24 @ விமர்சனம்

2410

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட்  நிறுவனம் தயாரிக்க, 

சூர்யா , சமந்தா, நித்யா மேனன்,  சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில் தமிழில் அலை, யாவரும் நலம் ஆகிய படங்களையும்  தெலுங்கில் இஷ்க் , மனம் ஆகிய படங்களையும் இயக்கிய, 

 விக்ரம் குமார் இயக்கி இருக்கும்  படம் 24.  எப்படி இருக்கிறது படம்? பார்க்கலாம். 

தேனி , மேகமலையில் வசிக்கும் சேதுராமன் என்ற விஞ்ஞானி (சூர்யா -1)  கைக்கடிகார வடிவிலான கால இயந்திரம் (டைம் மெஷின்) ஒன்றைக் கண்டு பிடிக்கிறார் . 

அதை வைத்துக் கொண்டு  நடந்து முடிந்த நிகழ்ச்சிக்குள் போய்   பழைய  தவறுகளை சரிசெய்து இப்போது நடக்கும் சம்பவங்களை  நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் . 

நடக்கப் போகிற நிகழ்ச்சிக்கு முன்பே  போய்ப் பார்த்து,  அதில் நமக்கு ஏதும் எதிரான சம்பவம் இருந்தால் , அவை நடக்காத வண்ணம் இப்போது நமது நிகழ்வுகளை சரி செய்து கொள்ளலாம்.

24 14

சேதுராமனின் அண்ணன்  ஆத்ரேயா  (சூர்யா  – 2) . மிகக் கொடூரமான நபர். அவன் அந்த   கால இயந்திர கடிகாரத்தைக் கைப்பற்றி அதை வைத்து உலகையே  மிரட்டி தனது காலடிக்குள்  கொண்டு வர விரும்புகிறான் . 

அதைத் தர விரும்பாத தம்பி சேதுராமனையும்  அவனது மனைவி ப்ரியாவையும் (நித்யா மேனன் ) கொல்கிறான் . 

சேதுராமன் தான் சாவதற்குள்,   மகனான கைக்குழந்தையோடு  அந்தக் கால இயந்திரக் கடிகாரத்தை ஒரு  வலுவான பெட்டியில் வைத்து ,  சத்யபாமா என்ற பெண்ணிடம் (சரண்யா  பொன்வண்ணன் ) ஒப்படைக்கிறார்  

அதே நேரம் நடக்கும் ஒரு விபத்தில் ஆத்ரேயா   கோமா நிலைக்குப் போகிறான் .கடிகாரத்தின் சிறப்பு அறியாத சத்யபாமா , குழந்தையை வளர்க்கிறார். 

26 வருடங்களுக்குப் பிறகு அந்தக் குழந்தை மணிகண்டன் என்ற பெயர் கொண்ட இளைஞனாக (சூர்யா 3 )   வளர்ந்து ,

ஒரு  வாட்ச் மெக்கானிக்  ஆக இருக்கிறான், வீட்டில் இருக்கும் கால  இயந்திரக் கைக்கடிகாரப் பெட்டியின் அருமை தெரியாமலேயே. 

24 15

செத்துப் போன விஞ்ஞானி சேதுராமன் வீட்டில் இருந்து குப்பை மேட்டுக்குப் போன ,  கால இயந்திர கைக்கடிகாரப் பெட்டியின் சாவி,  26 வருடங்கள்  பயணித்து ,

சென்னை பாரிஸ் கார்னரில் இருக்கும் மணிகண்டனை வந்து அடைகிறது . 

மணிகண்டன் சாவியைப் போட்டுத் திறந்து,   கால இயந்திரக் கடிகாரததைப் பயன்படுத்திப் பார்த்து,  அதன் சிறப்பை உணர்கிறான் . 

 அந்த கால இயந்திரக் கடிகாரத்தை வைத்து நடக்கும்  நிகழ்வுகளை முன்னும் பின்னும் மாற்றி, தான் சந்தித்த சத்யா என்ற  பெண்ணை (சமந்தா) காதலிக்க வைக்கிறான் . 

இந்த நேரத்தில் கோமா நிலையில் இருந்து விழிக்கும் ஆத்ரேயா,  தனது உதவியாளன் மித்ராவுடன் (அஜய்குமார்)  மீண்டும் மேகமலைக்குப் போகிறான். சேதுராமன் எழுதி வைத்த குறிப்புகளை வைத்து,  

மீண்டும் கால இயந்திரக் கடிகாரத்தை உருவாக்க முயல்கிறான் . 

246

ஆனால் சேதுராமனுக்கே தெரியாமல் நடந்த ஒரு   விஷயம் காரணமாகவே  கால இயந்திரக் கடிகாரம் உருவான நிலையில்  ,ஆத்ரேயாவால் தான் ஒரு கால இயந்திரக் கடிகாரத்தை  உருவாக்க முடியவில்லை . 

எனவே  ஒரு விளம்பரம் கொடுத்து அதன் மூலம் மணிகண்டனை வரவைத்து அந்தக் கடிகாரத்தைக் கைப்பற்றும் ஆத்ரேயா  மணிகண்டனை சுட்டுக் கொல்கிறான். 

கால இயந்திரக் கடிகார த்தைப் பயன்படுத்தி  தனக்கு விபத்து நடந்த நாளுக்குப் போய் விபத்து நடக்காமல் செய்ய முயல்கிறான் . 

அப்போதுதான் அந்த கடிகாரம் 24  மணி நேரம் மட்டுமே முன்னும் பின்னும் போகும் . அதற்கு மேல் போகாது என்ற அதிர்ச்சியான உண்மை ஆத்ரேயாவுக்குத் தெரிய வருகிறது . 

அதிர்ந்து போன ஆத்ரேயா, சேதுராமனின் மகனான மணிகண்டனால்   மட்டும்தான்,  இதில் மாற்றம் செய்து வருடங்களைத் தாண்டி இந்தக் கடிகாரத்தைச்  செயல்பட வைக்க முடியும்  என்று நம்புகிறான் . 

248

எனவே  கால இயந்திரக் கடிகாரத்தின் மூலம்   ஒரு  நாள் முன்பு பயணிக்கிறான் . இப்போது மணிகண்டன்  சாகாமல் உயிரோடு இருக்கிறான்  (கால  இயந்திரம் பற்றிய  புரிதல் இருந்தால் கதையின் இந்த இடம் புரியும்) 

இந்த முறை  ஆத்ரேயா   மணிகண்டனைக் கொல்லாமல் தனது  உருவத் தோற்றத்தைப் பயன்படுத்தி,  தான்தான்  மணிகண்டனின் தந்தை என்று மணிகண்டனையே  நம்ப வைக்கிறான் . 

மணிகண்டனின்  பெற்ற அம்மாவான பிரியா , சிறுவயது மணிகண்டனின் போட்டோ ஆகியவற்றைக் காட்டுகிறான் . 

”24  மணி நேரம் மட்டுமே  முன்னும் பின்னும் பயணிக்கும் இந்த கால இயந்திரக் கடிகாரத்தை வருடக் கணக்கில் பின்னோக்கிப் பயணிக்க வைத்தால் உன் அம்மாவை பார்க்கலாம் .

நம்மை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஆத்ரேயாவை(!)ப் பழிவாங்கலாம் ”என்று ஆத்ரேயாவே  சொல்கிறான் . 

மணிகண்டன்  அப்படி அந்த கால இயந்திரக் கடிகாரத்தை மாற்றிக் கொடுத்தால், அதை வைத்து குறிப்பிட்ட தேதிக்குப் போய்,  தனக்கு நடந்த விபத்தை சரி செய்து கொள்வதோடு , 

249

மணிகண்டன் , அவன் வளர்ப்புத்தாய் , காதலி , காதலியின்  குடும்பம் அனைவரையும் கொன்று விட்டு , கால இயந்திரக் கடிகாரத்தைப் பயன்படுத்தி  உலகையே தனக்குக் கீழ் கொண்டு வருவதுதான் ஆத்ரேயாவின்  திட்டம் . 

24 மட்டுமே முன்னும் பின்னும் போகக் கூடிய  கால இயந்திரக் கடிகாரத்தை  வருடக் கணக்கில் முன்னும் பின்னும் போகக் கூடிய வகையில் மணிகண்டனால் மாற்ற முடிந்ததா ? இல்லையா ? 

ஆம் எனில் ஆனது என்ன ? இல்லை எனில் நடந்தது என்ன ? என்பதே இந்த 24 !

”அரைச்ச மாவையே அரைப்பதுதான் இந்த தமிழ் சினிமாக்காரங்க வேலை . ஹாலிவுட் படக் கதைகள் மாதிரி எதாவது வித்தியாசமா சொல்லுங்கப்பா…”  என்று கேட்பவர்களுக்கு என்றே தமிழில் வந்திருக்கும் படம் இது . 

கால இயந்திரம் என்பது லாஜிக் பார்க்கக் கூடாத  ஒரு ஏரியா . அது என்றென்றும் சுவையான விஞ்ஞானக் கற்பனை மட்டுமே . 

காரணம் வேகம் (velocity)  என்பது காலத்தின்  (time) கட்டுப் பாட்டுக்குள் வரலாம் . ஆனால் நிறை (mass) என்பது எந்தக் காலத்திலும், காலத்தின்  (time) கட்டுப்பாட்டுக்குள் வராது. 

விக்ரம் கே குமார்
விக்ரம் கே குமார்

எனவே கால இயந்திரம் என்ற விசயத்தில் பேய்ப் பட அளவுக்குக் கூட லாஜிக் பார்க்க தேவை இல்லை . அந்த வாய்ப்பை தனது வசதிக்குப் பயன்படுத்திக் கொண்டு விளையாடி இருக்கிறார் இயக்குனர் விக்ரம் கே குமார் 

ஆனால் ஹாலிவுட் அளவில் கூட (நமக்குத் தெரிந்த வரையில் சொல்லப் படாத )  கால உறைவு (time freeze ) என்ற விசயத்தை வைத்துக் கொண்டு திரைக்கதையில் விளையாடி இருப்பதோடு ,

படமாக்களிலும் அசத்தி  இருக்கிறார் பாருங்கள் . அங்கேதான் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார் விக்ரம் கே குமார் . கிரேட் .

குறிப்பாக இந்தியா இலங்கை ஒன்டே கிரிக்கெட் மேட்ச்சின் முடிவை மாற்றுவது ! 

கழுகின் இறகு எரிந்து விழுந்த காரணத்தால் சேதுராமனுக்கே தெரியாமல் கால இயந்திரக் கடிகாரம் உருவாவது, மணிகண்னிடம் அந்த சாவி வந்து சேர்வது போன்ற…..

இயற்கையைக் கடந்த (super natural) விஷயங்கள் ஒரு பக்கம் அசத்துகிறது .

24 11

இன்னொரு பக்கம் , ஆத்ரேயா மணிகண்டனைக் கண்டு பிடிப்பது, கொல்வது, மீண்டும் உயிராக்குவது, கடிகாரத்தை மாற்றிக் கட்டுவது தவறாக  நடந்த விசயம்  என்று நினைத்தால்  அதிலும் ஒரு பிளான் இருப்பது, 

ஆத்ரேயாவை சத்யா இனம் காணுவது, பிரசனை பெரிதாவதற்குள் ஆத்ரேயா  விபத்தை உருவாக்கி அடிபட்டு விட அவனைக் காப்பாற்ற மணிகண்டனே கால இயந்திரப்படி சம்பவத்தை மாற்றி …

வந்திருப்பது ஆத்ரேயா என்பதை சத்யா உணராமலே செய்வது என்று….

அட… அட… அட… திரைக்கதையில் என்ன ஒரு அட்டகாசமான திருப்பங்கள் ,  

குழந்தை மணிகண்டன் கையில் கால இயந்திரக் கடிகாரம் இருப்பது இதன் உச்சம் !.  

ஆத்ரேயா  ஒன்றரைக் கோடி ரூபாய் நன்கொடை தரும் பள்ளி விவகாரத்தை எல்லாம் கடைசியாகக் கொண்டு வந்து சேர்ப்பது திரைக்கதை நேர்த்திக்கு  நல்ல உதாரணம் 

சரண்யா பொன்வண்ணன் டிராக் அட்டகாசமான ஒரு தனி படத்துக்கான மேட்டர் . (அப்படி ஒரு பழைய தமிழ்ப் படம் இருக்கற மாதிரி கூட தோணுது பாஸ் )

241

மவுன விரதம் இருக்கும் குடும்பம் சம்மந்தப்பட்ட காட்சிகளில் ,  விக்ரம் கே குமாரின் லேட்டஸ்ட் பேமிலி டச் வாசனை !

டைம் மெஷின்  தொடர்பான காட்சிகள் அனைத்தையும் முடிந்தவரை மூழ்கி அட்டகாசமாக இயக்கி இருக்கிறார் . அந்த வகையில் மிகச் சிறந்த டைரக்ஷன். 

கால இயந்திரக் கடிகாரத்தைப் பயன்படுத்தி காதலை வரவைப்பது அடிப்படையில் நல்ல,ஐடியாதான்  

ஆனால்  வசனம்தான் பொறுமையை சோதிக்கிறது . ”ஏன்னா நான் ஒரு மெக்கானிக்” என்பதை அளவுக்கு மீறி சொல்கிறான் மணிகண்டன் . 

ஒரு நிலையில் ”வேணாம்பா போதும்” என்று நமக்கே கத்த வேண்டும் போல இருக்கிறது . அதுபோல மணிகண்டனும் சத்யாவும் மீண்டும் மீண்டும் முழு அட்ரசையும் சொல்வதும் அய்யகோ !

அவன் சேதுராமன் புள்ளன்னா  நான் சேதுராமன் அண்ணன் என்ற வசனமும் அதன் தொடர்ச்சியும் வசன ஏரியாவில் ஓகோ !

முதல் காட்சியிலேயே நம்மை வியக்க வைக்கிறது திருவின் ஒளிப்பதிவு . கடைசி பிரேம் வரை அந்தக் கம்பீரம் தொடர்கிறது . 

திரு என்கிற திருநாவுக்கரசு
திரு என்கிற திருநாவுக்கரசு

வண்ணம் , ஒளி ஆளுமை , காட்சியின் உணர்வுக்கு உரம் சேர்ப்பது, என்று பாராட்ட பல அம்சங்கள் இருந்தாலும் அவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு முப்பரிமான உணர்வைக் கொடுத்து பிரம்மிக்க வைக்கிறார் . 

இந்தப் படத்துக்கு திரு கொடுத்திருப்பது யானை பலம் .. இல்லை இல்லை ஒரு யானைப் படையின் பலம் !

தனது ‘என்ன விலை அழகே… பாடலை மீண்டும் ஞாபகப்படுத்தி இருந்தாலும்   ஏ ஆர் ரகுமான் கொடுத்து இருக்கும் ‘நான் உன் அழகினிலே பாடல் தெய்வீக மெலடி .

இசை , வரிகள் , படமாக்கப்பட்ட விதம் எல்லாவகையிலும் முழுமையான ஒரு பாடல் அது.

ஆனால் அந்தப் பாடலுக்குப் பொருத்தமான முன் காட்சி இல்லாததால், படத்தோடு பார்க்கையில்  பாட்டின் வீரியம் குறைகிறது .

பாடலகள் பின்னணி இசை இரண்டின் மூலமும்  தன் பங்குக்கு படத்துக்கு பலம் சேர்க்கிறார் ஏ ஆர் ரகுமான் . 

245

அமித்ராய் மற்றும் சுப்ரதா சக்ரபர்த்தி இருவரின் கலை  இயக்கமானது,  கால இயந்திரக் கடிகாரம், சேதுராமனின் ஆய்வகம் , மனிகண்டனின் வாட்ச் கடை என்று எல்லா இடங்களையும் நம்ப வைக்கிறது . சபாஷ் . 

சூர்யா !

புதிய பறவை கால சிவாஜி வில்லனாக நடித்தால் எப்படி இருக்கும் ? அப்படி ஒரு பாணியில் நடித்து இருக்கிறார் இளம் வயது ஆத்ரேயாவாக வரும் சூர்யா . குரல் நடிப்பும் அபாரம்  

வில் சேர் வில்லனாக முடங்கிய பிறகும் முகமும் கண்ணும் குரலும் சிறப்பு .கதைப்படி வில்லனாக இருந்தாலும்  மூன்று சூர்யாக்களிலும் இவர்தான் நாயகன்.

 விஞ்ஞானி சேதுராமன் கண்ணியம் . மணிகண்டன் , நாம் எல்லா படங்களிலும் பார்க்கிற வழக்கமன சூர்யா . 

நான் உன் அழகினிலே என்ற வரியை பாடி  நடிக்கையில் சூர்யா கை விரல்களை விரித்து சுழற்றி செய்யும் அந்த ஆக்ஷன்  தப்பாக இருக்கிறது. . அது ஒரு மாதிரியான உடல் ரீதியான அழகுக்கு  செய்ய வேண்டிய பாவனை  . 

24 13

ஆனால் பாடலில் இருப்பது ஒரு மென்மையான உணர்வு . பாடலின் அந்த தன்மைக்கு ஏற்ப ‘அழகினிலே’ என்ற வார்த்தைக்கு ஏற்ற ஒரு கவிதைப் பூர்வமான  பாவனையை சூர்யா செய்து இருக்க வேண்டும் .  

சூர்யாவை அடுத்து நடிக்கும் வாய்ப்பு சரண்யா பொன்வண்ணனுக்கும் நித்யா மேனனுக்கும்தான். சரண்யா ஒரு காட்சியில் உருக்கி விடுகிறார் . 

தமிழ் உச்சரிப்பு தகராறு செய்தாலும் குரல் நடிப்பில் அசத்தி இருக்கிறார் நித்யா குறிப்பாக அந்த … வாட்ச் இருக்கறது தெரிஞ்சா குழந்தையைக் கொன்னுடுவான்…” வசனம் !

அழகுப் பதுமையாக வரும் சமந்தா உட்பட வேறு யாருக்கும் பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லாவிட்டலும் பொதுவில் அனைவருமே கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கிறார்கள் . 

கால இயந்திரக் கடிகாரத்தின் மூலம்  ஒருவன் இறந்த காலத்துக்குப் போய் ஒரு நிகழ்வை மாற்றுகிறான் என்றால் அதன் பாதிப்பு அவனுக்கு  மட்டும் அல்லாது, 

247

அவனுக்கு யாரென்றே தெரியாத பலருக்கும் ஏற்படும் . அப்படி பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை கதைக்குள் நுழைத்து சும்மா பின்னிப் பெடல் எடுத்து இருந்தால் …

படம் இன்னும் வேறு தளத்துக்கு…. களத்துக்கு…. உயரத்துக்குப் போய் இருக்கும் . 

இவ்வளவு அட்டகாசமாக கால இயந்திரம் பற்றிய காட்சிகளை அமைத்த விக்ரம் குமார் அந்த விசயத்தை எப்படி தொடாமல் விட்டார் என்று தெரியவில்லை .

ஆனாலும் என்ன …

24…. புதுமை விரும்பிகளுக்காக ஓர் 164.

மகுடம் சூடும் கலைஞர்கள் 

—————————————–

திரு என்கிற திருநாவுக்கரசு, விக்ரம் கே குமார், சூர்யா, ஏ.ஆர் ரகுமான், அமித்ராய் மற்றும் சுப்ரதா சக்ரபர்த்தி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →