‘விசிறி’ பட இசை விழாவில் பா ஜ க வை விளாசிய எஸ் ஏ.சி .

“தல-தளபதி” என்றாலே, அது பரபரப்பு பற்றிக் கொள்ளும் விசயம்தான். அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்து படமாக்கப்பட்ட ,
 
“விசிறி” படத்தின் இசை வெளியீட்டு விழா மட்டும் சாதாரனமகா இருக்குமா ? அதுவும் பக்கா  பரபரப்பாக நடந்தது 
 
“வெண்ணிலா வீடு” படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம்  “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார்.
 
அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிக்க, கதாநாயகியாக :ரெமோனா  ஸ்டெபனி நடிக்க, 
 
 இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
 
இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர் ஆகிய மூவர் பணியாற்றியிருக்கிறார்கள். பாடலாசியர் மதன் கார்க்கி இந்த படத்தின் முக்கியமான பாடலை எழுதியிருக்கிறார். 
 
திரையிடப்பட்ட  முன்னோட்டமும் பாடல்களும் விஜய் அஜித் ரசிகர்களுக்கு இடையே இருக்கும் மோதலை , அவர்களின் வாழ்வின் , காதல் முதலிய மற்ற அம்சங்களை பேசும் வகையில் இருந்தன . 
 
விசிறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர் ஆரி,
 
பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அரசியல்வாதியாக இல்லாமல்,
 
படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்து இருக்கும் ஒரு  நடிகராகவும்  தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார்  கலந்துகொண்டார்.
 
பாஜக நபரை மேடையில் வைத்துக் கொண்டே, பத்மாவதி இந்திப் படத்துக்கு பாஜகவினர் செய்யும் இடையூறுகளைப் பற்றிப் பேச ஆரம்பித்த நடிகர்  ஆரி,
 
“கருத்து சுதந்திரம் குறித்து எல்லோரும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் இப்போது சினிமாக்காரர்கள் மட்டுமல்ல,
 
நாடு முழுவதுமே கருத்து சுதந்திரம் குறித்த கேள்விகள் எழுந்த வண்ணமே இருக்கிறது. சம்பந்தப்பட்ட கட்சியின் பொறுப்பாளர் நம்மோடு இங்கே மேடையில் இருக்கிறார்.
 
அவரிடம் சொன்னால் நமது பிரதமர் மோடியிடமே சொன்னது போலாகும். அதனால், தயவு செய்து  கலைத்துறையினரின்  கருத்து  சுதந்திரத்தில் கை வைக்க வேண்டாம் என்று, 
 
இந்த மேடையின் வாயிலாக ஒரு தமிழனாக அல்ல அல்ல .. ஓர் இந்தியனாகவே வேண்டுகோள்  வைக்கிறேன்” என்று திரியைப் பற்ற வைத்தார்.
 
அடுத்து பேசிய பி.டி.அரசகுமார், “மோடி அரசும், தமிழக பாஜகவும் கருத்து சுதந்திரத்தில் கை வைப்பதாக சொன்னதற்கு முதலில் பதில் சொல்லி விடுகிறேன்.
 
 
தம்பி விஜய் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர். அவருக்குத் தமிழகமெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
 
அவர் ஒரு விசயத்தைப் பேசுகிறார் என்றால் அது வெகு சீக்கிரமாக மக்களை சென்றடைகிறது.
 
இப்படி இருக்கும் சூழலில்  மெர்சல் படத்தின் மூலமாக தம்பி  விஜயால்  ஜி எஸ் டி பற்றிய ஒரு  தவறான கருத்து, 
 
வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதால்தான் நாங்கள் எதிர்த்தோம்” என்று பேசினார்.
 
ஆரி பற்ற வைத்த சிறு நெருப்பை, பெரு நெருப்பாக மாற்றினார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
 
“நான் இன்று இந்த இடத்தில் நிற்கிறேன் என்றால் எனது நேரம் தவறாமையே காரணம். நேரத்தைக் கடத்தாமல் ஒவ்வொரு நொடியையும், பொன்போல மதித்து நடந்தாலே வெற்றி பெறலாம்.
 
பி.டி.அரசகுமார் பேசும்போது,ஒரு நடிகர் ஒரு தவறான கருத்தை பேசும்போது அது எளிதில் மக்களை சென்றடைவதாகச் சொன்னார்.
 
இதற்கு நான் பல பேட்டிகளில் பதில் சொல்லிவிட்டேன், இருந்தாலும் இந்த மேடையிலும் சொல்கிறேன். சினிமா வேறு, அரசியல் வேறு, வாழ்க்கை வேறு.
 
சினிமாவில் கொடூரமான வில்லன்களாக நடிப்பவர்கள் நேரில் குழந்தை மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
 
அதேபோல் நம்மோடு குழைந்து பேசுபவர்களும் சில நேரங்களில் நம் கழுத்தறுத்து விடுவார்கள்.
 
எம்.ஜி.ஆர் காலத்தில் கலைஞரை கைது செய்த போது, கண்டித்து ஒரு பக்க அளவிற்கு பத்திரிக்கையில் நீதிக்கு தண்டனை என்ற பெயரில் கண்டனம்  செய்தவன் நான்.
 
நான் எந்த கட்சியையும் சாராதவனாக இருந்தாலும், கலைஞரை எனக்கு பிடிக்கும் என்கிற காரணம்தான் அது.
 
 அதாவது முதல்வர் எம்ஜிஆரையே எதிர்த்து விளம்பரம் வெளியிட்டேன் . பிறகு அந்தப் பெயரில் கலைஞரின் கதை வசனத்தில் படம் எடுத்தேன் .
 
அது  எம்ஜிஆருக்கு எதிரான படம் என்றே அமைந்தது . 
 
ஆனால் அந்தப் படத்தைப் பார்த்த எம்ஜிஆர்  என்னை அழைத்து பாராட்டி வீட்டில் உணவு உபசரிப்பு தந்தார் .
 
படம் பிரம்மாதமா எடுத்து இருக்க . எம் ஜி ஆர் பிக்சர்சுக்கு  படம் பண்ணு ‘ என்றார் . அவ்வளவு நாகரிகம் நிறைந்த அரசியல்வாதிகள் இருந்த மாநிலம் இது .
 
 
அவர்கள் அரசியலையும் சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்தறிகிற ஆற்றலும், நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள்.   
 
தவிர அவருக்கு தான் இருக்கும் வரையில் வேறு யாரும் முதல்வராக வர முடியாது என்ற நம்பிக்கை இருந்தது . இன்று எந்த ஆட்சியாளருக்கும் அந்த நம்பிக்கை இல்லை . 
 
எங்கே ஏதாவது ஒரு நடிகன் நாடாள வந்துவிடுவானோ? என்ற பயத்திலேயே இருக்கிறார்கள்.
 
அதனால்தான் இவர்களால் சினிமாவையும், அரசியலையும் வேறு வேறாக பிரித்தறிய முடியவில்லை.
 
“விசிறி” படம் “அஜித்-விஜய்” ரசிகர்கள் மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள்.
 
இந்த பிரச்சனை இப்போது மட்டும் இல்லை, எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்திற்கு முன்பிருந்தே தொடங்கிய ஒன்று.
 
ரசிகர்களே சூப்பர் ஸ்டார்களை உருவாக்குகிறார்கள், ரசிகர்கள் இல்லாவிட்டால் இங்கு சூப்பர் ஸ்டார்கள் இல்லை.
 
இந்த சூப்பர் ஸ்டார்களின் ரசிகர்கள் மோதிக்கொண்டாலும், நடிகர்கள் நண்பர்களாக ஒற்றுமையாகவே இருக்கிறார்கள்.
 
அதனை உணர்ந்து இரு தரப்பு ரசிகர்களும் ஒன்றிணைந்தால் புது சரித்திரத்தையே இங்கு உருவாக்க முடியும்.
 
அதேபோல எல்லா நடிகர்களுடைய ரசிகர்களும் ஒன்றிணைந்தால் தவறு செய்கிற அரசியல்வாதிகள் எல்லாம் தலைதெறிக்க ஓடி விடுவார்கள்.
 
ஊழல்வாதிகள் எல்லாம் ஒழிந்து போவார்கள். அந்த இளைஞர்களால் மட்டுமே நம்முடைய வரிப்பணத்தை எல்லாம், 
 
தங்கள் பைகளில் போட்டுக்கொள்ளும் அரசியல்வாதிகளை பஞ்சு பஞ்சாக விரட்டியடிக்க முடியும்.
 
அந்த காலம் வந்துவிட்டது, மெரினாவில் கூடிய இளைஞர் பட்டாளமே அதற்கு சான்று.
 
இளைஞர்கள் வந்துவிட்டார்கள், இனி எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளவும். நான் பாஜகவையும் சேர்த்துதான் சொல்கிறேன்.
 
தமிழர்கள் நாங்கள் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கிற கோட்பாட்டில் வாழ்பவர்கள். இங்கு தேவையில்லாமல் ஜாதியையும், மதத்தையும் ஏன் திணிக்கிறீர்கள்? 
 
நான் கிறிஸ்தவன் . என் மனைவி இந்து . நாங்கள் மதத்தால் பிரியவிலையே . அவ்வளவு ஏன் ?
 
என் பெயர் சந்திரசேகரன் . சந்திரசேகரன் என்றால் சிவன் என்று பொருள் . இது என்ன கிறிஸ்தவப் பெயரா ?
 
 அப்படி இருக்க, ஒரு கட்சியின் முக்கியமான பதவியிலிருக்கும் ஒருவர் பொறுப்பில்லாமல் ஜாதி, மத அடிப்படையிலான கருத்துக்களை சொல்வது எவ்வளவு மோசமான செயல்?
 
இங்கிருக்கிற அரசியல்வாதிகள் எல்லாம் படத்தைப் பார்க்காமலேயே விமர்சனம் செய்யக் கிளம்பிவிடுகிறார்கள்.
 
படத்தில் எந்த மாதிரியான சூழ்நிலையில் அந்த வசனம் இடம்பெறுகிறது என்பதைக் குறித்து எந்த கவலையும் இல்லை. தயவுசெய்து மற்ற மாநிலங்களில் இருப்பது போல் தமிழ் சினிமாவை வாழவிடுங்கள்” என்று பேசினார்.
 
பாஜக பிரமுகரை வைத்துக் கொண்டே எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படியெல்லாம் பேச, அரங்கமே அதிர்ந்தது.
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *