ஆஸ்ட்ரிச் மீடியா புரடக்ஷன் சார்பில் ரவி நாராயணன் தயாரிக்க,
இந்த்ரா என்பவர் நாயகனாகவும் சில மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் கதா நாயகியாக நடித்த கேரளாவைச் சேர்ந்த அதிதி என்பவர் நாயகியாகவும் நடிக்க ,
மேற்படி நாயகன் இந்த்ரா கதை திரைக்கதை வசனம் எழுதி இசை அமைத்து இயக்கியிருக்கும் படம் டியூப் லைட்.
பிரகாசம் எப்படி? பார்க்கலாம்
பேஸ்புக்கில் உல்லாசத்துக்குப் பெண் தேடும் ஆட்களிடம், இன்பாக்ஸில் பெண் போலப் பேசி ஒரு இடத்துக்கு வரச் சொல்லி பெண் வேடம் போட்டுக் கொண்டு ,
சபலத்தோடு வரும் நபரை கட்டிப் பிடித்து, அதை போட்டோ எடுத்து, ”கேட்கும்போது எல்லாம் பணம் தராவிட்டால் , போட்டோக்களை சோஷியல் மீடியாவில் போட்டு விடுவேன்” என்று மிரட்டி,
காசு பிடுங்குகிற ஒரு சிறு கூட்டத்தின் தலைவன் ராம் (இந்திரா) மற்ற இரண்டு நண்பர்கள் சபா (பிரவீன் பிரேம்) மற்றும் நட்டு (வினோத்)
சஞ்சய் என்ற சபலிஸ்ட்டை ( திரிபுவன்) அப்படி ஏமாற்றி விட்டு வரும் வழியில் விபத்தின் சிக்கி, ராமுக்கு மண்டையில் அடிபடுகிறது . அதன் விளைவாக அவனது கேட்புத் திறன் வித்தியாசமான பாதிப்புக்கு ஆளாகிறது .
அதாவது எந்த சத்தமும் (பேசுவது உட்பட) ராமின் காதில் சரியான நேரத்தில் விழுந்தாலும் அது மூளையை அடைய ஐந்து ஆறு செகண்டுகள் தாமதம் ஆகும் .
விளைவாக எந்த சத்தமும் ஆறு ஏழு செகண்டுகளுக்கு அப்புறம்தான் ராமுக்கு உறைக்கும் அவர் ரியாக்ட் செய்வான் .
உதாரணமாக படத்தில் வரும் ஒரு காட்சி போல , ராமுக்கு பின்னால் பட்டாசு வெடித்தால் அவன் உடனே ரியாக்ட் செய்ய மாட்டன் .
மற்றவர்கள் எல்லாம் பயந்து முடித்து நார்மல் ஆன பிறகு அவன் திடீரென்று பயந்து நடுங்கி அருகில் உள்ளவர் மீது விழுந்து புரண்டு …. இப்படி நடக்கும்
நோயாளிகளை படம் வரைய வைத்து மனசை இலகுவாக்கி நோயைக் குறைக்கும் ஆர்ட் தெரபி என்ற வேலை செய்யும் ஹேமா என்ற பெண் மீது ( அதிதி) ராமுக்கு காதல் வருகிறது .
ஆனால் ‘நமது கேட்புத் திறன் குறைபாடு அவளுக்கு தெரிந்தால் அவள் நம்மை ஏற்பாளா?’ என்ற பயம் காரணமாக குறைபாட்டை மறைத்து சமாளித்தபடி பழகுகிறான் . அதில் பல குழப்பங்கள் .
இதற்கிடையே தனதுதந்தையாலேயே தகுதியற்றவர் என்று புறக்கணிக்கப்படும் டாக்டர் மௌலி என்பவர் (பாண்டியராஜன்) , ராமின் பிரச்னை பற்றி அறிகிறார் .
பல டாக்டர்களாலும் கைவிடப்பட்ட ராமை குணமாக்கி தன்னை சரியான டாக்டர் என்று நிரூபிக்க அவர் முயல்கிறார் .
ஒரு பக்கம் சிகிச்சை நடக்க, இன்னொரு பக்கம் ஹேமாவின் மனசு ராமின் பக்கம் சாய, அப்போது ராம் இருக்கும்போதே ஹேமா கடத்தப் படுகிறாள் .
கடத்துபவன் , ராம்தான் கடத்தச் சொன்னதாக சொல்ல ஹேமா அதிர்ச்சி ஆகிறாள் .
ராமைக் கடத்திச் சென்றவன் , ஹேமாவை நிர்வாணமாக்கி வேறொரு சபல மனிதருக்கு காம இரையாக்கி அதை படம் எடுத்து இன்டர்நெட்டில் போடுவதாகச் சொல்லி அந்த சபல மனிதரை மிரட்டி பணம் பறிக்க முயல்கிறான் .
அவன் யார்? அப்படி செய்வது ஏன் ? அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்த டியூப் லைட் .
இது வரை பார்த்திராத வித்தியாசமான கதையை எடுத்துக் கொண்டு அதை நகைச்சுவையாகவும் இயக்குனர் இந்த்ரா சொல்ல முயன்று இருப்பது பாராட்டுக்குரியது .
அதே போல கதாநாயகிக்கான ஆர்ட் தெரபி என்ற வேலையும் ரொம்பப் புதுசு .
மிக உற்சாகமாக ஆடி ஓடி நடிக்கிறார் ஹீரோவாகவும் நடித்து இருக்கும் இந்த்ரா .
கதாநாயகி அதிதியின் வித்தியாசமான முகத்தில் எப்போதும் ஓர் உற்சாகம் இருப்பது அழகு .
பாண்டியராஜன் தனக்கே உரிய பாணியில் நடித்துள்ளார் .
ஸ்ரீதரின் ஒளிப்பதிவு சிறப்பு .
இந்த்ராவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை பின்னணி இசைதான் சோதிக்கிறது .
எந்த சத்தமும் தாமதமாகவே மூளைக்குள் உறைக்கும் என்ற வித்தியாசமான பிரச்னையை நாயகனுக்கு கொடுத்தவர்கள் அதை வைத்து சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து இருக்க வேண்டும் .
அதே போல நாயகியின் ஆர்ட் தெரபி பிரச்னையையும் திரைக்கதையில் முக்கியமான ஒன்றாகக் கொண்டு வந்திருக்க வேண்டும் . ஜஸ்ட் ஒரு அறிமுகத்தோடு ஆர்ட் தெரபி நின்று விடுகிறது .
கதா நாயகனுக்கு உள்ள பிரச்னையால் எதிர்பாராமல் பல நல்ல விஷயங்கள் நடந்தன. அதில் காதல், நகைச்சுவை, உட்பட பல பாசிட்டிவான விஷயங்கள் நடந்தன என்று சொல்லி இருந்தால்,
இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
யார் பேசுவதும் நாயகனுக்கு லேட்டாகத்தான் புரியும் என்பதை வைத்து பலருடனும் பேசும்போது ஏறுக்குமாறான பதிலகளைக் கொண்டு வந்து தியேட்டரை குலுங்க வைத்திருக்கலாம்
உதாரணமாக
”உன் பேரு என்ன ?”
”ராம்”
”எந்த ஊரு ?”
”திருச்சி”
”சாப்ட்டியா ?”
”இல்ல ”
”நீ கிருஷ்ணா தம்பியா ?”
”ஆமா ”
”ரேஷன் கார்டை பாஸ்போர்ட் னு கொடுத்தா நம்பறதுக்கு நான் என்ன முட்டாளா ?”
”சேச்சே கிடையவே கிடையாது சார் ”’
”அப்போ நீ முட்டாளா ?”
”ஆமாம் சார் ”
—என்பதற்கு இந்தப் படத்தின் நாயகன் ராம் தாமதமாக பதில் சொன்னால் என்ன ஆகும் ?
”உன் பேரு என்ன ?”
”…………..”’
”எந்த ஊரு ?”
”ராம்”
”சாப்ட்டியா?”
”திருச்சி ”
”நீ கிருஷ்ணா தம்பியா ?”
”இல்ல”
”ரேஷன் கார்டை பாஸ்போர்ட் னு கொடுத்தா நம்பறதுக்கு நான் என்ன முட்டாளா ?”
”ஆமாம் ”
”அப்போ நீ முட்டாளா ?”
”சேச்சே கிடையவே கிடையாது சார் ”
என்பது போல !
தவிர ஆரம்பத்தில் சபலிஸ்ட்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் அயோக்கியன் என்று சொல்லியபின் அவனுக்கு என்ன விபத்து நடந்தால் நமக்கு என்ன ?
ஒரு அயோக்கியனுக்காக ரசிகன் ஏன் ஃபீல் பண்ணனும் ? அவனுக்காக ஆடியன்ஸ் எப்படி பரிதாபப்படுவான் ?
ஒரு நிலையில் அவன் அயோக்கியன் என்ற விஷயம் தெரிந்தும் அவனை நாயகி ஜஸ்ட் லைக் தட் ஏற்பது எப்படி ?
இப்போதுள்ள கதைப்படி ஹீரோதான் நிஜ வில்லன். வில்லன்தான் கதாநாயகன் . அப்படி இருக்க வில்லனுக்காக எதுக்கு ரசிகன் பரிதாபப்படணும்.
கொஞ்சம் கூட எதிக்ஸ் இல்லாமல் படம் பண்ணினா எப்படிங்க?
இந்தப் படத்தின் கதையை எப்படி சொல்லி இருக்க வேண்டும் ?
பிரசன்ஸ் ஆஃப் மைன்ட்..உடனே கவுண்ட்டர் கொடுக்கும் பேச்சு …. என்கிற திறமையையே பெரிய பலமாகக் கொண்டு வாழும் ஓர் இளைஞன் .
அவனது தொழில் மூலதனமே அதுதான் . அவன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் . இன்னும் சொல்லவில்லை . அவனிடம் அவளுக்கு பிடித்த முதல் முக்கிய விஷயம் அவனுடைய பிரசன்ஸ் ஆஃப் மைன்ட்.
அதன் தீவிர ரசிகை அவள்.
அவனை பிடிக்காத ஒருவன் அந்தப் பெண்ணுக்கும் வலை விரிக்கிறான் . இதனால் இவனுக்கும் அவனுக்கும் பகை .
இந்த நிலையில் நாயகனுக்கு விபத்து ஏற்பட்டு ஒலிகள் தாமதமாக மூளையை அடைந்து லேட்டாக உறைக்கும் பிரச்னை ஏற்படுகிறது .
இதனால் அவனுக்கு தொழிலில் பின்னடைவு மற்றும் காதல் நிறைவேறுமா என்ற கவலை .
இதை பயன்படுத்தி அவனை வீழ்த்தி காதலிக்கும் பெண்ணை அபகரிக்கம் அந்த இன்னொருவன் திட்டமிட, அவளுக்கே தெரியாமல் அவளுடைய ஆர்ட் தெரபி மூலமே நாயகன் குணம் அடைகிறான் .
அது எப்படி என்பது சுவாரஸ்யமாக நிஜமான நகைச்சுவையோடும் புதிய சிந்தனைகளோடும் சொல்லி இருந்தால்
படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் .
எனினும் வித்தியாசமான கதை , புதிய சூழல் என்பது இந்தப் படத்தின் பலம் .
மொத்தத்தில் டியூப் லைட் … ஃபிளிக் ஃபிளிக்