மில்லியன் டாலர் மூவீஸ் சார்பில் கார்த்திக் மற்றும் கார்த்திகேயன் தயாரிக்க , சக்திவேல் வாசு, கணேஷ் வெங்கட் ராம் , நிகிஷா படேல் , அங்கனா ராய் , எம். எஸ். பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் சுந்தர் சி யின் உதவியாளர் கவுதம் இயக்கும் 7 நாட்கள். படத்துக்கு ஒளிப்பதிவு எம் எஸ் பிரபு, இசை விஷால் சந்திரசேகர். இயக்குனர் கவுதமின் தந்தை விமல் பீதாம்பரம் இயக்குநர் பி. வாசுவின் உடன் பிறந்த சகோதரர் மற்றும் அவரது இணை இயக்குனரும் கூட . நாயகன் சக்தி வேலுவுக்கு சித்தப்பா .
அதாவது சக்திவேலும் கவுதமும் ஒன்று விட்ட சகோதரர்கள் . படத்தின் கதாசிரியரும் விமல் பீதாம்பரம்தான். திரைப்படத்தின் பூஜை, ஆரம்ப விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் பி.வாசு பேசும்போது “ 7 நாட்கள் கதை மிக சிறந்த கதை. தயாரிப்பாளர்கள் மாடர்னாக இருக்கிறார்கள். இயக்குநர் கௌதம் தயாரிப்பாளரின் டிரெண்டுக்கு ஏற்றவாறு படம் இயக்க வேண்டும். எங்கள் காலத்தில் நான் இயக்குநர் ஸ்ரீதர் அவர்களிடம் உதவி இயக்குநராக வேலை செய்யும் போது பல மாதங்கள் என்னை அவருக்கு தெரியவே தெரியாது.
அவர் என்னை பெயரை சொல்லி கூப்பிடுவதே அரிதான ஒரு விஷயமாக இருந்தது. டிஸ்கஷன் ரூமுக்குள் போவதற்கே பல மாதங்கள் ஆனது. ஆனால் இன்றைய இளைஞர்கள் குறும்படங்களை இயக்கிவிட்டு அதை தங்கள் திறமைக்கு சான்றாக எடுத்து கொண்டு வருகின்றனர். நான் இப்போது சக்திவேல் நடிக்கும் படத்தின் கதைகளை கேட்பது இல்லை. ஆனால் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்யும் சக்தி உள்ளவரா என்பது பற்றி மட்டும் தெரிந்து கொள்வது உண்டு. இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகள் ” என்றார் விமல் பீதாம்பரம் பேசும் போது
” இந்தக் கதையை நான் சிவாஜி பிலிம்ஸ் ராம்குமார் அண்ணனிடம் சொல்லி இருந்தேன் . அவரே தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இதை என் மகன் இயக்க முடிவான நிலையில் அவரிடம் கேட்டபோது விட்டுக் கொடுத்தார் . அவருக்கு நன்றி ” என்றார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தன் பேச்சில் “நானும் திரைக்கதை ஆசிரியர் விமலும் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து நண்பர்கள்.
அவருடைய மகனின் இயக்கத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அபியும் நானும் படத்திலேயே நானும் கணேஷ் வெங்கட்ராமனும் நடித்து உள்ளோம் ஆனால் இப்படத்தில் தான் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்துள்ளது.” என்றார் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு பேசும்போது “இயக்குநர்கள் எப்போதும் ஒளிப்பதிவாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
ஒளிப்பதிவாளருடன் இணைந்து பணியாற்றும் போது அருமையான படைப்பாக ஒரு திரைப்படமும் வெளிவரும். இப்படத்தின் இயக்குநர் கௌதமும் ஒளிப்பதிவாளருடன் இணைந்து பணியாற்றும் ஒரு நபர் தான். எனவே இந்தப் படம் மிக நன்றாக வரும் என்பது தெரிகிறது .”என்றார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் பேச்சில் “‘எனக்கு எப்போதும் நல்ல கதைகளில் பணியாற்றுவதுதான் பிடிக்கும் .
அந்த வகையில் இது மிகச் சிறந்த கதை எனலாம். எம் எஸ் பிரபு சாரின் ஃபிரேம்களுக்கு இசையமைக்க ஆவலோடு இருக்கிறேன்” என்றார் நடிகை அங்கனா ராய் பேசும்போது
” படத்தில் எனக்கு மிக சிறந்த கேரக்டர் ” என்றார் நிகிஷா பட்டீல் “முதலில் இந்தப் படத்தில் வேறொரு கேரக்டருக்குதான் என்னை இயக்குனர் கேட்டார் . ஆனால் என்னை பார்த்த உடனே அதை விட சிறந்த ஹீரோயின் கேரக்டருக்கு ஒப்பந்தம் செய்தார் .
என்னை முதலில் கேட்ட கேரக்டரில்தான் இப்போது அங்கனா ராய் நடிக்கிறார் ” என்றார். (போச்சுடா ! பூஜையிலேயே ஆரம்பிச்சுட்டீங்களா ?) கணேஷ் வெங்கட்ராமன் பேசும்போது “இதுவரை நான் தமிழில் நடித்த படங்களிலேயே உன்னைப் போல் ஒருவன் மற்றும் அபியும் நானும் இரண்டும்தான் சிறந்த படங்களாக அமைந்தன . ஆனால் இந்தப் படத்தில் இயக்குனர் எனக்கு கொடுத்து இருக்கும் கேரக்டரும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கும் பிரம்மாதம் .
நான் இதுவரை இவ்வளவு சிறப்பான கேரக்டரில் நடித்தது இல்லை . இயக்குனர் கவுதமுக்கு நன்றி ” என்றார் நாயகன் சக்திவேல் தன் பேச்சில்” நான் நடித்த முதல் படம் அப்பா இயக்கிய தொட்டால் தொடரும் . அதில் சித்தப்பா அசோசியேட் டைரக்டர் . ஸ்பாட்டில் அப்பா அப்பாவாக இருக்க மாட்டார் . டைரக்டராக மட்டுமே இருப்பார். சித்தப்பா அசோசியேட் டைரக்டராக மட்டுமே இருப்பார். ஆனால் நான் மட்டும் ஸ்பாட்டில் அவர்களது மகனாகவே இருப்பேன் .
அதனால் அப்பாவிடம் நிறைய திட்டு வாங்குவேன். அப்போது எல்லாம் யோசிப்பேன் . ‘இவர் இப்படி எல்லாம் நம்மிடம் நடந்து கொள்வார் என்று தெரிந்துதான் ஸ்ரீதர் சார் அப்பாவிடம் அன்று அப்படி நடந்து கொண்டாரோ’ என்று ! ஆனால் அன்று அப்பா என்னை நடத்திய விதம் எனக்கு நல்லதாக அமைந்தது . சினிமாவை சிறப்பாக எதிர்கொள்ளும் சக்தியை தந்தது. சித்தப்பாவின் கதைக்கு கவுதம் சொன்ன திரைக்கதை அட்டகாசமாக இருந்தது . தயாரிப்பாளருக்கும் பிடித்த நிலையில் ஆரம்பித்து விட்டோம்” என்றார் தனது தாத்தா பீதாம்பரம், மனைவி மற்றும் நண்பர்களுக்கு ஸ்பெஷலாக நன்றி கூறி பிறகு அனைவருக்கும் நன்றி கூறிய இயக்குனர் கவுதம்
” மிகச் சிறந்த வெற்றிப் படமாக இதைக் கொண்டு வர உழைப்போம் ” என்றார். மில்லியன் டாலர் மூவீசின் ஏழு நாட்கள், ஏழு மில்லியன் டாலர் சம்பாதிக்கட்டும் !
நம்பிக்கையோடு துவங்குது இந்த ‘ 7 நாட்கள் ‘
