வனமகன் @ விமர்சனம்

vana 1
திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க,  ஜெயம் ரவி மற்றும் சாயி ஷா ஜோடியாக நடிக்க, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா , வருண் , சண்முகராஜன், வேல. ராமமூர்த்தி ஆகியோர் நடிக்க,

இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘வனமகன்’. குண மகனா இவன்? பார்க்கலாம் .

விபத்தில் பெற்றோரைப் பறிகொடுத்த– பல்லாயிரங்கோடிகள்  சொத்துக்கு அதிபதியான – காவ்யா என்ற இளம்பெண்ணின் (அறிமுகம் சாயிஷா ) கேர் டேக்கராக இருப்பதோடு,

 அவளது பெயரில் உள்ள தொழில்களையும் நிர்வகித்து லாபம் பெருக்குகிறார் , காவ்யாவின் அப்பாவின் நண்பரான ராஜ சேகர் (பிரகாஷ் ராஜ்)

vana 7

அவரது மகன் விக்கி (வருண்).

சிறுவயது முதலே காவ்யாவின் சமையல்காரராக இருப்பவர் பாண்டியன்(தம்பி ராமையா)

ஒரு முறை விக்கியும் வருணும் நண்பர்களோடு அந்தமான் போகிறார்கள் . அங்கே அரசு அனுமதி மறுக்கப்பட்ட பகுதிக்குள் காரை செலுத்த, எதிரே வந்த ஒருவன் வண்டியில் மோதி பலத்த அடிபடுகிறான்

அவன் ஒரு காட்டுவாசி (ஜெயம் ரவி)

பணத்தை வைத்து விதிகளை மீறி அவனை சட்ட விரோதமாக சென்னை கொண்டு வந்து சிகிச்சை அளிக்கிறாள் காவ்யா .

vana 6
அவனோ ஜஸ்ட் லைக் தட் மோதி வீட்டு சுவரையே உடைக்கும் அளவுக்கு படு முரடனாக இருக்கிறான் .

மிருகங்களை பழக்கும் பாணியின் அவனை பழக்கி தன்னுடன் வைத்துக் கொள்கிறாள் . அவனுக்கு வாசி என்று பெயர் வைக்கிறாள் . அலுவலகம் அழைத்துப் போகிறாள் .

அவன் செய்யும் செயல்கள் யாவும் முரட்டுத்தனமாக துவங்கினாலும் அவற்றில் உள்ள மனித நேயம் அனைவரையும் கவர்கிறது . இந்த நிலையில் அவனை தேடி அந்தமான் போலீஸ் சென்னை வருகிறது .

ராஜ சேகர் தன்  மகன் விக்கிக்கு காவ்யாவை மணம் முடிக்க திட்டமிட, காவ்யா மறுக்க, விக்கி காவ்யாவிடம் எல்லை மீற  முயல, வாசி அவனை அடிக்கும்  அடியில் பங்களா கலகலத்துப் போகிறது .

vana 99

அப்போது அங்கு வரும் அந்த மான்போலீஸ்,  புலியை  வலை வீசிப் பிடிப்பது போல வாசியைப் பிடித்துக் கொண்டு அந்தமான் கொண்டு போகிறது .

வாசியை தேடி காவ்யாவும் பாண்டியனும் அந்தமான் போகிறார்கள். அங்கே வாசியின் வரலாறு சண்முகம் என்ற வனக்  காவலர் (சண்முகராஜன்) மூலம் காவ்யாவுக்கு சொல்லப் படுகிறது .

வாசியின் உண்மைப் பெயர்  ஜாரா என்பதும், ஒரு குறிப்பிட்ட பழங்குடி இன  மக்கள் காலகாலமாக வாழும் பகுதியில் இருந்து அவர்களை விரட்டி விட்டு,
காற்றாலை நிறுவ முயலும் ஒரு தனியார் நிறுவனம் , அதற்கு துணை போகும் அரசு, மற்ற துறைகள் , ஒரு நிலையில் அந்த பழங்குடி இன மக்கள் அனைவரையும் கொன்று, 
vana 66
நிலத்தைக்  கைப்பயற்ற முயலும் போராட்டத்தின்போதுதான், ஜாரா மீது காவியாவின் கார் மோதிய சம்பவம் நடந்தது என்பதும் , விபத்தில் ஜாராவின் பழைய நினைவுகள் அழிந்ததும்  காட்டப்படுகிறது.

மீண்டும் அந்தமானுக்கு வந்த ஜாராவுக்கு நினைவுகள் வருகிறது .

அங்கே காற்றாலை கட்ட இருப்பதே காவ்யாவின் பணத்தில் ராஜசேகர் செய்யும் செயல்தான் என்பது தெரியவருகிறது .

சுய ரூபம் காட்டும் ராஜ சேகர் ,  ஜாரா உட்பட அனைவரையும் அழித்து விட்டு காற்றாலை காட்டுவதோடு தன்  மகனுக்கு காவ்யாவை கட்டி வைக்கக்  களம்  இறங்க ,

vana 55
அரசு எந்திரம் முழுக்க அவருக்கு சாதகமாக இயங்க ஜாரா தன்  இனத்தைக் காப்பாற்ற முயல, அவனையும் அந்த இனத்தையும் காப்பாற்றி அவனை மணம் முடித்து அங்கேயே வாழ காவ்யா முயல …

நடந்தது என்ன என்பதே வனமகன்

சபாஷ் இயக்குனர் விஜய்…,  மனித இனம்,அழியக்  கூடாத தனித் தன்மைகள், அனைவருக்கும் வாழும் உரிமை இவற்றின் அருமையை உணர்த்தும் ஒரு அருமையான படத்தைக் கொடுத்தமைக்கு .!

அதுவும் அந்தமானில் இப்போது 400 பேர் மட்டுமே உயிரோடு இருக்கிற ஜாரவா  என்ற நிஜமான பழங்குடி மக்களின் வாழ்வியல் பின்னணியில்
உண்மைத் தன்மையோடு  படத்தைக் கொடுத்து இருப்பதை பாராட்ட வார்த்தைகளே இல்லை .

vana 33
மேற்கத்திய நவீன நாகரீகம் மற்றும் பண வெறி காரணமாக இந்த  பூமிப் பந்தின் பொக்கிஷங்கள் அடியோடு அழிக்கப்படுவதை இதயம் கனத்து நிறையும் வகையில் சொல்லி இருக்கிறார் .

ஜாராவின் கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம், மிருகங்களை தடவிக் கொடுப்பது போல தடவிக் கொடுக்கும் இயல்பை வைத்து, 
படம் முழுக்க இயக்குனர் படைத்து இருக்கும் கவிதாபூர்வமான உணர்வுகள் என்று, உள்ளம்  ஊடுருவுகிறது வனமகன் .

வசனமே இல்லாமல் எல்லா உணர்வுகளையும் உடல் மொழிகள் மூலமே வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்து செழித்து இருக்கிறார் ஜெயம் ரவி .

vana 5
உடல் வருத்தி,  செதுக்கி கதாபாத்திரத்தை  சிறப்பாக  செய்துள்ளார் . ஆக்சன் காட்சிகளில் அசத்தி இருக்கிறார் .
பல படங்களில் எம் ஜி ஆர் தொங்கிய ஆல  மர  விழுதுகள் அனைத்தையும் இந்த ஒரே படத்தில் தொங்கி விட்டார் ஜெயம் ரவி என்று சொல்லலாம் . அவ்வளவு காட்டுத்தனமான உழைப்பு .

தான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டருக்கும் ஜெயம் ரவி செய்யும் நியாயம் காதலுக்குரியது .

திருவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமும் கண்களைக் கட்டிப் பிடித்துக் கானம் பாடிக் காதலிக்கின்றன .
நிஜமான காட்சிகளுக்கு கொஞ்சம் ஓவிய ‘டச்’சும் கொடுத்தது போல அப்படி ஓர் அழகு !. பாராட்ட வார்த்தைகள் இல்லை.  

vana 44
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் இனிமை . என்றாலும் பின்னணி இசையில் விஸ்வரூபம் எடுத்துள்ளார் மனிதர் .
காட்சிப் பின்னணி மற்றும் சூழலுக்குப் பொருத்தமான இசை . படம் முடிந்து வரும் ரோலிங் டைட்டில் வரை ஹாரிஸின் பின்னணி இசை பிரமாதம்

சின்னச் சின்ன காட்சிகள் நிறைந்த படத்துக்கு கிண்ணென்று சிறகு கட்டி பரபரக்க வைக்கிறது ஆண்டனியின் ‘நச்’ படத் தொகுப்பு
சாயிஷா ….! அடியாத்தா …! பழம் பெரும் நடிகர் திலீப் குமாரின் பேத்தியாம் . அழகை விடுங்கள் ..இதுக்கு மேல எல்லாம் தமிழ் சினிமா பார்த்தாச்சு .

vana 2
ஆனால் அவர் ஆடுகிறார் பாருங்க ஒரு டான்ஸ் . பிரம்மிப்பு ! பிரபுதேவாவே வியந்த டான்சர் என்றால் சும்மாவா? இதுவரை நாம் பார்த்திராத வித்தியாசமான அசைவுகளுடன் அப்படி ஒரு நடனம் .

நடிப்பும் நன்று.

தம்பி ராமையா வழக்கம் போல நடிப்பில் அசத்தி இருக்கிறார் . வினோத்தும் ஓகே .

காவ்யாவின் சித்தப்பாவாக வரும் தலைவாசல் விஜய் கேரக்டர் படத்தில் எதுக்கு ? ஜாராவின் குணத்தை விளக்க மற்ற பல சந்தர்ப்பங்கள் இருக்கே .
அதுமட்டுமல்ல… குளோசப்பில் வீர வசனம் பேசும் சித்தப்பா கடைசி வரை வரவே இல்லையே ?

vana 77
பிரகாஷ் ராஜ் இந்தப் படத்துக்கு தவறான தேர்வு . அவர்தான் நடிக்கிறார் எனும்போதே கதையின் போக்கு புரிந்து விடுகிறது . மேற்படி சித்தப்பா கேரக்டர் வேறு அந்த போக்கு பற்றிய யூகத்தை வலுவாக்குகிறது .

எனவே அந்த தலைவாசல் விஜய் காட்சிகளை தூக்கி விட்டாலும் தப்பில்லை எடிட்டரே !

அதே போல சுற்றுச் சூழல் , ஆர்கானிக், இயற்கையின் மேன்மை , பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்கு காடாக நம் நாடு மாறும் நிலைமை , பாரம்பரியம் காப்பது,
மிருகங்களின்  அவசியம், பிளாஸ்டிக் ஆபத்து , தாவரங்களில் மரபணு மாற்ற  அநியாயம் போன்ற பல விஷயங்களை,
உறுத்தல் இல்லாமல் பிரச்சார நெடி இல்லாமல் இயல்பாக மனதில் தைக்கிற மாதிரி சொல்ல லட்டு லட்டாக  வாய்ப்புள்ள கதை இது .

vana 88
ஆனால் அப்படி எதைப்பற்றியும் பேசாமல் சேணம் கட்டிய குதிரை மாறி ஒரு பழங்குடி இனம் ஒரு காதல் , ஒரு லோக்கல் பணக்காரன், கல்யாண ஆசை என்று, 
குறுக்கு சந்து பயணம் போல படத்தைக் கொண்டு போனது சரியா இயக்குனர் நாயமாரே ?

மேற்சொன்ன விஷயங்களை எல்லாம் சொல்லி விசாலமான பார்வை பார்த்து இருந்தால் இந்தப் படம் இந்திய சினிமாவையே பிரம்மிக்க வைத்து இருக்கும் .

எனினும் நாட்டுவாசிகளை விட காட்டுவாசிகள் நல்லவர்கள் , இந்த பூமி கரன்சி வைத்து இருப்பவனுக்கு மட்டுமல்ல .
கரன்சியே  இல்லாமல் வாழும் சூழலில் வாழ ஒரு கொடுப்பினை வேண்டும் என்று சொல்லும் வகையில் ,

அந்த மான் காடுகளில் உள்ள விண்  முட்டும் மரங்கள் போல ஓங்கி உயர்ந்து நிற்கிறது படம் .

vana 3
வனமகன் …. வெற்றியின் மணமகன் !

மகுடம்  சூடும் கலைஞர்கள்
——————————————————
இயக்குநர் விஜய், ஜெயம் ரவி, திரு, ஹாரிஸ் ஜெயராஜ், ஆண்டனி, சாயிஷா

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *