வெள்ளைப் பூக்கள் @ விமர்சனம்

இண்டஸ் என்டர்டைமென்ட்ஸ் சார்பில்  அஜய் சம்பத் ,  திகா சேகரன் டென்ட் கொட்டா நிறுவனம் சார்பில்  வருண் குமார் ஆகியோர் தயாரிக்க , விவேக், சார்லி,  பூஜா தேவரியா, தேவ், , ஹாலிவுட் நடிகை பெய்ஜ் ஹென்டர்சன் ஆகியோர் நடிப்பில்  விவேக் இளங்கோவன் எழுதி இயக்கி இருக்கும் படம் வெள்ளைப் பூக்கள் , இந்த வெள்ளைப் பூக்கள் வாசனைப் பூக்களா? காகிதப் பூக்களா ? பேசுவோம் . 

தனது துப்பறியும் திறமையின் மூலம் குற்றவாளியைக் கண்டு பிடிப்பதில் திறமை மிக்க போலீஸ் அதிகாரி ஒருவர் ( விவேக்) , மனைவியும் இறந்து பணி ஓய்வும் பெற்று விட்ட நிலையில் அமெரிக்காவில் சியாட்டில் நகரில் வசிக்கும் தன் மகனோடு தங்குவதற்குப் போகிறார் . மகன் ஓர் வெள்ளைக்காரப் பெண்ணை ( பெய்ஜ் ஹென்டர்சன்) மணந்து கொண்டு அங்கு வசிக்கிறான் . அங்கு போன நிலையில் மருமகளுடன் பேசாமல் தவிர்க்கிறார்.

மகனின் சம்மதத்தோடு இந்தியாவில் ஒரு திருமணம் திட்டமிட்டு இருக்க, கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்பு மகன் தனது வெள்ளைக்காரியுடனான திருமணம் பற்றி தகவல் சொல்ல, அதன் மூலம் அதிகாரிக்கு கிடைத்த அவமானத்தால் வந்த கோவம் அது என்று பின்னால் சொல்கிறார்கள் .

 சியாட்டிலில் பக்கத்து வீட்டு தமிழர் ஒருவர் ( சார்லி) நண்பர் ஆகிறார் அவருக்கு மனைவியும் ஒரு மகளும் ( பூஜா தேவரியா) . 
தனக்கு ஏற்பட்ட சில பாதிப்புகளால் சிகிச்சை பெற்று வரும் அந்த மகள் எப்போது வேண்டுமானாலும் நிதானம் இழந்து கோபப் படுவாள் என்ற நிலை . 

வேறொரு, பக்கத்து வீட்டில் ஒரு வெள்ளைக்காரக் குடும்பம் . கணவன் மனைவிக்குள் ஊடலும் கூடலும். இன்னொரு, பக்கத்து வீட்டில் ஒரு உம்மணா மூஞ்சி பாகிஸ்தானி . அவன் வீட்டுக்கு அவ்வப்போது சில குழந்தைகள் கொண்டுவரப்பட்டு வலுக்காட்டாயமாக ஒரு அறைக்குள் தள்ளப் படுகிறார்கள் .

சற்று தள்ளி உள்ள ஒரு பகுதியில் போதை மருந்து உட்கொண்டு கத்தி ரத்தம் காமம் என்று பார்க்கும் ஒருவனிடம் ஒரு பெண்ணும் சிறுமியும் சிக்கி சித்திரவதை அனுபவிக்கிறார்கள் . அங்கிருந்து சில சிறுமிகளின் சடலமும் வெளியே போகிறது .

போலீஸ் அதிகாரியின் மகன் வசிக்கும் பகுதியில்  வெள்ளையரும் கருப்பினமுமாக சிலர் சேர்ந்து போதை மருந்து விற்கிறார்கள் . சிறு சிறு சண்டைகளிலும் ஈடுபடுகிறார்கள் . அவர்களோடு போலீஸ் அதிகாரிக்கும் வெள்ளைக்காரப் பெண்மணிக்கும் மோதல் ஏற்படுகிறது . அதைத் தொடர்ந்து வெள்ளைக்காரப் பெண்மணியும் அந்தப் பகுதி வாழ் மாணவன் ஒருவனும் கொடூரமாக தாக்கப்பட்டு ரத்தம் சிந்த சிந்த காணாமல் போயிருக்கிறர்கள் . 

ஆர்வம் காரணமாக ஒய்வு பெற்ற  போலீஸ் அதிகாரி இவ் வழக்குகளை துப்பறிய , இந்த நிலையில் அவர் வீட்டுக்குள்ளேயே ஒருவர் அப்படி தாக்கப் பட்டு ரத்தம் சிந்தி காணமல் போக , 
அப்புறம் நடந்தது  என்ன ? கொல்வது யார் ? காணமல் போன தனது உறவை போலீஸ் அதிகாரியால் மீட்க முடிந்ததா ? என்பதே இந்த வெள்ளைப் பூக்கள்.

 தமிழில்  ஒரு அமெரிக்கப் படம் !

விவேக் இளங்கோவனின் இயக்கம், படமாக்கல் , மிக அருமை .  தொழில் நுட்ப நேர்த்தி, சில ஜாலங்கள் ,ஃபிரேமிங்கஸ் எல்லாம் மிக அருமையாக செய்துள்ளார் இயக்குனர் .  தொழில் நுட்ப  திறனுக்கு ஒரு வாழ்த்துப் பூங்கொத்து.\

 ஒவ்வொரு வழக்கு பற்றியும் யோசிக்கும் போது போலீஸ் அதிகாரி தானே அந்த கொலைகளை செய்தது போல யோசிக்கும் உத்தி சிறப்பு என்றால் , தன் வீட்டுக்குள்ளேயே சம்பவம் நடந்த நிலையில் அப்படி யோசிக்க முடியாமல் உடைவது நெகிழ்ச்சி. அதேபோல கற்பனையாக எல்லா கதாபாத்திரங்களிடமும் உரையாடுவது போல நினைவுகளில் பயணிக்கும் உத்தியும் மிக அருமை .

 நம்ம ஊரு பிச்சிக்கிற தழையைப் போல அரிப்பு எடுக்கிற ஒரு  பூவை எல்லாம் ஆர்வத்தோடு  திரைக்கதையில் தொடுத்து கொடுக்கிறார்கள் . குட் !பிளாஷ்பேக்கில் வரும் சிறுமியின் முகமும் நடிப்பும் அபாரம் . இதுவரை தமிழ்ப் படங்களில் கிடைக்காத ஓர் உணர்வு அந்த சிறுமி வரும் காட்சிகளில் !அந்த சிரியா அகதிகள் விஷயம் நெகிழ்ச்சி .

 பாகிஸ்தான்காரன் என்று சொல்லி விட்டு அவனை நல்லவன் என்று சொன்ன மா ஆ ஆ ஆ ஆ பெரும் குற்றத்துக்காக இன்று முதல் நீங்களும் ஆன்ட்டி இண்டியன்கள் என்றே அழைக்கப் படுவீர்களாக!
படம் பார்க்கும் வெகு ஜன ரசிகனை  குழப்புவதற்கு ஏற்றபடி பூஜா தேவரியா கதாபாத்திர வடிவமைப்பு , போலீஸ் அதிகாரியும் மருமகளும் பேசிக் கொள்ளும் காட்சி மூலம் அவர் வீட்டில் கடத்தப்பட்டது யாராக இருக்கும் என்று ஒரு யூகத்துக்கு வர வைத்து அப்புறம் அதில் சொல்லும் திருப்பம் என்று 

திரைக்கதையிலும் ரசிக்கப் பல விஷயங்கள் உண்டு . ஆனால் .. (சரி அதை அப்புறம் பேசுவோம்)

ஒய்வு பெற்ற ஹீரோக்கள் நடிக்க வேண்டிய  கேரக்டரில் நடித்து இருக்கிறார் விவேக் . அவர் நடிப்பைப் பொறுத்தவரை குறை சொல்ல ஒன்றும் இல்லை . அழும் காட்சி ஒன்றில் நெகிழ்த்துகிறார் . 
சார்லி தனக்கே உரிய குரல் நடிப்பு, முக்கிய இடங்களில் கரகரப்பு, என்று பக்குவமாக இயல்பாக நடிக்கிறார் . தேவ் , பூஜா தேவரியா தேவலாம் .

பெய்ஜ் ஹென்டர்சன்  பேசும் தமிழ் அழகு . நடிப்பும் சிறப்பு . கிளைமாக்சில் திடீர் திடீர் என காஞ்சனா மாதிரி எக்ஸ்பிரஷன் தருவதற்கு அவரைக் குறை சொல்ல முடியாது .  அதிகம் பேசாமலே அசத்துகிறார் அந்த அமெரிக்க பெண் போலீஸ் அம்மணி .

 ஜெரால்டு பீட்டரின் ஒளிப்பதிவில் இள வெயிலும் ஒளி இரவுமாக  எக்ஸ்ட்ரீம் லாங் மற்றும் ஹெலி ஷாட்கள்  மூலம் லொக்கேஷன்கள் ஒளிர்கின்றன. வண்ண ஆளுமை சிறப்பு . எக்ஸ்போஷர், புராசசிங் இரண்டும் அபாரம்.  பாலாஜி கோபாலுக்கும் பாராட்டுக்கள் .மிகச் சிறப்பான படத்தொகுப்பால் இழுத்துக் கட்டப்பட்டிருக்கிறது படம் , சபாஷ் பிரவீன் கே எல் . ராம் கோபால் கிருஷ்ண ராஜுவின் இசையில் ‘இந்த முகங்கள் பழகிப் போகும்’ பாடல் அருமை . பின்னணி இசை ஒகே ராகம்தான்.  

பிரச்னை என்ன வென்றால் , 

போலீஸ் அதிகாரி துப்பறியும் வழக்குகள் யாவும் அவர் விலாவரியாக கதாகாலட்சேபம் செய்யும்போதுதான் ரசிகனுக்கு புரிகிறதே தவிர , அந்த மர்மங்கள் இயல்பாக புரியும்படி காட்சிகள் இல்லை . படத்தின் ஆரம்பத்தில் விவேக் துப்பறியும் காட்சியில் கூட அதே பிரச்னை . சரி அது ஏதோ ஹீரோ பில்டப் காட்சி போல . போனா போகட்டும் . இனிமே சரியாக சொல்வார்கள் என்று பார்த்தால் கடைசிவரை அதே உத்திதான் . 

ரசிகனின் கோணத்தில் மர்மங்கள் விடுபட்டல்தானே அவனுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் . அதை விட்டு விட்டு  எல்லாவற்றையுமே ஒரு மூன்றாம் மனிதன் இடத்தில் இருந்துதான் அவன் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அவனுக்கு எப்படி படம் ரசிக்கும்படி அமையும் ?ரசிகனின் கோணத்தில் இருந்து ஒவ்வொரு முடிச்சும் அவிழ்வது அல்லவா அவசியம் ?

துப்பறியும் சாம்பு கதையை காமெடியே இல்லாமல் படித்தால் எப்படி இருக்கும் அப்படி இருக்கிறது படத்தில் நடக்கும் சம்பவங்கள் . 
படத்தில் சம்பவங்கள் தரும் விறுவிறுப்பை விட , துப்பறிதல் விறுவிறுப்பாக இருந்தால்தானே ரசிகர்களை பெரிதாக கவரும் . இங்கே சம்பவங்கள் விறுவிறுப்பாக இருக்கு . ஆனால் துப்பறிதல் ?. அதாவது  ஆப்பரேஷன் சக்சஸ் . ஆனால் … 

வித்தியாசமான திருப்பங்கள் முக்கியம்தான் . ஆனால் ஏற்றுக் கொள்ளும்படி கிளைமாக்ஸ் இருப்பது மிக அவசியம் அல்லவா ?
படம் முடியப் போகிற நேரத்தில் , “பாருங்கப்பா… இதுவரை நீங்க பார்த்ததுல இந்த இந்த காட்சிகள் எல்லாம் பிளாஷ் பேக்கு ” என்று புதிதாக சொல்லி படம் பார்ப்பவனை எல்லாம் பேக்கு ஆக்கினால் எப்படி ?நாவல்களில் அந்த உத்தி  எடுபடும் . 

ஆனால் சினிமாவில் என்றால் … வண்ணத்தில் , உடையில் , பேச்சில், பின் புலத்தில் , படமாக்கும் தொழில் நுட்ப உத்திகளில் அது பிளாஷ் பேக் என்பதற்கான ஏதாவது ஒரு க்ளூ வை விட்டு வைத்து ,, அதை ரசிகன்  கண்டு பிடிக்க முடியாத வண்ணம் திறமையாக வைத்து , பின்னால் அது பிளாஷ் பேக் என்று சொல்லப்படும்போது ‘அட ஆமாம் . நாமதான் கோட்டை விட்டுட்டோம்’ என்று ரசிகனை வியக்க வைப்பது அல்லவா தில்லு ? 

அது இல்லாமல் திருப்பம் என்ற பெயரில்  வண்டியைக் கவிழ்ப்பது…. போங்கப்பா , போங்கு ஆட்டம் !

சியாட்டிலில் சி சி டி வி கேமரா இல்லாத இடம் இருக்கிறதா ? ( இங்க ரெண்டு சேர் சலூன் கடையில மூணு கேமரா வச்சிருக்கான் பாஸ் . எதுக்குன்னே தெரியல ) அப்படியே இருந்தாலும் பிரச்னைக்கு உரிய தெரு என்றானபின் உடனடியாக  சிசிடிவி கேமரா பொறுத்த முடியாத அளவுக்கு சியாட்டில் நகர நிர்வாகம் சீர் கெட்டுக் கிடக்கிறதா ? (தெரியலையே ஞாயமாரே)ஏலே..ட்ரம்ப்புக்கு ஒரு போன் போடுலே … என்ன செலவானாலும் பரவால்ல.

 அது மட்டும் அல்ல .. கடைசி காட்சி இப்படி பிரச்சார பீரங்கியாக முடிவதற்கு பதில், ஓர் இழப்பு அதன் வலி , அதன் மூலம் வரும் புதிய புரிதல் பக்குவம் என்று படம் முடிந்து இருந்தால் இன்னும் கனமாக , அர்த்தமுள்ளதாக நெகிழ்வாக இருந்திருக்கும் . 

மொத்தத்தில் வெள்ளைப் பூக்கள் ……  (படமாக்கல் என்ற செனட்டால்) மணம் வீசும்  காகிதப் பூக்கள் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *