தி.ஜானகிராமனின் மோகமுள் , முகம் படங்களுக்கு பிறகு பாரதி, பெரியார் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களை எடுத்த இயக்குனர் ஞானராஜசேகரன் ஐ ஏ எஸ், அடுத்து கேம்பர் சினிமா சார்பில் தனது மகள் சிந்து ராஜசேகர் மருமகன் சுஷாந்த் தேசாய் , மற்றும் ஸ்ரீவத்சன் நடாதூர், ஷரண்யன் நடாதூர் ஆகியோரின் தயாரிப்பில் உருவாக்கி இருக்கும் படம் ராமானுஜன் .கணிதத்தை கவுரவப்படுத்துவதற்கு என்றே உருவான மூளையோடு தமிழகத்தில் பிறந்து, இந்தியர்கள் அனைவரையும் வெள்ளைக்காரன் கேவலமாகப் பார்த்த காலத்திலேயே அவனை தனது கணிதத் திறமையால் வியக்க வைத்து…. அதே நேரம் சிறப்பான திறமைகள் கொண்ட யாரையும் சராசரி மனிதனாக்கி பத்தோடு பதினொன்றாக ஆக்கி மந்தையில் சேர்ப்பதிலேயே இன்றும் அன்றும் கவனமாக இருக்கும் நமது ஒட்டு மொத்த இந்திய சமூகத்தின் பொதுப் புத்தியால் புறக்கணிக்கப்பட்டு…. மனைவியுடனான காதல் வாழ்க்கையையும் இழந்து…. 32 வயதில் டிபி நோய் வந்து செத்துப் போன அந்த மாபெரும் ‘மனிதக் கணிதக் கணிணி’யின் வரலாறுதான் இந்தப் படம் . படத்தில் ராமானுஜனாக நடித்து இருப்பவர் நடிகையர் திலகம் சாவித்ரியின் பேரன் அபிநய் வடி.
கும்ப கோணத்தில் ராமனுஜன் பிறந்த , இன்றும் பழமை மாறாமல் பராமரிக்கப்படுகிற வீடு, அவர் வாழ்ந்த சென்னை மற்றும் கேம்பிரிட்ஜ் நகரங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகிறது.
எப்படி உருவானான் ராமனுஜன் என்பதற்கு இயக்குனர் ஞானராஜசேகரன் சொல்லும் பதில் பிரமிக்க வைக்கிறது. “நான் பார்த்த குட்வில் ஹன்டிங் என்ற ஆங்கிலப் படம் ஒன்றில் தன்னை அறிவாளியாகக் காட்ட முயலும் ஒருவனைப் பார்த்து இன்னொரு கதாபாத்திரம் ”நீ என்ன பெரிய ராமானுஜனா?” என்று கேட்டது . அதைப் பார்த்த பிறகே நான் ராமானுஜனைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன்.
கும்பகோணத்தில் பிறந்து கல்லூரிப் படிப்பை தொடரமுடியாத ராமானுஜன் கணிதத் திறமையால் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் ஃபெல்லோஷிப் பெற்ற முதல் இந்தியன் என்ற பெருமையையும் லண்டன் ராயல் சொசைட்டியில் ஃபெல்லோஷிப் பெற்ற இரண்டாவது இந்தியன் என்ற பெருமையையும் பெற்றான் . ஆனா

ல் வெள்ளைக்காரனிடம் இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் அவனை வெள்ளைக்காரன் போற்றிய அளவுகூட நாம் போற்றவில்லை . வெள்ளைக்காரன் அவனுக்கு செய்த உதவிகளை தடுத்தது அவனது சுற்றம். சில உதவிகளை வெள்ளைக்காரனின் எதிர்ப்புக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகவே அனுமதித்தது.
இன்றும் அவனை இங்கிலாந்து கொண்டாடுகிறது .அவன் போட்ட கணக்கு சமன்பாடுகளில் முப்பது சதவீதக் கணக்குகள் இன்னும் விடை காணப்படாமலே ஆராய்ச்சியில் இருக்கின்றன . அவனைப் பற்றிய ஆங்கிலப் புத்தகம் ஒன்று பதினைந்து பதிப்புகளை தாண்டி இன்னும் சக்கைப் போடு போடுகிறது. அவனைப் பற்றிய மெடிக்கல் ரிப்போர்ட் , சாவதற்கு முன்பு அவன் நோய்க்கு எடுத்துக் கொண்ட மருந்த்கள் என்று ஏராளமான தகவல்களை அவர்கள் வைத்து இருக்கிறார்கள் . அப்படிப்பட்ட ராமானுஜனை படமாக எடுப்பான் என்று தோன்றியதால் எடுத்து முடித்து விட்டேன்” என்கிறார்
இவை எல்லாவற்றையும் விட ஞானராஜ சேகரன் சொன்ன ஒரு விஷயம் உடனடியாக நம் சட்டைப்பையை தொட்டுப் பார்க்க வைக்கிறது. இன்று வங்கிகளில் ஏ டி எம் கார்டு மூலம் பணம் எடுக்கிறோமே அதற்கு அடிப்படையே நம்ம ராமானுஜன் எழுதி வைத்த ஒரு கணக்கு சூத்திரம்தானாம். அதை வைத்து தொடர்ந்த ஆராய்ச்சிகளின் பலனால்தான் ஏ டு எம் கார்டு டெபிட் கார்டு போன்ற பணம் உருவி அட்டைகளே உருவானதாம் . அப்படிப்பட்ட ராமானுஜனைதான் நாம் பணமில்லாத ஏழையாக தூக்கிப் போட்டுக்
கொன்றோம் (பாரத் மாதாகி…….. ஜே !)