10 எண்றதுக்குள்ள @ விமர்சனம்

pathu-1

கார் டிரைவிங் ஸ்கூலில் மாஸ்டராகப் பணியாற்றுகிற — லாஜிக்குக்கு எல்லாம் அப்பாற்பட்டு பிரமதாமாகக் காரோட்டுகிற — ஒவ்வொருவரிடமும் ஒரு பெயர் சொல்லி கலாய்க்கிறவன் அவன் (விக்ரம்). சிலருக்கு சில  உதவிகளும் செய்வது உண்டு .

லோக்கல்  தாதா ஒருவனிடம் (பசுபதி) சிக்கிக் கொள்ளும் ஒரு நபருக்கு  உதவிய விதத்தில்,  லோக்கல் தாதவையே அவன் கவர , தாதா செய்யும் தவறான செயல்களுக்கும் காசு வாங்கிக் கொண்டு கார் ஓட்டுகிறான் அவன் . 

அநாதை இல்லத்தில் சிறுவயது முதலே வளர்கிற — குழந்தைத்தனமான — கார் ஓட்டக் கற்றுக் கொண்டு லைசன்ஸ் வாங்குவதற்காக  பல காலமாகப் போராடுகிற– அழகான-  அரைவேக்காடு அறிவாளி — இளம் பெண் ஷகீலா (சமந்தா).
கார் ஓட்டக் கற்றுக் கொள்ள வந்து கலாட்டா செய்த விதத்தில் அவனுக்கும் அவளுக்கும்,  மோதல் அறிமுகம் உண்டு .
 லோக்கல் தாதாவை தன் ஏவலாக வைத்துள்ள–இளம்பெண்களை கடத்தி விற்கிற–  வட இந்திய தாதா ஒருவன் , லோக்கல் தாதாவிடம் ஷகீலாவின் போட்டோவைக்காட்டி அவளைக் கடத்தி அனுப்பும்படி சொல்கிறான் . 
கடத்திக் கொண்டு போக வேண்டியவன் போகமுடியாமல் போக, டிரைவிங் ஸ்கூல் மாஸ்டரை அழைக்கும் லோக்கல் தாதா,  காருக்குள் மயங்கிய நிலையில் ஷகீலா  இருப்பதை சொல்லாமல் ” இந்தக் காரைக் கொண்டு போய் முஸௌரி நகரில் விட்டுவிட்டுவா ” என்று அனுப்பி வைக்கிறான் 
உள்ளே ஷகீலா  இருப்பது ஒரு நிலையில் தெரிந்தும் அவளோடு வட இந்தியாவுக்கு பயணப்படுகிறான் டிரைவிங் மாஸ்டர் , காரை ஒப்படைத்துக் காசு வாங்கும் நோக்கத்தோடு !
ஷகீலா எதுக்கு ?
உத்தரகாண்டில் தாழ்த்தப்பட்ட மக்களை வெட்டிக் கொன்று விட்டு ஜெயிலில் இருக்கும் ஒரு பணக்கார உயர்சாதி பெண்ணைப் போலவே ஷகீலாவின் தோற்றம் இருக்கிறதாம் .  தூக்குத் தண்டனையை எதிர்பார்த்து இருக்கும் அந்தப் பெண்ணுக்குப் பதிலாக,  ஷகீலாவை ஜெயிலில் மாற்றி விட்டு,   நிஜ கொலைகாரியைக் காப்பாற்றவே  ஷகீலாவைக் கடத்துகிறார்களாம் .ஆச்சா? 
pathu-7
பயணப் பாதையில் டிரைவிங் மாஸ்டருக்கும் ஷகீலாவுக்கும் காதல் வருகிறது . உத்தரகான்ட் போனதும் ஷகீலாவுக்கு இருக்கும் ஆபத்து மாஸ்டருக்கு புரிகிறது . 
ஷகீலாவை காப்பாற்ற ஸ்கூல் மாஸ்டர் முயல , சென்னையில் கோமா ஸ்டேஜில் இருக்கும் — ஸ்கூல் மாஸ்டரின் தங்கையை  தன் கஸ்டடிக்கு கொண்டு வரும்  லோக்கல் தாதா,  ”ஷகீலாவை காப்பாற்றினால் உன் தங்கையைக் கொன்று விடுவேன் …” என்று மிரட்ட ….
இதுக்கு மேல கதை கேட்பீங்க ? கேட்பீங்க ?? கேட்பீங்க ???
விஜய் மில்டனின் ஒளிப்பதிவும் ஓர் இயக்குனராக அவர் பயன்படுத்தி இருக்கும் சில கேமராக் கோணங்களும் அட்டகாசம். அந்த ஆரம்ப கார் சேசிங் காட்சிகள் ஸ்டன்ட் மாஸ்டரின் பெயர் சொல்கிறது . கூடவே ஒளிப்பதிவாளரின் பெயரையும் !
சமந்தாவின் சொந்தக் குரலும் சில முகபாவங்களும் ரசனை . வசனம் சில இடங்களில் சற்றே  உதடு விரிய வைக்கிறது . 
இதைத் தவிர பாராட்ட எந்த விசயமும் மருந்துக்குக் கூட இல்லாததுதான் மாளாத சோகம் .
என்னதான் கமர்ஷியல் என்றாலும் யதார்த்தம் மாதிரி ஒரு பிரம்மையாவது இருக்க வேண்டாமா ? எந்த ஆக்ஷன் காட்சியிலும் அந்த யதார்த்தம் பூசிய லாஜிக் துளி கூட இல்லாத காரணத்தால்,  எதோ மொக்கையான மேஜிக் பார்க்கிற உணர்வில் படம் முழுக்க உட்கார்ந்து இருக்கவேண்டி இருக்கிறது .
pathu-2
சமந்தா சம்மந்தப்பட்ட ஆரம்பக் காட்சிகள் , காமெடி என்ற பெயரில் காமெடியே இல்லாமல் அமைந்த கொடுமையால் , சமந்தா கடத்தப்படும்போது நமக்கு துளி கூட பரிதாபமோ பயமோ வரவில்லை . போய்த் தொலையட்டும் என்றே தோன்றுகிறது. 
படம் வேகமாக போகவேண்டும் என்ற எண்ணம் சரிதான் .  ஆனால் அழுத்தமாக சொல்ல வேண்டிய காட்சிகளை அழுத்தமாக  சொல்வது இல்லையா ? படம் பார்க்கும் ரசிகன் எதுவுமே புரியாமல் முழிக்கும் அளவுக்கா இப்படி கொத்து பரோட்டா போடுவது ? 
தன்னுடன் வரும்  பெண்ணை ரேணிகுண்டாவில் ஆந்திரா ரவுடிகள் கடத்துவார்களாம். அதைக் கண்டு கொள்ளாமல் ஹீரோ போவாராம் . தப்பித்து வரும் ஷகீலா அதுக்கு அப்புறமும் ஹீரோவை லவ் பண்ணுவாராம். எப்படி இருக்கு கதை ?
திடீரென்று  விக்ரம் ஓடுகிறார் . பாடுகிறார் . ஷார்மியுடன் ரேணிகுண்டாவில் குத்தாட்டம் போடுகிறார் . 
எந்த ஈர்ப்பும் அழுத்தமும் இல்லாமல் சவ சவ என்று கடக்கிறது காட்சிகள் . 
வடக்கத்தி தாதா கையில் இருந்து திரைக்கதை அடுத்த கட்டத்துக்கு போகும்போது ஏதாவது உருப்படியாக சொல்வார்கள் என்று பார்த்தால் , வடக்கத்தி உயர்சாதி , அதில் கொள்ளைக்காரி பூலான் தேவி மாதிரி ஒரு சமந்தா என்று … ரொம்பவும் படுத்தறாங்க மை லார்டு !  
pathu-5
பெண்களை உயர்வாக மதிக்கும் சாதியாம். ஆனால் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை  கொல்வார்களாம். அப்படி கொலை செய்யும் கொலைகாரியை காக்க ,அந்த குடும்பத்தில் ஜாதி வெறியை காலகலாமாக வளர்த்த ஒரு வயசான பெண் மணியை, ,  கண்ணீரோடு விஷம் வைத்துக் கொல்வார்களாம். அதை பார்த்து ரசிகர்கள் எல்லாம் தேம்பித் தேம்பி அழ வேண்டுமாம் .
ஜாதி வெறி கொண்ட ஒரு கும்பலின் ஃபீலிங்ஸ்  நமக்கு எதுக்குங்க ? ராஜ பக்சே கூட பொண்டாட்டி செத்தால் அழதான் செய்வார் . அதுக்காக நாம கூடவே அழ முடியுமா?
மிக அதிர்ச்சியான விஷயம்… விக்ரம்!  
நிற்பது, நடப்பது , பேசுவது , ஆடுவது, சண்டை போடுவது … ம்ஹும் ! ரசிக்கிற மாதிரி ஒரு காட்சியில் கூட நடிக்காமல் எரிச்சலைக் கிளப்புகிறார்.   மஜா படத்துக்கு அடுத்து விக்ரமை பார்த்து முழுக்க முழுக்க எரிச்சல்படும் படமாக இதுதான் இருக்கும் . இது உங்களுக்கு தேவையா விக்ரம்?
சென்னையில் இருந்து உத்தரகாண்ட் வரை பயணம் என்பது எப்பேர்ப்பட்ட ஏரியா? காதலோ காமர்ஷியலோ…. அட ,  ஒரு வித்தியாசமான கதையோடு காரில் ஏறி இருக்க வேண்டாமா கண்ணுகளா? 
பெண் கடத்தல் , கார் சேசிங், சாதி வெறி, டுபாக்கூர் ஹீரோயிசம், மொக்கை ஹீரோயினிசம் என்று படம் பார்க்க வந்தோரை கதற வைக்கிறார்கள் . 
மொத்தத்தில் 
பத்து எண்றதுக்குள்ள ……. அட ! மூணுக்கு மேல எண்ணவே இல்லீங்க .MIND BLOCK போல !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →