ஒன்பது வேட சிவாஜி, இரட்டை வேட எம் ஜி ஆர் , பத்து வேட கமல் என்று ஒரே தோற்றம் கொண்ட பல மனிதர்களின் கதைகள் சரியாக எடுக்கப்படும்போது தரும் ரசனை சுகமே அலாதிதான். அப்படி இருக்க உண்மையாக ஒரே தோற்றத்தில் இருக்கும் இரண்டு பேர் அல்ல… நான்கு பேர் … அதுவும் குண்டுக் கன்ன பெண் குழந்தைகள்…. ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் .
மெடிமிக்ஸ் சோப்பு நிறுவன அதிபர் ஏ வி அனூப் தயாரிக்க இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் உதவியாளரான குரு ரமேஷ் இயக்கத்தில் வந்திருக்கும் இந்தப் படத்தின் சுவாரசியம் அதுதான் … அதாகப்பட்டது மக்களே… அது மட்டும்தான் .
விவாகரத்துக்கு காத்திருக்கும் தம்பதியின் (இயக்குனர் ஜெயம் ராஜா — காதல் மன்னன் மானு ) பிள்ளைகளான, ஒரே பிரசவத்தில் பிறந்த வாய் பேச முடியாத, காது கேளாத நான்கு குழந்தைகளும் (அதிதி, அக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி ) தங்கள் பள்ளியில் இருந்து மிருகக் காட்சி சாலைக்கு சுற்றுலா செல்கின்றனர். அன்றைய தினம் மலைப்பாம்பு இருக்கும் அறையைப் பூட்ட காவலர் மறந்துவிட.. அது வெளியில் சுதந்திரமாக உலா வருகிறது. இந்த நேரத்தில் அந்த நான்கு குழந்தைகளும் காட்டுக்குள் காணாமல் போய்விட.. மிருக்க் காட்சி சாலை காவலர்களும், குழந்தைகளை அழைத்து வந்த டீச்சரும் தேடுகிறார்கள். அப்புறம் …… என்ன ஆச்சு என்பதே இந்தப் படம் . (புன்னகை மன்னன் படத்தில் வந்த என்ன சத்தம் இந்த நேரம் பாட்டுக்கும் இந்தப் படத்துக்கும் … அது ஏன்னா அய்யரே ….? ஆங்! ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது )
ஜெயம் ராஜா நடிக்க முயல்கிறார். கொஞ்சம் வேகத்தை குறைச்சு நல்லா டப்பிங் பேசி இருக்கலாம். மானு …மானே தேனே என்று பாராட்டும்படி நடிக்காவிட்டாலும் குறை ஒன்றும் இல்லை . நவீன் நன்றாக நடிக்கிறார் . ஆனா காட்சிகள்தான் சோதிக்குது
அனகோண்டா பாம்பை கிராபிக்சில் கொண்டு வந்து இருக்கிறார்கள் .. ஒரு வழியாக !
குழந்தைகள் அழகாக இருக்கிறார்கள் . ஆனால் அவர்களை நடிக்க வைக்க இயக்குனர் எந்த முயற்சியும் எடுக்காதது தொழில் துரோகம் . குழியில் விழுந்த ஒரு குழந்தையை மற்ற மூவரும் உருண்டு புரண்டு காப்பாற்றும் காட்சியில் கூட எல்லாரும் சும்மாவே இருக்கிறார்கள் . குழியில் இருந்து போராடி மேலே வரும் காட்சியில் குழந்தை சிரித்துக் கொண்டே புரள்கிறது என்றால் …. இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்ல?
ஒரே பிரசவத்தில் பிறந்து ஒரே உயரம் உடல்வாகு தோற்றத்தில் இருக்கும் நான்கு குழந்தைகளை சும்மா காட்டினால் அதுவே ஒரு மேஜிக் . உதாரணமாக வேனில் இருந்து அந்த நான்கு குழந்தைகள் அடுத்தடுத்து இறங்குவதை ஜஸ்ட் லைக் தட், காட்டினாலே காட்சி சும்மா அள்ளிக்கும். ஆனா அதை கட் செய்து நான்கு குழந்தைகள் இறங்குவதை நான்கு ஷாட்களாக பிரித்து பிரித்து தனித் தனியாக காட்டி சாதா’ரணமாக்குகிறார்’ இயக்குனர் . அதுக்கு எதுக்குங்க நாலு குழந்தை ? ஒரு குழந்தையே போதுமே ?
குழந்தைகள் சம்மந்தப்பட்ட இந்தப் படத்தில் இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளித்து வக்கிரம் வளர்க்கிறார் வசனகர்த்தா ஜான் மகேந்திரன். சேட்டை படத்தைப் போல இதிலும் மலத்தை வைத்து டாய்லட் காமெடி வசனமும் எழுதி இருக்கிறார். உவ்வே !சிவசங்கர் காமெடி டிராக் கை கொடுக்கவில்லை .
என்ன சத்தம் இந்த நேரம் … வெறும் காத்துதான் வருது .