விவேகம் @ விமர்சனம்

viveg 2

அகில உலக தீவிரவாத எதிர்ப்பு முகவாண்மை அதிகாரி அஜய் குமார் (அஜித் குமார் ) . அவரது கருத்தொருமித்த காதல் மனைவி யாழினி (காஜல் அகர்வால்) .

அஜித் குமாரின் தொழில் முறை நண்பர் (விவேக் ஆனந்த் ஓபராய்) 

பல்வேறு  நாடுகளின் அரசாங்களின் முக்கியப் புள்ளிகள் , அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள் இணைந்து நடத்தும் நிழல் அரசாங்கம் ஒன்று உலகம் எங்கும் பல்வேறு விதமான ஆயுதங்களை,

 வியாபாரம் செய்வதற்கென்றே  போர்களை உருவாக்கவும் வளர்க்கவும் விரும்பும் நேரத்தில் நிறுத்தவும் சக்தி கொண்டு செயல்படுகிறது . 

பூமிக்கடியில் வெடி ஆயுதங்களை புதைத்து விரும்பும் நேரத்தில் சாட்டிலைட் சிக்னல் மூலம் வெடிக்க வைத்து அதை  இயற்கை பூகம்பம் போல காட்டும் அளவுக்கு திட்டங்களோடு செயல்படுகிறது . 
அப்படி செயற்கை பூகம்ப வெடி புதைப்புகளில் ஒன்று  டெல்லியில் புதைகப்பட்டு இருக்கிறது .
viveg 1
இதற்கு காரணமான நபர்களை கண்டு பிடித்து,
 வெடிக் கருவிகளை செயலிழக்க வைக்கும் ஆப்பரேஷனில் அஜய் குமாரும் நண்பரும் தன் சகாக்களுடன் இறங்குகின்றனர் . 
ஒரு நிலையில் அந்த நிழல் அரசாங்கத்தின் ஆட்களில் தன் நண்பரும் மற்ற சகாக்களும் உண்டு என்பது , தன்னை அவர்கள் கொல்ல முயலும்போதுதான் அஜய் குமாருக்கு புரிகிறது . 
கர்ப்பிணியாய் இருக்கும் காதல் மனைவியைப் பிரிந்து பல உயிராபத்துகளை சந்திக்கும் அஜய்  குமார் அவருக்கும் அவர் மனைவியின் உயிருக்கும் வரும் ஆபத்துக்களை மீறி,
 எப்படி வெடிப்புத் திட்டங்களை முறியடித்து இந்தியாவையும் உலகையும் காப்பாற்றினார் என்பதுதான் …. (பை தி பை , கிண்டல் பண்ற மாதிரி தெரியல இல்ல ?)  விவேகம் . 
செர்பியப் பனிப் பிரதேசங்களில் சம்மந்தப்பட்ட பூகம்ப  வெடி வெடிப்புக்கான ஹார்ட் டிஸ்க் ஒன்றை அஜய் குமார் கைப்பற்றும் ஆக்ஷன் பிளாக்கோடு தொடங்குகிறது . 
viveg 3
லொகேஷன் , ஒளிப்பதிவு , ஷாட் மேக்கிங் எல்லாம் அபாரம் . 
வெண்பனி சூழ்ந்த அயல்நாட்டில் தமிழ் உணவு உணவு விடுதி  நடத்திக் கொண்டு, வெள்ளைக்காரப் பிள்ளைகளுக்கு பாரதியார் பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டு கணவனை காதலிக்கும் கதாநாயகி . 
கம்பியூட்டர் ஹெக்கராக வந்து பூகம்ப வெடிப்புக்கான பாஸ் வேர்ட் விவகாரத்தில் சிக்கி , நாயகனால் காப்பாற்றப்பட முயன்று  அப்புறம் ……. வேடத்தில் அக்ஷரா ஹாசன் . 
ஆரம்ப ஆக்ஷன் காட்சிக்கு பிறகு வெகு சாதரணமாக போகும் படம் அக்ஷராஹாசன் பகுதியில் திரைக்கதை ரீதியாக  கொஞ்சம் ஆறுதல் தருகிறது . அந்த ஹோலோக்ராம் ஐடியா அருமை . 
நண்பனின் சகாக்களை ரயில் ஓடும் சுரங்கத்தில் அஜய் குமார் போட்டுத் தள்ளும் பகுதி லாஜிக்கில் லக லக ஆனாலும் ( ஏன் அப்படியே , ஓடும் ரயிலில் உரசி உரசி கத்திக்கு சாணை பிடிக்க வேண்டியதுதானே ?)
மேக்கிங்கில் மிரட்டல் . 
viveg 6
கிளைமாக்ஸ் எல்லா வகையிலும் ஏமாற்றம் . 
அஜித் குமார்  தனி மனிதராக ஈர்க்கிறார், வழக்கம் போலவே !  ( பல்வரிசையை கொஞ்சம் கவனியுங்கள் அஜித் !)  
விவேக் ஓபராய் ரசிக்கும்படி நடித்துள்ளார் . அக்ஷறா  ஹாசன் கவனிக்க வைக்கிறார் . காஜல் ஜஸ்ட் ஒகே . 
கருணாகரன் வரும் காட்சிகளில் அவர் ஜோக் என்று எண்ணி பேசுவது  எல்லாம் அபத்தம் . நல்ல நகைச்சுவை நடிகரான சுவாமிநாதனே சொதப்பி இருக்கும் படம் இது .
காமெடி வரலன்னா விட்டுட வேண்டியதுதானே . இவற்றை எல்லாம் வெட்டி எறிந்தாலே படம் இரண்டே கால் மணி நேரத்தில் முடிந்து இருக்கும் . (இப்போ கூட தப்பில்ல .. யோசிங்க )
அஜித்தின் ஆக்ஷன் காட்சிகளும் காஜலின் செண்டிமெண்ட் காட்சிகளும் பழசாப் போன கோழி குருமாவையும் ஊசிப் போன பருப்பு சாம்பாரையும் ஒன்றாகக் கலந்த மாதிரி இருக்கிறது . 
viveg 4
உயர்ந்த கோபுரக் கூண்டின் உச்சியில் இருந்து சரேலென தாவிப் பாய்ந்து இறங்கி  சாலையைத் தொடுவது போன்ற காட்சிகளில் வெற்றியின்  ஒளிப்பதிவும்  இயக்குனர் சிவாவின் ஷாட் மேக்கிங்கும் அசத்தலோ அசத்தல் 
அனிருத்தின் இசை ஏமாற்றி விட்டது . பாடல் வரிகளும் பலமில்லை . 
நாலு வார்த்தையில் சொல்ல வேண்டிய  விஷயத்தை கூட நீட்டி முழக்கி முப்பது வார்த்தை போட்டு  முட்டி மோதி சொல்கிறார்கள் . குறைவான வார்த்தை அதிக விஷயம் என்பதுதான் பஞ்ச் டயலாக்குக்கு பலம் சேர்க்கும் 
படம் முடிந்து டைட்டில் ஓடும் போது காட்டப்படும் விசயங்களை வைத்துதான் அஜித் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்துள்ளார் என்பதும் ,
அஜித்தும் அக்ஷராவும் பைக்கில் பறக்கும் காட்சியில் கொஞ்சம் அசந்திருந்தால் இருவரும்  நிஜமாகவே சில்லு சில்லாக சிதறி இருப்பார்கள் என்பதும் புரிகிறது . 
அந்த திரில் எல்லாம் படத்துக்குள் தெரிய வேண்டாமா ?
viveg 5
இவ்வளவு பெரிய ஹீரோவை வைத்துக் கொண்டு  சமூக அக்கறையுடன் கூடிய ஒரு சிறப்பான கதையை ஆக்ஷன் அட்டகாசத்துடன்  சொல்லக் கூடாதா ? 
இப்படியா பழைய கிரைண்டரில் இருந்து வழித்து புது கிரைண்டரில் போட்டு அரைப்பது ?
எங்கெங்கோ போய் படம் எடுக்கும்போது அந்த லோக்கேஷன்களை சூழலை சிறப்பாக காட்டக் கூடாதா ?
 (உதாரணமாக ஆரம்பத்தில் அஜித் தப்பிக்கும் அந்த அணைக்கட்டு. அதன் விஸ்தீரணம் பிரம்மாண்டம் சொல்லும்படி உருப்படியாக ஒரு ஷாட்டாவது அந்தக் காட்சியில் இருக்கா ? ) 
இப்படி  டக் டக் என்று தெறிப்பதற்கு எதற்கு அங்கே எல்லாம் போக வேண்டும் ? ஆரம்பம் முதல் கடைசிவரை நின்னு நிதானிக்காமல் தட தட என ஓட்டுவதுதான் எடிட்டிங்கா ?
பனியிலும் மழையிலும் பல்வேறு நாடுகளிலும் ஷூட்டிங் நடத்துவதில் பட்ட கஷ்டத்தில் நூற்றில் ஒரு பங்கை திரைக்கதை அமைப்பதில் காட்டி இருக்கக் கூடாதா ?
viveg 7
ஹாலிவுட் தரம் என்பது எல்லாம் தொழில் நுட்பத்தில்தான் இருக்க வேண்டும். படம் நம்ம படமாக இருக்க வேண்டாமா ? சும்மா ஃபாரின் , பனிப் பிரதேசம் என்று சீன் காட்டினால் ரசிகன் மயங்கி விடுவானா ?
மொத்தத்தில் , 
விவேகம் …. இல்லை 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
——————————————–
ஒளிப்பதிவாளர் வெற்றி , ஸ்டன்ட் இயக்குனர்கள் கணேஷ் மற்றும் கலோயன் வோடநிசரோவ் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *