ஜீரோ ரூல்ஸ் எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர் எல்.சிவபாலன் தயாரிக்க, கவுண்டமணி, நான் கடவுள் ராஜேந்திரன், பாலாசிங், திருமுருகன் , வைதேகி , விசாலினி ஆகியோர் நடிக்க , கதை திரைக்கதை வசனம் எழுதி ஆரோக்கியதாஸ் இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கும் படம் 49 ஓ .
படம் ஓஹோவா? இல்லை ‘ஓ ‘வா? பார்க்கலாம் .
அரசின் கொள்கைகள் காரணமாக ஏறும் விவசாயப் பொருட்கள் விலை, அறுவடை நேரத்தில் திட்டமிட்டுக் குறைக்கப்படும் தானியங்களின் விலை, விவசாயக் கூலிகள் கிடைக்காத நிலைமை…. இவற்றால் மண்வளம் நீர்வளம் இருந்தும் அந்த கிராமத்து விவசாயிகள் விவசாயத்தால் பலன் பெற முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
அந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தொழில் பூங்கா வர இருப்பதை முன் கூட்டியே ரகசியமாக அறியும் ஒரு ரியல் எஸ்டேட் அதிபன் , அந்த விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்க திட்டமிடுகிறான்
விவசாயிகளின் வறுமையை காரணம் காட்டி அந்த இடத்துக்கு அதிக விலை கொடுப்பதாக சொல்லி அட்வான்ஸ் தொகை கொடுத்து பவர் எழுதி வாங்கிக் கொண்டு , ‘பிளாட் விற்றால்தான் மீதிப்பணம் தருவேன்’ என்று கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறான் . அவனுக்கு எல்லா அரசியல்வாதிகளும் துணை போகின்றனர் .
அதே ஊரைச் சேர்ந்த சவரி (கவுண்டமணி ) ஆரம்பத்தில் இருந்தே விவசாய நில விற்பனையைத் தடுக்க எவ்வளவோ முயன்றும் முடியாமல் போகிறது . நிலத்தையும் விற்று விட்டு பணமும் பெறாமல் ஏமாந்த விவசாயிகள் சவரியின் உதவியை நாடுகின்றனர் .
ரியல் எஸ்டேட் அதிபனிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திரும்பிக் கொடுத்து நிலங்களை எல்லாம் மீட்பதற்கு பணம் தேடுகிறார் சவரி. அதற்காக எல்லா அரசியல்வாதிகளையும் அழைத்து ஓட்டுக்கு விலை பேசுகிறார் . லட்சக் கணக்கில் அவர் காசு கேட்க , மிரண்டு போன எல்லா அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து மக்களை டீலில் விடுகின்றனர் . 
கொந்தளிக்கும் சவரி ஊரில் உள்ள எல்லோரையுமே தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய வைக்கிறார் . ஒரே தொகுதிக்கு ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் போட்டியிட , நாடே அதிர்கிறது . ”இதற்கு பதிலாக 49 ஓ வுக்கு ஓட்டுப் போடலாமே?” என்று கேட்க ”49 ஓ வில் ஓட்டுப் போட்டால் என்ன பலன் ?” என்று கேட்கும் சவரி , அடுத்து சொல்லும்- செய்யும் விஷயங்கள்தான் இந்த 49 ஓ படம் .
மேலோட்டமாக தேர்தல் கதை போல தெரிந்தாலும், அடிப்படையில் விவசாயத்தின் பெருமையை , விவசாயிகளை அரசு காக்க வேண்டிய கடமையை , விளை நிலங்களை எல்லாம் பிளாட் போட்டு விற்கும் மடமையை கண்டிக்கும் படம் இது . படத்தை முழுமையாக ஆக்கிரமிக்கிறார் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி .
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் .. ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் நடிக்க வந்தாலும் விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறது கவுண்டமணியின் நகைச்சுவை ராஜாங்கம். அதாவது அவர் நடித்த முந்தைய படம் போன மாசம்தான் வந்தது போலவும் தொடர்ந்து அதே ஓட்டத்தில் அவர் இருப்பது போலவும் ஓர் அசத்தல் .
முகத்திலும் குரலிலும் கொஞ்சம் தளர்ச்சி தெரிந்தாலும் நடை உடை பாவனையில் உற்சாகத்தில் நகைச்சுவை வசனங்களில் ஒரு துளி எனர்ஜியும் இழக்காமல் இருக்கிறார் கவுண்டமணி . அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் ஒரு ரசித்து ருசிக்க வைக்கிறது . அல்லது சீரியசாக கைதட்டல் வாங்குகிறது.
திருவிழாவுக்கு போகும்போது ”என்னையும் வண்டில ஏத்திட்டு போங்க” என்ற மனைவியின் வசனத்துக்கு அடிக்கும் பன்ச்சில் இருந்து கடைசிவரை அதே சரவெடி .
அந்தக் கட்சி, இந்தக் கட்சி, அவரு , இவரு , இளைஞர் அணி , முதியவர்கள் அணி , சினிமாக்காரர்கள், மீடியாக்கள் , தொழிலாளி, முதலாளி, கோடீஸ்வரன் , பிச்சைக்காரன் , டிவியில் வரும் ரியல் எஸ்டேட் படங்களை எடுப்பவர்கள் . அதில் நடிப்பவர்கள்… இப்படி, எல்லோரையும் தனக்கே உரிய பாணியில் சிரிப்பும் சிந்தனையுமாக வாரிக் கோரி பிரித்து மேய்கிறார். சூப்பர் சார் . நீங்க, நீங்கதான் !

சமூக அக்கறையுடன் ஜொலிக்கும் இயக்குனர் ஆரோக்கியதாசின் வசனங்கள் அருமை . கவுண்டமணி இல்லாத காட்சிகளில் கூட நகைச்சுவை , கருத்துள்ள வசனம் இரண்டின் சக்தியையும் அழகாக மெயின்டைன் செய்கிறார் . ஆறடித் தாய்மடித்திட்டம் என்கிற அந்த எள்ளலும் சீரியசுமான சிந்தனை சிறப்பு. சபாஷ் ஆரோக்கியதாஸ்
யுகபாரதியின் பாடல் வரிகளும் கே அமைத்திக்கும் பாடல் இசையும் அடுத்த பலங்கள். இனமானக் குரல் பாடகர் தேனிசை செல்லப்பாவின் பாடல் கம்பீரம் !
விவசாயிகள் பிரச்னையை காட்சிகளாக உணர்வுகளாக பதிக்காமல் முழுக்க வசனங்களாகவே சொல்வது பெரிய குறை. அதே போல பிரச்னைகள் பிரச்சாரமாகவே சொல்லப்படுகின்றன . வாழ்வின் பிரதிபலிப்புகளாக அமையவில்லை .
49 ஓ பற்றிய கவுண்டமணியின் கடைசிக் காட்சி விளக்கங்கள் அவசர அவசரமாக சொல்லப்படுவது வெகுஜன மக்களைக் கவராது . 49 ஓ என்பது தோற்றுப் போன ஒரு விஷயம் . அதை விமர்சிக்க ஒரு படம் தேவையா என்று கேள்வியும் எழுகிறது .

விவசாய நிலங்கள் போன்ற யதார்த்தமான பிரச்னையை எடுத்துக் கொண்டு, ஒரு தொகுதியில் ஆயிரக்கணக்காக மக்கள் போட்டி இடுகிறார்கள் என்பது போன்ற யதார்த்தமில்லாத தீர்வுகளை சொல்வதால் , கொஞ்சம் ஆர்வம் குறையத்தான் செய்கிறது . படமாக்களில் செயற்கைத்தன்மை அதிகம் .
இப்படி சில பல குறைகள் இருந்தாலும் , படம் பேசும் நல்ல விசயங்களுக்காக ஒருமுறையாவது பார்க்க வேண்டிய படம் இது
மொத்தத்தில் 49 ஓ …ஓகே
மகுடம் சூடும் கலைஞர்கள்
———————————————-
கவுண்டமணி , ஆரோக்கியாதாஸ், யுகபாரதி , தேனிசை செல்லப்பா