நேற்று இன்று
————————–
மயிலாட வான்கோழி தடை செய்வதோ ?– மாங்
குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ ?
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ ? –அதன்
முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
— அரசகட்டளை படத்தில் இடம் பெற்ற ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை என்று துவங்கும் பாடலில் வரும் வரிகள் இவை.
அந்த வகையில் 26699 சினிமா சார்பில் எஸ் மாலதி தயாரிக்க , அவரது கணவரான பத்மாமகன் இயக்கத்தில் எஸ் தணிகைவேல் வெளியிட்டு இருக்கும் நேற்று இன்று படத்தைப் பார்த்தபோதும் இந்தப் படத்தையா இரண்டு வருடமாக வெளிவர விடாமல் முடக்கி வைத்திருந்தார்கள் என்று ஆச்சர்யப் படாமல் இருக்க முடியவில்லை . அப்படி ஒரு தெளிவான தில்லான படமாக வந்திருக்கிறது நேற்று இன்று .
கதையிலேயே கத்தி போன்ற கூர்மை . காட்டில் வாழ்கிற – சமூக விரோதி என அறிவிக்கப்பட்ட – கடா மீசை வைத்த — வேட்டைத் துப்பாக்கியும் பச்சை யூனிஃபார்மும் போட்ட வீரா என்பவனை அவனுக்கு வயதாகி கண் பார்வை மங்கிய நிலையில் ஆபரேஷன் ஆசை காட்டி ஆம்புலன்சில் வரும்போது நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொள்கிறது அதிரடிப்படை (யாரென்று புரிகிறதா?) ஆனால் அதோடு ஆபரேஷன் முடியவில்லை.
வீராவுக்கு துணையாக இருக்கும் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காவல் துறையில் டி எஸ் பியாக இருந்தவர் (பிரசன்னா) அவரையும் பிடித்தால்தான் ஆபரேஷன் முழுமை அடையும் என்று முடிவு செய்யும் காவல் துறை அதற்காக ஐந்து அதிரடிப் படை வீரர்களை ( ரிச்சர்டு, பரணி,ஹரீஷ் , நித்தீஷ், பாலாஜி) அனுப்புகிறது . அதில் ஒரு வீரரை கொலை செய்யும் வாய்ப்பை இன்னொரு வீரன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் .அவர்களின் தேடுதல் வேட்டை பயணத்தில் தன்னை விலைமாது என்று கூறிக் கொள்ளும் ஒரு பெண் (அருந்ததி) இணைந்து கொள்கிறாள் .
இன்னொரு பக்கம் கையில் போதுமான காசு இல்லாமல் கர்நாடகாவின் கபினி பகுதிக்கு பயணம் செய்யவேண்டிய ஒரு இளம்பெண் (தாமினி) பெண் பித்தனும் குடிகாரனுமான ஒரு இளைஞனின் (விமல்) காரில் பயணம் செய்கிறாள். பயணங்களும் சந்திக்கும் புள்ளியில் எப்படி முற்றுப் புள்ளி விழுகிறது என்பதே நேற்று இன்று .
படம் முழுக்க அடர்ந்த காடு … பச்சைப் புல்வெளிகள் , குளிர்ச்சியான நீரோடைகள் … அடிக்கிற வெயிலுக்கு ஆறுதலாக இருக்கிறது படத்தின் கானக வன லொக்கேஷன்கள். சூரிய வெளிச்சம் கூட யோசித்து தரை தொடும் இடங்களில் படப்படிப்பு நடத்தி இருப்பதில் இயக்குனர் பத்மாமகன் மற்றும் படப்பிடிப்பு குழுவினரின் உழைப்பு தெரிகிறது . நடிக நடிகையர் தங்களால் இயன்ற நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். பாதகமில்லை .
கிளாமரில் கிறங்க அடிக்கிறார் அருந்ததி . கவர்ச்சியின் எல்லைக் கோட்டை போய் முட்டி முட்டி பார்க்கும் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் சில சமயம் ஆபாசத்தின் ஆரம்பக் கட்டம் வரை தொட்டு வருகிறது. அவர் சம்மந்தப்பட்ட கடைசி கட்ட திருப்பம் லாஜிக்காக சாத்தியமே இல்லை எனினும் அதில் உள்ள நையாண்டித் தாக்குதல் (‘தமிழ்’ல சொல்லணும்னா ‘சட்டயர்’) அதை ரசிப்புக்குரிய விஷயமாக மாற்றி விடுகிறது. தன் முன்னால் பல பெண்களை சல்லாபிக்கும் இளைஞனை அவன்தான் படத்தின் ஹீரோ என்பதற்காக கடைசியில் கதா நாயகி ஃபீலிங் பார்வை பார்ப்பதெல்லாம் ரொம்பவே போங்கு (ஒருவேளை இப்போ அதுதான் பேஷனோ?)
ஆயினும் படத்தின் இரண்டாம் பகுதி அசத்தலான அட்டகாசமான படைப்பாக விரிகிறது. இயக்குனரின் நோக்கம் அது இல்லை என்றாலும் இயல்பாகவே வீரப்பன் பக்கத்தில் இருந்த நேர்மை , அதிரடிப் படையினர் நடத்திய கூத்துகள் இவற்றை தோலுரிக்கிறது படம் . அதுவும் காட்டில் வீர புதைத்து வைத்த பணத்துக்கு அவர்கள் அடித்துக் கொள்ளும் காட்சிகள் செம… செம…! கண்ணி வெடியில் கால் வைத்தவர்களை காப்பாற்ற ஓரளவு சாத்தியமானதுதான் என்று தோன்றுகிற ஒரு வழியை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
நேர்மையும் ஆண்மையும் மகிழ்வும் நெகிழ்வும் மனிதாபிமான உணர்வுகளுமாய் பயணித்து முடிகிறது படம் . ரிச்சர்டு கதாபாத்திரத்தின் நேர்மையும் இதயத்தை கனக்கச் செய்யும் அந்த இறுதிக் காட்சியும் தங்கத் தரம்