மேனன் வேணுமா ‘உறுமீன்’ ரேஷ்மி ?

Urumeen-Movie-Audio-Launch-6
அக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லிபாபு தயாரிக்க பாபி சிம்ஹா, மெட்ராஸ் புகழ் கலையரசன், ரேஷ்மி மேனன் , மனோ பாலா, அப்புக்குட்டி ஆகியோர் நடிப்பில் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கி இருக்கும் படம் ‘உறுமீன் ‘படத்தின் முதல் டீசர் வெளியானபோதே பலரின் கவனத்தை கவர்ந்த இந்தப் படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட விழாவில்  இயக்குனர்கள் மகிழ் திருமேனி, கரு.பழநியப்பன், கார்த்திக் சுப்புராஜ், எஸ்.பி.ஜனநாதன், எஸ் .ஜெ. சூர்யா  உள்ளிட்ட இயக்குனர்கள் சிறப்பு விருந்தினராக காலத்து கொள்ள , பாடல்களை வெளியிட்டார் பாரதிராஜா .

Urumeen-Movie-Audio-Launch-25

படத்தின் டீசர் எனப்படும் சிறு முன்னோட்டம், டிரைலர் எனப்படும் முன்னோட்டம் இவை தவிர ஒரு பாடலை திரையிட்டார்கள் . புறநானூற்றில் கணியன் பூங்குன்றன் எழுதிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடல் முழுவதுமாக இந்தப் படத்தில் இடம் பெறுகிறது . அந்தப் பாடலைப் பாடியவர்கள் மேடையில் அதைப் பாடிக் காட்டினார்கள் .
ஆனால்,  ‘யாவரும் கேளிர் என்பதற்கு பதில் கேளீர்’ என்று பாடித் தொலைத்து இருக்கிறார்கள் . கேளிர் என்பதற்கு நண்பர் என்று பொருள் . அதாவது ”எல்லாமும் நம் ஊரே . யாவரும் நம் நண்பர்களே” என்கிறான் கணியன் பூங்குன்றன். ஆனால் இவர்கள் பாடும்போது ‘எல்லாம் நம் ஊரே . எல்லோரும் கேளுங்க” என்று கெஞ்சுகிறார்கள் .  என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா…!
Urumeen-Movie-Audio-Launch-20(1)
படத்தில் இடம்பெறும் இன்னொரு பாடலுக்கு ஒரு நிழல் மனிதனோடு ஒரு நிஜ மனிதன் சண்டை போட்டுக் கொண்டே நடனம் ஆடுவது போல ஆடினார்கள் . நிழல் உருவத்தின் நடனத்தோடு ஒரு நிஜ நடனக் கலைஞர் அழகான ஒத்திசைவோடு ஆடிய விதம் அருமை .

திரையிடப்பட்ட ஒரு மெல்லிசைப் பாடல் மிக சிறப்பாக இருந்தது . முன்னோட்டம் பாடல் இரண்டிலுமே  ஒளிப்பதிவும் (ரவீந்திர நாத் குரு ) இசையும் (அச்சு) மிக சிறப்பாக இருந்தது .

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மகிழ் திருமேனி

Urumeen-Movie-Audio-Launch-9

” வித்தியாசமான நிறைய படைப்புகள் சிறப்பாக வரும் காலம் இது . அண்மையில் உருவான நடிகர்களில் எல்லோரையும் கவர்ந்த இரு நடிகர்கள் பாபி சிம்ஹாவும் , மெட்ராஸ் புகழ் கலை அரசனும் . அவர்கள் இருவரும் எதிரெதிர் கதாபாத்திரங்களில் நடித்து இருப்பது இந்தப் படத்துக்கு பெரிய பலமாக அமையும் ” என்றார்

கரு பழனியப்பன் பேசும்போது “ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு’ என்ற வரிகள் அடங்கிய அவ்வையின் முழுப் பாட்டையும் சொல்லி விளக்கம் சொன்னதோடு ” பாபி சிம்ஹாவும் , கலை அரசனும் மிக சிறப்பான நடிகர்கள். அவர்களுக்காக உயரங்களில் ஏறிக் கொண்டு இருகிறார்கள்.

இந்தப் படத்தின்  நாயகி ரேஷ்மி மேனன் கூட நல்ல நடிகைதான் . ஆனாலும் அவர் அடைய வேண்டிய உயரத்தை அடையவில்லை. அவர் எதோ ஒன்றை மாற்றிக் கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன் . முக்கியமா ரேஷ்மி மேனன் என்ற தன் பேரில் உள்ள மேனனை கட் பண்ணினால் நல்லது .

ஏன்னா பேருக்குப் பின்னால் ஜாதிப் பெயரை போட்டுக் கொள்ளாத கண்ணியம் தமிழ் நாட்டில் மட்டும்தான் இருக்கு.  காரணம் பெரியார் என்ற தாடிக்கார கிழவன்.  ” என்றார் .

Urumeen-Movie-Audio-Launch-11

இயக்குனர் எஸ் பி ஜனநாதன் தன் பேச்சில் ” என்னோட புறம்போக்கு படம் ரிலீஸ் ஆன மூணாவது நாள்,  ஒரு பெரிய புள்ளி எனக்கு போன் பண்ணி , ‘உங்க படத்தை திருட்டு விசிடில பார்த்தேன் . பிரின்ட் நல்லா இல்ல . அதனால் டயலாக் எல்லாம் ஒண்ணும் புரியல. தியேட்டர்ல பாக்க ஆசைப்படுறேன் . டிக்கட் கிடைக்குமா?’ன்னு கேட்டார் . எப்படி இருக்கு பாருங்க .

திருட்டு விசிடில அவர் பார்த்ததே தப்பு. ஆனா அந்த உணர்வே அவருக்கு இல்ல. அப்படி பார்த்ததை  படத்தின் டைரக்டர் கிட்டயே சொல்றமே என்ற மேனர்சும் அவருக்கு இல்ல. ஏன்னா அவரு ஒரு பெரும்புள்ளி. அது மாதிரி கொடுமைகள் எதுவும் இந்தப் படத்துக்கு நடக்கக் கூடாது. படத்தின் டிரைலரும் பாடல்களும் மிக அருமை ” என்றார் .

கார்த்திக் சுப்புராஜ் பேசும்போது

Urumeen-Movie-Audio-Launch-19

“சிம்ஹா நல்ல நடிகர் . ஜிகர்தண்டா படத்துல அவரை நல்லா பயன்படுத்தும் சூழ்நிலை அமைஞ்சது சந்தோஷமான விஷயம். கலை அரசனும் அப்படிதான் . இந்தப் படம் நல்லா ஓட வாய்ப்புள்ள படம் என்பது பாடல் மற்றும் டிரைலரிலேயே தெரிகிறது . என்னோட வாழ்த்துகள் ” என்றார் .

இறுதியாகப் பேசிய பாரதிராஜா ” நான் எம் கே டி. சின்னப்பா காலத்தில் வந்த படங்களையும் பார்த்தவன் . இப்போது சிறப்பாக படம் எடுக்கும் மகிழ் திருமேனி,  கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரின் படங்களையும் பார்க்கிறேன் .

P.Bharathiraja at Vishwaroopam on DTH Platform Press Meet Stills

இந்த தலைமுறை இயக்குனர்களையும் தாண்டி நிற்கும் அளவுக்கு ஒரு சிறப்பான படைப்பை ஆரம்பிக்க இருக்கிறேன். இந்த தலைமுறை இயக்குனர்களுக்கும் கடும் போட்டியை கொடுக்க இருக்கிறேன்  “என்று , வியக்கும் வகையில்  பேசி முடித்தார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →