ஓசானியா ஏ ஜே ஆர் சினி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்க , இசையமைப்பாளரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துனருமான ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பதோடு முதன் முதலாக எழுதி இயக்கும் படம் ‘வானவில் வாழ்க்கை ‘
லயோலா கல்லூரி மாணவர்கள் குழு , மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி இரண்டு கல்லூரிகளின் சார்பில் நடக்கும் கலை மற்றும் இசைக்குழு என்ற கதையை எடுத்துக் கொண்டு ஆட்டம் பாட்டம் என்று, இசை விருந்தாக இந்தப் படத்தை எழுதி இயக்கி இருக்கிறாராம் ஜேம்ஸ் வசந்தன் .
இந்தப் படத்தின் ஒரு முக்கிய சிறப்பை பற்றி பேச வேண்டும் என்றால் ஆரம்ப காலத்தில் சினிமா எப்படி படம்பிடிக்கப்பட்டது என்று கொஞ்சம் பார்க்க வேண்டும் .
அப்போதெல்லாம் நிஜமாக பாடத் தெரிந்தவர்கள் மட்டும்தான் நடிகராக முடியும் . அது மட்டுமல்ல நாயகனும் நாயகியும் பாடி வரும்போது அவர்களே கேமரா படம் பிடிக்கும் . அப்படி கேமரா படம் பிடிக்கும் பகுதிக்கு வெளியே இசைக் கருவிகள் வாசிப்பவர்கள் நடிப்பவர்கள், நாயகன் நாயகிக்கும் இணையாக கூடவே நடந்து கொண்டே வாசிக்க வேண்டும் . ஒட்டு மொத்தமாக ஒரே ஒலிப்பதிவுதான்.
இப்படியாக பாடல், காட்சியுடன் ஒலிப்பதிவு செய்யப்படும்போது யாராவது ஒருத்தர் தப்பாக வாசித்தாலும் போச்சு . மறுபடியும் முதலில் இருந்து எல்லோரும் ‘பரோட்டா சாப்பிட’ வேண்டும் .
பின்னர் தொழில் நுட்ப வசதிகள் வந்த பிறகு பின்னணி பாடும் முறை வந்து பாடல் ரெடியாகி பின்னர் தனியாக பிரித்து பிரித்து படமாக்கும் வசதி வந்தது .
அப்புறம் இசையிலும் இசைக் கோர்வையை தனியாக அமைத்து விட்டு, பாடுபவர்கள் பின்னர் வந்து தனியாக பாடி விட்டுப் போனால் போதும் என்றானது . அப்புறம் பாடுபவர்களும் மட்டும் கூட சேர்ந்து வந்து ஒரே சமயத்தில் பாடத் தேவை இல்லை . தனித் தனியாக பாடி சேர்ந்து இணைத்துக் கொள்ளும் என்ற வசதி வந்தது .
அப்புறம் இசைக் கோர்வை கூட ஒரே நேரத்தில் பதிவு செய்யத் தேவை இல்லை . வயலின் தனியாக டிரம்ஸ் தனியாக இப்படி ஒவ்வொரு கருவியின் இசையையும் தனித்தனியாக பதிவு செய்து சேர்த்துக் கொள்ளும் வசதி வந்தது .
அப்புறம் … சரி போதும் …!
இப்போது சினிமாவில் பாடுவது போல நடிப்பவர்கள் தாங்களே படலை பாடவேண்டியது அவசியம் இல்லை . பாடுவது போல வாயசைத்தால் போதும் . இருக்கவே இருக்கிறார்கள் பின்னணிப் பாடகர்கள் . அதுபோலவே படத்தில் இடம்பெறும் காட்சியில் இசைக்கருவிகள் வாசிப்பது போல நடிப்பவர்கள் உண்மையில் இசைக்கருவிகள் வாசிக்கத் தெரிந்திருக்க அவசியம் இல்லை . வாசிப்பது போல நடித்தால் போதும்.
ஆனால் ஜேம்ஸ் வசந்தன் எழுதி இயக்கும் இந்த வானவில் வாழ்க்கை படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் படத்தில் கல்லூரி மாணவ ,மாணவியராக நடிக்கும் அனைவரும் அவர்கள் தோன்றிப் பாடும் பாடல்களுக்கான வரிகளை அவர்களே பாடுவதோடு அவர்கள் படத்தில் வாசிப்பது போல நடிக்கும் இசைக் கருவிகளையும் அவர்களே அவர்களே வாசிக்கிறார்கள் .
“இந்த வகையில் இந்தியாவில் உருவாகும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும்” என்கிறார் ஜேம்ஸ் வசந்தன் .
“நாலு பாட்டு வந்தாலே அஞ்சு தடவை வெளிய எழுந்து போற அளவுக்கு நம்ம ரசிகர்கள் பாடல் காட்சிகளைக் கண்டு பதை பதைக்கும் காலக்கட்டத்தில் பதினேழு பாடல்களா ? பூமி தாங்குமா ?” என்றால் “பதினேழு பாடல்களும் வழக்கமான நீளமுள்ள பாடல்கள் அல்ல . ஒரு நிமிடப் பாடல் முதற்கொண்டு ஐந்து நிமிடப் பாடல்வரை இருக்கிறது . படமே இசை சம்மந்தப்பட்டது என்பதால் நீங்கள் சொல்லும் பிரச்னை இருக்காது” என்கிறார் ஜேம்ஸ் வசந்தன் .
வானவில்லுக்கு இரண்டு கோணங்கள் உண்டு . ஒரு பக்கம் வானவில் என்றால் அது ஒரு பக்கம் வண்ணமயமானது .
இன்னொரு பக்கம் வானவில் என்பது நிலையில்லாதது. சீக்கிரம் கலைந்து போவது .
ஜேம்ஸ் வசந்தனின் வானவில் வாழ்க்கை எதை சொல்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் .