ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரிக்க,
இயக்குனர்- நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடிக்க,
இயக்குநர் ஏ.வெங்கடேஷ், தயாரிப்பாளரின் கணவரான எம்.எஸ்.குமார்,
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ்,
தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் ஆகியோர் நடிப்பில்
இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ’தொட்ரா’
ரசிகர்கள் தைரியமாக படத்தைத் தொடலாமா ? பேசலாம் .
முருகனின் திருத்தலமான பழனி , அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழும் கதை.
பட்டப் பகலில் பொது இடத்தில் பலரும் நடமாடும் சூழலில் ஒரு இளம் ஜோடி வெட்டப் பட, அவர்கள்,
ஆம்புலன்சில் தூக்கிப் போடப்பட்ட நிலையில் பிளாஷ்பேக்கில் காட்சிகள் விரிகின்றன
பெரியார் சமத்துவ புரத்தில் வாழும் இளைஞன் சங்கருக்கும் (ப்ரித்வி ராஜ் ) வெள்ளை வேட்டி சட்டையில்,
சாதிப் பெருமை பேசும் குடும்பத்தில் பிறந்த திவ்யாவுக்கும் (வீணா ), பயத்தையும் வென்று வருகிறது காதல்
திவ்யாவின் அண்ணன் பவுன்ராஜ் (எம் எஸ் குமார் ) சாதிக்குள் நடக்கும் திருமணங்களை பாராட்டி ,
வியந்து நடத்தி வைப்பதோடு , சாதி ஓட்டுகளை வைத்து எம் எல் ஏ கனவும் காண்பவர் .
தனது போஸ்டரின் மீது ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப் பையன் உரசிக் கொண்டு நிற்பதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாதவர் .
அப்பாவும் ( கஜராஜ்) அப்படியே .
இவர்களை விட சாதி வெறி பிடித்தவர் பவுன்ராஜின் மனைவியும் திவ்யாவின் அண்ணியுமான பெண் ( மைனா சூசன்)
தங்கையின் காதல் விஷயம் பவுன்ராஜுக்கு தெரிய வர , சங்கர் கடுமையாக தாக்கப்படுகிறான் . அவன் வீடு கொளுத்தப் படுகிறது .
ஒரு நிலையில் சங்கர் திவ்யா இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர் .எனினும் பவுன் ராஜால் பிரிக்கப் படுகின்றனர் . இதற்கிடையில் அப்பா இறந்து போகிறார்
இந்த நிலையில், காதல் ஜோடிகளை சேர்த்து வைப்பதாகவும் , காதலர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி அமைப்பதாகவும் சொல்லிக் கொண்டு ,
இளைஞர்கள் கையில் செல்போன் கொடுத்து காதலிக்க அனுப்பி வைக்கும் ஒரு நபரிடம் ( இயக்குனர் ஏ . வெங்கடேஷ் ) அடைக்கலம் ஆகிறான் ஷங்கர் .
அந்தக் ‘கா-மு-க’ நபர் வக்கீல் வைத்து கோர்ட்டில் வாதாடி காதல் ஜோடிகளை சேர்த்து வைப்பதோடு, அவர்களை தன் கஸ்டடியில் வைத்துக் கொள்கிறார் .
அங்கே ஆரம்பிக்கிறது ‘கா-மு-க’ வில்லங்கம்…
அது தீரும் போது அண்ணன் மனசு மாறுகிறது . ஆனால் இன்னொரு பெரிய வில்லங்கம் உருவாகிறது .
கொலைவெறி நபர்களிடம் சிக்கிய அந்த ஜோடியை ஜாதி வெறியும் வக்கிரமும் வாழ விட்டதா இல்லையா என்பதே இந்த ’தொட்ரா’
தமிழகத்தில் நடந்து பரபரப்பை ஏற்படுத்திய ஒரு நிஜமான ஆணவப் படுகொலையை எடுத்துக் கொண்டு அதில் சிறுசிறு மாற்றங்களை செய்து படமாக்கி இருக்கிறார்கள் .
சங்கர் கதாபாத்திரத்துக்கு ப்ரித்விராஜ் , திவ்யா கதாபாத்திரத்துக்கு வீணா , பவுன்ராஜ் கதா பாத்திரத்துக்கு எம் எஸ் குமார் ஆகியோர் இயல்பாகப் பொருந்தி உள்ளனர் .
ப்ரித்வி ராஜ் ஜஸ்ட் லைக் தட் நடித்து விட்டுப் போகிறார் . கல் குவாரியில் பவுன்ராஜ் காலைப் பிடித்துக் கதறும்போது சிரத்தை தெரிகிறது .
கொழுக் மொழுக் என்று இருக்கும் வீணா வண்ணமயமான மரவட்டை உதடுகள் நெளிய நெளிய முகபாவம் காட்டுகிறார் .
ஓஹோ என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒகே அளவுக்கு நடிப்பும் வருகிறது . தயங்காமல் ‘வாரிச் சுருட்டிக் கொண்டு’ களம் இறங்குகிறார் .
அப்புறம் என்ன ? (அந்த அதீத வெள்ளை நிறம்தான் கொஞ்சம் அன்னியமாக இருக்கிறது )
எதிர்பாராத ஆச்சர்யம் பவுன் ராஜாக நடித்து இருக்கும் எம் எஸ் குமார் , நிஜமாகவே சாதி வெறி பிடித்த ஆளோ என்றுஎண்ண வைக்கும் பங்களிப்பு.. சிறப்பு !
தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட – சங்கரின் நண்பர்கள் கதாபாத்திரத் தேர்வுகளும் பொருத்தம் .
ஒளிப்பதிவு வண்ணமயமான பளிச் ! சமத்துவ புரம் உள்ளிட்ட சில இடங்களை காட்டும்போது வரும் பறவைப் பார்வை கேமரா கோணங்கள் அருமை
பாடல்கள் வரிகள் காதில் விழும் அளவுக்கு தெளிவாக இருப்பதே ஒரு இனிமை . உத்தம ராஜாவின் பின்னணி இசை, காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது .
இரு சக்கர வாகனத்துக்கு போட்ட மாலை , வைத்த பொட்டு இவற்றை நிஜ கல்யாண சமயத்தில் பொருத்தும் அதே நேரம் அந்தப் பக்கம்,
இறந்து போன திவ்யாவின் அப்பாவுக்கு மாலை போடுவதோடு சேர்த்துக் காட்டும் விதம் போன்ற சில இடங்களில் டைரக்டோரியல் டச் களில் கவர்கிறார் இயக்குனர் மதுராஜ் .
பழனி மலை , மற்றும் அங்குள்ள குன்றுகளை பெரும்பாலான காட்சிகளில் பின்புலமாக பயன்படுத்திய விதம் சிறப்பு .
வீணா செங்கல் சூளையில் சேறு மிதிப்பது போல ஒரு காட்சி வைத்திருக்கிறார் பாருங்கள்..
அட அட ! பதினாறு வயதினிலே படத்தில் பாவாடையை உயர்த்திக் கொண்டு ஆற்றைக் கடக்கும் ஸ்ரீதேவி எல்லாம் அம்பேல் .
படத்தில் வெங்கடேஷ் ஏற்று இருக்கும் கேரக்டர் திடீரென அப்ப்ப்ப்ப்ப்படி மாறுவது ஏன் ?
பிளாஷ் பேக் விஷயத்தை எல்லாம் இடைவேளைக்குள் முழுசாக முடித்து மூட்டை கட்டி விட்டு ,
இரண்டாம் பகுதியில் இது போல கலப்புத் திருமணங்கள் செய்து கொள்ளும் தம்பதிகளை வைத்து,
இரண்டு தரப்புக்குமான அரசியல் இயக்கங்கள் , நன்கொடைக் கும்பல்கள் எப்படி எல்லாம் ஆதாயம் தேடிக் கொள்கின்றன என்பதை உறைக்கிற மாதிரி சொல்லி இருந்தால் ,
படம் இன்னும் சிறப்பாக தெறிப்பாக இருந்திருக்கும் .
எனினும் சாதி ஆணவம் என்பது ஒரு உண்மையான காதலை எப்படி எல்லாம் சீரழித்து சிதற அடிக்கிறது என்பதை சொன்ன வகையில் மனம் கனக்க வைக்கிறது இந்தப் படம் .