சமுத்திரக் கனியின் தலைமையில் ‘ தொண்டன் ‘

thondan 6

தங்கக் கிண்ணத்தில் சிங்கப் பால் கொடுத்தது போல,  அப்பா என்ற ஓர் அற்புதமான படத்தை  வழங்கிய சமுத்திரக்கனி அடுத்து தொண்டன் என்ற படத்தோடு வருகிறார் .

வசுந்தரா தேவி பிலிம்ஸ் சார்பில் ஆர். மணிகண்டன் மற்றும் நாடோடிகள் திரைப்பட நிறுவனம் சார்பில் சமுத்திரக்கனி தயாரிக்க,

சமுத்திரக்கனி, விக்ராந்த், சுனைனா, ஆராதனா, சூரி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு , ஞான சம்பந்தன், வேல ராமமூர்த்தி, நமோ நாராயணன், , படவா கோபி, சவுந்திரராஜா ஆகியோர் நடிக்க,

thondan 2

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ஏகாம்பரம் மற்றும் ரிச்சர்டு நாதன் ஒளிப்பதிவில் சமுத்திரக் கனி எழுதி இயக்கி இருக்கும் படம் தொண்டன்

(இந்தப் பெயர் ரொம்ப நாளாக அவரது மனதில் இருந்திருக்க வேண்டும் . காரணம் கீச்சி (டுவிட்டர்) சமூக வலைதளத்தில் அவரது பெயரே தொண்டன் கனி என்பதுதான் )

 திரைக்கென்று படம் தெறிப்பாகத் தயார் ஆகிக் கொண்டு இருக்கும் நிலையில் , விக்ராந்த, ஜஸ்டின் பிரபாகரன், ஏகாம்பரம் ஆகியோரோடு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார் சமுத்திரக்கனி .

thondan 1

நிரம்பிய அணையில் திறக்கப்படும் நீர் ஆர்ப்பரித்து சீறிப் பாய்வது போல பேசுகிறார் இந்த,  நல்ல சினிமாவின் இதயக்கனி

“கெட்டது செய்தால் எதிரிகள் உருவாவார்கள் என்பது பழைய கதை . இப்போது நல்லது செய்தால் எதிரிகள் உருவாகிறார்கள் .

பாதிக்கப்படும் ஓர் உயிரை காப்பாற்றும் போது அந்த உயிரை அழிக்க நினைத்தவன் நமக்கு எதிரி ஆகிறான் .

அவன் நம்மை விட பலசாலியாக இருந்தால்  என்ன ஆகும்  என்பதையும் அடக்கப்பட்ட பெண் சக்தி கிளர்ந்து எழுந்தால் என்ன நடக்கும்  என்பதையும் சொல்லும் படம் இது .

thondan 7

படத்தில் நான் ஆம்புலன்ஸ் டிரைவராக நடிக்கிறேன் . அட்டெண்டராக விக்ராந்த் நடிக்கிறார் . எனக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார் .

 சக்தி வாய்ந்த ஒரு நபரின் ஆட்கள் ஒரு நபரை அடித்துப் படுகாயப் படுத்திவிட்டு அவன் செத்து விட்டதாக நினைத்து விட்டு விட,  ஆம்புலன்சில் வரும் நாங்கள் பார்த்து ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றுகிறோம் .

அதே நேரம் அடிக்கப்பட்டவன் சாகவில்லை என்பது அடித்த ஆட்களுக்கு தெரிய வருகிறது . சக்தி வாய்ந்த நபர் இதை அறிந்ததும் அடிபட்ட நபரையும் எங்களையும் ஆம்புலன்சொடு தூக்க முயல ,

thondan 4

அப்புறம் நடக்கும் சம்பவங்களும் அதன் விளைவுமே படத்தின் அடி நாதம் .  இதோடு ஜல்லிக்கட்டு , விவாசாயிகள் பிரச்னை என்று பல சமூக விசயங்களை படம் பேசும் .

 ஜல்லிக்கட்டுப் பிரச்னையின் போது,  நான் அலங்கா நல்லூர் வாடி வாசலில் மழை வெயில்  பாராமல் இரண்டு நாள் உட்கார்ந்து இருந்தேன் . அப்போது கேட்ட பல சம்பவங்கள் இந்தப் படத்தில் வருகிறது .

ஒரு நீண்ட  ஒரே ஷாட் காட்சியில்,  தமிழ் நாட்டின்  87 வகை நாட்டு மாடுகளின் பெயர்களை சொல்கிறேன் . இந்தக் காட்சியில் நான் நடிக்க வெகுகாலம் பயிற்சி செய்து தயார் ஆனேன் .

thondan 9

விவசாயியின் நிலை பற்றி பேசுகிறேன் .  இப்படி சமூக அரசியல் நிறைய பேசினாலும் கொஞ்சம் ஜாதி அரசியலும் பேசுகிறேன் .

காரணம் சமூகம் அப்படி இருக்கிறது . அண்மையில் ஒரு கல்லூரி முதல்வரிடம் பேசிக் கொண்டு இருந்தபோது, ‘குறிப்பிட்ட ஜாதிகளைச் சேர்ந்த  மாணவர்கள் குறிப்பிட்ட வண்ணத்தில் கையில் கயிறு கட்டி

அதன் மூலம் தாங்கள் என்ன ஜாதி என்று அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள்’ என்றார் . கேட்கவே ரொம்ப கஷ்டமாக இருந்தது .

thondan 8

பொதுவாக ஒருவரிடம் நாம் பத்து நிமிடம் பேசினாலே ஒன்று அவர்கள் சாதியைச்  சொல்லி விடுகிறார்கள் . அல்லது நம்ம ஜாதியைக் கேட்டு விடுகிறார்கள் .

சர்வசாதரணமாக ‘நீங்க ஏன்னா ஆளுங்க ?’ என்று கேட்டு விடுகிறார்கள் . நிலைமை அப்படி இருக்கும்போது இந்தக் கதையில் அதை பேசாமல் இருக்க முடியவில்லை .

இன்னொரு விஷயம் படத்தின் முக்கியக் கேரக்டர்கள் பெயரே அந்தக் கேரக்டரின் தன்மையை சொல்லி விடும் .

எனது கேரக்டர் பெயர் மகா விஷ்ணு . அம்புலன்ஸ் ஓட்டுனர் ,காக்கும் கடவுள் அல்லவா ? அதுதான் அந்தப் பெயர்.

thondan 5

ஆம்புலன்ஸ் அட்டென்டரான விக்ராந்த்,  காக்கும் சிகிச்சையை துவக்கி வைப்பவர் என்பதால் அவருக்கு பிள்ளையார் பெயரான விக்னேஷ்.

எனது மனைவியாக நடிக்கும் சுனைனா பெயர் பகலாமுகி . இது ஒரு சாமி பெயர் ( ஒளி வீசும் முகம் கொண்டவள் என்று பொருள்?)

எனது மகளாக வரும் ஆராதனா பெயர் மகிஷாசுரமர்த்தினி . (அரக்கர்களை அழிக்கும் பெண் தெய்வம்) .வேல ராமமூர்த்தியின் பெயர் குல தெய்வம் (அநேகமாக ஜாதித்தலைவர் கேரக்டராக இருக்கலாம் )

thondan 3

இப்படி ஒரு பக்கம் சீரியசான விசயங்களை படத்தில் பேசினாலும் இன்னொரு பக்கம் காமெடிக்கும் குறைவில்லை .

கஞ்சா கருப்பு, சூரி , தம்பி ராமையா, நான் , விக்ராந்த் உட்பட எல்லார் கேரக்டரிலும் காமெடியும் வரும்.

விக்ராந்த் மிக சிறப்பாக நடித்துள்ளார் . கஞ்சா கருப்பு , சூரி, தம்பி ராமையா எல்லாம் மிக நன்றாக நடித்துள்ளனர்.

நான் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் தீவிர ரசிகன் . அவரது அடியே அழகே பாடலை எத்தனை முறை கேட்டு இருப்பேன் என்று எனக்கே தெரியாது .

thondan 11

அவரோடு இந்தப் படத்தில் இணைகிறேன் . நல்ல பாடல்கள் கொடுத்துள்ளார் . பின்னணி இசையில் பின்னி எடுத்து அதை முன்னணி இசையாக்கி விட்டார் .

ஆளின் ஒல்லியான தோற்றத்துக்கும் இசையில் அடிக்கிற அடிக்கும் சம்பந்தமே இல்லை . அப்படி அசத்தி விட்டார் . ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் என் நண்பர் . இந்தப் படத்துக்கு அவரும் பெரும் பலம் ” என்றார் .

விக்ராந்த பேசும்போது ” சொல்ல வேண்டிய விசயங்களை எல்லாம் சமுத்திரக்கனி அண்ணன் சொல்லி விட்டார் . நான் ஒன்றே ஒன்று சொல்ல முடியும் .

thondan 44

இந்தப் படத்துக்காக அவருடன் இருந்த நாட்கள் அப்போது கற்றுக் கொண்ட விஷயங்கள் அடுத்துஅடுத்து  பல படங்களில் எனக்கு உதவும் ” என்றார் .

ஜஸ்டின் பிரபாகரன் , ” சமுத்திரக் கனி சார் சீனியர் டைரக்டர் . ஆரம்பத்தில் அவரோடு பணியாற்ற பயமாக இருந்தது . ஆனால் ஓரிரு நாட்களில் என்னை ரொம்ப சகஜமாக்கினார் .

அப்புறம் நடந்தது எல்லாம்  இன்டரஸ்டிங் ஆன விஷயங்கள் . இந்தப் படம் எனக்கு முக்கியமான் ஒன்று ” என்றார்  மன நிறைவோடு.

thondan 55

” பிரம்மாண்டம் எதுவும் இல்லை . ஆனால் சிறப்பான கதை திரைக்கதை இயக்கம் மற்றும்  நடிப்பு . அதற்கு உரிய ஒளிப்பதிவை மன நிறைவோடு செய்ததில் ரொம்ப சந்தோசம் ” என்றார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம்

சமுத்திரக் கனியிடம் நான் ” இன்னொரு உயிரைக் காப்பது தலைவனுக்கு உரிய குணம் என்பார்கள் . அதை தொண்டன் என்று பொருள் மாற்றம் செய்வது ஏன் ?” என்று கேட்டேன்.

” இந்தக் காலத்தில் தலைவர்கள்  எல்லாம் அதை செய் இதை செய் என்று வேலை சொல்பவர்களாகவே இருக்கிறார்கள் . அவர்கள் எங்கே செய்கிறார்கள் ?. தொண்டர்கள்தானே செய்கிறார்கள் ” என்றார் .

thondan 33

அதுவும் சரிதான் .

ஆனால் அதை செய் இதை செய் என்று சொல்வது கூட நல்லதையா சொல்கிறார்கள் ?

மீத்தேன் செய் , ஹைட்ரோ கார்பன் செய், டெல்டாவில் பாலைவனம் செய், விவசாயத்துக்கு சுடுகாடு செய் , தமிழுக்கு சமாதி செய் என்று அல்லவா சொல்கிறார்கள் . செய்யவும் செய்கிறார்கள்

அதுதானே பிரச்னை !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *