36 வயதினிலே @ விமர்சனம்

jo 7

நடிகர் சூர்யா தனது 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கும் முதல் படம்.

புகழின் உச்சியில் இருக்கும்போதே சூர்யாவைத் திருமணம் செய்து கொண்டு சினிமா உலகை விட்டு விட்டுப் போன ஜோதிகா திரும்ப நடிக்க வந்திருக்கும் படம் .

மஞ்சு வாரியார் நடிப்பில் மலையாள சினிமா உலகைக் கலக்கிய ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மறு உருவாக்கம் ….

இப்படி பல சிறப்புகளுடன் வந்திருக்கும் படம்தான் ஜோதிகா நடிக்கும் ’36 வயதினிலே ‘

ஆகாஷவாணியில் பணியாற்றும் தமிழ்ச் செல்வனின் (ரகுமான்) மனைவி; ஒரு பள்ளிக்கூட மாணவிக்கு அம்மா ; பாசமுள்ள மாமனார் சதாசிவம் (டெல்லிகணேஷ்) டி வி சீரியல் பைத்தியமான மாமியார் இவர்களுக்கு மருமகள்; வருவாய்த்துறையில் யூ டி கிளார்க்;  இதுதான் வசந்தி தமிழ்ச் செல்வன் (ஜோதிகா) !

கல்லூரிக் காலத்தில் தன்னம்பிக்கை செறிந்த தைரியமான உற்சாகமான பெண்ணாக இருந்த வசந்தி,  திருமணத்துக்கு பிறகு கணவனுக்காக, குடும்பத்துக்காக,  குடும்பத்தின் பொருளாதாரத்துக்காக முற்றிலும் தலைகீழாக மாறுகிறாள். சுயம் இழக்கிறாள். எல்லோரின் பார்வைக்கும் அப்பிராணியாக,  கேலிப் பொருளாக மாறுகிறாள்.வேஸ்ட் பீஸாகத்  தெரிகிறாள் .

அலுவலகத்தில் அவளுக்கு நல்ல தோழி கிரிஜா (தேவதர்ஷினி) , மரியாதையுள்ள சக அலுவலர் ஜெயச்சந்திரன் (பிரேம்) என்று சிலர் இருந்தாலும் வசந்தியை கேலி செய்யவும் அவளை வைத்து ‘கீமடி’ பண்ணவும் ஒரு குழுவே  இருக்கிறது . வீட்டிலோ கணவன் மட்டுமல்ல; மகளும் மதிப்பதில்லை. மகளுக்கு அயர்லாந்து சென்று படிக்க வேண்டும் என்று ஆசை . மகள் கூடவே போக வேண்டும் என்று அப்பா தமிழ்ச் செல்வனுக்கும் ஆசை . ஆனால் வசந்தியை மட்டும் அழைத்துப் போக மனம் இல்லை .

அரசாங்க வேளையில் கிடைக்கும் அவளது  வருமானம் வேண்டும் . அப்பா அம்மாவை பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும் . மிக முக்கியமாக அவள் வேண்டாம் .

கவனக் குறைவாக கார் ஓட்டும் தமிழ்ச செல்வன் ஒரு சிறுவன் மோதி விபத்தாகி விட, கேஸ் என்று ஆனால் அயர்லாந்து போக முடியாது என்பதால் அந்தக் காரை வசந்தி ஓட்டியதாக  மாற்றிச் சொல்ல வைத்து அவளை மாட்ட வைத்து,  தான் தப்புகிறான் . வசந்தியின் ஓட்டுனர் உரிமமும் காலாவதி ஆன நிலையில் வசந்திக்கு எதிராக வழக்கு ஸ்ட்ராங் ஆகிறது.

ஆனாலும் வீட்டில் கணவன் அவளை வார்த்தைகளால் குத்திக் கிழிக்க மகளோ அலட்சியத்தாலும் புறக்கணிப்பாலும் ஒடித்துப் போடுகிறாள் .

jo 5

இந்த நிலையில் பள்ளி விழாவில் கலந்து கொண்ட குடியரத் தலைவரிடம்,  வசந்தியின் மகள், தன் அம்மா கேட்டதாக ஒரு கேள்வியை கேட்க , அதனால் கவரப்படும் குடியரசுத் தலைவர் அந்தக் கேள்வியை சிந்தித்த வசந்தியை கவுரவிக்கும் வகையில் சந்தித்து,  விருந்து கொடுக்க விரும்புகிறார் . அந்த சந்திப்பின்போது பாதுகாப்புத் தரப்பால் காட்டப்படும் கெடுபிடிகளில் பயந்து குடியரசுத் தலைவர் வந்ததும்,  பிபி ஏறி அவர் முன்னால் மயங்கி விழுகிறாள் வசந்தி .

கணவன் , மகள், தெரு , அலுவலகம் , ஊர் , பேஸ்புக் மூலமாக உலகம்….என்று எல்லோரும் வசந்தியை வைத்து கிண்டல் கும்மி அடிக்கிறார்கள்.

கணவன் மகள் இருவரிடமும் மிச்சம் இருந்த மரியாதையும் போகிறது வசந்திக்கு . இந்த நிலையில் அயர்லாந்துக்கு விசா கிடைக்க, வசந்தியை விட்டு விட்டு தமிழ்ச் செல்வனும் மகளும் மட்டும் அயர்லாந்து போகிறார்கள் . கல்யாணத்துக்குப் பிறகு குடும்பத்துக்காக தனது கனவுகளை இழந்தது எவ்வளவு பெரிய தவறு என்று உணரும் வசந்தி,  நொறுங்கிப் போகிறாள்.

வசந்தியோடு கல்லூரியில் படித்து,  இப்போது ஒரு பன்னாட்டு கம்பெனியில் வருடம் 25 கோடி சம்பளத்தில் பணியாற்றும் சூசன் டேவிட் (அபிராமி ) இந்த சமயத்தில் மீண்டும் வசந்தியை சந்திக்கிறாள் . சூசன்  கொடுத்த உற்சாகத்தால் தனது தனித் தன்மையை கனவுகளை மீட்டெடுக்கும் வசந்தி , எப்படி மீண்டும் குடியரசுத் தலைவரே  தனது மாளிகைக்கு அழைத்து விருந்து கொடுக்கும் அளவுக்கு உயர்கிறாள் என்பதே இந்த 36 வயதினிலே .

வாவ் ஜோதிகா !

என்ன ஒரு அட்டகாசமான மறு பிரவேசம் !

jo 6

பழைய துள்ளலான உற்சாகமான ஜோதிகாவை விட இந்த பாந்தமான பக்குவமான ஹோம்லியான ஜோதிகாவுக்கு மரியாதையோடு அதிகமாகவே மார்க் போடலாம் . இத்தனை வருட இடைவெளியை முதல் காட்சியிலேயே ஜஸ்ட் லைக் தட் சமன் செய்து விட்டு , விட்ட இடத்தில் இருந்து  வீடு கட்டி விளையாடுகிறார் ஜோதிகா.  முட்டு சந்தில் கணவனுடன் நடந்து கொண்டே பேசும் இடத்தில் ஜோதிகாவின் பழைய சீறல் அப்படியே சாரல் அடிக்கிறது. சபாஷ் !

அந்தக் கால ஜோதிகா நடிப்பின் பிளஸ் பாயின்ட் எதையும் மிஸ் பண்ணி விடாமல் , அதே நேரம் இன்னும் பட்டை தீட்டிக் கொண்டு ஒரு பேரிளம் பெண்ணாக ஜொலிக்கிறார் ஜோதிகா . தோற்றம் , கதாபாத்திரத்துக்கான பிஹேவியர் , எக்ஸ்பிரஷன்கள் என்று எல்லாவகையிலும் ஆசம்! ஆசம்!! ஆசம்!!!

ஒன்று புரிகிறது .. வயது , இளமை இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, சினிமாவில் நின்று நீடித்து நிதானமாக அழுத்தமாக அட்டகாசமாக விளையாட வாய்ப்புள்ள ஒரு மிக நீண்ட செகண்ட் இன்னிங்க்ஸ் ஜோதிகாவுக்கு  காத்திருக்கிறது . அப்புறம் அவர் இஷ்டம் .

ஜோதிகாவை அடுத்து படத்தில் நம்மை கவர்வது  விஜியின் வசனங்கள்.  “எதையும் விமர்சனம் பண்றதுதான் அறிவுன்னு நினைச்சு ஒரு தலைமுறையே நாசமாப் போச்சு ” என்பது போன்ற சமூக சாடல்கள் ஆகட்டும் .. ” ஒரு பொண்ணு ரொம்ப அவமானமா நினைக்கறது,  யாரை நம்பி வாழறோமோ அந்தக் கணவனாலேயே சீரியஸா கேலி செய்யப்படும்போதுதான் ” என்கிற ரீதியில் திரைக்கதைக்குள் மூழ்கி வசன முத்துக்களை எடுப்பதில் ஆகட்டும்…. அசத்தி இருக்கிறார் விஜி . தங்கப் பேனா ! (ஒருவேளை இந்த வசனங்களில் மலையாளத்தில் பாபி சஞ்சய் எழுதிய   வசனங்களும் அப்படியே இடம்பெற்று இருந்தால்,  அந்த ஒரிஜினல் வசனகர்த்தாவுக்கும் வாழ்த்துகள்!)

ராயலான பிசினஸ் உமன் கேரக்டரில் அபிராமியின் முகத்தை விட உடம்பும் உயரமும் கச்சிதமாக பொருந்துகிறது .

jo 8

யாரந்த வேலைக்காரப் பாட்டி ? சிரிக்கவைக்கிறார் . அப்படியே அழவும் வைக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் விவேக் வரிகளில் வாடி ராசாத்தி பாடல் …. வாடி ராசாத்தி !

திவாகரின் ஒளிப்பதிவு நடிப்பவர்களின் அழகுக்கு மட்டும் இன்றி காட்சியின் உணர்வுக்கும் துணை போகிறது .

நெகிழ்வும் மகிழ்வுமான காட்சிகள் அடுத்தடுத்து வந்து நம்மை பூவிலங்கால் கட்டிப் போடுகின்றன .

ஒரு காட்சியில் வந்தாலும் கொலை வெறியை உண்டாக்குகிறார் இளவரசு . கிரேட்

ஆர்கானிக் உணவுகளின் அருமையை சொல்வதற்காக இந்தப் படத்துக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட் .

இப்படி பல விஷயங்கள் பாராட்டும்படி இருப்பதால் இன்னும் சில விசயங்களை சிறப்பாக செய்து இருக்கலாமே என்ற ஆற்றாமை வருவதை தவிர்க்க முடியவில்லை.

jo 4

முக்கியமாக வசந்தி கதாபாத்திரத்துக்கு முதல் பாகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பரிதவிப்புக்கு அழுத்தத்துக்கு இணையான இரண்டாம் பகுதி உருவாக்கப்படவில்லை. பெரிதாக  ஈர்ப்பில்லாத சம்பவங்களால் கடக்கிறது இரண்டாம் பகுதி .

ஜனாதிபதியை சந்தித்து பூவா தின்பது என்ற ஒரு மெல்லிய கிளைமாக்சுக்கு வசந்தி வாழ்வில் இம்பூட்டு கஷ்டப்பட வேண்டாம் . தோழி சூசன் அம்பூட்டு பேச வேண்டாம்.  ஒரு பெண்ணின் கனவுகளின் வெற்றி என்பது கன்டென்ட் ரீதியாக மட்டுமல்ல… காட்சி ரீதியாகக் கூட அந்த கிளைமாக்சில் இல்லை.

அதுவே போதவில்லை என்ற நிலையில் , இன்னொரு பக்கம் , ஜனாதிபதியுடனான   முதல் சந்திப்பு குறித்த காட்சிகளில் இருக்கும் உள்ளடக்கத்துக்கு இணையான உள்ளடக்கமாவது  கிளைமாக்ஸ் சந்திப்பில் இருக்க வேண்டாமா? இல்லையே  . ஜோதிகாவே இருந்தாலும் விஷயம் வேணாமா ?

வேலைக்காரப்பாட்டிக்கும் ஜோதிகாவுக்கும் இடையேயான உறவை இன்னும் நெகிழ்வாக சொல்லி இருக்கலாம். ஜெயச்சந்திரன் கேரக்டரை சும்மா பிரதர் மாதிரி என்றெல்லாம் சொல்லி பசப்பி இருக்காமல் , ஒரு கண்ணியமான ஆண் பெண் நட்பாக சிறப்பாக காட்சிப் படுத்தி இருக்கலாம் .

படம் பாதி கடக்கும்போதே ஸ்ரீதேவி நடித்த இங்க்லீஷ் விங்க்லீஷ் படம் சும்மா ஜிவ்வென்று ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. இரண்டு படங்களின் உருவக் கூடும் கிட்டத்தட்ட ஒன்றே .

ஜோதிகாவுக்கு இருக்கும் நடிப்பு யானைப் பசிக்கு  கட்டுக் கரும்பும் மூங்கில் காடும் போன்றதொரு,  இன்னும் சிறப்பான கதையைக் கூட தேர்ந்தெடுத்து இருக்கலாம்.

பெண்கள் ஆட்டோ முதற்கொண்டு விமானம் வரை ஓட்டுகிற நாட்டில்,  பிணம் எரிப்பது முதல் பிசினசில் கொடி நாட்டுவது முதல் அனைத்தும் செய்கிற சூழலில் , திரும்பி வரவே முடியாது எனத் தெரிந்தும் செவ்வாய் கிரகத்துக்கு போக முடிவு செய்கிற காலத்தில் …..

என்னதான் யதார்த்தம் , சூழலுக்கு ஏற்ற காட்சி அமைப்பு என்றெல்லாம் சமாதானம் சொன்னாலும் …. ஆர்கானிக் உணவுக்கான ஆதரவே ஆனாலும் ….

பெண் என்றால் அவள் மொட்டை மாடியில் காய்கறி போட்டுதான் பேர் வாங்கி ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என்பது….. கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம்.  காலத்துக்கு ஏற்ப கதையை மாற்ற வேண்டும் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் . !

அதுதான் சாத்தியம் என்றால் இயக்குனர் மீட்டெடுக்க விரும்பியது யூ டி கிளார்க் வசந்தியின் கனவுகளைத்தானா? கல்லூரிக் கால புரட்சிப் பெண் வசந்தியின் கனவுகளை இல்லையா ? ஆம் எனில் இந்தக் கதை எதற்காக?

தவிர தனது கனவுகளை மீட்டெடுக்க வசந்தி தானாக எந்த முயற்சியும் செய்யவில்லை. அகஸ்மாத்தாக கொடுத்து விடும் காய்கறி மூலம்தான் அவளுக்கே காய்கறி சப்ளை ஆர்டரே வருகிறது . இந்த மாதிரி probabilty போராடும் எல்லா பெண்களுக்கு அமையுமா என்ன?

jo 1சங்க காலம் முதலே பெண்களுக்கு அரசியல் சமூகம் சொத்து இவற்றில் சம உரிமை கொடுத்த வரலாறு தமிழ் இனத்துக்கு உண்டு . பின்னாளில் ஆரிய கலப்புக்கு பின்னால்தான் பெண்களை அடிமைப்படுத்தும் பழக்கம் வந்தது . அப்படி ஆரியக் கலப்பால் உருவான இனம்தான் மலையாள இனம் .

அந்த மலையாள இனத்தில் வந்திருக்கும் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் , இந்தப் படத்தில் பெண்ணை அடிமைப்படுத்தி  சுயநலத்துக்காக  கைவிட்டுப் போகும் பாத்திரத்துக்கு தமிழ்ச்  செல்வன் என்று பெயர் வைத்திருக்கும் அநியாயத்தை என்னவென்று சொல்ல ? (ஆனால் பிசினசில் வெற்றி பெற்ற கதாபாத்திரத்துக்கு மட்டும் சூசன் டேவிட் என்று பெயர்  ). உண்மையில் ஜோதிகா கதாப்பாத்திரத்துக்கு தமிழ்ச் செல்வி என்று  பெயர் வைத்துவிட்டு ரகுமான் கேரக்டருக்கு பழசி ராஜா ரேஞ்சுக்கு ஒரு பக்காவான மலையாளப் பெயரை வைத்திருக்க வேண்டாமா? அதுதானே நியாயம் ?

இது தவிர , திரைப்படங்களில் சைக்கோவாக , கொடூர கொலைகாரனாக , ரேப்பிஸ்ட்  ஆக வரும் ஒரு நடிகரை தமிழக எம் எல் ஏ என்று காட்டி அதுவும் அவர் சட்ட மன்றத்தில் பேசுவது போலக் காட்டி … (மலையாளத்தில் இந்தக் கேரக்டரில் நடிக்கும் அளவுக்கு கொடூரமான நடிகர் என்று உலகில் யாருமே இல்லையே…. பாலன் கே நாயருக்கு பிறகு !)

இப்படி மலையாள இயக்குனர் ரோஷன்  ஆண்ட்ரூசின் intellectual arrogance படம் முழுக்க தெரிந்தாலும் …

சினிமாவில் பெண்கள்  பெரும்பாலும் கிளிவேஜ் மற்றும் இடுப்பாக மட்டுமே பார்க்கப்படும் இந்தக் காலத்தில் ,

பெண்களின் தனித் தன்மை பற்றிப் பேசும் படம் என்ற வகையிலும் , ஜோதிகாவின் அம்சமான நடிப்புக்காகவும் பாராட்டலாம் இந்தப் படத்தை .

jo 2மொத்தத்தில் 36 வயதினிலே … ‘ஜோ’ரான ‘தி’ரைக் ‘கா’ட்சி

மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————–

ஜோதிகா, விஜி (மற்றும் பாபி சஞ்சய்), திவாகரன், சந்தோஷ் நாராயணன், ‘தயாரிப்பாளர்’ சூர்யா

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →