மில்லியன் டாலர் மூவீஸ் சார்பில் கார்த்திக் , கார்த்திகேயன் இருவரும் தயாரிக்க, சக்தி வாசு, பிரபு, நாசர், நிகிஷா பட்டீல், கணேஷ் வெங்கட் ராமன் ஆகியோர் நடிப்பில்,
கவுதம் வி ஆர் எழுதி இயக்கி இருக்கும் படம் 7 நாட்கள். எத்தனை நாட்கள் தாங்கும்? பார்க்கலாம் .
மாநிலத்தின் முதலமைச்சரையே (சந்தான பாரதி) உருவாக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த கோடீஸ்வரரான விஜய ரகுநாதனின் (பிரபு) மகன் சித்தார்த் (ராஜீவ் கோவிந்தப் பிள்ளை).
அவனோடு பழகி , பின்னர் சண்டை போட்டு விட்டுப் பிரியும் பெண்கள் அடுத்தடுத்து கொல்லப் படுகின்றனர் . ஆனால் ”நான் எதுவும் செய்யவில்லை” என்கிறான் சித்தார்த் .
அவனுக்கு ஒரு பெரிய தொழில் அதிபர் மகளோடு திருமணம் நிச்சயம் ஆன நிலையில் ,
கொல்லப் பட்ட பெண்களில் ஒருத்தியான ஜெனீபரின் (அங்கனா ராய்) கொலையில் சித்தார்த்துக்கு தொடர்பு உண்டு என்பதற்கான ஆதாரம்,
தன்னிடம் இருப்பதாகக் கூறி ஒருவன் விஜய ரகுநாதனை போன் செய்து மிரட்டுகிறான் .
அவனை கண்டு பிடிக்க, தனது வளர்ப்பு மகனும் திறமை வாய்ந்த சி பி ஐ அதிகாரியுமான சாய் பிரசாத்தை (கணேஷ் வெங்கட்ராமன் ) பயன்படுத்துகிறார் விஜய ரகுநாத் .
விஜய ரகுநாதனுக்கு சொந்தமான வி டி வி என்ற தொலைக்காட்சி சேனலில் வர்ணனையாளராக இருக்கும் பூஜாவும் ( நிகிஷா பட்டீல் )
பண்பலை வானொலி வர்ணனையாளர் கவுதம் கிருஷ்ணாவும் (சக்தி வாசு) எதிர் எதிர் வீடுகளில் வசிக்கும் சண்டைக் கோழிகள் .
ஜெனீபர் கொலைக்குக் காரணமான வீடியோ ஆதாரம் ஒன்று கவுதம் பூஜா இருவருக்கும் இடையில் அவர்கள் அறியாமல் சிக்கிக் கொள்கிறது .
அவர்களை சாய் பிரசாத் தன் போலீஸ் சக்தியோடு துரத்த, ஒரு நிலையில் அவர்களுக்கு விசயமும் விபரீதமும் புரிய, அவர்கள் தப்பினார்களா ? ஆம் எனில் எப்படி ?
சித்தார்த் குற்றவாளியா இல்லையா ? இல்லை எனில் யார் குற்றவாளி என்பதே 7 நாட்கள். 7 நாட்களில் ஒட்டு மொத்த கதையும் நடப்பதால் இந்தப் பெயர் .
டைட்டிலில் வரும் கிராபிக்ஸ் அசத்தல் .
படம் ஆரம்பித்ததும் நம்மைக் கவரும் முதல் விஷயம் எம் எஸ் பிரபுவின் ஒளிப்பதிவு . அடேயப்பா .. என்ன ஒரு குளிர்ச்சியும் அழகும் ! அருமை .
ஒரு தொழில் அதிபர் முதல் அமைச்சரின் ஆபிசில் நுழைந்து ஐ ஜி முன்பே முதல்வரை மிரட்டுகிறார் என்பதை நம்ப முடிகிறது என்றால் அதற்குக் காரணம் பிரபுவின் கம்பீரத் தோற்றமும் நடிப்பும் . சூப்பர் .
வீடு முழுக்க சிவாஜியோடு பிரபு இருக்கும் புகைப்படங்களை வைத்து கெத்து கூட்டுகிறார்கள் .
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை சிறப்பு .
சக்தி வாசு மிக இயல்பாக நடிக்கிறார் .
கரை உடைக்கக் காத்திருக்கும் நிரம்பிய ஏரி நீர் மாதிரி , இறுக்கமான உடைகளுக்கு இடையில் பிதுங்ங்ங்ங்ங்கி வழிகிறார் நிகிஷா பட்டீல். யப்பா ஆ ஆ !
ஆனால் முக்கியமான கிளாமர் டூயட் பாட்டில் ஆன்ட்டி லுக் தெரியுது . கவனம் கவனம்
சித்தார்த் நல்லவனா ? அவன் மீது சாய் பிரசாத்துக்கு இருப்பது பாசமா வஞ்சமா என்ற சந்தேகத்தை வளர்க்கும் வகையிலான திரைக்கதை ஒரு எல்லை வரைக்கும் ஒகே .
ஆனால் அதுவே ஒரு எல்லைக்கு மேல் போவது களைப்பு , அதுவும் முடிவை யூகிக்க முடிகிற நிலையில் !
ஒரு நிலையில் அழுத்தம் இல்லாமல் காட்சிகள் தறி கேட்டு ஓடுகின்றன . அப்புறம் அது ஒரு நிலைக்குள் அடக்கி ஒடுக்கி ஒழுங்குபடுத்தப் படவே இல்லை
பிள்ளைகள் கையில் வீடியோ கேம்ஸ் உள்ள போனைக் கொடுப்பதால் போன் சமயத்துக்கு உதவ முடியாமல் போவதை சொல்வது அருமை .
சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் கவுதம் பூஜா இருவரும் வேலைக்காரி வீட்டில் தங்க, இடி இடிக்கும் போது பயந்து போன நாயகி நாயகனை கட்டிப் பிடிக்க , அப்படியே டூயட் பாட்டு துவங்குது ,
ப்ப்ப்பப்ப்ப் பா ஆ ஆ ஆ ஆ ! எவ்வளவு புதுசான புதுமையான இதுவரை பார்த்திராத வித்தியாசமான காட்சி . ! ம்ம்ம். நடத்துங்க ராசா !
மறைந்த வி எஸ் ராகவன் எவ்வளவு பெரிய பழம்பெரும் நடிகர் !ஒரு நாய் பேசுவது போன்ற காட்சிகளில் அவர் குரலை மிமிக்ரி செய்து இருக்க வேண்டாமே .
அவர் சார்பாக யார் வந்து கேட்கப் போகிறார்கள் என்ற எண்ணம்தானே ?
ஒரு கமர்ஷியலான வெற்றிப் படத்துக்கு முயற்சி செய்துள்ளனர் .
ஆனால் அதில் முழுமை இல்லாத காரணத்தால் முயற்சி திருவினையாக்கவில்லை .
7 நாட்கள் .. பாதிக்கும் மேல் லீவு