உறியடி 2 @ விமர்சனம்

2 டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் , சுதாகர் , விஸ்மயா உடன் விஜயகுமார் கதாநாயகனாக நடித்து எழுதி இயக்கி இருக்கும் படம் உறியடி 2.  முன்பே உறியடி படத்தின் மூலம் கவனம் கவர்ந்தவர் விஜயகுமார்  உறியடி 2 எப்படி ? பேசலாம் . 

செங்கதிர்மலை என்ற கிராமப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மூவர் ( விஜயகுமார் , சுதாகர், ராஜ்). படித்து விட்டு வேலை தேடுபவர்கள் . நாயகனின் (விஜயகுமார்) தாய் தந்தையர் அப்போதே கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் . பக்கத்தில் உள்ள பூச்சி மருந்து தொழிற்சாலையில் வேலைக்கு போகின்றனர்  நண்பர்கள் .

குறிப்பிட்ட ஒரு தயாரிப்புக்கு , மக்களுக்கு ஆபத்தில்லாத பாதுகாப்பான முறையில் தயாரித்தால் நிறைய செலவு ஆகும்; லாபம் குறையும் என்பதால் , தொழிற்சாலையில் விபத்து நடந்தால் தொழிலாளர்களுக்கும் சுற்றுப் புற கிராம மக்களுக்கும் , எப்போது வேண்டுமானாலும் உயிராபத்து நிகழலாம் என்ற நிலையில்  பாதுகாப்பு இல்லாத வகையில் அந்த ஆலை இயங்குகிறது . 

அங்கே பயன்படுத்தப்படும் மெத்தில் ஐசோ சயனைடு என்ற விஷத் தன்மை உள்ள வேதிப் பொருள் தண்ணீரில் கலந்தாலோ காற்றில் கலந்தாலோ அதை சுவாசிக்கும் மக்கள்,  மரணம் , ஊனம் , மன நிலை தவறுதல் என்று எந்த ஆபத்துக்கும் ஆளாக வேண்டி வரலாம் 
ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி  இரண்டையும் கையில் போட்டுக் கொள்ளும் ஆலை  முதலாளி அவர்களுக்கு பணத்தை கொடுத்து வாயை அடைத்து விட்டுஆபத்தான முறையிலேயே பேக்டரியை நடத்துகிறார் . 

பராமரிப்பு சரி இல்லாத எந்திரங்களால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படலாம் என்ற நிலை . 

இந்த நிலையில் அடித்தட்டு மக்களுக்கான ஜாதிக் கட்சி தலைவர் ஒருவர் தனக்கு பேக்டரி  பணம் தராத கோபத்தில் இருக்கிறார் . 
இந்த நிலையில் குழாய்  கசிவில் மெத்தில் ஐசோ சயனைடு பட்டு ஒருவர் உயிர் இழக்க, அதை வைத்து போராட்டம் செய்யும் அடித்தட்டு ஜாதிக் கட்சி தலைவருக்கும் பணம் போகிறது . 
அவரும்  பணம் வந்ததும் ஆலைக்கு ஆதரவாக மாறி விடுகிறார் . 
தட்டிக் கேட்கும் நாயகன் குற்றவாளியாக்கப் பார்க்கப்படுகிறார் .

 ஒரு நாள் மீதில் ஐசோ சயனைடு அதிக அளவில் தண்ணீரில் கலந்து மேகக் கூட்டம் போல கரும்புகை உண்டாகி, விதிகளை மீறி குறைந்த உயரத்தில் கட்டப் பட்ட புகை போக்கியால் ஊருக்குள் பரவி ,  குழநதைகள், பெண்கள், முதியவர்கள் , மாடு , ஆடு , உட்பட ஏகப்பட்ட அப்பாவி உயிர்கள் செத்துப போகின்றனர் . ஊனம் மற்றும் 
 மன நோய்க்கும் ஆளாகின்றனர்.

தப்பியவர்களுக்கு கூட அதை சுவாசித்ததன் பாதிப்பு அடுத்த மூன்று தலைமுறைகளுக்கு இருக்கும் என்று அறியப்படுகிறது ஆலைக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராட , கலவரம் , தடியடி , ரத்தம் .. !
நிலைமை மீறுவதை அறிந்த அரசும் , அரசியலும் , நீதியும் ஒன்று சேர்ந்து எல்லாவற்றுக்கும் காரணமான அந்த வெளிநாடு வாழ் முதலாளியை தப்பவிட்டு சில ஊழியர்களை மட்டும் குற்றவாளியாக்கி கடமை முடிக்கிறது . 

முதலாளி புதிதாக ஒரு தாமிர உருக்காலை அமைக்க திட்ட மிட, 
மக்களும் மக்களுக்கு தலைமை ஏற்ற நாயகனும் என்ன செய்தார்கள் என்பதே படம் . 

போபால் விஷ வாயு சம்பவம் கொஞ்சம் , தூத்துக்குடி ஸ்டெரிலைட் சம்பவம் நிறைய என்று இரண்டு நிஜ அநியாயங்களில் இருந்து கதை எடுத்து படம் எடுத்திருக்கிறார் விஜயகுமார் . விசவாயு கசிந்த நிலையில் அதை ஒத்துக் கொண்டால் பிரச்னை என்பதால் அம்மோனியா கசிந்ததாக ஆளை நிர்வாகம் பொய் 
சொல்ல, மருத்துவர்கள் அதற்கான சிகிச்சையை செய்ய , அதனாலும் உயிர் பலியான அவலம் வரை படம் பல விசயங்களை சொல்கிறது .

மிக இயல்பான  எளிமையான கதாபாத்திரங்கள் நடிகர்கள் . மிக மிக உற்சாகமாக இயல்பாக நடித்துள்ளார் விஜயகுமார் . காரணமே இல்லாமல் வாடா போடா என்று பேசும் போலீசுக்கு அவர் கொடுக்கும் சவுக்கடி பதில் வெகு ஜன உணர்வின் பிரதிபலிப்பு . அருமை .

கதாநாயகி விஸ்மயா , சித்தி என்கிற சித்ரா எளிமையில் கவர்கிறார்கள் .

மெத்தில் ஐசோ சயனைடு அது நீரில் காற்றில் கலக்கும் விதம் அதை காட்சிப் படுத்திய விதம் , கிராபிக்ஸ் வேலை என்று அந்த ஏரியா அதிர வைக்கிறது . முக்கியமாக ஒலி வடிவமைப்பும் கோவிந்த வசந்தாவின் பின்னணி இசையும் இந்த காட்சிகளில் அபாரம் 
பேய்ப் படத்தை பார்க்கும்போது  கூட வராத பயம் அந்தக் காட்சிகளில் வருகிறது . இயக்குனராக விஜயகுமார் ஜொலிக்கும் ஏரியா அது .

உறியடி முதல் பாகத்தில்  பா ம க தலைவர் ராமதாசை பூடகமாக தாக்கியவர் இந்தப் படத்தில் திருமா வளவனை இன்னும் நெருக்கமாகவே அடித்து இருக்கிறார் . பெயர் மட்டும்தான் சொல்லவில்லை .

முதல் பகுதி படம் முடியும் வரை நாம்  தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டு இருக்கவில்லை . சம்பவம் நடக்கும் ஊரில் , தொழிற்சாலையில் சிக்கிக் கொண்ட அப்பாவிகளில் ஒருவர் என்ற உணர்வில் கலந்து போகிறோம் . எல்லாம் முதல் பாதி வரை 
இரண்டாம் பகுதியில்  சிறு சிறு காட்சிகளும் அளவுக்கு மேல் நீள்கின்றன . 

நடந்தால் நடந்து கொண்டே இருக்கின்றனர் . கோஷம் போட்டால் கோஷம் போட்டுக் கொண்டே இருக்கின்றனர் . அடி வாங்கினால் வாங்கிக் கொண்டே .. அடித்தால் அடித்துக் கொண்டே .. 
ரொம்ப ஆபத்தான எடிட்டிங் .

அது கூட பரவாயில்லை அந்த கிளைமாக்ஸ் ரொம்ப அநியாயம் . 
உதாரணமாக , ஸ்டெர்லைட் ஆலை பிரச்னைக்கு தீர்வு என்னவென்றால்…. 

ஆலை முதலாளி , அதற்கு துணை போன அரசியல்வாதிகள் , மக்களுக்கு கெடுதல் நடக்க காரணமான அதிகாரிகள் எல்லோரையும் ஒரு அறைக்குள் வைத்து ஹாக்கி ஸ்டிக்காலும் கட்டையாலும் அடித்துக் கொல்வதுதான்  தீர்வு என்று சொன்னால் அது மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் செயலா ?

அப்படி  செய்வது தவறு அல்ல என்றே இருக்கட்டும் . அது சாத்தியமா? அந்த அளவுக்கு இங்கே ஜன நாயகம் இருக்கா? ஜனங்களுக்கு மரியாதை இருக்கா ? செய்ய முடியுமா?  குரல் கொடுத்ததற்கே வினோலினை வாயில் சுட்டுக் கொன்னானுங்கப்பா … !

பொதுவில் இரண்டாம் பாகம் சரி இல்லை என்பது கூட ஒகே . 
ஆனால் இப்படி ஒரு கிளைமாக்ஸ் என்பது எதிரி அடிக்கும் பந்தை பிடித்து தானே கோல் போஸ்டுக்குள் எறிந்து சேம் சைட் கோல் போடுவது மாதிரி கொடுமை . கஷ்டப்பட்டு உழுது விதைத்து வளர்த்து காத்த பயிருக்கு அறுப்பதற்கு முன்பாக நெருப்பு வைக்கிற மாதிரி அயோக்கியத்தனம் .

 இது போன்ற பிரச்னைகளுக்காக போராடும் மக்களுக்கு என்ன நடக்கிறது என்ற உண்மையை அழுத்தமாக சொல்லி முடித்தாலாவது படம் பார்க்கும் மக்கள் அந்த கோபத்தோடு வெளியே வருவார்கள் . விழிப்புணர்ச்சி அதிகரிக்கும் . 

(தேர்தல் என்று ஏதோ சொல்கிறாரே .. அதன் மூலம் ஏதோ பயனுள்ள விஷயம் சொல்லப் போகிறார்கள் என்று நம்ப வைத்து , பிறகு அந்த நம்பிக்கையிலும் விஷ வாயு செலுத்துகிறார்கள் )

அதை விட்டு இப்படி  ஒரு கிளைமாக்ஸ் வைத்து மக்களின் கோபத்  தீயை நாமே கற்பனை தீர்வுகள் தந்து அணைத்து அனுப்பினால் அது எவ்வளவு பெரிய அநியாயம் !

இப்படி எல்லா பிரச்னைகளுக்கு மக்களின் அறிவை மழுங்கடிக்கிற தீர்வுகளோடு படம் எடுத்தால், சம்மந்தப்பட்ட பிரச்னைக்கு காரணமானவர்களே அதற்கு சந்தோஷமாக பணம் கொடுப்பார்களே . 
படைப்பாளிகளே ! ஒரு யதார்த்த பிரச்னையை மட்டும் விவரித்து ஒரு படம் எடுத்தால் , அதற்கான தீர்வையும் யதார்த்தமாக சொல்லுங்கள் .

முடியவில்லையா ? மக்களே இதன் தீர்வு உங்கள் கையில்தான் உள்ளது என்று ரசிகனிடம் ஒப்படையுங்கள் . அதை விட்டு விட்டு யதார்த்த பிரச்னைக்கு இப்படி ஜிகினா  நானா தீர்வுகள் சொல்வது என்பது தாகத்தில் துடிப்பவன் வாயில் விஷ சாராயம் ஊற்றுவதற்கு சமம் . ஆரம்பத்தில் போதை . அப்புறம் அம்போ . 

இப்படி ஒரு கிளைமாக்ஸ் வைத்து மக்களை இன்னும் சுத்தலில் விடுவதற்கு பதில் நீங்களும் குப்பத்து ராஜா எடுத்து விட்டுப் போங்க பாஸ் . புண்ணியமா போவும். 

உறியடி 2……  குச்சிதான் உடைஞ்சது 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *