தானா சேர்ந்த கூட்டம் @ விமர்சனம்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ .ஞானவேல் ராஜா தயாரிக்க,

சூர்யா , நவரச நாயகன் கார்த்திக், , கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர் ஜே பாலாஜி , கலையரசன் நடிப்பில், 

விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம் . ரசிகர் கூட்டம் தானா சேருமா ? பார்க்கலாம் .

சி பி ஐ இன்கம் டாக்ஸ் துறைகளில் ரெய்டு போகும் அதிகாரிகள் , கைப்பற்றும் கறுப்புப் பணத்தை அரசிடம் ஒப்படைக்காமல் சம்மந்தப்பட்ட கறுப்புப் பண முதலைகளிடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு , தாங்கள் ஒரு பங்கை லவட்டிக் கொள்வதோடு,உண்மையிலேயே இந்த துறைகளில் வேலைக்கு சேர்ந்து நாட்டுக்குப் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் துறைக்குள் வருவதையும் தடுக்கிறார்கள் .

அப்படி ஓர் மோசமான அதிகாரி உத்தமன் ( சுரேஷ் மேனன் ) அப்படி ஓர் லட்சிய இளைஞன் இனியன் (சூர்யா) .

இந்தத் துறைகள்தான் என்றில்லை . பல்வேறு முக்கியத் துறைகளுக்குள்ளும் இதே பிரச்னை .

அந்த வகையில் போலீஸ் ஆக முயலும் ஆனந்தன் என்ற இனியனின் நண்பன் ஒருவன் (கலையரசன்) , வறுமை , மனைவியோடு சண்டை , அதனால் மனைவி மீது வரும் அநியாய சந்தேகம் இவற்றின் விளைவாக தற்கொலை செய்து கொள்கிறான்.சி பி ஐ துறையில் பியூனாக வேலை செய்பவரும் இனியனின் தந்தையுமான பொற்செல்வன் (தம்பி ராமையா)

 உத்தமன் செய்த ஓர் ஊழல் பற்றி அலுவலகத்தில் சொல்ல , அதனால் வஞ்சம் வைக்கும் உத்தமன் , இனியனுக்கு துறையில் கிடைக்க வேண்டிய நியாயமான பணியை கிடைக்க விடாமல் செய்கிறான் .

சி பி ஐ யில் சேர முடியாத இனியன், ஜான்சி ராணி என்ற அம்மு (ரம்யா கிருஷணன்) முத்துக் குமார் ( சத்யன்) ஒண்டி வீரன் ( மாஸ்டர் சிவா சங்கர் ) ஆகியோர் கொண்ட ஒரு பக்கவான டீம் அமைத்து, 

தென் மாவட்டத்து மத்திய அமைச்சர் அப்புச்சி (புரியுதா?) குத்தாலிங்கம்( ஆனந்த ராஜ்) , அப்புறம் ஹைதராபாத் ஹவாலா பணம் ஆகியவற்றை சி பி ஐ மற்றும் இன்கம் டாக்ஸ் ரெய்டு என்று மிரட்டி , பணம் நகை இவைகளை தூக்குகிறான் .அந்தப் பணத்தில் இல்லாதவருக்கு உதவிகள் செய்கிறான் .

காசு வாங்கிக் கொண்டு போஸ்டிங் போடும் உயர் அதிகாரிகளை திட்டி , இந்தப் பணத்தைக் கொடுத்து , நியாயமாக தகுதி உள்ளவர்களுக்கு போஸ்டிங் போடச் செய்கிறான் .

இவை எல்லாவற்றையும் உத்தமன் பெயரில் செய்கிறான் .

எனவே ஊழல் சி பி ஐ ஆபீசர் உத்தமனுக்கு சிக்கல் வருகிறது .

தென் மாவட்ட ரெய்டில் இனியனை நிஜ அதிகாரிகள் என்று நம்பி உதவிகள் செய்த இன்ஸ்பெக்டர் வெற்றி வேல் (நந்தா) , மங்கையர்க்கரசி (வினோதினி) ஆகியோரை கொண்டு வரும் உத்தமன் , இனியன் குழுவை பிடிக்க வலை விரிக்கிறான் .தன்னோடு குழுவில் சேரும் ஒரு பெண்ணை (கீர்த்தி சுரேஷ்) இனியன் காதலிக்கிறான் . .

இனியன் குழுவை பிடிக்க திறமை வாய்ந்த சீனியர் அதிகாரி குறிஞ்சி வேந்தன் ( நவரச நாயகன் கார்த்திக்) வருகிறார் .

அவர் வந்து என்ன செய்தார் ? போலி சிபி ஐ அதிகாரிகளான நாயகன் இனியன் குழுவுக்கு என்ன ஆச்சு ? உத்தமனின் அயோக்கியத் தனங்கள் வெளிப்பட்டதா ? என்பதே இந்த தானா சேர்ந்த கூட்டம் .

இந்தியில் வந்த ஸ்பெஷல் 26 படத்தின் கதையை எடுத்துக் கொண்டு கமர்ஷியலாக திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் விக்னேஷ் சிவன் .எண்பதுகளில் ஃபிளாஷ் பேக்காக நடக்கும் கதை .

துவக்கம் முதல் கடைசி வரை பரபரப்பாக துறுதுறு என்று படத்தைக் கொண்டு போகிறது விக்னேஷ் சிவனின் இயக்கம் . வசனமும் மாஸ் .

சில இடங்களில் லேசான இரட்டை அர்த்தமும் உண்டு . சில இன்டல்லக்சுவல் காமெடியும் உண்டு . உதாரணம் ..

“ஊழலை இந்த நாட்டை விட்டே அடியோட ஒழிக்க்கனும் . அதான் சார் என் லட்சியம் . “

“குட்.பேரு என்ன ?”

“சசிகலா”சூர்யா உற்சாகமாக ஒரு மாதிரி ரசிப்புக்குரிய லோக்கல் ஸ்டைலில் நடித்து இருக்கிறார் . கீர்த்தி சுரேஷ் அழகு .

ரம்யா கிருஷ்ணன் , கலை அரசன் எல்லோரும் தங்கள் பாத்திரத்துக்கு நியாயம் செய்து உள்ளனர் .

குறிஞ்சி வேந்தன் கேரக்டரை தனக்கே உரிய பாணியில் நுணுக்கமான உடல் மொழிகள் மற்றும் முக பாவனைகளோடு அழகாக செய்கிறார் கார்த்திக் . அசத்தல் சார் .

தினேஷ் கிருஷ்ணன் டிஜிட்டல் கால ஒளிப்பதிவில் ஈஸ்ட்மன் கலர் எபெக்ட் கொடுத்து அசத்துகிறார் .அனிருத்தின் இசையில் சொடக்கு, குட்டி புஸ்வானம் போன்ற பாடல்கள் ஹிட் . பின்னணி இசை ஒகே .

திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன், சிறுத்தை கணேசின் சண்டைக் காட்சிகளும் அபாரம் .

அந்தக் கால டிராபிக் இல்லாத மவுன்ட் ரோடை கண் முன் நிறுத்தும் வகையில் பிரம்மிக்க வைக்கிறார் கலை இயக்குனர் கிரண் .

வி எப் எக்ஸ் வாலா மற்றும் லோர்வேனின் விசுவல் எபெக்ட்ஸ் ஆசம் அருமை

முருகனின் மேக்கப் பும் கவனிக்க வைக்கிறது .இந்தப் படத்தை இன்னும் எளிமையாக அழுத்தமாக சொல்லி இருக்கலாம் . ஓவர் கமர்சியல் என்பதில் படம் தர வேண்டிய நியாயமான எஃபெக்ட் கொஞ்சம் மிஸ் ஆகத்தான் செய்கிறது .

எனினும் சி பி ஐ மற்றும் இன்கம்டாக்ஸ் துறைகளை பிரித்து மேயும் விதத்தில் படம் கெத்து காட்டுகிறது .

தானா சேர்ந்த கூட்டம் … மெஜாரிட்டி !  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *