வீரைய்யன் @ விமர்சனம்

ஃபாராசரா பிலிம்ஸ் தயாரிப்பில் பரீத் என்பவர் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க,

இனிகோ பிரபாகர் , ஷைனி, ஆடுகளம் நரேன் , வேல ராமமூர்த்தி நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் வீரையன் . சாரம் உள்ளவனா ? பார்க்கலாம்

தன்னால் வளர்க்கப்பட்டு படிக்க வைக்கப்பட்ட தம்பி, தன்னை கண்டு கொள்ளாமல் புறக்கணிக்க, ஊர் அது பற்றிக் கேள்வி கேட்க ,

”எங்களுக்கு அறிவு இருந்தது படிச்சோம். எங்க .. பார்டர் மார்க்கில் பாஸ் பண்ணிக் கொண்டு இருக்கும் அவரு மவனை படிக்க வச்சுக் காட்டட்டும் ‘ என்று தம்பி சவால் விட,

‘ தம்பியை விட தன் மகனை பெரிய அளவில் படிக்க வைப்பேன்’ என்று குலதெய்வம் வீரைய்யன் சாட்சியாக சபதம் இடுகிறார்,

அதே பெயர் கொண்ட வீரைய்யன் (ஆடுகளம் நரேன் )

அவரது மகன் (ஆரண்ய காண்டம் வசந்த்) ஒரு காதல் ஜோடியின் காதல் பிரச்னையில் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொள்கிறான் .

பெண்ணின் ஜாதி வெறி பிடித்த கவுன்சிலர் அப்பா (வேல ராமமூர்த்தி) இவனை தன் மகனின் காதலன் என்று தவறாக எண்ணி மிரட்ட ,

பள்ளிக் கூடமும் பயந்து கொண்டு இவனுக்கு டி சி கொடுத்து விடுகிறது .

அந்தப் பெண்ணின் நிஜ காதலனான கார் டிரைவர் ஒருவன் மற்றும் அவனது நண்பர்களுக்கும் , சுடலை (இனிகோ பிரபாகர்) என்பவன் உட்பட்ட

வேலை வெட்டி இல்லாத மூன்று நண்பர்களுக்கும் (இனிகோ பிரபாகர், கயல் வின்சென்ட், கனி என்கிற திருநங்கை பிரீத்தி ஷா ) எப்போதும் சண்டை .

மாணவன் தன்னை அண்ணன் என்று அழைப்பதில் உருகும் வேலை வெட்டி இல்லாத ஹீரோ , மாணவன் அநியாயமாக பாதிக்கப்பட்டதற்கு நீதி கேட்க ,

கவுன்சிலர் வீட்டுக்கு போய், டிரைவரை காட்டிக் கொடுக்கிறான் . அவன் தப்பித்து ஓட , தன் மகளைக் கொன்று விடுகிறான் கவுன்சிலர் .

டிரைவர் காதலன் வேலை வெட்டி இல்லாத ஹீரோவைக் கொல்ல முயல, அந்த டிரைவரையும், 

அடித்து உதைத்து மன நோயாளி ஆக்குகிறது கவுன்சிலரின் அடியாள் கூட்டம் .

எனினும் மாணவனின் படிப்பு பாழாய்ப் போனதை மாற்ற முடியவில்லை . அப்பாவிடம் சொன்னால் தாங்கிக் கொள்ள மாட்டார் என்று மாணவன் மனம் உடைய ,

டுட்டோரியல் கல்லூரியில் அவனை சேர்த்து , கஷடப்பட்டு பணம் கட்டி படிக்க வைக்கிறான் சுடலை .

இதற்கிடையில் மன நோயாளியாக இருக்கும் டிரைவர் காதலனையும் பராமரித்துக் கவனித்துக் கொள்கிறான்.

உறவுகள் இல்லாத நிலையில் திருமணம் செய்து கொள்ள வழி இல்லாமல் முதிர் கன்னியாக வாழும் ஒரு பெண்ணுக்கும்( ஷைனி) ,

சுடலைக்கும் , ஒருவித விரக்தி மன நிலையே காதலாகக் கனிகிறது .

படிப்பு , பகை , காதல் , துரோகம் எல்லாம் தொடர்கிறது .

 

மாணவனின் படிப்பு என்ன ஆனது ? அவனது அப்பா வீரய்யனின் கனவு என்ன ஆனது ? சுடலையால் அவற்றை சாதிக்க முடிந்ததா ?

அவன் காதல் என்ன ஆனது ? இவர்களில் யார் யாருக்கு என்னென்ன ஆனது என்பதே வீரைய்யன் .

மண்ணும் மணமுமாக அற்புதமாகத் தொடங்குகிறது படம் . குல தெய்வ சபதக் காட்சி அருமை.

ஒரு ஆபத்தான காதலின் நடுவே மாணவன் சிக்குவது இயல்பு . அண்ணே என்ற ஒரு வார்த்தைக்கு உருகி சுடலை மாணவனுக்கு அண்ணனாகவே மாறும் குணாதிசயம் சிறப்பு .

எல்லா கதாபாத்திரங்களும் உரசிக் கொள்வதும் இணைவதுமான கதைப் போக்கு கவனிக்க வைக்கிறது .

சோழர் காலக் கட்டிடக் கலையின் வரலாற்று அடையாளங்களை தேடித் பிடித்து அவற்றை பின் புலமாகக் கொண்டு தஞ்சை மண்ணில் படம் எடுத்து இருக்கிறார் பரீத் . சபாஷ் .

இந்தப் படத்தின் எதிர்கால அடையாளமே இதுதான் . (ஆனால் இந்த விசயத்தை ஏதாவது ஒரு இடத்தில் கதையோடு சம்மந்தப்படுத்தி எல்லோரும் கவனிக்குமாறு வசனமாகவாவது சொல்லி இருக்கலாம் )

சுடலையாக மிக இயல்பாக நடித்துக் கவர்கிறார் இனிகோ பிரபாகர் .

கொஞ்சம் சறுக்கினாலும் அலையறவ என்று விபரீதப் பெயர் வாங்கும் ஆபத்து உள்ள கதாபாத்திரத்தில் வித்தியாசமான முக பாவனைகள் உடல் மொழிகளோடு நடித்துக் கவர்கிறார் நாயகி ஷைனி .

தோழமைத் திருநங்கையாக நடித்து இருக்கும் பிரீத்திஷா நடிப்பில் வியக்க வைக்கிறார் .

மகனைப் படிக்க வைக்கத் துடிக்கும் மூட்டை தூக்கும் தொழிலாளி வீரைய்யனாக வாழ்ந்திருக்கிறார் ஆடுகளம் நரேன் .

மாணவனாக நடித்த தம்பியும் ஒகே .

அவனது தங்கையாக வரும் சிறுமி கதாபாத்திரம் உட்பட பல சிறு சிறு கதாபாத்திரங்களுக்கும் கூட சிறப்பான நடிகர்களை போட்டு இருக்கிறார் இயக்குனர் .

ஒய்ஜா போர்டு முறையில் பேய்களோடு பேசுவதை காட்டி அதையும் செண்டிமெண்ட் ஆக பயன்படுத்திக் கொண்டதையும் பாராட்டலாம் .

ஒளிப்பதிவு இசை  பற்றி எல்லாம் சொல்ல ஒன்றும் இல்லை.

ஓடுகாலியாக அறிமுகம் ஆகும் ஒருவன் உண்மை அன்பால் உள்ளம் நெகிழ்ந்து செய்யும் உதவியால் குல தெய்வத்தின் நிலைக்கு உயர்கிறான் என்ற கான்செப்ட்டும் ஓகேதான் .

ஆனால் இந்த அடிப்படைக் கதையை திரைக்கதையாக அமைத்த வகையிலும் படமாக்கிய விதத்திலும்தான் ஏக சறுக்கல் .

சின்னச் சின்ன காட்சிகளைக் கூட ஐயோ போதும் விடுங்கய்யா என்று சொல்லும் நீளத்துக்கு எடுத்துக் காட்டுகிறார் இயக்குனர் .

ஆரம்பக் காட்சிகளில் ரெண்டு ரவுடி குரூப்புக்கு சண்டை என்பதைக் காட்ட எல்லோரும் ஓடுகிறார்கள் ஓடுகிறார்கள் .

ரசிகனின் பொறுமையின் ஓரத்துக்கே ஓடிக் கொண்டு இருக்கிறார்கள் .

குளோசப் மற்றும் வசனங்களிலும் இதே நீளம் . முடியலீங்க .

உட்கார்ந்து ஒழுங்கா ட்ரிம் பண்ணினால் அரை மணி நேரத்தை அலேக் ஆகத் தூக்கலாம் .

அது போல பையனைப் படிக்க வைப்பதில் அவ்வளவு குறியாக இருக்கும் அப்பா அவன் பள்ளியில் விட்டு ஆறு மாதம் முன்பு நின்று விட்டதே தெரியாமல் இருப்பதும் அநியாயம் .

 

படத்தின் அடிப்படை நோக்கமே ஆட்டம் காணும் அக்கிரமம் இது . (பையன் மேல் நம்பிக்கை என்று வசனத்தில் சமாளிப்பது எல்லாம் செல்லாது .. செல்லாது !)

அதே போல அப்பா தாங்கிக் கொள்ள மாட்டார் என்ற சால்ஜாப்பின் பெயரில் மாணவன் செய்யும் தகிடுதத்தங்களையும் நியாயப்படுத்துவதும் திரைக்கதையின் அரைவேக்காட்டுத்தனம் .

முடிவை முன் கூட்டியே சொல்லும் நாயகனின் அறிமுகக் காட்சி உட்பட நடக்கப் போவது எல்லாம் முன்னரே புரியும் படி காட்சிகள் வைத்து விட்டு, 

அப்புறம் அதையே நீட்டி முழக்கி விலாவரியகக் காட்டுவதும் பின்ன்னடைவே.இன்னும் பொருத்தமான திரைக்கதையும் அழுத்தமான படமாக்கலும் தேவைப்படும் படம் இது

வீரைய்யன் … தேவை இன்னும் தெம்பு !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *