொழில் முனைவோருமான  எழிலுக்கு ( அருண் விஜய்) , தான் சந்திக்கும் ஓர் இளம்பெண் (தான்யா ஹோப்)  மீது ஈர்ப்பு .. தொடர்ந்து காதல் . 

அவளும் காதலை ஏற்கிறாள் . 

அவனைப் போலவே உருவத்  தோற்றம் கொண்டவன் கவின் ( இன்னொரு அருண் விஜய்).  நண்பன் (யோகிபாபு), காசுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு சேச்சி ( மீரா நாகராஜன்)! இந்த  மூவரும் பல்வேறு திருட்டு, கொள்ளை மற்றும் ஏமாற்று வேலைகளை  இணைந்தோ அடித்துக் கொண்டோ செய்பவர்கள். 

கவின் செய்யும் திருட்டுகள் தெரியாமலும் பிறகு தெரிந்த பின்னும் அவனை நேசிக்கிறாள் ஓர் அப்பாவிப் பெண் (ஸ்மிருதி)

நண்பன் ஒரு தாதாவிடம் பெரும்பணம் வாங்கி சிக்கிக் கொள்ள, அவனை மீட்க ஓர் இரவுக்குள் பல லட்சங்களை சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் கவின் . 

அதே இரவில் நண்பர்களுக்கு மது விருந்து கொடுக்கும் எழில், அடுத்த நாள் முக்கிய வேலை இருப்பதாக நண்பர்களிடம் சொல்லி விட்டு சீக்கிரம் கிளம்புகிறான் . 

அந்த இரவில் எழில் , கவின் இருவருமே கோபமாக இருக்கிறார்கள் . 

இந்நிலையில் ஒரு வீட்டுக்குள் நுழையும் நாயகனின் உருவம் ( எழில் அல்லது கவின்) அங்கே இருக்கும்  ஓர் இளைஞனை கொடூரமாக குத்திக் கொல்கிறது. 

அந்த இளைஞன் வீட்டில் இருந்து பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வருகிறது . 

அந்த இளைஞன் அந்த இரவில் எடுத்த தற்சுட்டிப் படம் (selfie) படம் ஒன்றின் பின்னணியில் நாயகனின் உருவம் நிற்பது தெரிகிறது . 

விசாரிக்க வரும் காவல்துறை ஆய்வாளர் (ஃபெஃப்சி  விஜயன் ) எழிலை ஆள் அனுப்பி கண்டு வந்து குற்றவாளி என்று நிரூபிக்க முயல்கிறார் . காரணம் எழில் மீது அவருக்கு உள்ள வஞ்ச உணர்ச்சி. 

இதில்  நியாயமான பெண் உதவிக் காய்வாளர் ஒருவருக்கு ( வித்யா பிரதீப்) உடன்பாடு இல்லை 

இந்நிலையில் குடிபோதையில் காவல் துறை வாகனத்திலேயே மோதி கைது செய்யப்படும் கவின் அதே காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறான் . 

அவனை பார்த்ததும் எழில் – கவின் உருவ ஒற்றுமை காரணமாக அனைவரும் குழம்ப , தன் வஞ்ச உணர்ச்சியை தீர்க்க முடியாமல் போய் விடுமோ என்று குமைகிறார் , அந்த கொடூர  காவல் ஆய்வாளர். 

எனவே தன்னைப் போலவே இன்னொருவன் இருப்பது மற்றவனுக்கு தெரியக் கூடாது என்று நினைத்து இருவரையு  பிரித்து வைக்கிறார் ஆய்வாளர் . 

உண்மையான குற்றவாளியைதான் தண்டிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் பெண் ஆய்வாளர் . 

இதற்கிடையே எதிர்பாராதவிதமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் எழிலும் கவினும் மூர்க்கமான மோதிக் கொள்கிறார்கள் . 

அப்புறம் என்ன நடந்தது ? கொலையாளி யார் ? நிரபராதி யார் ? தண்டிக்கப்பட்டது யார் ? புத்திசாலி யார் ?அதன் விளைவுகள் என்ன ? 

– என்பதே இந்த தடம் . 

மனம் நிறைந்த வாழ்த்துப் பூங்கொத்து இயக்குனர் மகிழ் திருமேனிக்கு ! 

அற்புதமான எழுத்து – மிக சிறப்பான இயக்கம் இரண்டின் மூலமும் அழகியல் வழியும் படமாக்கலின் வழியேயும் ஒரு முழுமையான பரபரப்பான சுவையான ரசனை அனுபவத்தை ரசிகனுக்கு பொற்கிழி போலக் கொடுத்து , ”படம் பார்த்து மகிழ்! மகிழ்!” என்று விருந்து படைத்திருக்கிறார் இந்த இயக்குனர் திருமேனி . 

பொதுவாக குற்றவாளிகளை கண்டு பிடிக்க மரபணு சோதனையே மிகப் பெரிய ஆதாரம் . ஆனால் ஓருரு இரட்டையர்கள் (identical twins) விசயத்தில்  இந்த சோதனை செல்லுபடியாகாது என்ற நுணுக்கமான விசயத்தை எடுத்துக் கொண்டு , அப்படிப்பட்ட நிலையில் என்ன நடக்கும் ? வேறு ஏதும் வழி இருக்கிறதா? அதுவும் இல்லாமல் போனால் என்ன செய்வது ? என்ற  சுவையான விசயத்தின் பின்னணியில் கதை திரைக்கதை அமைத்து , 

எதிர்பாராத திருப்பங்கள், நெகிழ்வான நிமிடங்கள் , பரபரப்பான கதை சொல்லல் என்று இரண்டு மணி பதினெட்டு நிமிடமும் ரசிகர்களை கட்டிப் போடுகிறார் . 

அதற்காக அவர் சேகரித்து இருக்கும் விவரங்கள் அவரது தேடலையும் போட்டிருக்கும் உழைப்பையும் பொறித்திருக்கிறது படத்தில். 

இதுவே ஒரு  திருப்தியான படத்துக்கு போதும் என்ற நிலையிலும் அதையும் மீறி இளமை, இனிமை , அழகு என்று இன்னொரு வகையிலும் பொங்கி வழிகிறது படம் . 

அழகான காதல், நெகிழ்வான காதல் , ஒரு நிலையில் அழகான காதலின் நெகிழ்வு, நெகிழ்வான காதலின் அழகு எல்லாவற்றையும் தளும்பத் ததும்பக் கொடுத்திருக்கிறார் மகிழ் திருமேனி . 

படத்தின் துவக்கத்தில் பெயர்கள் ஒளிரும் வேளையில் பின்னணியில் மரபணு ஏணி மிதப்பது …. சட்டத்தில் ஓட்டைகள் இருப்பது ஒரு நிரபராதியும் தப்பி விடக் கூடாது என்பதற்குதான் என்ற எள்ளலான வாசகம்… மதுக்கடையில் வசந்த மாளிகை பட சுவரொட்டி….  என்று படம் துவங்குவதில் இருந்து , 

கடைசி காட்சியின்  முடிவுவரை இயக்குனரின் செய் நேர்த்தியும் மேட்டிமையும் வெளிப்படுகிறது .

சின்னச் சின்ன கதாபாத்திரங்கள்  கூட  துண்டு துண்டாக நிற்கக் கூடாது என்பதற்கான ஏதோ ஒரு வகையில் அவற்றை அழகாக கோர்ப்பது ( உதாரணமாக தடய அறிவியல்துறை ஊழியர் , பெண் ஆய்வாளரை பெண் பார்க்க வந்து நிராகரிக்கப்பட்டவர்)  ரம்மியம் . 

திரைக்கதையில் வெளியே சொல்லக் கூடாத அளவுக்கு — பார்க்கும்போது உணரும் அளவுக்கு பல நுணுக்கமான வேலைப்பாடுகள்! 

ஒரு நிலையில் கதையில் இரண்டு கதாநாயகிகளின் பங்களிப்பும் குறைந்து விடும் . அப்போதும் படம் விறுவிறுப்பாக இருக்கும் என்றாலும் அது மட்டும் போதாது என்று…  உதவி ஆய்வாளர் கதாபாத்திரத்தை பெண் கதாபாத்திரமாக போட்டிருக்கிறாரே … கில்லாடி இயக்குனர் .

மிகக் குறைவான வார்த்தைகளில் நிறைய விஷயங்கள் சொல்லும் பாணியில் செதுக்கலான உரையாடல்கள் !   

கார்கள் சாலையில் பயணிக்கும் ஒரு காட்சித் துளி என்றால் கூட அதன் பின்னணியில் என்ன மாதிரி கட்டிடங்கள் இருந்தால் அது சம்மந்தப்பட்ட காட்சியின் உணர்வுக்கு பொருந்தும் என்பது வரை பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார்  மகிழ்.

 செயற்கையான வேகம் , பொய்யான பரபரப்பு என்று  படத்தில் எங்குமே இல்லை. அதே நேரம் ஒவ்வொரு காட்சியும் அப்படி ஓர் ஆர்வத்தை தூண்டுகிறது . 

ஒரு வாக்கியத்தில் சொல்வதென்றால்,  ஒரு யானை நடக்கிற மாதிரி அழுத்தமாக அழகாக கம்பீரமாக சலிப்பே தராத வகையில் நகர்கிறது படம். 

உற்சாகப் பாராட்டுக்கள் இயக்குனர் மகிழ் திருமேனி ! இதுவரையிலான உங்கள் படங்களில் இதுதான் மிக சிறப்பானது.

எழில், கவின், மலர் என்று பல தூய தமிழ்ப்பெயர்கள்  ‘மகிழ்’வாக இருக்கிறது. 

பொதுவாக தமிழ்ப் படங்களில் வரும் திரையில் ஒளிரும் வாக்கியங்களில்  எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருப்பதே இல்லை . ஆனால்  இந்தப் படத்தில் அப்படி எதுவுமே இல்லை . மகிழ்ச்சி 

பொறியாளர்கள் மற்றும் பொறியியல் படித்தவர்களை எல்லா படங்களும் கிண்டல் செய்யும் தமிழ் சினிமாவை இந்தப் படத்தின் மூலம் ‘பிரா’யச் சித்தம் தேடிக் கொள்ள வைத்து உள்ளீர்கள்  இயக்குனரே.. ம்ம் .. ம்ம்…  . ‘மகிழ்’ச்சீ…. !   

இரட்டை வேடம் . அந்தக் காலம் மாதிரி மரு வைத்துக் கொண்டு தப்பிக்க முடியாது . அதே நேரம் கொலை கொலை செய்யப் போவது எழிலா கவினா என்பது ரசிகனுக்கு, காட்சியின் போது புரிந்து விடவும் கூடாது . எனவே நடை உடை பாவனைகளில்  ரொம்ப வித்தியாசம் காட்டவும் முடியாது . கூடாது . ஆனாலும் மற்ற காட்சிகளில் எழில் யார் கவின் யார் என்பது பெயர்கள் போடப்படுவதையும் மீறி ரசிகனுக்கு புரியவும் வேண்டும் .  ( பல காட்சிகளில் சட்டை வித்தியாசம் மட்டுமே )  

ரொம்ப கஷ்டம் ரொம்ப ரொம்ப கஷ்டம்  . ஆனால் மிக சிறப்பாக செய்து இருக்கிறார் அருண் விஜய் . மிகச் சிறந்த உழைப்பு . 

எழில் கவின் இருவருக்குமான குரல் நடிப்பில் வித்தியாசம் காட்டி அசத்தி இருக்கிறார் . பல்வேறு விதமான உணர்வுகளுக்கு ஏற்ப அந்த குரல் நடிப்பில் வித்தியாசம் ஒரு லயமாக தொடர்கிறது . அதுதான் அருமையோ அருமை . 

அருண் …  இது வரையிலான உங்கள்  படங்களிலும் இதுதான் உங்களுக்கு முதலிடத்தில் !

அற்புதமான ஒளிப்பதிவால் படத்துக்கு எழிலும் கவினும் சேர்த்து இருக்கிறார்  கோபிநாத் . வண்ணப் பயன்பாடு , இருள் ஒளி ஆளுமை இரண்டும் அபாரம். ஒவ்வொரு இடத்திலும் மிக இயல்பாக ஒரு முப்பரிமாண தன்மையை   கொண்டு வரும் ஒளிப்பதிவு . படத்தின் உணர்வுக் கூட்டலுக்கும் மாபெரும் பங்களிப்பு செய்துள்ளது ஒளிப்பதிவு . அருமை .

மகிழ் திருமேனியின் இயக்கத்தையும் கோபிநாத்தின் ஒளிப்பதிவையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை என்பது இந்தப் படத்தின் அற்புதங்களில் ஒன்று . 

 பின்னணி இசையில் அசத்துகிறார் அறிமுக  இசையமைப்பாளர் அருண்ராஜா . பொதுவாக இசையில் ஒலியற்ற அமைதி முக்கியமான விஷயம் . அதை சரியாகப் பயன்படுத்தி இருக்கும் வேளையில் இன்னொரு பக்கம் , காட்சிக்கு தேவையான ஒலிகளையே இசையாகவும் இசையையே காட்சிகளுக்கு தேவைப்படும் அடிப்படை ஒலியாகவும் குழைக்கிறார் இந்த தம்பி . 

இசையால் படத்துக்கு தரவேண்டிய உணர்வுக் கூட்டலையும் சிறப்பாக செய்கிறார் . உதாரணமாக கவின் தன்னை ஏமாற்றுகிறான் என்று தெரிந்த பின்னும் அவனுக்கு உதவிய நிலையில் அவனிடம் அந்த அப்பாவிக் காதலி பேசும் ஒரு காட்சியில் இசையால் இதயத்துக்குள் ஊடுருவுகிறார் அருண்ராஜ் . 

பாடல் இசையில் இன்னும் கவனமும் சிரத்தையும் வேண்டும் . 

படத்தின் அழுத்தமும் நிதானமமுமான பாய்ச்சலுக்கு அபாரமாக உதவி இருக்கிறது ஸ்ரீகாந்த் என் பி யின் ஒளிப்பதிவு . எங்கே வேகம் வேண்டும் எங்கே நிதானம் தேவை என்ற தெளிவு அபாரம் !

அமரனின் கலை இயக்கத்தில் எல்லா இடங்களும் சிறப்பு என்றாலும் பெண் காவல் ஆய்வாளரும் ஏட்டுவும் பேசிக் கொள்ளும் அந்த காவல் நிலையத்தின் ஒய்வு அறை அவ்வளவு யதார்த்தம் (ஒளிப்பதிவும் அதற்கு ஒரு காரணம் ) பாராட்டுகள் கலை இயக்குனர் அமரன் 

காவல் நிலைய சண்டைக் காட்சியில் சண்டை இயக்குனர் அன்பறிவு ,  இயக்குனர் மகிழ் திருமேனி, ஒளிப்பதிவாளர் கோபிநாத், நாயகன் அருண் விஜய்,படத் தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் , இசை அமைப்பாளர் அருண்ராஜ், கலை இயக்குனர் அமரன்அடங்கிய  குழு சும்மா ஆடித் தீர்த்திருக்கிறது . அபாரம் !

வார்த்தைகளை உச்சரிக்கும்போது மூக்குக்கும் தாவாய்க்கும் இடையில் ஏதோ மாயம் செய்யும் வகையிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் வகையிலும் மிகவும் ஈர்க்கிறார் தான்யா ஹோப் .  நம்பிக்கைக்குரிய நாயகியாக  வலம் வரலாம். வளம் பெறலாம்  

கவினின் அப்பாவிக் காதலியாக வரும் ஸ்மிருதி  கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக விகசிக்கிறார். 

அழுத்தமான நடிப்போடு கூடிய குபீர் நகைச்சுவைக் காட்சிகளில் அசத்துகிறார் யோகி பாபு . அவை சும்மா வாய்வார்த்தைகளாக மட்டும் இல்லாமல் காட்சி நகைச்சுவையாகவும் இருப்பது யோகிபாபுவுக்கே புதுசாக இருந்திருக்கும். ஜார்ஜும் சிரிக்க வைக்கிறார் .

பெண் ஆய்வாளராக  சிறப்பாக நடித்துள்ளார் வித்யா பிரதீப் . 

மிரட்டுகிறார்  ஃபெஃப்சி  விஜயன்  கனவிலும் நினைத்திராத வேடத்தில் மீரா நாகராஜன். இவர்கள் மறுமல  மட்டுமல்ல சிறு சிறு வேடங்களிலும் நடிக நடிகையர் நேர்த்தி 

கொலையான நபரின் வீட்டில் இருந்து காணமல் போன பணம் எங்கே போனது என்ன ஆனது ? அதை ஏன்   திரைக்கதையில் பூர்த்தி செய்யாமல்  விட்டு விட்டார்கள்?

கடைசியில் அம்மாவை நினைத்து கவின் நெகிழும் காட்சியை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம் .

ஆனாலும் என்ன .. அற்புதமான திரை அனுபவம் இந்தப் படம்.  

பொதுவாக வித்தியாசமாகவும் அதே நேரம் ஏற்றுக் கொள்கிறபடியும் சொல்லப் படும் திரைக்கதைகள் கொண்ட படங்கள் வெல்வது உறுதி

 அதே போல நல்ல திரைக்கதை சிறப்பான படமாக்கல் இரண்டும் ஒன்றை ஒன்று விஞ்ச முயலும் அளவுக்கு சிறப்பாக அடைந்து கடைசியில் படமாக்கலை திரைக்கதை வெல்கிற ஒரு படம் பார்ப்பவனைக் கொண்டாட வைக்கும் . 

இரண்டுக்கும் இந்தப் படம் உதாரணம் . 

அதை எல்லாம் விட, இவ்வளவு இளமை,  இனிமை, நகைச்சுவை, அழகியல், பரபரப்பு, விறுவிறுப்பு , அடர்த்தி , இவை எல்லாவற்றையும் மீறி இன்னொரு விசயத்தில் இந்தப் படம் முக்கியமானது . 

பதின் பருவத்து அரைகுறை ஆர்வக் கோளாறு சிந்தனைகளாலும் , சமூகம் காட்டும் அருவருப்பான விஷயங்களாலும் ,  பெற்ற தாயையும் சட்டென தவறாக எண்ணத் தயங்காத  இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்கு இந்தப் படத்தில் ஒரு அவசியமான அறிவுரை, பாடம் , சேதி இருக்கிறது. அவசியம் பாருங்கள் 

தடம் … வெற்றிக்கு பிடிக்கும் வடம் !

மகுடம் சூடும் கலைஞர்கள் 

மகிழ் திருமேனி, அருண் விஜய், கோபிநாத், அருண் ராஜ்,  ஸ்ரீகாந்த், அன்பறிவ்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *