வெற்றியின் மகிழ்ச்சி ஒலியில் ‘டிக் டிக் டிக் ‘

நேமிசந்த் ஜபக், வி ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள படம் டிக் டிக் டிக்.
 
இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகனாக அவரது சொந்த மகன் ஆரவ் ரவி நடித்திருந்தார்.
 
கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
 
இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் ஆரவ் ரவி  பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி தன் பிறந்த நாளையும் கொண்டாடினார்.
 
“மகிழ்ச்சியான தயாரிப்பாளர் என்ற வார்த்தையே இன்று இல்லாமல் போய் விட்டது. இந்த படத்தின் வெற்றி யாருக்கும் பொறாமை தராத ஒரு வெற்றி.
 
இந்த மாதிரி ஒரு புதுக்களத்தை தமிழ் சினிமாவில் எடுத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்த்தது இயக்குனர் சக்தியின் வெற்றி.
 
அதை ஆதரித்த தயாரிப்பாளர் ஜபக், ஹீரோ ஜெயம் ரவிக்கு நன்றி சொல்ல வேண்டும். ரசிகர்களுக்காக படம் நடிப்பது என்று இல்லாமல் சவாலான படங்களை தேடித் தேடி நடிக்கிறார் ஜெயம் ரவி. ஆரவ்வை எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர் கல்லூரி முடித்த பிறகு தான் இனி நடிப்பார் என்று சொன்னார்கள்.
 
ஆனால் அவரை விடாமல் நிறைய படங்களில் நடிக்க வைக்க போகிறார்கள் என்பது மட்டும் உறுதி” என்றார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.
 
ஒரு வருடத்தில் எத்தனையோ படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதில் ஒரு சில படங்களுக்கே வெற்றி விழா வாய்ப்பு அமைகிறது.
 
அப்படி ஒரு படத்தில் நானும் பங்கு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. என் முதல் படம் என்ற ஆர்வத்தில் தமிழன் படத்தை நிறைய தடவை திரையரங்குகளில் சென்று பார்த்தேன்.
சமீப காலத்தில் நான்  அதிக தடவை திரையரங்கில் சென்று பார்த்த படம் டிக் டிக் டிக் தான். இந்த படத்தில் கிராஃபிக்ஸ் பணிகள் முடிவதற்கு முன்பே பின்னணி இசையை அமைத்ததால்,
 
முதல் முறையாக திரையரங்கில் போய் தான் நான் முழு படத்தையும் பார்த்தேன். மிகச்சிறப்பாக வந்திருந்தது.
 
டிக் டிக் டிக் எனது 100வது படம் என்று கார்டு போட்டபோது எனக்கு மிகவும் பயமாகவே இருந்தது. ஆனால் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெற்றி படமாக அமைந்திருக்கிறது.
 
ஆரவ் 100 படங்கள் நடித்தாலும், அவர் நடித்த முதல் படத்தில் முதல் பாடலுக்கு நான் தான் இசையமைத்தேன் என்பது எனக்கு பெருமை என்றார் இசையமைப்பாளர் டி. இமான்.
டிக் டிக் டிக் மொத்த குழுவின்  உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி. டைட்டானிக் படத்தின் படப்பிடிப்பு நாட்களை நினைத்து பிரமித்திருக்கிறேன்.
 
அது மாதிரி டிக் டிக் டிக் படத்தை 56 நாட்களில்  முடித்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நிறைய நேரங்களில் ரவியின் உழைப்பு வீணாய் போய் விடுமோ என்று பயந்ததுண்டு.
 
ரவியும் ஒரு கட்டத்தில் உண்மையான உழைப்பை நம்பணுமா என்று நினைத்த காலம் உண்டு. உயிரை பணயம் வைத்து பேராண்மை, பூலோகம், ஆதி பகவன், டிக் டிக் டிக் என பல படங்களில் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறான்.
 
எல்லா நேரங்களிலும் தன் உழைப்பை கொடுத்துக் கொண்டே தான் இருந்தான். அவனுக்கு கிடைத்த வெற்றியாக இதை நினைத்துக் கொள்கிறேன் என்றார் இயக்குனர் மோகன்ராஜா.
 
டிக் டிக் டிக் ஒரு நாயகனின் படம் அல்ல, ஒரு தொழில்நுட்ப கலைஞனின் படம். சக்தி சௌந்தர்ராஜன் கனவை நிறைவேற்ற, கற்பனைக்கு உயிர் கொடுக்க பலர் இந்த படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
 
நான் நிறைய ஆங்கில படங்கள் பார்ப்பேன், இந்த படத்தை பார்த்தவுடன் வியப்பாக இருந்தது. ரசிகர்கள் படத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு, தொழில்நுட்ப ரீதியில் படம் வெற்றி. ஜெயம் படத்தில் இருந்து இன்று வரை ரவியுடன் கூடவே இருந்து வருகிறார் மைக்கேல் மாஸ்டர். இசையமைப்பாளர் இமான் இந்தி படங்களுக்கும் இசையமைக்க வேண்டும். கதைக்களத்தை உணர்ந்து அருமையாக இசையமைத்து இருக்கிறார்.
 
சக்தி சௌந்தர்ராஜன் வழக்கமான விஷயங்களை தள்ளி வைத்து விட்டு, நிறைய புதுமையை புகுத்தியிருக்கிறார். இந்த காலத்துக்கு தேவையான கதை சொல்லல்.
 
ரவிக்கு 7 வயது இருக்கும்போதே ரவியின் திறமையை கண்டேன், 13 வயதில் தெலுங்கு படத்தில் நடிக்க வைத்தேன். மிகச்சிறப்பாக நடித்தான்.
 
மிருதன்  படத்தில் நடித்தபோது முதுகு தண்டில் அடி, அதன் பிறகும் இந்த கதையை கேட்டு இதில் நடிக்க ஒப்புக் கொண்டது அவன் அர்ப்பணிப்பை காட்டுகிறது என்றார் எடிட்டர் மோகன்.
என் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம். உன் உழைப்பை கொடு, வெற்றி வரும்போது வரும் என்பது தான் என் குடும்பம் கற்றுக் கொடுத்த தாரக மந்திரம்.
 
படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ரசிகர்கள் தான். நாம் என்ன கொடுத்தாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் தான் வெற்றி. ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்து பார்க்க காரணம் இயக்குனர் சக்தி.
 
இந்த படத்தில் உங்களுக்கு ஜோடி இல்லை, ஒரு மகன் இருக்கிறான். உங்க மகன் நடிச்சா நல்லா இருக்கும் என்றார். கதைக்கு தேவை என்றால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று முடிவு செய்தோம்.
 
இமான் இவ்வளவு உயரத்துக்கு போனாலும் ரொம்ப தன்னடக்கம் உடையவர். மைக்கேல் மாஸ்டர் கடின உழைப்பாளி. அவரது உழைப்புக்கு ஏற்ற உயர்வு இன்னும் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு.
இந்த படத்தின் முதல் ரசிகன் எடிட்டர் பிரதீப் தான். எனக்கும் என் மகனுக்கும் மதன் கார்க்கி எழுதிய குறும்பா பாடல் காலத்துக்கும் என் நினைவில் நிற்கும். இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் உழைப்பு அபரிமிதமானது. அவர்களின் உழைப்பை பார்த்த பிறகு தான் எங்களுக்கு நம்பிக்கையே வந்தது.
 
கதையை கேட்ட தயாரிப்பாளர்கள் யாருக்கும் படத்தின் மீது நம்பிக்கை இல்லை, கதையை உணர்ந்து நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் ஜபக் சாருக்கு நன்றி. என் மகன் ஆரவ் நடித்த குறும்பா பாடலை 2000 முறையாவது பார்த்திருப்பேன்.
 
எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது என் அண்ணன், நான் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதற்கு அவரும் ஒரு காரணமாக இருக்கிறார் என்றார் நாயகன் ஜெயம் ரவி.
இந்த விழாவில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன், மாஸ்டர் ஆரப் ரவி, விஎஃப்எக்ஸ் அருண், ஸ்டண்ட் மாஸ்டர் மைக்கேல், எடிட்டர் பிரதீப், கலை இயக்குனர் மூர்த்தி, ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், விஜயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
 
 
 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *