சூர்யா நடிக்கும் 24. படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா வெளியிட,
சூர்யா , சமந்தா, நித்யா மேனன் சரண்யா ஆகியோர் நடிப்பில் தமிழில் அலை, யாவரும் நலம் ஆகிய படங்களையும் தெலுங்கில்
இஷ்க் , மனம் ஆகிய படங்களையும் இயக்கிய விக்ரம் குமார் இயக்கும் படம் 24.
ஒரு கடிகாரம் கண்டுபிடிக்கப்படுவதால் ஏற்ப்படும பிரச்னைகளை மையமாகக் கொண்டு சயின்ஸ் பிக்ஷன் படமாக வரும் இந்தப் படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடிக்கிறார் . அதில் ஒன்று வில்லன் கதாபாத்திரம் .
மே ஆறாம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தில் சூர்யா ஏற்று இருக்கும் கதாபாத்திரங்களை வைத்து ‘ஆத்ரேயா ரன்’ என்ற பெயரில் ஒரு வீடியோ கேம் வெளியிடப்பட்டுள்ளது .
அதை அறிமுகப்படுத்தவும் படம் பற்றிப் பேசவும் பத்தீர்க்கையாளர்களை சந்தித்தது படக் குழு .
வீடியோ கேம் வித்தியாசமான தடைகள், திருப்பங்கள் மற்றும் புதிர்களோடு எல்லோரையும் கவரும் வகையில் இருந்தது . முன்னோட்டமும் பாடல் துணுக்குகளும் திரையிடப்பட்டன.
பிரம்மிப்பான எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது முன்னோட்டம் . திருவின் ஒளிப்பதிவில் ஒரு 3D தன்மை தெரிகிறது. சிறப்பு
நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி
” பொதுவாக எனக்கு டைம் டிராவல் கதைகள் ரொம்பப் பிடிக்கும் . அப்படி ஒரு படமான இந்த 24-ல் பணியாற்றுவது சந்தோஷமான விஷயம் .
இயக்குனர் விக்ரம் குமார் மனம் படத்தில் நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா , நாக சைதன்யா என்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பரம்பரை நடிகர்களில்,
மகனை அப்பாவாக தாத்தாவை பேரனாக பயன்படுத்தி இருப்பார்.
அதே போல இந்தப் படத்தில் என் அப்பாவுக்குத் தரவேண்டிய பக்குவமான பாடல்களை எனக்கும் , எனக்குத் தரவேண்டிய இளமையான பாடல்களை அப்பாவுக்கும் கொடுத்து வித்தியாசமாக பாடல் வாங்கி இருக்கிறார் .
அதனால் பாடல்களும் மிக சிறப்பாக வந்துள்ளன ” என்றார் .
நடிகர் மோகன்ராம் பேசும்போது
” சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் பெயரிலேயே எண்ணும் எழுத்தும் இருக்கிறது . இதை ஆல்ஃபா நியூமரிக்கல் என்பார்கள். அவர் தயாரிக்கும் படங்களின் பெயரையும் பாருங்கள் .
முதல் படம் 36 வயதினிலே . அடுத்த படம் பசங்க 2. இப்போது 24 . இந்தப் படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது.
படத்தில் எனது கேரக்டர் உட்பட எதையும் இப்போது வெளியே சொல்ல முடியாது . ஆனால் மே ஆறாம் தேதி உங்களுக்கு ஓர் அற்புத திரை விருந்து இருக்கிறது ” என்றார் .
நடிகை சரண்யா பேசும்போது
” எல்லா படத்திலும் ஆண் பிள்ளைகளின் அம்மாவாகவே நடிக்கிறேன் . இதிலும் மகனின் காதலுக்கு ஆதரவு தருகிற அம்மா. ஆனால் படத்தின் கதை பிரம்மாதமானது.
மிகச் சிறந்த இயக்குனரான விக்ரம் குமார் சாருடன் எனக்கு இது நான்காவது படம். சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் எங்களை கவனித்துக் கொண்ட விதம் மறக்க முடியாத ஒன்று. ” என்றார் .
ஒளிப்பதிவாளர் திரு தன் பேச்சில்
” காதல், குடும்ப செண்டிமெண்ட், திரில் , சயின்ஸ்பிக்ஷன், ஆக்ஷன் காமெடி எல்லாம் கொண்ட படம் இது . விக்ரம் குமார் என்னை முழுமையாக இயங்க அனுமதித்தார்.
தயாரிப்பு நிறுவனம் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது . சூர்யாவின் நடிப்புக்கு ஒளிப்பதிவு செய்தது சந்தோசம் ” என்றார் .
2D எண்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் ராஜ சேகரப் பாண்டியன் பேசும்போது
“சரண்யா ஒரு லக்கி சார்ம். படப்பிடிப்பில் சரண்யா மேடம் கிட்டத்தட்ட நிஜ அம்மா போலவே இருந்தார் .
திருவின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம் .
விக்ரம் குமார் இந்தக் கதையை பல தடவை சொல்லச் சொல்லிக் கேட்டேன். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது அவர் சொல்லும் விதம் . அதே நேரம் சொன்னதை விட சிறப்பாக படமாக்கி இருக்கிறார் .
எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எல்லா படங்களுக்கும் ஒரு தூண் போல இருப்பவர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா. இந்தப் படத்தை ஆரம்பித்தவர் அவரே .
வழக்கமான எங்கள் படங்களை எல்லாம் வெளியிடும் அவரே இந்தப் படத்தையும் வெளியிடுகிறார். ” என்றார் .
இயக்குனர் விக்ரம் குமார் தன் பேச்சில்
” படம் மிக சிறப்பாக வந்துள்ளது . ஏ. ஆர் ரகுமான் இந்தப் படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்ட உடனே இந்தப் படம் உத்வேகம் எடுத்து கிளம்பியது .
சரண்யாவின் பங்களிப்பு சிறப்பானது . சூர்யா சாரின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மிக பிரம்மாதமான ஒத்துழைப்புக் கொடுத்தது .
ஆனால் ஹீரோவாக சூர்யா இல்லாமல் இந்தப் படத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது . சார்… நீங்க நடிக்க ஒப்புக் கொண்டதற்கு மிக்க நன்றி சார் ” என்றார் நெகிழ்வோடு
சூர்யா தனது பேச்சில்
” இது ஞானவேல் ராஜா ஆரம்பித்து வைத்த படம் . வேறொரு கதை கேட்கப் போய் , எதிர்பாராமல் எனக்கு வந்த கதை இது . மிக சிறப்பான கதை . சிறப்பாக படம் ஆக்கி இருக்கிறார் விக்ரம் குமார் .
திருவின் ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு பெரிய பலம் . படம் பார்த்த எல்லோரும் அவரை கொண்டாடுகிறார்கள். அவர் படத்துக்கு கொடுத்திருக்கும் சக்தி பிரம்மாதமானது .
சரண்யா சிறப்பாக நடித்து உள்ளார். நித்யா மேனன் . சமந்தா இவர்களின் கேரக்டர்களும் மிக சிறப்பாக வந்துள்ளது. . ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ” என்றார் .
நிறைவாகப் பேசிய ஞானவேல் ராஜா ”
நடிகர் மோகன்ராமின் மகள் வித்யுத் லேகா தெலுங்கில் பெரிய நடிகையாக வந்து கொண்டு இருக்கிறார் . அண்மையில் ஒரு தெலுங்குப் படத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார் .
நகைச்சுவையில் கோவை சரளா அளவுக்கு அவர் வருவர் என்று எல்லோரும் அங்கே சொல்கிறார்கள் .வாழ்த்துகள்
இந்த 24 படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இது உலகம் முழுக்க 1300 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகிறது . அமரிக்காவில் மட்டும் 200 தியேட்டர்கள் .
தமிழகம் மட்டுமல்லாது கேரளா ஆந்திராவிலும் பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருக்கிறது .
தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு இந்தப் படம் தெலுங்கிலும வரும் மே ஆறாம்தேதி வெளியாகும் நிலையில் , அங்கு பல நேரடி ஆந்திரப் படங்களே சூர்யா படத்தோடு போட்டி போட விரும்பாமல் ,
தங்கள் படங்களை தள்ளி வெளியிட முடிவு செய்துள்ளார்கள் .
அந்த அளவுக்கு நம்ம சூர்யாவுக்கு அங்கு வரவேற்பு இருப்பது பெருமைக்குரிய விஷயம் ” என்றார் .
உண்மை . !