திருமணம் @ விமர்சனம்

PRENISS இன்டர்நேஷனல்  (OPC) பிரைவேட் லிமிடெட் சார்பாக பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்க, வெள்ளை சேதுவின் தயாரிப்பு நிர்வாகத்தில், சேரன்,  சுகன்யா, தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர், உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ், ஜெயபிரகாஷ், மனோபாலா , பால சரவணன் நடிப்பில் ,

ஒரு இடைவேளைக்குப் பிறகு மீண்டு(ம்) சேரன் எழுதி இயக்கி  இருக்கும் படம் திருமணம் – சில திருத்தங்களுடன். இருக்குமா ரசிகர்களோடு பொருத்தங்களுடன்? பேசலாம்.

 இயற்கை முறை விவசாயம் செய்யும் கனவு கொண்ட — தற்போது, பண்பலை நிகழ்ச்சி நடத்துனராக இருக்கும் மகேஷுக்கும் (உமாபதி ராமையா),  இளம்பெண் ஆதிரை செல்விக்கும் (காவ்யா சுரேஷ்) சமூக வலைதளங்களின் வழியே (?) ஏற்பட்ட காதல், கண்ணியமாக வளர்கிறது.

 ஆதிராவின் அண்ணன் அறிவுடை நம்பி ( சேரன்) வருமான வரித் துறையில் வேலை செய்பவர் . கைம்பெண் அம்மா வடிவாம்பாள்  (சீமா ஜி ). 

நம்பி மற்றும்  ஆதிரையின் தாய் மாமன் குமரகுரு (தம்பி ராமையா — எப்படி தாய்மாமன் என்ற உணர்வுப் பூர்வமான கதை அபாரம் சேரன் !)

மகேஷின் குடும்பம் ஜமீந்தார் வகையறா , பாசமுள்ள அக்கா மனோன்மணி (சுகன்யா) அதே போன்ற சித்தப்பா ( எம் எஸ் பாஸ்கர்) , கார் டிரைவர் சரவணன் (பால சரவணன் )

அறிவுடை நம்பியின் உயர் அதிகாரி பொன் விஜயகுமார் (ஜெய பிரகாஷ் ) சக அதிகாரி நரசிம்மாச்சாரி ( மனோபாலா ).
மகேஷ் – ஆதிரா காதல் திருமணம் நோக்கி நகர்கிறது .

 காதல் வழி வரும் திருமணம் என்றாலும்,  இன்று நடக்கிறபடி வரதட்சணை பேச்சும் நடக்கிறது . அதே போல கல்யாண செலவில் ஆளுக்குப் பாதி என்று முடிவாகிறது.

 மகேஷின் அக்காவுக்கும் சித்தப்பாவுக்கும் தம்பியின் கல்யாணத்தை ஜாம் ஜாம் என்று நடத்திப் பார்க்க ஆசை .

 ஆனால் அறிவுடை நம்பியின் குணம் வேறு . அப்பாவின் வாழ்க்கை தந்த கொடிய  நிலை , அதன் பின்னர் கஷ்டப்பட்டு முன்னேறி நடுத்தர வாழ்க்கைக்கு வருவதே பெரிய போராட்டமான நிலை இவற்றால்…

பார்த்து பார்த்து திட்டமிட்டு செலவு செய்வது நம்பியின் நம்பகமான குணம் .   

பாசமுள்ள தங்கையின் கல்யாணத்திலும் அப்படியே நடந்து கொள்கிறார் .

”நீங்கதான் ஜமீன்தார் குடும்பம் …. நாங்க ஜமீந்தார் குடும்பம் இல்ல… எனவே நகை எல்லாம்  எங்களால் முடிந்ததுதான்  செய்வோம் ” என்பது முதல் கொண்டு….அவர் சொல்லும் திருத்தங்கள் … மனோன்மணியை எரிச்சலாக்குகுகின்றன .

காவ்யாவின் வழியே மகேஷ் வற்புறுத்தி  ஒரு சில விசயங்களை ஜமீந்தார் குடும்பம் ஏற்றுக் கொண்டாலும் ,  அவ்வப்போது சில சலசலப்புகள் வந்து அடங்கி, கல்யாண உடை எடுக்கும்  விசயத்தில் கொஞ்சம் சீரியஸ் ஆகி , சாப்பாட்டு விசயத்துக்கு நம்பி சொல்லும்  ஐடியாவில் வெடிக்கிறது .

 ”முழு செலவையும் நாங்களே பாத்துக்கறோம் . ஆனா பொண்ணோட அண்ணன், அம்மா , தாய்மாமன் யாரும் கல்யாணத்துக்கு வரக் கூடாது.

பொண்ணு மட்டும் வரட்டும் அப்போதான் கல்யாணம் நடக்கும் “என்று மனோன்மணி கட்டளையிட….. அது சாசனம் ஆகவில்லை .

 ”போடா உன் காதலும் நீயும்…” என்று ஆதிரா மகேஷை தூக்கி ஏறிய , மகேஷ் எங்கோ காணமல் போய் விடுகிறான் .

அப்புறம் காதல் என்ன ஆச்சு ? கல்யாணம் என்ன ஆச்சு ? திருத்தங்கள் என்ன ஆச்சு ? உறவுகள் என்ன ஆச்சு ? என்பதே இந்த திருமணம் படம்.

காலத்துக்கு ஏற்ற அவசர அவசியமான ஒரு கதையோடு வந்திருக்கிறார் சேரன். வருக வணக்கம் .. நல்வரவாகட்டும் !

 ஒரு நிமிடம் பார்க்கப்படும் பத்திரிகைக்கு செய்யும் ஆடம்பரம்,  கல்யாண தினத்துக்காக மட்டும் அணிந்து கொண்டு விட்டு  விட்டு அப்புறம் வாழ்க்கை முழுக்க பீரோவிலேயே தூங்கும் உடைகளுக்காக செய்யப்படும் பெரும் தொகை,

மாப்பிள்ளை ஊர்வலம் என்ற பெயரில் வெற்றுச் சடங்கான ஒரு விசயத்துக்கு செலவாகும் தொகை  , மண்டப படாடோபம், வீணாகி குப்பைக்கு போகும் அளவுக்கான பந்தி உணவு…

இவற்றை எல்லாம் திருத்தி எளிமையாகவும் பயனுள்ள அளவுக்கும் மட்டும் செலவு செய்யலாம் என்ற வகையில் படம் சொல்லும் திருத்தங்கள் சட்டென்று ஓரிரு  சமயம் சிரிக்கவும்   பின்னர் ஆழமாக சிந்திக்கவும்  வைக்கின்றன . அருமை 

அதற்கேற்ப,  பெரிய இடத்து மாப்பிள்ளைக்கு மகளை கட்டிக் கொடுக்க பெரும் பணம் செலவு செய்து , கந்து வட்டிக்கு கடன் வாங்கி  மாட்டிக் கொண்டு ,

அதில் இருந்து மீள  அதுவரை கட்டிக்காத்த நேர்மையை அடகு வைத்து, கைதாகி ஜெயிலுக்குப் போய்  அவமானப்படும் உயர் அதிகாரியின் கதைப் போக்கு , படம் சொல்லும் திருமணத் திருத்தங்களுக்குப் பலம் சேர்க்கிறது .

 விவாகரத்து அதிகம் நடப்பதற்கான காரணங்களில் இருந்து திருமணப் பொருத்ததுக்கான காரணிகளை திரைக்கதையில்  வடிவமைப்பதும் அழகு .

 பிள்ளைகளின் கல்யாணத்துக்காக கடன் வாங்கி சாகும் வரை அல்லல் படும் பெற்றோர்களின் நிலையை விளக்கத் தவறவில்லை சேரன் .

இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை ஏக்கப் படும்  வகையில் அழகாக சொல்கிறார் . அருமை .

 சேரன் படத்துக்கே உரிய மனித உறவு பிணைப்பு இணைப்பு இயைபு காட்சிகளும் நிறைவு . 

ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு இயக்குனர் சொன்ன வேலையை,  ”ஒகே மிஸ்.. ” என்ற அளவில் செய்திருக்கிறது.

 சித்தார்த் விபினின் பாடல் இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் . (முதல் பாடலில் ‘ஸ்ட்ராபரி பெண்ணே’ வாசம் !)  சபேஷ் –  முரளியின் பின்னணி இசை ஒகே ( சிவன் கோவிலில் கூடாரவல்லி பாட்டா சபேஷ் –  முரளி? ம்ம்ம்ம்…. )

 கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பொருத்தமான நடிக நடிகையர். சிறப்பு . 
அதுவும் ஒரு காட்சியில் தத்தம் குடும்பம் வாங்கிய வாழ்க்கை அடிகளை சொல்லிக்கொளும் காட்சியில்  தம்பி ராமையாவும் எம் எஸ் பாஸ்கரும் அடடா .. சும்மா நின்னு விளையாடுகிறார்கள் . அசத்தல் .

 இளம் நாயகன் மகேஷ் பொருத்தம் . 

தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் இயற்கை விவசாயியாக படத்தில் வருகிறார். வெள்ளை சேது கிளைமாக்ஸ் காட்சிகளில் தலை காட்டுகிறார் . நிறைய நல்ல படங்களை உருவாக்க வாழ்த்துகள்.

 ஆங்காங்கே சிரிக்க  வைக்கிறார் பால சரவணன். 

 நடிப்பில் வேண்டும் பல திருத்தங்கள் காவ்யா . 

சில காட்சிகளில் சில கதாபாத்திரங்கள் பேசும் முக்கிய வசனங்கள் கூட அவுட் பிளாக்கில் ஒலிக்க, சேரன் முகமே திரையில் தெரிகிறது. ஏன் ? ஏன் ? ஏன் ?

காதல் கல்யாணம் .. அப்புறம் எதுக்குடா வரதட்சணை என்று எதாவது ஒரு கேரக்டர் , அட அந்த கார் டிரைவராவது… சன்னமாகவாவது கேட்டு இருக்கலாம்ல  . கேக்கல .. ஏம்ல ?

சொல்ல வரும் விசயங்களை நகைச்சுவை கலந்து சுறுசுறுப்பாக இன்னும் நறுக்கான காட்சிகளில் சொல்லி பிரச்னை வெடிக்கும்போது.. அப்புறம் நிறுத்தி நிதானமாக  இந்தப் படத்தை சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் . 

மனோன்மணியின் கணவனை அறிவுடை நம்பி கடைசியில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கலாமோ என்ற எதிர்பார்ப்பு வருவதையும் தவிர்க்க முடியவில்லை.

ஆனாலும் என்ன ….

 “பெரும்பணம் உள்ளவர்கள் கல்யாணத்தை ஆடம்பரமாக செய்யுங்கள் . தப்பில்லை . ஏனென்றால் கல்யாண நிகழ்வுகளை வைத்து பல தொழில்கள் இருக்கிறது. பல குடும்பங்கள் பிழைக்கின்றன. அது ஒரு புண்ணியம்.

 ஆனால் நடுத்தர குடும்பங்களே !

 கல்யாண நிகழ்வு என்ற ஒரு நாள் கூத்துக்கு  கடன் வாங்கி பின்னர் காலமெல்லாம் கஷ்டப்படுவது மடமை .

CEO வெள்ளை சேது , தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம்

கையில் காசு இருந்தால் கூட , கல்யாண நிகழ்வில் வீணாக  இறைக்கப்படும் பணத்தை பத்திரப்படுத்தி , சொத்து வாங்குங்கள், நிலம் நீச்சு வாங்குங்கள், தொழில் தொடங்குங்கள்.. அட சேமித்தாவது வைங்கடா … ” 

– என்று இந்தப் படம் சொல்வதை ஒரு சமூக சேவையாகவே பார்க்க  வேண்டி உள்ளது .

 அருமை சேரன் , பிரேம்நாத் சிதம்பரம் மற்றும் வெள்ளை சேது … ! அருமை!!!

 மொத்தத்தில் திருமணம்….. மொய் வைக்கலாம். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *