தொரட்டி @ விமர்சனம்

ஷமன்மித்ரு , சத்யகலா , சுந்தர்ராஜன்,செல்லம் ஜெய சீலன், முத்துராமன்  நடிப்பில் மாரிமுத்து என்பவர் இயக்கி இருக்கும் படம் . 

1980 காலகட்டத்தில் ராமநாதபுரம் பகுதியில் நடந்ததாக சொல்லப்படும்  கதை .    

ஆடுகளை வைத்துக் கொண்டு விவசாயிகளின் வயலில் கிடை போட்டு அதன் மூலம் மண்ணுக்கு உரம் கிடைக்கச் செய்து அதற்கான தொகையை விவசாயிகளிடம் பெறும்,  கிடைக்காரர் ஒருவரின் ( அழகு) மகன் ஒருவன் ( ஷமன்மித்ரு). 
 
இன்னொரு கிடை போடும் குடும்பத்தில் பிறந்து அதே தொழில் செய்யும் பெண் ஒருத்தி (சத்யகலா) .  அவளுக்கு அவன் மீது காதல் 
 
வேலை வெட்டி செய்யாமல் திருடிப் பிழைக்கும் மூவரோடு நட்பாகும் நாயகன்,  அதன் மூலம் குடிப் பழக்கத்துக்கு ஆளாகி தீய வழியில் போகிறான் . 
 
பெற்றோர் மறுப்பையும் மீறி அவனையே திருமணம் செய்து கொள்ள பிடிவாதம் பிடிக்கிறாள் அவள் . 
 
இதற்கிடையில் திருட்டு நண்பர்கள்  ஒரு கல்யாண வீட்டில் திருடப் போய் ,  மணப் பெண் கழுத்தில் அப்போதுதான் ஏறிய தாலி வரை அறுத்துக் கொண்டு ,
நாயகியின் கிடையில் ஒளிய, தேடி வரும் நபர்களிடம் காட்டிக் கொடுக்கிறாள் நாயகி . 
 
தாலியை அறுத்தவனின் கை போலீசாரால் உடைக்கப்படுகிறது . 
 
நாயகிக்கும் நாயகனுக்கும் திருமணம் . 
 
காட்டிக் கொடுத்த நாயகியை கொல்லும் வெறியோடு வரும் அந்த நண்பர்கள் நண்பனின் மனைவி என்று தெரிந்தும் கொல்ல முயல அப்புறம் என்ன நடந்ததது என்பதே இந்த தொரட்டி . 
 
மிக நேர்த்தியான அழகான படம் . 
 
சிறப்பான படமாக்கல் !
 
அந்த கால கட்டத்தை — கிடை போடும் மக்களின் வாழ்வை அப்படியே கண் முன்னால் கொண்டு வந்து அசத்தி இருக்கிறார்கள். 
 
கல்யாணம் நடக்கும் அன்று கிடை போடப் போன மாப்பிள்ளை எதிர்பாராதவிதமாக  வர முடியாமல் போய் விட்டால்,  ஆடுகளுக்கு தழை பறிக்க அவன் பயன்படுத்தும் தொரட்டிக் கம்பை,  மாப்பிள்ளை போல அலங்கரித்து மாமியார் கையால் தாலி வாங்கிக் கல்யாணம் முடிப்பது…
 
கிடை போட்ட பிறகு பணம் தர மறுக்கும் விவசாயி  வயலில் பச்சைப் பானையில் பால் ஊற்றி  புதைத்து வைத்து அந்த வயல் விளையக் கூடாது என்று சாபம் விடுவது … 
 
இது போன்ற அன்றைய பல வாழ்வியல் பழக்கங்களை  அழகாகப் படத்தில் காட்டி வியக்க வைக்கிறார்கள் . அற்புதம் . 
 
அந்தக் கால பெண் என்ற பெயரில்,  நாயகி கதாபாத்திரத்தை கற்பனையாக,  தமிழ் சினிமா விதிகளுக்கு உட்பட்டுப் படைக்காமல் , உண்மைக்கு நெருக்கமாக சுதந்திர சிந்தனை–  தைரியம் பெண்ணாக படைத்த விதம் அருமை . 
 
முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய நிஜமான ராமனாதபுரத்துப் பெண்ணாக அமைக்கப்பட்டிருக்கிறது நாயகி பாத்திரம். பாராட்டுகள் . எவ்வளவு புரிகிறதோ அவ்வளவுக்கு படம் பிடிக்கும் . 
 
நாயகனாக ஷமன்மித்ரு . கதாபாத்திரத்தை சமன் செய்து நடிக்கிறார் . 
 
கதாநாயகியாக நடித்திருக்கும் சத்யகலா நாயகியாக வாழ்ந்திருக்கிறார் . தோற்றப் பொருத்தம் மற்றும் அற்புதமான நடிப்பு . அண்மைக் காலமாக சின்ன படங்களில் பல நல்ல கதாநாயகிகளைப் பார்க்க முடிகிறது . 
திருட்டு நண்பர்களாக வரும் மூவரும்  பணக்காரராக வரும் விஜய் பாலாஜியும்  தோற்றப் பொருத்தத்தில் அசத்துகிறார்கள் . 
 
சினேகனின் பாடல் வரிகள்  நெகிழ்த்துகின்றன ( ”காக்காமல் போச்சே அந்த சாமி .. ஊமையா சுத்துது இந்த பூமி” ) 
 
வரிகளை காதில் விழும்படி கேட்க வைக்கிறது வேத்சங்கர் சுகவனத்தின்  இசை. நன்றி .  எனினும் மெட்டுகள் பின்னணி இசை ஆகியவை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் . 
 
படத்தின் ஆரம்பத்தில் சில விஷயங்கள் இடறினாலும் இரண்டாவது பகுதியில் திரைக்கதையில் முடிந்தவரை நியாயம் செய்கிறார் இயக்குனர் . 
 
கிளைமாக்சை பிரித்துக் கோர்த்திருக்கும் விதம் மிக சிறப்பு. 
 
கிடையில் ஆடு திருட வந்தவர்களோடு கிடைக்காரன்  எப்படி சிநேகம் வைத்துக் கொள்வான்? . பசி என்று சொன்னால் சோறு போடுவானே தவிர, ‘ஆட்டுக் குட்டியை அறுத்துத் திண்ணு’ என்று திருடனுக்கு போய் தூக்கிக் கொடுப்பானா ? அதுவும் தொடர்ந்து ?
அவர்களுக்கு வேலை கொடுத்து நல்வழிப்படுத்த ஏன் முயலவில்லை ? அவர்கள் நேர் வழியில் பிழைக்க விரும்பவில்லை எனில் அவர்களை ஏன் நாயகன்  விட்டு விலகவில்லை?
 
ஒரு கிராமத்தில் ஆடு மேய்க்கிற பெண்ணுக்கு காதலனின் நண்பர்கள் யார் என்பதே தெரியாமல் இருக்குமா ?
 
— இப்படி சில கேள்விகள். 
 
படத்தின் முக்கிய சிக்கல்.. 
 
மக்கள் முன்பே அறியாத  கதைகள் தொடார்பான முழுமையான  பீரியட் படங்களுக்கு தமிழ் சினிமாவில்  இப்போது ஆடியன்ஸ் இல்லை  என்பதுதான் . காரணம் நமது மரபுகளை கேலி செய்கிற அல்லது அலட்சியப்படுத்துகிற  அடி முட்டாள் இனமாகி  விட்டான் தமிழன். 
 
இந்த கதையை 80 சதவீத படமாக வைத்துக் கொண்டு முன்னும் பின்னுமோ அல்லது பின்னாக மட்டுமோ இன்றைய கால கட்டத்தோடு ஏதாவது ஒரு வகையில் தொடர்புப் படுத்தி இந்தப் படத்தை முடித்து இருந்தால் இது  மாபெரும்வெற்றிப் படமாக வருவது உறுதியாகி  இருக்கும் . 
 
இப்போது ? மிக நல்ல படமாக மட்டுமே இருக்கிறது . ஆனால் இது போன்ற படங்கள் வெற்றி பெறுவது தமிழ் சினிமாவுக்கு மிக நல்லது . 
 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *