800 @ விமர்சனம்

மூவி ட்ரெய்ன் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் விவேக் ரங்காச்சாரி தயாரிக்க, மாதுர் மிட்டல், மகிமா நம்பியார், நரேன், நாசர், கிங் ரத்தினம், வேல ராமமுர்த்தி. மற்றும் பலர் நடிப்பில் எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்கி இருக்கும் படம் 

இலங்கையின் பிரபல கிரிக்கெட் பந்து வீச்சாளரும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட இலங்கை மலையகத் தமிழரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி உலக சாதனை செய்தவருமான ( இது  தவிர ஒரு நாள் கிரிக்கெட்டில்  530  விக்கட்களுக்கும் மேல்) முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் 
 
வெள்ளைக்காரர்கள்  கிரிக்கெட்டை உலகம் முழுதும் கொண்டு போனது, அந்த வகையில் இந்தியா, இலங்கை பாகிஸ்தான் நாடுகளுக்கு கிரிக்கெட் வந்தது  , கிரிக்கெட் விளையாடும்போது தெம்பூட்டும் பானம் வேண்டும் என்பதற்காக இலங்கையில் தேயிலை பயிரிட்டது , அதற்கு வேலை செய்ய தமிழ்நாட்டில் இருந்து கூலிகள் போனது ,  அப்படிப் போன ஒரு குடும்பத்தில் பிறந்த முத்தையா என்பவர் முன்னேறி பிஸ்கட் கம்பெனி வைக்க,  
 
அந்த முத்தையாவின் மகனாகப் பிறந்த முரளிதரன் சிறுவயது முதலே கிரிக்கெட் மேல் ஆர்வம் கொண்டது, தமிழர் என்பதால் முரளிதரனின் தந்தை முத்தையாவின் பேக்டரியை சிங்களர்கள் எரிக்க, அவர்கள் குடும்பம் உயிர் தப்பியது, சிறுவன் முத்தையா சர்ச் பள்ளியில் வளர்ந்தது , அங்கு தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்கள் என்று பகையோடு பிரிந்து விளையாடிய நிலையில் சர்ச்  பாதிரியார்  இரு தரப்பும் கலந்த இரண்டு அணிகளை உருவாக்கியது , சிங்களர்களின் சிலரின் நட்பும் சிலரின் பகையும்  கிடைத்தது… 
 
கிரிக்கெட் பயிற்சியின் போது சிங்களர்கள் சிலர் கொல்ல வர , சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளரால் காப்பாற்றப்பட்டது ..  மெல்ல மெல்ல முன்னேறியது .. கிரிக்கெட் வீரராக ஆன பிறகும் இலங்கை ராணுவத்தால் அவமானப்படுத்தப்பட்டது , இலங்கை மக்கள் அனைவரும் கொண்டாடும் கிரிக்கெட் வீரர் ஆனது, அர்ஜுன ரணதுங்கா அவருக்கு செய்த உதவிகள்,  
 
சென்னை தமிழ்ப் பெண் மதிமலரை மணந்தது, மதிமலருக்கு நாட்டுப்பற்று குடும்பப்பற்று ரீதியாக வந்த சிக்கல்கள், 
 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடுவர்கள் அவர் மீது காட்டிய வன்மம், அவர் பந்து வீசும் முறை விமர்சிக்கப்பட்ட அரசியல் , தனது நேர்மையை நிரூபிக்க ஆபத்தான அறுவை சிகிச்சை செய்து கொண்டது, இனி பந்து வீசவே முடியாதோ என்ற சூழலில் இருந்து மீண்டது , மேதகு பிரபாகரனுடனான சந்திப்பு- உரையாடல் ,  மலிங்காவின் ஒத்துழைப்பால் 800 எடுத்தது  என்று…. 
 
முத்தையா முரளிதரனின் வாழ்வை ஒரு படத்தில் அடைத்து இருக்கிறார் எம் எஸ் ஸ்ரீபதி. 
 
முத்தையாவின் பவுலிங் முதன்முதலில் அங்கீகரிக்கப்படும் போது பின்னணியில் போகும்  ட்ரம்பட் ஊர்வலம் அட்டகாசமான டைரக்டோரியல் டச் . மொத்தமாகவே சிறப்பான இயக்கம் மற்றும் படமாக்கல் . 
 
ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு, ஜிப்ரனின் இசை, பிரவீன் கே எல் லின் படத் தொகுப்பு யாவும் மிக அருமை . தயாரிப்புத் தரமும் சிறப்பு  
 
உயரப் பொருத்தம் குறைவு என்றாலும் மாதுர் மிட்டல் முத்தையா முரளிதரனைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். இவரையும் சில சிங்கள நடிகர்களையும் தவிர நாசர், வேல ராமமூர்த்தி வடிவுக்கரசி,ரித்விகா, அருள்தாஸ் என்று நிறைய தமிழ் நடிகர்களும் இலங்கைத் தமிழ் நடிகர்களும் படத்தில் இருக்கிறார்கள் . ஒரு காட்சியில் வரும் கபில்தேவ் கதாபாத்திரத்துக்கான நபர் வரை எல்லா கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான நடிகர்களை பயன்படுத்தி  இருக்கிறார்கள். , 
 
மேதகு பிரபாகரனாக இரண்டே சீன்களில் வந்தாலும் நரேனுக்கு இது லைஃப் டைம் கேரக்டர்.  
 
குறைகள் இல்லாமல் இல்லை 
 
இது எங்கள் நாடு பிரிக்க விட மாட்டோம் என்று சிங்களர்கள் சொல்வதை அடிக்கடி காட்டுபவர்கள்…. ஏன் தமிழர்கள் பிரிக்கச் சொன்னார்கள் என்று சொல்லாதது அநியாயம். 
 
பிரபல கிரிக்கெட் வீரர் ஆன பிறகும் அவரை தமிழர் என்பதால் சிங்கள ராணுவம் கேவலப்படுத்தி இருக்கிறது. ஆனால்  தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால்தான் அப்படிச் செய்தார்கள் என்று பூசி மொழுகுகிறார்கள். 
 
இலங்கை ராணுவம் தமிழர்களைக் கொன்றது நியாயமா என்று முரளிதரனின் சிங்கள நண்பர்களே  சிங்கள வெறியர்களிடம் முரளிக்கு ஆதரவாகப் பேசுவது போல வருவது எல்லாம் நகைச்சுவை . 
 
முரளிக்கு சிங்கள கிரிக்கெட் வீரர்கள் செய்த சில உதவிகள் ஊதிப் பெரிதாகக் காட்டப்பட்டு இருப்பதும் ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களும் முரளியை வெறுத்து போல் காட்டியதிலும் சம நிலை இல்லை 
 
முக்கியமாக பிரபாகரனை முத்தையா முரளிதரன் சந்திக்கும் காட்சிகளில் முரளியின் உடல் மொழிகள் சினிமாத்தனம் , 
 
இப்படி சில குறைகள் இருந்தாலும் பிரபாகரன் – முரளி சந்திப்பில் விடுதலைப்புலிகளின் நியாயத்தை அழுத்தமாக நிறுவிய வகையில் இயக்குனரின் மெச்சூரிட்டி அபாரம் 
 
விளையாட்டில் வரும் பாரிய சவால்களையும் மீறி ….
 
இன்னொரு பக்கம் பிறப்பால் தமிழன் அதுவும் இந்தியாவில் இருந்து போன   தமிழரின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த- ஈழத் தமிழர்களாலேயே இரண்டாம் பார்வை பார்க்கப்பட்ட  மலையகத் தமிழன் , நாட்டால் இலங்கையன், அடையாளத்தால் கிரிக்கெட் வீரன்,  வெள்ளைக்காரர்களுக்கு கருப்பு நிறத்தவன், இத்தனை சிக்கல்களோடு  உணர்வு ரீதியாக ஒவ்வொரு தரப்புக்கும் தன்னை நிரூபிக்க வேண்டிய  சூழலுடன் கூடிய முரளிதரனின்  மனதை காட்சிப் படுத்தியவகையில் 
 
இதுவரை வந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சாதனைகள் பற்றிய பயோகிராபி படங்களிலேயே பெஸ்ட் இதுதான்  என்று சொல்லும் அளவுக்கு  சிகரம் தொடுகிறது 800  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *