HERO CINEMAS என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் ‘காந்தர்வன்’ படத்தில் நடித்த கதிர் ஹீரோவாக நடிக்க, ‘இதிகாசம்’ என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடித்த ஸ்வப்னா கதாநாயகியாக நடிக்கும் படம் 9லிருந்து 10வரை .
படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விஜய் சண்முகவேல் அய்யனார். இவர் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் இருவரிடமும் பல படங்களில் பணியாற்றியவர். நிறைய தெலுங்குப் படங்களுக்கு கதை திரைக்கதை எழுதியவர் . பெருத்த எதிர்பார்ப்புடன் வரும் மே ஒன்றாம் தேதி ஆந்திராவில் வெளியாக இருக்கும் லயன் படத்தின் கதை திரைக்கதை இவரே .
சரி…. அது என்ன 9லிருந்து 10வரை?
காலை ஒன்பது மணியில் இருந்து இரவு பத்து மணிவரை பயணிக்கும் நேரத்துக்கு ஏற்ப ஓடும் சில கதாபாத்திரங்களின் கதையே இந்தப் படம் .
“சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வரையிலும் கால் டாக்சியில் பயணம் செய்கிறாள் ஹீரோயின். காரை ஓட்டிச் செல்வது ஹீரோ. அவர் கொஞ்சம் விநோதமான செய்கைகளைச் செய்யும் நபராக இருந்தாலும் அவசரமாக போக வேண்டியிருப்பதால் சகித்துக் கொள்கிறார் ஹீரோயின்.இதே நேரம் வேறொரு விஷயமாக காவல்துறையும் இவர்கள் இருவரையும் தேடி வருகிறது. நெடுஞ்சாலையில் ஒரே காரில் இருவரையும் கண்ட போலீஸ் இவர்களைத் துரத்துகிறது.
அவர்களிடத்தில் இருந்து தப்பித்து காஞ்சிபுரம் போய்ச் சேர்ந்தால் அங்கே ஹீரோயின் ஹீரோவுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கிறாள். இதற்கடுத்து ஹீரோவும் ஹீரோயினுக்கு ஷாக் கொடுக்கும்வகையில் ஒரு செயலைச் செய்ய.. இருவருக்குள்ளும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.
அதன் பிறகு ஹீரோ உயிருக்கு ஆபத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஹீரோயினும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறாள்.
கடைசி நிமிடத்தில் கதை முற்றிலும் தலைகீழாக தோசையை திருப்பிப் போடுவது போல மாறும்” என்று… படு டெக்னிக்கலாக கதையை சொல்லும் இயக்குனர் விஜய சண்முகவேல் அய்யனார்…. தொடர்ந்து,
“கதாபாத்திரங்களுக்கு வரும் பிரச்னைகளுக்கான காரணங்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும் போது, ஒவ்வொரு ஐந்து நிமிடமும் எதிர்பாராத சுவாரஸ்யமான திருப்பங்களும் அதிரடிகளும், நகைசுவையுமாக கலந்து 20/20 மேட்ச் பார்ப்பதுபோல இருக்கும்.உச்சக்கட்ட காட்சியில் அதிரடியான கதை திருப்பமும், ஹீரோயின் மீதான காதல் விஷயத்தில் ஹீரோ எடுக்கும் முடிவில் ஒரு புதுமையும், கவித்துவமும் கலந்திருக்கும்…” என்று புதுமையான பாணியில் கதையைச் சொல்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜரத்தினம் . வெளியாகி ஓடிக் கொண்டு இருக்கும் கங்காரு படத்துக்கு தனது ஒளிப்பதிவால் உயிர் கொடுத்து இருப்பவர் இவர் .
“படத்தின் ஒரு அங்கமாக, ஹைவே ரோட்டின் ஓரம் மரத்தில் ஒருவர் தூக்குப் போட்டுத் தொங்கும் காட்சியை எடுக்க வேண்டி இருந்தது. எடுக்க ஆரம்பிக்கும்போது ஏதோ உணமையான தற்கொலை என்று எண்ணி பெரும் கூட்டம் கூடி விட்டது . படத்தில் நடிக்கும் போலீஸ் தவிர நிஜ போலீசும் வந்து ஒரே களேபரம். அந்த சூழ்நிலையிலும் அசராமல் அந்தக் காட்சியை அவ்வளவு கும்பலில் பிரம்மாதமாக எடுத்துக் கொடுத்தார் ராஜரத்தினம் . அவரைத் தவிர யாராலும் முடியாத விஷயம் அது .” என்கிறார் இயக்குனர் .
அப்போ… அவர் ஒரு ஒளிப்பதிவு ரத்தினம்தான் !