விழித்திரு @ விமர்சனம்

ஹயா மரியம் பிலிம் ஹவுஸ் தயாரிப்பில் விடியல் ராஜு வெளியீட்டில் , 

கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தம்பி ராமையா, தன்ஷிகா,  தெலுங்கு  சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின்  தம்பி நாக பாபு,
 

பேபிசாரா, அபிநயா, எஸ் பி பி சரண், சுதா சந்திரன், ராகுல் பாஸ்கரன், எரிக்கா பெர்னாண்டஸ், சிறப்புத் தோற்றத்தில் டி.ராஜேந்தர் ஆகியோர் நடிக்க, 

அவள் பெயர் தமிழரசி என்ற கவிதைப்பூர்வமான படத்தை இயக்கிய மீரா கதிரவன் தயாரித்து எழுதி இயக்கி இருக்கும் படம் விழித்திரு .

 திரையரங்கில் தூங்காமல் பார்க்க முடியுமா ? பேசுவோம் . 
 
சாதிக் கட்சித் தலைவரான அமைச்சர்  ஒருவர் (ஆர் என் மனோகர் ) தன் சுயநலத்துக்காக ஆணவக் கொலை ஒன்றை நிகழ்த்தி, 
 
பழியை தன் சாதியினர் மீதே போட்டு அதன் மூலம் இரண்டு சாதி மக்களையும் மோதிக் கொண்டு,  ஊர்களைப் பற்றி எரிய வைக்கிறார் . 
 
உண்மை தெரிந்தால் இரு சாதி மக்களும் அமைதியாகி விடுவார்கள் என்ற நிலையில் , அதற்கான ஆதாரம் ஒரு பத்திரிக்கையாளரிடம்  (எஸ் பி பி சரண்) கிடைக்கிறது  . 
 
அவரைக் கொல்ல சாதிக் கட்சித் தலைவரும் அவருக்கு வேண்டிய பெண் தாதா (சுதா சந்திரன்) , போலீஸ் கமிஷனர்( நாக பாபு) மற்றும் சில போலீசாரும் முயல்கின்றனர் . 
 
அயல்நாடு போய் சம்பாதித்து பின் ஊருக்கு  வந்து உடம்பு சரி இல்லாத அம்மாவையும் மற்றும் தங்கையையும் வசதியாகப் பார்த்துக் கொள்ள விரும்பும், 
 
முத்துக் குமார் என்ற இளைஞனின் ( கிருஷ்ணா) பர்ஸ் திருடப் படுகிறது . பணத்தோடு எல்லா அடையாளத் தாள்களும் தொலைந்து போகிறது .
 
எனவே அவன் வேறு வழியின்றி தற்காலிகமாக சென்னையில் கால் டாக்சி டிரைவர் ஆகிறான் . 
 
அவனது வண்டியில் பத்திரிகையாளன் பயணம் செய்கிறான் .  
 
அப்போது பத்திரிகையாளனைக் கொல்ல  அதிகாரக் கும்பல் முயன்று வெற்றியும் பெறுகிறது . 
 
இதற்கிடையே பார்வை மாற்றுத் திறனாளியான பின்னணிக் குரல் கலைஞன் ஒருவனும் (வெங்கட் பிரபு) அவளது மகளான பள்ளிச் சிறுமி ஒருத்தியும் (பேபி சாரா) ,
 பிறந்து ஐந்து மாதமான நிலையில் தொலைந்து போன — சிறுமியின் ‘ தங்கை’யை தேடுகிறார்கள் . 
 
அந்த முயற்சியில் பிரிந்து போக, சிறுமி ஒரு   கடத்தல் கும்பலிடம் சிக்குகிறாள். 
 
பத்திரிகையாளன் இறந்த நிலையில் ஆணவக் கொலை உண்மை நிலவர ஆதாரம் அடங்கிய டேப் முத்துக்குமாரிடம் இருக்க ,
 
அவனையும் கொல்ல அரசியல் அதிகாரக் கும்பல்  துரத்துகிறது . 
 
திருடன் ஒருவன்  (விதார்த்) ஓரு வீட்டுக்குத் திருடப் போக , அங்கே கட்டப்பட்ட நிலையில் இருக்கும் ஓர் இளம்பெண்  (தன்ஷிகா ) ,
 
  ‘வீட்டுக் கிழவன் தன்னை கட்டாயத் திருமணம் செய்து கொண்டு கொடுமைப்படுத்துவதாகவும், 
 
தன்னைக் காப்பாற்றினால் கிழவன் வீட்டில் கொள்ளையடிக்க உதவுவதாக’வும் கூறுகிறாள் . 
 
அப்படியே உதவ,  கொள்ளையடித்துக் கொண்டு சேர்ந்து வரும் வழியில் அவள் மொத்த நகையையும் சுருட்டிக் கொண்டு ஓடுகிறாள் . 
 
பார்க்கும் பெண்களை எல்லாம் பணத்தால் படுக்கையில் வீழ்த்தும் கோடீஸ்வரன் ஒருவன் ( ராகுல் பாஸ்கரன்) ,
 
அந்த வகையில் ஒரு பெண்ணை ( எரிக்கா பெர்னாண்டஸ் ) முயல , ‘என்னுடன் ஆறு மணி நேரம் காரில் நீண்ட பயணம் வா .
 
என்னை அதற்குள் உன்னால் மனோரீதியாக கவர முடிந்தால் சம்மதம் ” என்று அவள் சொல்ல  , பயணம் கிளம்புகிறது 
 
பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஒருவர் (அபிநயா) , தனது நிகழ்ச்சியில் போன் மூலம் கலந்து கொண்ட முத்துக்குமாருக்கு உதவுகிறாள் . 
 
ஒரு கார்த்த்திகை தீப இரவில் இந்த சம்பவங்கள் எல்லாம் நிகழ்கிறது . 
 
இப்படியாக , மிக நல்லவர்கள், நல்லவர்கள், சற்றே கெட்டவர்கள் எல்லோரும் சேர்ந்து அப்பாவியான முத்துக் குமாருக்கு உதவ,   பஞ்சமா பாதகர்கள் அவனைக் கொல்ல முயல , 
 
இரு தரப்பும் முட்டிக் கொள்ள,  அப்புறம் நடந்தது என்ன என்பதே விழித்திரு .
 
வண்ணமயமான வரைகலைப் பின்னணியில் விரியும் டைட்டிலில்  படத்தின் ஆரம்பமே ஈர்க்கிறது . 
 
பள்ளிச் சிறுமியின் ‘தங்கை’ யார் என்று தெரிய வரும் அந்த இடம்,  படத்தின் முதல் கவிதையாக,  நேசம் என்ற பண்புக்கு இலக்கணம் வகுக்கிறது . 
 
அட்டகாசமான படமாக்கலில் கவர்கிறார் மீரா கதிரவன் . 
 
விஜய் மில்டன், ஆர் வி சரண் ஆகியோரின் ஒளிப்பதிவு காட்சிகளின் உணர்வுக்கு அழகும் வலுவும் சேர்க்கிறது . 
 
நான்கு கதையோடும்  பாதைகளையும் ஓரளவு வளர்த்துக் கொண்டு போவதற்குள் இடைவேளை வந்து விட , ‘அடடே இவ்வளவுதானா?’ என்ற உணர்வு எழுவது நிஜமே . 
 ஆனால் இரண்டாம் பகுதியில்  கனமாக நேர்த்தியாக  வேகமாக அழுத்தமாக விரிகிறது படம் . 
 
HOW TO NAME IT இசைத் தொகுப்பில் இளையராஜா கொடுத்த ஓர் இசைத் துண்டின் ( வீடு படத்தில் அதை பாலு மகேந்திரா பயன்படுத்தி இருப்பார் ) உணர்வு உந்தலில், 
 
சத்யன் மகாலிங்கம் மெட்டமைத்து இருக்கும்  ”ஆழி அலை மேலே..”  குறும் பாடலும்  .. அதை மீரா கதிரவன் படமாக்கி இருக்கும் விதமும், 
 
இந்தப் படத்தின் கவிதாப்பூர்வ அடையாளமாக என்றும் நிலைக்கும் .
 
பணத்தில் குளித்த கோடீஸ்வர இளைஞன் கையில் காசு இல்லாத நிலையில் பிச்சைக்காரனிடம் ஒரு ரூபாய் யாசகம் பெறும் காட்சி எள்ளல் ஏகடியம் . அருமை . 
 
ஒரு பாடலில் டி. ராஜேந்தர் குத்துப் பாட்டுக்கு ஆடுகிறார் . இன்னொரு  துள்ளலான  கவர்ச்சிப் பாடலும் உள்ளது . அது அழகாகப்  படமாக்கப்பட்டும் உள்ளது . 
 
அவர் இவரென்று பிரித்துச் சொல்லத் தேவை இல்லாத அளவுக்கு நடிக நடிகையர் அனைவருமே சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளனர் . 
 
பாஸ் வேர்ட் மறந்து போன TAB ஐ படத்தில் திறக்கும் அந்தக் காட்சி அபாரமான சிந்தனை . சிறப்பு ! சபாஷ் மீரா கதிரவன் !
 
‘ஒருவருக்கு நாம் நல்லது கெட்டது இரண்டுமே செய்யாதவரைதான் அவர் நமக்கு அந்நியமானவர் .
 
இரண்டில் ஏதொன்று நாம்  செய்து விட்டாலும் அவர் நமக்கு வேண்டியவர் ஆகி விடுகிறார் ‘
 

— என்ற வாசகங்களோடு துவங்கும் படம் அதே வாசகங்களுடன் அதற்கேற்ற கிளைமாக்சுடன் முடியும் விதம் , சிந்திக்க வைத்து சிலிர்க்க வைக்கும் நெகிழ்வுக் குவை . 

                                                                                                இயக்குனர் மீரா கதிரவன்

படத்தின் முக்கிய நாயகனுக்கு முத்துக் குமார் என்று பெயர் வைத்து இருப்பது ….

அவன் கொல்லப் பட்ட நிலையில் படுக்க வைக்கப்பட்டு இருக்கும் விதத்தில் , கொல்லப் பட்டதாகக் காட்டப்பட்ட தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரனை நினைவு படுத்துவது….
 
“எந்த இழப்பும் நிரந்தரமில்லை ” என்ற வசனத்தை ஓர் ஈழத் தமிழ் தம்பதியின் வாயால் சொல்ல வைப்பது .. 
 
ஜீவகாருண்யம் போற்றுவது .. 
 
ஆகிய வகைகளில் மிகப் பெருமதிப்பிற்குரியதாகிறது இந்தப் படம் . 
 
மொத்தத்தில் விழித்திரு … ரசித்திரு !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *