விதி மதி உல்டா @ விமர்சனம்

ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் , ரமீஸ் ராஜா, ஜனனி ஐயர், 

டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், ஞானசம்மந்தன் , சித்ரா லட்சுமணன், ஆதித்யா டி.வி. குட்டி கோபி, லோகேஷ், ஆதித்யா கதிர்.ஆகியோர் நடிப்பில் 

ஏ ஆர் முருகதாசிடம் உதவியாளராக இருந்த விஜய் பாலாஜி எழுதி இயக்கி இருக்கும் படம் விதி மதி உல்டா . 

ஒற்றைப் பிள்ளையாய் சோம்பேறியாய் வாழும் சுகவாசி இளைஞன் ஒருவனுக்கு ( ரமீஸ் ராஜா ) ,

தன் பெற்றோருக்கு ஒற்றை மகளாய் வாழும் ஓர் அழகான இளம்பெண் ( ஜனனி) மீது காதல் வருகிறது . 

அவளும் மறுக்கும் நிலையில்  எல்லாம் இல்லை  

தரகுத் தொகையை ஒழுங்காகத் தராத ஒருவரிடம் (பேராசிரியர் ஞானசம்மந்தன்) இருந்து பத்து மடங்கு அதிக தொகையை வசூலிக்க எண்ணி அவரது மகனான  அந்தக் காதலனை புரோக்கர் (சென்றாயன்) தலைமையிலான ஒரு குழு கடத்துகிறது   . 

ஒரு பெரிய தாதாவின் (டேனியல் பாலாஜி) தம்பியான ரவுடி ஒருவன்  அந்தக் காதலி மீது ஆசைப் பட , தாதாவுக்கு தெரியாமல்  அவளை தம்பி கடத்துகிறான் ஒரு குழுவுக்கு இன்னொரு குழு பற்றிய அறிதல் இல்லாமலேயே ஒரு பாழடைந்த  பங்களாவின் அடுத்தடுத்த அறைகளில் இருவரையும் தனித் தனியாக அடைக்கின்றனர் . 

இரண்டு குழுவுக்கும் மோதல் வந்து பின் இணைந்து கொள்கிறது .நாயகனும் நாயகியும் தப்பித்து அறைகளை விட்டு வெளியே வருகிறார்கள் 

தாதாவின் முக்கிய கையாளான ஒருவன் (கருணாகரன் ) தாதாவுக்கு எதிராகவே சில செயல்களை மறைமுகமாக செய்பவன் . அவனும் அங்கே வர , கடத்தல் குழுக்களுக்கும் அவனுக்கும் சண்டை வர , தாதாவின் தம்பியை  அந்த முக்கியக் கையாள்  கொல்கிறான். 

இந்த நேரம் பார்த்து நாயகன் நாயகி தப்பிக்கிறார்கள் . 

தாதா அங்கு வர, பயந்து போன கொலைகாரன்  , தம்பியைக் கொன்றது அந்த காதலன்தான் என்று பழியை நாயகன் மீது போடுகிறான் . 

பொங்கி எழும்  தாதா , நாயகி , அவளது பெற்றோர் , நாயகனின் பெற்றோர் அனைவரையும் கொன்று விட்டு , ஹீரோவைக் கொல்லாமல் விட்டு ” என் தம்பியை இழந்து நான் படும் வேதனையை நீ பல மடங்கு அனுபவி ” என்று சொல்லி விட்டுப் போக .. 

திடுக்கிட்டு விழிக்கிறான் நாயகன் . இதுவரை அவன் பார்த்தது எல்லாம் கனவு … எந்த கொடுமையும் நடக்கவில்லை என்று நிம்மதி அடைகிறான் . ஆனால் அடுத்த மணி நேரங்களில் ஆரம்பிக்கிறது வில்லங்கம் !

கனவின் துவக்கத்தில் அவன் பார்த்த சில சம்பவங்கள் நிஜத்தில் அதே முகம் கொண்ட நபர்களுடன் நடக்க ஆரம்பிக்கிறது . நடுங்கிப் போகிறான் .

இது இப்படியே தொடர்ந்தால் கடைசியில் அது அவனுடைய அப்பா அம்மா , இன்னும் அறிமுகம் ஆகாத ஓர் அழகான இளம்பெண் அவளது பெற்றோர் ஆகியோரின் மரணத்தில் போய் முடியுமே !

எனவே அப்பாவிடம் சொல்லி புரோக்கருக்கு உடனே பணத்தை கொடுக்கச் சொல்கிறான் . 

கனவில் வந்த பெண்ணும் நேரில் வர, அவளைப் பார்த்து அவள் கடத்தப் பட இருப்பதையும் சொல்கிறான் . கனவில் வந்தது போலவே அவர்களுக்குள் காதலும் வர, இன்னும் பயம் அதிகம் ஆகிறது . 

என்ன முயன்றும் கனவில் நடந்த கடைசி நிகழ்வை நோக்கியே சம்பவங்கள் நகர , கடைசியில் நிஜத்தில் நடந்தது என்ன என்பதே இந்த விதி மதி உல்டா . 

தமிழ் சினிமாவில் அதிகம் புழங்காத கதை .  திரைக்கதையும்  சுவாரஸ்யமாகவே போகிறது . 

சின்னச் சின்ன நகைச்சுவைகள் , இலகுவான கதை ஓட்டம் எல்லாம் படத்துக்கு பலம் . 

இடைவேளை எல்லாமே கனவு என்று புரிந்து , கனவில் நடந்த ஆரம்ப  சம்பவங்கள் போலவே நிஜத்திலும் நடக்கும்போது பரபரப்புக்கு பஞ்சம் இல்லை .  அந்த வகையில் இயக்குனர் விஜய் பாலாஜி பாராட்டுக்குரியவர் ஆகிறார் . 

பாடல் காட்சிகளை ரசிப்புக்குரியதாக எடுத்து இருக்கிறார் . ஜனனி அய்யர். யப்பா ஆ ஆ ஆ ஆ …. ! படத்துக்கு ரசிகர்களை கூட்டியே தீருவேன் என்று சபதம் போட்டு ஜனனி அய்யருக்கு காஸ்டியூம் கொடுத்து இருக்கிறார்கள் . 

மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவு நிலாப் பயணம் போல குளிர்ச்சியாக இருக்கிறது . பாடல்கள் ஓகேதான் என்றாலும் அஸ்வின் விநாயகமூர்த்தியின் பின்னணி இசை  பெட்டர் .

வன ராஜின் கலை இயக்கம் அருமை . அரங்கப் பொருட்களில் சிரத்தை ! குறிப்பாக ஹீரோ வீட்டு சுவர்க் கடிகாரம், விழுந்து உடையும் கண்ணாடி பாட்டில், ஹீரோவின் அப்பாவுக்கு பரிசாக வரும் போர்வாள்.இப்படி .. இத்யாதி … 

ரமீஸ் ராஜா மிக இயல்பாக எளிமையாக கியூட்டாக நடித்து இருக்கிறார் . சிறப்பு . இன்னும் சிறப்பான காதலும் ஆக்ஷனும் கலந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கலாம் . 

ஜனனி அய்யர் ரமீஸ் ராஜா என்ற ஜாடிக்கு பக்காவாக செட் ஆகும் மூடி !டேனியல் பாலாஜி மிரட்டுகிறார் . கருணாகரன் ஜஸ்ட் லைக் தட் . அம்புட்டுதேங்  !  

சென்றாயன் , அவர் கூட வரும் நண்பர்கள் கலகலப்புக்கு கட்டியம் கூறுகிறார்கள் . 

இரண்டாம் பகுதியை இன்னும் சிறப்பாக எழுதி இருக்க வேண்டும் . முற்றிலும் வேறு மாதிரியான சம்பவங்கள் , நல்ல  டீட்டெயிலிங் , இன்னும் சுவாரசியம் ,  பரபரப்பு என்று கொண்டு போய் இருக்கலாம் . 

நாயகனின் திட்டங்களுக்கு அப்பாற்பட்டு  சம்பவங்கள் நடந்து கடைசியிலான விபரீதத்தை நோக்கி பயணிப்பதை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம் . 

சில காட்சிகளை காமெடியாக சொல்வதா இல்லை சீரியசாக சொல்வதா என்ற குழப்பமும் தெரிகிறது . 

எனினும் 

விதிமதி உல்டா .. ஓர் வித்தியாசமான முயற்சி . ரமீஸ் ராஜாவுக்கு நல்ல அடையாளம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *